Monday, September 23, 2013

உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா?


'அவன் (யாக்கோபு) இருமுறை என்னை ஏமாற்றி விட்டான்' என்று சொல்லி, திரும்பவும் தந்தையை நோக்கி: 'நீர் எனக்கென வேறு எந்த ஆசியும் ஒதுக்கி வைக்கவில்லையா?' என்று கேட்டான் ... 'அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா? எனக்கும் ஆசி வழங்க வேண்டும் அப்பா' என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுதான். (தொடக்கநூல் 27:36,38)

யாக்கோபு தன் தாயின் வழிகாட்டுதலின் பேரில் தன் தந்தை ஈசாக்கிற்கு விருப்பமான உணவைத் தயார் செய்து, தன் அண்ணனைப் போலவே தன் உடலை அடர் உரோமத்தால் மூடிக்கொண்டு தன் தந்தையிடமிருந்து ஆசியைப் பெற்றுக்கொண்டான். 'இளையமகன் மூத்த மகனை விட மேலோங்கி நிற்பான்' என்ற கடவுளின் வார்த்தைகளை இந்நிகழ்வு மெய்ப்பிப்பதாக இருக்கின்றது. 'இளைய மகன் தேர்ந்தெடுக்கப்படல்' என்னும் சிந்தனை இங்கும் அடிக்கோடிடப்படுகின்றது. 

ஆசி என்றால் என்ன? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? தன் சகோதரனை ஏமாற்றி யாக்கோபு அதைப் பெற்றுக்கொள்ளத் துணியும் அளவிற்கும், 'ஒரே ஆசிதான் இருந்ததா' என ஏசா புலம்பும் அளவிற்கும் அது மேலானதா?

'ஆசி' என்ற தமிழ்ச்சொல்லிற்கு இணையாக இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிரேயச் சொல் 'பராகா'. இந்தச் சொல்லுக்கு 'முழந்தாலிடல்' என்ற பொருளும் உண்டு. இஸ்ராயேல் மக்களின் வரலாறே ஆசியில் தான் தொடங்குகிறது (காண். 3:14, 3:17, 4:11, 5:29, 9:25, 12:3). முதன்முதலாக கடல்வாழ் விலங்குகளையும், வானத்துப் பறவைகளையும் பார்த்து 'பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்' என ஆசி வழங்குகின்றார் (தொநூ 1:22). 'ஆசி' என்றால் 'பலுகிப் பெருகுவது!'. இதற்கு எதிர்ப்பதமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை 'சாபம்', 'சிறுத்துப் போவது!'. 

பழைய ஏற்பாட்டு ஆசிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

1. பெரியவர்கள் சிறியவர்களுக்கு ஆசி வழங்குவது. எகா. மெல்கிசதேக்கு ஆபிரகாமிற்கும் (எபி 7:6-7), பெத்துவேலும், லாபானும் ரெபேக்காவிற்கும் (தொநூ 24:60), இன்று ஈசாக்கு யாக்கோபிற்கும் ஆசி வழங்குதல்.

2. வெற்றியையும், செல்வத்தையும் பிறர் பெற வேண்டும் என வாழ்த்திக் கூறுவது (இணைச்சட்டம் 28:3-7).

3. கடவுளை நோக்கிய மன்றாட்டு. எ.கா. 'எல்லாம் வல்ல இறைவன் உனக்கு ஆசி வழங்கி, நீ பல இனங்களுக்குத் தந்தையாகும்படி உன்னைப் பலுகிப் பெருகச் செய்வாராக!' (தொநூ 28:3). ஒவ்வொரு முறை திருப்பலியின் இறுதியிலும், 'எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவியானவர் உங்களை ஆசிர்வதிப்பாராக!' என்று அருட்பணியாளர் சொல்லும்போது, அங்கே அவர் கடவுள் மக்களுக்கு ஆசி அருள வேண்டுமென கடவுளை நோக்கி மன்றாடுகிறார்.

சாதாரணமாக, எவ்வித ஃபார்மாலிட்டியும் இல்லாமல் கொடுக்கப்படும் ஆசிகளும் விவிலியத்தில் உள்ளன. எ.கா. '... நீ நகரிலும் ஆசி பெற்றிடுவாய். வயல் வெளியிலும் ஆசி பெற்றிடுவாய் ... நீ வருகையிலும் செல்கையிலும் ஆசி பெற்றிடுவாய் ... நீ பல்வேறு இனத்தாருக்குக்கும் கடன் கொடுப்பாய். நீயோ கடன் வாங்கமாட்டாய் ... ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரே அன்றி, கடையனாக ஆக்கமாட்டார். நீ உயர்வாயேயன்றித் தாழ்ந்து போகமாட்டாய்' (இச 28:1-14).

மனிதர்களும், கடவுளை நோக்கி 'பராகா' என்று சொல்ல முடியும். ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பில் நாம் 'போற்றிடு' என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறோம்: 'என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!' (திபா 103:1). இது நம் தமிழ் மரபின் தாக்கத்தையே காட்டுகின்றது. தமிழ் மரபில் நாம் என்னதான் 'அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே' என்று மாணிக்கவாசகரின் திருவாசகத்தோடு உருகினாலும், கடவுளை 'நீங்க, நாங்கன்னு' கூப்பிட்டே பழகிட்டோம். இது 'திரு'விற்கு (இறைவனுக்கு) நாம் கொடுக்கும் மரியாதையைக் காட்டுகின்றது.

இஸ்ராயேல் வரலாற்றின் தொடக்கத்தில் குடும்பத்தில் தந்தையர்கள் தம் பிள்ளைகளுக்கு ஆசி வழங்கும் நிலை காலப்போக்கில் மாறி, ஆசி குருக்கள் மட்டும் வழங்கக்கூடியதாகின்றது. அவ்வகையில் மிகவும் பிரபலமான ஆசி தலைமைக்குரு ஆரோனின் ஆசி (எண்ணிக்கை 6:24-26):

'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!' 

புதிய ஏற்பாட்டில் இயேசு சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஆசி வழங்குகின்றார் (மாற்கு 10:13-16). மேலும், அவரது பணிவாழ்வில் பலரைத் தொட்டுக் குணமாக்கியது, நோய் நீங்கச் செய்தது அனைத்துமே அவரின் ஆசிகள்தாம். மேலும் 'நீங்கள் பேறுபெற்றவர்கள்' (மத் 5:1-12) என்னும் மலைப்பொழிவு இறைவனின் ஆசிபெற்ற மக்களினங்களையே குறிப்பிடுகின்றது.

ஆசி வழங்குதலின் மையப்பொருள் 'வார்த்தை'. வார்த்தைகளுக்கு ஆற்றல் உண்டு. நாம் மற்றவர்களைப் பார்த்துக் கூறும் நல்ல வார்த்தைகள் அவர்கள் வாழ்விலும், அடுத்தவர்கள் நம்மைப் பார்த்துக் கூறும் நல்ல வார்த்தைகள் நம் வாழ்விலும் ஆசியைக் கொண்டுவருகின்றன. நல்ல வார்த்தைகள் நன்மையைக் கொணர்கின்றன என்றால், தீய வார்த்தைகள் தீமையைக் கொணரக்கூடியவைதாம். ஒரே வார்த்தையால் கடவுள் உலகைப் படைக்கின்றார். வார்த்தை ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். இதைத்தான் நம் ஊரில், 'யார் வாயிலயும் விழக் கூடாது!' என்பார்கள். திருமண நிகழ்வில் தாலி கட்டும்போது 'கெட்டி மேளம், கெட்டி மேளம்!' என்று சொல்ல, உச்ச தொனியில் கெட்டி மேளம் இசைப்பார்கள். இதன் அர்த்தம் என்ன? தாலி கட்டும் மங்களகரமான நேரத்தில் யாராவது பேசும் அமங்கல வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். 

ஈசாக்கு யாக்கோபுக்கு அளிக்கும் ஆசியிலும் முக்கியமானது 'வார்த்தை'. 'நீ அனைத்திலும் வளம் பெறுவாய்' என்ற வார்த்தைகள் தாழ்வுற்ற போதும் யாக்கோபைத் தூக்கிவிடத்தான் செய்யும்.

'வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது. மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப்படுத்தும்' (மத்தேயு 15:11). 'கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக் கூடாது. கேட்போர் பயனடையும்படி, தேவைக்கு ஏற்றவாறு, அருள் வளர்ச்சிக்கேற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்' (எபேசியர் 4:29). 'பழிப்புரை, வெட்கக்கேடான பேச்சு ஆகிய எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது' (கொலோசையர் 3:8) - இந்த இறைமொழிகள் நமக்கு நாம் பயன்படுத்தும் வார்த்தையின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. 

இன்று நாம் வாயார அடுத்தவர்களுக்கு ஆசி கூறுவோம். இந்த உலகம் ஒரு கண்ணாடி உலகம். நாம் ஆசி கூறினால் இவ்வுலகமும் ஆசி கூறும். நாம் சபித்தால் இவ்வுலகமும் சபிக்கும். நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம். 

இனிய சொல், புன்சிரிப்பு, கைகுலுக்கல், உச்சிமுகர்ந்த முத்தம், கைதட்டல், முதுகில் தட்டிக்கொடுத்தல் என ஆசிகள் பல்வேறு பரிமாணங்களில் நம்மைச் சுற்றியிருக்கின்றன.

எனக்கு மிகவும் பிடித்த, நான் பின்பற்ற நினைக்கும் ஆசி மொழிகள் பின்வருபவை. வில்லியம் ஷேக்ஸ்பியரின் 'ஹேம்லெட்' என்ற நாடகத்தில். போலோனியுஸ் என்ற அன்புத் தந்தை பிரான்சுக்குப் புறப்பட்டுச் செல்லும் தன் மகன் லாயர்ட்டசுக்குச் சொல்லும் வார்த்தைகள் இவை. இனிய தமிழில் அழகாக இதை மொழிபெயர்த்தவர் 'நம்வாழ்வின்' முன்னாள் இணைஆசிரியர், என்னைத் தட்டிக்கொடுக்கும் அருட்பணி;. குடந்தை ஞானி (நன்றி!).

மகனே!
இதோ! உனக்கு என் ஆசிகள் உரித்தாகட்டும்!
இந்த அறிவுரைகள் உன் நினைவில் நின்று உன் நடத்தையை உருவாக்கட்டும்.
உனது எண்ணங்களைச் சொல்லாதே.
தீர்மானிக்காத எண்ணத்தைச் செயலாக்காதே.
நட்பாக நடந்து கொள். ஆனால், அநாகரிகமாக நடக்காதே.
உனக்கிருக்கும் நண்பர்கள், அவர்களது நண்பர்களை இரும்பு வளையங்களால்
உன் இதயத்தோடு பிணைத்துக் கொள்.
ஆனால், ஒவ்வொரு புதிய முதிர்ச்சியடையாத தோழனோடும்
கேளிக்கையில் மூழ்கி உன் கரத்தை மாசுபடுத்தாதே.
சண்டையில் இறங்காமல் எச்சரிக்கையாயிரு.
ஆனால், இறங்கிவிட்டால் எதிராளி உன்னிடம் எச்சரிக்கையாயிருக்கச் செய்.
எல்லோருக்கும் செவிகொடு. ஆனால், முடிவை நீ எடு.
உன் பணத்தால் வாங்க முடியாத உன் நடத்தை உயர்வாயிருக்கட்டும்.
ஆனால், செயற்கையாக நடந்து கொள்ளாதே.
உன் ஆடை செழிப்பாயிருக்கட்டும். ஆனால் பகட்டாயிருக்கக் கூடாது.
ஆடைதான் மனிதனை வெளிப்படுத்துகிறது.
கடன் கொடுக்காதே. வாங்காதே.
கடன் கொடுத்தால் கடனும் போய்விடும். நண்பனும் போய்விடுவான்.
கடன் வாங்குவதால் சிக்கனம் கெடுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக உனக்கு நீயே உண்மையாயிரு.
இரவும் பகலும் போல இது தொடரட்டும்.
யாருக்கும் நீ பொய்யாக இருக்க முடியாது!


நாம் பிறருக்கு வழங்கும் ஆசிகளுக்குக் குறை வைக்க வேண்டாம். நமக்குப் பிறர் தீங்கே செய்தாலும் நாம் ஆசி கூறுவோம்.

'அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா?'

No comments:

Post a Comment