அதற்கு எப்ரோன் ஆபிரகாமை நோக்கி, 'என் தலைவரே! என் வார்த்தையைக் கேளும். நீர் கேட்கிற நிலம் நானூறு வெள்ளிக்காசுகள் தான் பெறும். நமக்குள்ளே இது என்ன? உம் வீட்டில் இறந்தாரை அடக்கம் செய்துகொள்ளும்' என்றான். எப்ரோன் சொன்னதற்கு இசைந்த ஆபிரகாம் இத்தியர் முன்னிலையில் பேசியபடி நானூறு வெள்ளிக்காசுகளை அன்றைய வணிக வழக்கத்திற்கேற்ப நிறுத்துக் கொடுத்தார். (தொடக்கநூல் 23:14-16)
'நமக்குள்ள என்னங்க இருக்கு?' இந்தக் கேள்வியை நாம் பல நேரங்களில், பல பேர் வழியாகக் கேட்டிருப்போம்.
உதாரணம் 1: 'இந்தாங்க போனவாரம் நான் உங்ககிட்ட வாங்கின 5 ரூபாய்?'
'ஐயோ...பரவாயில்லங்க. நமக்குள்ள என்ன இருக்கு?'
உதாரணம் 2: 'நான் லேட்டா வந்ததுக்கு ஸாரி!'
'ஐயோ நாம ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ப் - நமக்குள்ள என்னங்க ஸாரி?'
முதல் உதாரணத்தில், ஒருவேளை கடன் வாங்கிய நபர் 50000 ரூபாய் வாங்கியிருந்து கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது, கடன் வாங்கிய நபர் 'பரவாயில்லைங்க. நமக்குள்ள என்ன இருக்கு?' அப்படின்னு சொல்வாரா?
இரண்டாவது உதாரணத்தில், 'நான் லேட்டா வந்தேன்' என்பதற்குப் பதிலாக, 'நான் உன் தங்கையோட வெளியில போயிருந்தேன்னு' சொன்னாலோ, அல்லது 'என் கேர்ள்பிரண்டோட வெளிய போயிருந்தேன்னு' சொன்னாலோ, இதே மனைவி, 'பரவாயில்லைங்க. இதுல என்ன இருக்கு?'ன்னு சொல்வாரா?
'நமக்குள்ள இது என்ன?' இந்தக் கேள்வி பைபளில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் இரண்டாமிடம் பெறுகின்றது. இந்த வார்த்தைகளை உள்ளபடியே மொழிபெயர்த்தால், 'இதைப்பற்றி நீ ஏன் அக்கறைப்படுகிறாய்?' என்றோ 'உனக்கும் எனக்கும் என்ன?' என்றும் மொழிபெயர்க்கலாம். கானாவூர் திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்தபோது, இயேசுவின் தாய் இயேசுவிடம், 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது' என்கிறார். அந்நேரம் இயேசு கேட்கும் கேள்வியும் இதுதான்: 'நமக்குள்ளே இது என்ன?'
ஆபிரகாமின் மனைவி சாhரா இறந்து விடுகிறார். அவருக்கு வயது 127. சாராவை அடக்கம் செய்ய இடம் வேண்டும். இப்போது ஆபிரகாம் இருப்பதோ பெயர்செபா – வாக்களிக்கப்பட்ட நாட்டின் தென்முனை. தானே ஒரு நாடோடி. தன் மனைவியை எங்கே அடக்கம் செய்வது? ஆபிரகாம் வாழ்ந்த பகுதி 'இத்தியர்கள்' என்ற ஒரு இனம் வாழ்ந்த பகுதி. அந்தப் பகுதியில் ஆபிரகாம் குடியேறியிருந்தாலும், ஆபிரகாமின் சொத்துக்களும், கால்நடைகளும், பணியாட்களின் எண்ணிக்கையும் அவரை ஒரு பெரிய மனிதராகவே அவர்களுக்குக் காட்டுகின்றன. ஆபிரகாமின் மேல் மட்டுமீறிய மதிப்பு வைத்திருக்கின்றனர் இத்தியர்கள். பணம், காசு இருந்தால் மதிப்பு வரும்தானே!
தன் மனைவியை அடக்கம் செய்ய ஒரு நிலம் கேட்ட போது இத்தியர்கள் கொடுக்க இசைகின்றனர். 'எந்த இடம் வேண்டும்?' என்று கேட்க ஊர்க்கூட்டம் நடைபெறுகிறது. 'இத்தியனான எப்ரோனின் நிலம் வேண்டும்' என்கின்றார் ஆபிரகாம். 'இலவசமாகவே தருகின்றேன்!' என்கிறார் எப்ரோன். 'இலவசம் வேண்டாம். பணம் தருகிறேன்!' என நானூறு வெள்ளிக்காசுகளுக்கு டீல் முடிக்கின்றார் ஆபிரகாம். 'வேண்டாம்! வேண்டாம்!' எனச் சொன்னாலும், 'நமக்குள்ள என்ன இருக்கு?' என்று சொன்னாலும் அள்ளிக் கொடுக்கின்றார் ஆபிரகாம்.
ஆபிரகாம் வெள்ளிப்பணம் கொடுத்து நிலத்தைப் பெற்றது மீட்பு வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. கடவுள் தந்த வாக்குறுதியின் நாடு மற்றவர்கள் இனாமாக, இலவசமாகக் கொடுத்தது அல்ல. மாறாக, தன் பணத்தால் ஆபிரகாமே வாங்கியது.
'There is no such a thing as free lunch' என்பார் மேலாண்மையியல் அறிஞர் ராபர்ட் ஹெயின்லெயின். எல்லாவற்றிற்குமே ஒரு விலை இருக்கின்றது. பஞ்ச் டயலாக்கா சொல்லணும்னா: 'கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கிடைக்கிறது எதுவும் நிலைக்காது!'
நம் பழக்க வழக்கம் வேறு, பணப்புழக்கம் வேறு என்பதில் தெளிவாய் இருக்கிறார் ஆபிரகாம். 'கடன் கொடுக்காதே. கடன் வாங்காதே. கடன் கொடுத்தால் கடனும் போய்விடும், நண்பனும் போய்விடுவான்' என்ற ஷேக்ஸ்பியர் வார்த்தைகளை ஏற்கனவே வாழ்ந்து காட்டியவர் ஆபிரகாம்.
ஆபிரகாமின் இந்தச் செயல் மேலாண்மை அடிப்படையில் மிகவும் முக்கியமான ஒன்று. பொருளாதாரம் என்ற அடிப்படையில் பார்க்கும்போது அவரவர்க்குத் தேவையானதை அவரவர் அதற்குரிய கூலி கொடுத்தே பெற வேண்டும். இலவசமாகப் பெற நினைப்பதும், வன்முறையாகக் கவர்ந்து கொள்வதும், போலிகள் தயாரிப்பதும் பொருளாதாரத்தைச் சீரழிக்கவே செய்யும். நம்ம நாட்டில் ஏழ்மை இருக்கிறது என்பதற்காக நம் அரசாங்கம் எல்லாருக்கும் 1000 தாளை பிரிண்ட் செய்யும் இயந்திரம் கொடுத்தாலோ, அல்லது அரசாங்கமே அச்சிட்டுக் கொடுத்தாலோ, அல்லது மற்றவர்கள் போலியாக கள்ள நோட்டு அச்சிட்டு விநியோகம் செய்தாலோ, வெளிநாட்டில் அச்சிட்டு இறக்குமதி செய்தாலோ நஷ்டம் நம் பொருளாதாரத்திற்குத்தான். 'ஒரு பொருள் உள்ளே வருகிறதா, அதற்கேற்ற பொருள் பணமாகவோ, உழைப்பாகவோ வெளியே செல்ல வேண்டும்' - இதுதான் கணக்கியலின் முக்கியமான தத்துவம்.
இரண்டாவதாக, 'பணம் பத்தும் செய்யும்' என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். '5 ரூபாய்தான' என்று பெரிய மனசு காட்டும் சிலர், ஏதோ ஒரு கட்டத்தில் உறவில் பிரச்சினை வரும் போது, '5 ரூபாயைக் கூட திருப்பிக் கொடுக்காதவன்தான' எனத் திரும்பிவிடும்.
மூன்றாவதாக, இலவசங்களைக் குறித்து நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். நம் உறவுகளில் நாம் பகிரும் பொருட்கள் இலவசங்கள் அல்ல. அவை கொடைகள். அவற்றில் ஒரு நல்மனம் ஒளிந்திருக்கும். ஆனால் கொடைகளைப் பெறத் தேவையான ஒன்று அந்தக் கொடைகளுக்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும். தகுதியற்ற நிலையில் நாம் கொடைகளைப் பெற்றாலோ, அல்லது நம்மேல் கொடைகள் பொழியப்பட்டாலோ அவை தேவையற்றவைகளாக மாறிவிடும் அபாயமும் இருக்கின்றது. நம் தமிழினத்தோடு ஏதோ வகையில் உறவு கொண்டிருந்த எபிரேய சமூகமும் 'இலவசத்தை' வேண்டாம் என்கிறது. ஆபிரகாம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் நம் இன்றைய தமிழ் சமுதாயம் 'இலவசத்தை' மட்டுமே நம்பியிருக்கும் நிலைக்கு வந்துவிட்டது.
போத்தீஸில் இலவசம், பூர்விகாவில் இலவசம் என ஓடுகிறோம். நமக்குக் கொடுக்க வேண்டும் என நினைக்க போத்தீஸ் என்ன நம்ம மாமாவா? அல்லது பூர்விகா என்ன நம் மச்சானா? ஒவ்வொரு இலவசமும் ஒரு விலையைக் கொண்டுதான் இருக்கின்றது.
நாம் வாங்கும் செய்தித்தாளுக்கு இலவச இணைப்பு என்று ஏதாவது புத்தகம் தருகிறார்கள். எதற்காக? நம் அறிவு வளர வேண்டும் என்பதற்காகவா? இல்லை. 'இவ்வளவு பேப்பருக்குக் குறைத்து பிரிண்ட் செய்தால் தங்களுக்கு நஷ்டம், தங்கள் இயந்திரங்களுக்கு நஷ்டம்' என்று நினைக்கும் நிறுவனங்கள் மொத்தமாக அடித்து, இலவச இணைப்பிற்கும் சேர்த்து விலையை நம்மிடம் வசூல் செய்கின்றன. இப்போது மருத்துவமனைகளிலும் 'இலவசங்கள்!' யூரின் டெஸ்ட் எடுத்தால், மோஷன் டெஸ்ட் இலவசமாம்! சர்க்கரை டெஸ்ட் எடுத்தால் பிரஷர் டெஸ்ட் இலவசமாம்! இசிஜி எடுத்தால் எக்ஸ்ரே இலவசமாம்! ஆனால் இதில் எதுவுமே இலவசமல்ல. இலவசத்திற்கும் சேர்த்து நாம் மற்றவற்றிற்கும் பணம் செலுத்துகிறோம். இது சிறிய பொருட்களில் மட்டுமல்ல. பெரிய பொருட்களிலும்தான்.
என் நண்பன் ஒருவனுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் வாங்கச் சென்றோம். விலை ரூ. 98,000. இதில் 8,000 ரூபாய் திரும்ப வழங்கப்படும் எனப் போட்டிருந்தனர். நாங்களும் நம்பி 98000 எடுத்துக்கொண்டு போனோம். பில் போட்டவுடன் மீதம் 8000 ரூபாய் கொடுப்பார்கள் எனப் பார்த்தால், 8000 ரூபாய்க்கு ஒரு கிப்ட் வவுச்சர் கொடுத்தார்கள். இதை வைத்து என்ன செய்ய என்று கேட்டால், 'இதை நீங்க ஸ்க்ரேட்ச் செய்தால் ஒரு பாஸ்வேர்ட் இருக்கும். அதை வைத்து நீங்க ஆப்பிள் ஐடியூன்ஸ் போய் 8000 ரூபாய்க்கு அப்ளிகேஷன்ஸ் டவுன்லோட் செய்துகொள்ளலாம்!' என்றார்கள். ஆக மொத்தம் 98000 ரூபாயும் ஆப்பிள் நிறுவனத்திற்கே. இதைக் கேட்டவுடன் வடிவேலுவின் 'மூட்டைப்பூச்சியைக் கொல்லும் நவீன மெஷின்' விளம்பரம்தான் நினைவிற்கு வந்தது.
நம் அரசுகள் தரும் அனைத்து இலவசங்களும் நம் முதல்வர்களின் அப்பா – அம்மா சொத்தில் கொடுப்பது அல்ல. நம் வயிற்றை டாஸ்மாக்கில் அடகுவைத்து நம் வீட்டிற்கு டிவி, மிக்ஸி, கிரைண்டர் வாங்கி வருகிறோம். கலைஞர் என்ன நமக்கு மாமாவா? ஜெயா என்ன நமக்கு அத்தையா? இவற்றையெல்லாம் சீர்வரிசையாகக் கொடுப்பதற்கு? திருமணங்களில் வரதட்சனையாக வரும் பொருட்களும், பணமுமே இலவசம்தான். அதற்கும் 'வாழ்க்கையையே' விலையாகக் கொடுக்கின்றாள் பாவப்பட்ட மணமகள். இன்று ஏதாவது நமக்கு இலவசமாக வருகிறதென்றால் கவனமாக இருப்போம். எங்கோ நாம் விலைபோகிறோமென்று?
ஆபிரகாம் தன் மனைவியின் இறப்பின் சுமையிலும் கூட விலைபோகவில்லை. 'இப்போ இனாமா வாங்கிக்குவோம். பின்னால் கொடுப்போம்!' என்று ஒதுங்கவில்லை. உடனுக்குடன் செட்டில் செய்து விடுகிறார். நம் இறைவன் கொடுத்த உழைப்பைக் கொடுத்துப் பொருள்கள் வாங்குவோம். நாம் வாழ்வது நம் கரத்தை நம்பி. நம் கரங்களுக்கு வரும் இலவசங்களை நம்பி அல்ல.
சிட்டுக்குருவி கிளையில் அமர்வது கிளை தருகின்ற இலவச இளைப்பாறுதலை நம்பி அல்ல. அது ஒடிந்தாலும் பறப்பதற்கு இறக்கைகள் உண்டு என்று தன் இறக்கைகளை நம்பியே இளைப்பாறுகின்றன!
'நமக்குள்ளே இது என்ன?'
No comments:
Post a Comment