Saturday, September 14, 2013

எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?


அப்பொழுது, ஈசாக்கு தன் தந்தையாகிய ஆபிரகாமை நோக்கி, 'அப்பா!' என, அவர், 'என்ன? மகனே!' என்று கேட்டார். அதற்கு அவன், 'இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?' என்று வினவினான். அதற்கு ஆபிரகாம், 'எரிபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பொறுத்தமட்டில், கடவுள் பார்த்துக்கொள்வார் மகனே' என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர். (தொடக்கநூல் 22:7-8)

அனைவருக்கும் தெரிந்த நிகழ்வு. இந்த நிகழ்வில் விளக்கம் தெரியாத பகுதிகள் நிறையவே இருக்கின்றன. முதல் குழப்பம்: எதற்காக கடவுள் ஒருவரின் மகனைப் பலியாகக் கேட்க வேண்டும்? கடவுள் இரத்தம் குடிக்கும் கடவுளா? அதிலும் ஆசை ஆசையாய் தன் இறுதிக் காலத்தில் ஆபிரகாம் பெற்றெடுத்த மகனை ஏன் கேட்க வேண்டும்? இந்தக் கேள்வியையொட்டியே நம்மில் எழுகின்ற மற்றொரு கேள்வி. குழந்தைகள் இறக்கும்போதும், இளவயதில் இறப்பைப் பற்றிக் கேள்விப்படும்போதும் நாம் கேட்கின்ற கேள்வி: கடவுள் இருக்கிறாரா? எதற்காக அவரே ஒரு அழகான வாழ்க்கையைக் கொடுக்க வேண்டும்? வாழ்க்கை துவங்குமுன் எதற்காக அவரே எடுத்துக்கொள்ள வேண்டும்? இந்தக் கேள்விகள் நமக்கு புரியாத புதிராகவே உள்ளன. 

குழந்தைகளைப் பலியாகக் கொடுக்கும் மரபு பாபிலோனியாவில் இருந்தது என்பதற்குத் தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் இது ஆபிரகாம் வாழ்க்கையில் நடந்திருக்கலாம் என சிலர் சொல்கின்றனர். மேலும் ஆபிரகாமின் நம்பிக்கையைச் சோதிப்பதற்காகக் கடவுள் நடத்திய 'திருவிளையாடல்களில்' இதுவும் ஒன்று என்கின்றனர் சிலர். எது எப்படி இருந்தாலும் இந்த நிகழ்வை நாம் அப்படியே எடுத்துக்கொண்டு ஈசாக்கின் கேள்வியை மட்டும் ஆராய்வோம்.

இந்த நிகழ்வு நடக்கும் நேரம் ஒரு காலை வேளை. நடக்கும் இடம் மொரியா மலையடிவாரமும், மலைக்குச் செல்லும் பாதையும். இந்த நிகழ்வில் பங்கேற்கும் நபர்கள்: ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் இரு வேலைக்காரர்கள். சாராவைப் பற்றியோ, சாராவிற்கு இது தெரியுமா என்பதைப் பற்றியோ குறிப்புகள் இல்லை. இந்த நிகழ்வின் தொடக்கத்திலும், இறுதியிலும் பயன்படுத்தப்பட்டிருப்பது ஒரே சொல்லாடல்: 'கண்களை உயர்த்திப் பார்த்தபோது'. ஆபிரகாம் கண்களை உயர்த்திப் பார்க்கின்றார். பலியிடப் புறப்படுகின்றார்.

தன் கழுதையைச் சேனமிட்டுப் புறப்படுகின்ற ஆபிரகாமோடு அவர் மகனும், அவரது வேலைக்காரர்களும் செல்கின்றனர். எங்கு செல்கிறோம்? எதற்குச் செல்கிறோம்? என்பது ஆபிரகாமிற்கு மட்டுமே தெரியும். 'கூப்பிட்டார், போவோம்' என்ற மனநிலையில் உடன் வருகின்றனர் வேலையாட்கள். 'ஏன் போறோம்? எங்க போறோம்?' எதிர்பார்ப்பு மிகுதியில் கேட்டே விடுகிறான் சிறுவன் ஈசாக்கு. 'உன்னைத்தான் பலி கொடுக்கப் போறோம்!' அப்படின்னு சொன்னா அவன் ஏத்துக்குவனா? அப்படிச் சொல்லத்தான் ஒரு தந்தைக்கு மனசு வருமா? மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், 'கடவுள் பார்த்துக்கொள்வார்'னு சொல்லி வைக்கிறார். பதில் தெரியாத பல கேள்விகளுக்கு கடவுளே விடையாகிறார். 

'கடவுள் கண்ணைக் குத்துவார்னு' குழந்தைகளுக்குச் சொல்லி நாம் அறநெறி கற்றுத்தர முயலும்போதும், 'அம்மா எங்க?' என்று கேட்க, 'தாய் இறந்துவிட்டதை எப்படிச் சொல்வது என்று சொல்லத் தெரியாமல், 'சாமிகிட்ட போயிடுச்சு' என்று சொல்லும்போதும், கடவுள் நம் வாழ்வின் கோடிட்ட இடத்தை நிரப்பும் வார்த்தையாகவே வந்து போகின்றார். 

நம் வாழ்க்கை ஒரு மலைமேல் பயணம்போல. அதில் நாம் அனைவருமே நடந்து செல்கின்றோம். வாழ்க்கையை நாம் எப்படி வாழ்கிறோம் என்பதற்கு இந்த நிகழ்வில் வரும் மூன்று மனிதர்களுமே உதாரணங்களாகத் திகழ்கின்றனர்: 

'கூப்பிட்டாங்க. வருவோம். சம்பளம் கொடுங்க. போயிடுவோம்' என்ற மனநிலையில் வருகின்றனர் வேலைக்காரர்கள். நாம் வாழ்க்கையையும், உறவுகளையும் அணுகும் விதம் சில நேரங்களில் அப்படித்தான் இருக்கின்றது. ஏதோ பிறந்தாச்சு, வாழ்வோம். பழகியாச்சு, கடைசி வரை இருப்போம். திருமணம் முடிச்சாச்சு, சேர்ந்து வாழ்வோம். நான் உனக்காக உழைக்கிறேன். எனக்குரியதை நீ கொடு. உனக்குரியதை நான் கொடுக்கிறேன். மற்றபடி நமக்குள்ளே வேறு எதுவும் கிடையாது. வாழ்க்கையை நாம் இந்த நிலையில் அணுகும்போது வாழ்க்கை போரடித்து விடுகின்றது. ஒருவர் மற்றவர் பயன்படு பொருளாக மாறிவிடுகின்றனர். 'கூலிக்கு மாரடிப்பது' என்ற மனநிலையில் வாழ்க்கை நம்மையும், நாம் வாழ்க்கையையும் இழுத்துக்கொண்டு போகிறோம். 'ஹவ் இஸ் லைஃப்?' 'டிராகிங்!'

இரண்டாவது வகை மனிதர் ஈசாக்கு. இவருக்குத் தெரிந்ததெல்லாம் கேள்விகள். 'இது என்ன? அது என்ன? இது எதற்கு? அது எதற்கு? எங்க போறோம்? இவங்க ஏன் கூட வர்றாங்க? இந்த மலையோட பெயர் என்ன? நாம எப்போ திரும்பி வருவோம்? நெருப்பு எதற்கு? கழுதை எதற்கு? அத எங்க? இத எங்க?' பல கேள்விகளை உள்ளத்திலும், சில கேள்விகளை உதட்டிலும் கேட்டுக்கொண்டு வருகின்றார். வாழ்க்கையில பல விஷயங்கள் நடக்கும் போது நாமும் நிறைய கேள்விகள் கேட்கின்றோம்: 'இது ஏன்? அது ஏன்? ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது?' எனப் புலம்புகிறோம். வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு பதிலே இல்லை அல்லது நம்மைத் திருப்திப்படுத்துகின்ற பதில்கள் இல்லை.

மூன்றாவது மனிதர் ஆபிரகாம். மனிதிலும் உடலிலும் பாரம். ஒரே மகன். வாக்குறுதியின் மகன். இவனை எதற்குக் கடவுள் பலியாகக் கேட்கிறார். அப்போ கடவுள் கொடுத்த வாக்குறுதி. என் இனம் பெருகும்னு சொன்னாரே? இஸ்மாயில வேற வீட்டு விட்டு அனுப்பிட்டோம்? ஈசாக்கு இல்லாம வீட்டுக்குப் போனா சாரா என்ன சொல்லுவா? சாராகிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமோ? இந்த அனைத்துக் குழப்பத்திலும் தெளிவாக இருக்கிறார்: 'கடவுள் பார்த்துக்கொள்வார்!' இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன: 'கடவுள் கவலைப்பட்டுக்கொள்வார். நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?' 'கடவுள் நம்மைக் காண்கின்றவர்'. 'கடவுளுக்கு நம் தேவைகள் தெரியும்'. இதுதான் நம்பிக்கை மனநிலை. தான் மலைக்கு இந்தப் பக்கம்; ஈசாக்கை மேலே கூட்டிக்கொண்டு வரும்போது, மலைக்கு அந்தப்பக்கம் கடவுள் ஒரு ஆட்டுக்குட்டியைக் கூட்டிக்கொண்டு வருவார் என ஆபிரகாம் மட்டுமே நம்பினார். 'காணாத ஒன்றைப் பற்றிய ஐயமற்ற நிலையே நம்பிக்கை' (எபிரேயர் 11:1). நம் வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டுமென்றால் நமக்குத் தேவை இந்த மனநிலைதான். நாம பல நேரங்களில் 'உலகம் இப்படித்தான் இருக்கணும்? உலகம் என்னை இப்படியெல்லாம் நல்லா வச்சிக்கிடணும்? எல்லாரும் என்கிட்ட நல்லா இருக்கணும்! என்றெல்லாம் எதிர்பார்க்கிறோம். ஆனா நம்ம இந்த உலகத்துக்குள்ள வர்றதுக்கு முன்னாலேயே எல்லாம் இருந்துச்சே. அப்புறம் எப்படி 'நீ இப்படித்தான் இருக்கணும்! அப்படித்தான் இருக்கணும்னு' சொல்ல முடியும்? நம்பிக்கையோட வாழ்வோம். மனதில், உடலில் பாரங்கள் இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். 'யாவேயிரே' - கடவுள் பார்த்துக்கொள்வார்.

மூவரும் மலைக்குச் செல்கின்றனர். ஆபிரகாம் பீடம் தயாரிக்கின்றார். பலிப்பொருளாகத் தன் மகனைக் கட்டி அதன் மேல் வைக்கின்றார். இந்த இடத்தில் இவ்விருவரும் பரிமாறிக் கொண்ட உணர்வுகள் பற்றி பைபிள் மௌனம் சாதிக்கின்றது. தன் கையிலிருந்த கத்தியை ஓங்கி ஈசாக்கை வெட்டத்துணிந்த போது ஆபிரகாமிற்குக் காட்சி தருகின்றார் கடவுள். ஆபிரகாமின் நம்பிக்கையைப் பாராட்டுகின்றார். நம் கண்களுக்கு இது குருட்டுக் கீழ்ப்படிதலாகத் தெரியலாம். ஆனால் பல நேரங்களில் வாழ்க்கையை இனிமையாக்குவது இந்தக் குருட்டுக் கீழ்ப்படிதல்தான். 

எரிகின்ற ஒரு வீடு. ஒரு பையன் மட்டும் சிக்கிக் கொள்கின்றான். கீழே அவனது தந்தை நிற்கிறார். 'தம்பி? எங்கடா இருக்க?' குரல் கொடுக்கிறார். மகன் கண்ணுக்குத் தெரிகிறான். மேலே நிற்கும் மகனுக்குத் தன் தந்தை தெரியவில்லை. குரல் மட்டும் கேட்கிறது. 'குதி. நான் பிடித்துக் கொள்கிறேன்!' என்கிறார் தந்தை. 'புகையாய் இருக்கிறதே? தந்தை எங்கே இருப்பார்? என்றெல்லாம் யோசிக்கவேயில்லை மகன். 'எப்படியும் தந்தை பிடித்துக்கொள்வார்!' என்ற நம்பிக்கையில் குதிக்கிறான். காப்பாற்றப்படுகிறான். வாழ்க்கைக்கு கை கொடுக்கும் கை நம்பிக்கை.

இந்த நிகழ்வின் இறுதியில் ஆபிரகாம் தன் பணியாளர்களிடம் திரும்பிவர அவர்கள் தங்கள் இல்லம் திரும்புகின்றனர். இங்கே 'ஈசாக்கைப்' பற்றிய எக்குறிப்பும் தரப்படவில்லை. ஈசாக்கு என்ன ஆனார்? பலியிடப்பட்டது யார்? ஈசாக்கா? ஆட்டுக்குட்டியா?' இந்தக் கேள்விகளை வாசகருக்கு விடுத்து நிகழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றார் ஆசிரியர்.

இந்த நிகழ்விற்கும், இயேசுகிறிஸ்துவின் புதிய ஏற்பாட்டு கல்வாரி நிகழ்விற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன: தன் தந்தையின் ஒரே மகன் ஈசாக்கு. வானகத் தந்தையின் ஒரே மைந்தன் இயேசு. இங்கே மொரியா மலை. அங்கே கல்வாரி மலை. ஈசாக்கின் தோளில் விறகுக்கட்டு. இயேசுவின் தோளில் சிலுவைமரம். உடன்வரும் ஆபிரகாம். உடன் வரும் வானகத் தந்தை. ஈசாக்கு விறகுக்கட்டின்மேல் வைக்கப்படுகின்றார். இயேசு சிலுவை மரத்தில் அறையப்படுகின்றார். ஈசாக்கும் மலையிலிருந்து இல்லம் திரும்பவில்லை. இயேசுவும் தன் இல்லம் திரும்பவில்லை. இந்த ஒற்றுமைகள் இயல்பாக எழுந்தவையா? இறைவனின் முன்னேற்பாடுகளா?

மகனைப் பலியிடுதல் போல தன் இனத்திற்காக ஒருவர் பலியிடப்படுவதைச் சித்தரித்த திரைப்படம் 'அரவாண்' (2012). தன் ஊரின் நலனுக்காக, தன் ஊர்மேல் சுமத்தப்பட்ட பழியை நீக்குவதற்காக தன்னையே பலியாக்குகின்றான் சின்னா. 18ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு நிகழ்வையும், அந்த நிகழ்வைத் தழுவி எழுதப்பட்ட 'காவல்கோட்டம்' என்ற புதினத்தையும் தழுவி எடுக்கப்பட்ட 'அரவாண்' (பாம்பு) சொல்வது இதுதான்: 'ஒரு ஊர் நல்லா இருக்க ஒருத்தன் பலியானா தப்பில்லை!' 

ஆனால் கேள்வி இதுதான்: பலி கொடுக்கலாமா? கடவுள் அவ்வளவு பெரிய இரத்த விரும்பியா? இந்த மண்ணில் இதுவரை சிந்தப்பட்டது எவ்வளவு? ஒவ்வொரு கொலையும் ஒரு பலிதானே? ஒவ்வொரு பலியும் ஒரு கொலைதானே?

'இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?'

No comments:

Post a Comment