Tuesday, September 24, 2013

நான் ஏன் இழந்து போக வேண்டும்?


ரெபேக்கா யாக்கோபிடம், 'இதோ! உன் சகோதரன் ஏசா உன்னைக் கொலை செய்து, தன்னைத் தேற்றிக்கொள்ள விரும்புகிறான். ஆகையால், உடனே கிளம்பி காரானில் உள்ள என் சகோதரன் லாபானிடம் ஓடிப்போ ... ஒரே நாளில் என் இரு புதல்வர்களையும் நான் ஏன் இழந்து போக வேண்டும்?' என்றார். (தொடக்கநூல் 27:42-45)

யாக்கோபு ஏமாற்றும் படலம் முடிவு பெற்று, அவர் ஏமாறப் போகும் படலம் தொடங்குகின்றது. தன் தலைமகனுரிமையையும், தன் ஆசியையும் தன் தம்பி எடுத்துக்கொண்டான் என்று கோபம் கொல்கின்ற அண்ணன் ஏசா அவனைக் கொல்லத் தேடுகிறான். மறுபடியும் இங்கே தலையிட்டு தன் இளைய மகனைக் காப்பாற்ற விழைகின்றார் ரெபேக்கா. தன் சகோதரன் லாபானிடம் அவரை அனுப்புகிறார். 

அனுப்புவதற்குக் காரணங்கள் இரண்டு:

1. ஏசாவிடமிருந்து யாக்கோபைத் தப்புவிப்பது

2. யாக்கோபிற்கு தன் அண்ணன் வீட்டில் பெண் பார்ப்பது

ஏசா எங்கே போகிறான், என்ன ஆகிறான் என்பதைப் பற்றி நூலில் இப்போது எதுவுமே குறிப்பிடப்படவில்லை. ஏசா நாற்பது வயதானபோது இத்தியன் பெயேரியின் மகள் யூதித்தையும், இத்தியன் ஏலோனின் மகள் பாசமத்தையும் மணந்து கொண்டான். இது ஈசாக்கிற்கும், ரெபேக்காவிற்கும் பிடிக்கவில்லை. இந்த இத்தியப் பெண்களால் (இந்தியப் பெண்களாலும் கஷ்டம்தான்! no, no, just kidding!)  ரெபேக்காவும் மிகவும் கஷ்டப்படுகிறார் (தொநூ 27:46). என்ன கஷ்டமாக இருந்திருக்கும்? நம்ம வீடுகளில் வேறு சாதியில் பெண் எடுத்தா என்ன கஷ்டங்கள் வருமோ அதே கஷ்டங்களாகத்தான் இருந்திருக்கும்!

தன் மகனைக் காப்பாற்ற நினைக்கும் ரெபேக்கா, 'அவனுக்கு விரோதமாய் நீ செய்ததை' என தவற்றை யாக்கோபின் பக்கம் திருப்புகிறார். ஏசாவை ஏமாற்ற முழுமுதற்காரணமாய் இருந்த ரெபேக்கா இப்போது 'நீ செய்தது!' என யாக்கோபைப் பார்த்து விரல் நீட்டுகிறார். 

இந்த நிகழ்வில் எல்லாரும் ஒருவர் மற்றவரைத் தான் காரணம் சொல்கின்றனர். இந்தக் குடும்பத்தில் நடக்கும் இந்தப் பிரச்சினையால் ஒருவருக்கொருவர் தண்டனையைக் கொடுத்துக் கொள்கின்றனர். பெற்றோர்களுக்குக் கிடைத்த தண்டனை தங்கள் இரு பிள்ளைகளையும் பிரிந்து வாழ்வது. பிள்ளைகளுக்குக் கிடைக்கும் தண்டனை தப்பி ஓடுவது. சொந்த வீட்டிலிருந்து தப்பி ஓடுவது எவ்வளவு பெரிய கொடுமை.

வீடுதான் ஒரு மனிதனின் அடையாளம். தொடக்க காலத்தில் வேட்டையாடிக் கொண்டிருந்த மனித இனம் கூட தங்கள் வீட்டையே அடையாளமாக வைத்திருந்தனர். எங்கே போனாலும் நாம் திரும்புவது நம் வீட்டிற்குத்தான். நம் வீடு நமக்கு நம்பிக்கையைத் தருகின்றது. எதற்காக எவ்வளவு இ.எம்.ஐ. செலுத்தியாவது நாம் ஒரு வீட்டைச் சொந்தமாக்க விழைகின்றோம்? அது தரும் நம்பிக்கைதான். வெளி உலகில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் நம் வீட்டிற்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டால் அங்கே நாம் தான் ராஜா. வாடகை வீட்டிலும், ஒத்தி வீட்டிலும் நாம் உரிமைகள் கொண்டாட முடியாது. 'என்னதான் வாடகை கொடுத்தாலும், வாடகைக்குக் கொடுத்தவர் நம் நண்பராய் இருந்தாலும்' அந்த வீட்டின்மேல் நம் மனம் ஒட்டுவதில்லை. பணக்கஷ்டத்தால் தங்கள் சொந்த வீடுகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்படும் மனிதர்கள் அந்தோ பரிதாபம்! தாங்கள் உண்டு, உறங்கி, விளையாண்டு, சிரித்து மகிழ்ந்து, சண்டையிட்டுக் கொஞ்சிய வீட்டை விடுவது அவ்வளவு எளிய காரியம் அல்ல.

சொந்த வீடு மட்டுமல்ல. சொந்த மண்ணும், சொந்த நாடும் நம்மை ஈர்க்கின்றது. எவ்வளவு குருதி சிந்தினாலும் ஒரு நாள் ஈழம் விடியும் எனக் காத்திருக்கும் நம் சகோதர உறவுகளின் வேட்கைக்குக் காரணமும் இந்தச் சொந்தம் தான். வீட்டை விட்டு வெளியே சென்றால் நாம் அடையாளமற்றவர்களாய் ஒருவர் மற்றவரோடு கலந்து விடுகின்றோம். சொந்த நாட்டிலிருந்து வெளியே போய் என்னதான் நாம் நல்ல முறையில் குடியேறி வசதி வாய்ப்புகளோடு இருந்தாலும், அந்த மண்ணைப் பொறுத்த வரையில் 'நாம் அகதிகள் அல்லது பிழைக்க வந்தோர்'. ஒரு புதிய மண்ணின் குடியுரிமை பெற்றாலும், அந்தக் காகிதக் கட்டில் வேண்டுமானால் நம் குடியுரிமை மாறுமே தவிர, நம் ஜீன்களிலும், நம் உணர்வுகளிலும் அது மாறாது. 'நான் இந்த மண்ணைச் சாராதவன்' என்று நம் மனம் ஒரு மூளையில் புலம்பிக் கொண்டேதான் இருக்கும். 

திருமணம் முடித்துப் புகுந்த வீடு சென்று படிப்பு, வேலை, பயணம் என்று பாதை மாறினாலும், தங்கள் சொந்த ஊருக்கு என்றோ ஒருநாள் செல்லும்போது தங்களை அறியாமலேயே அழுது விடுகிறார்கள். சொந்த ஊரில் தாங்கள் பார்த்த வயல், அங்கே வீசும் மென்மையான காற்று, ஓடும் தண்ணீர், மண்வாசம், பாடும் பறவைகள், ரோட்டில் கிடக்கும் முள்கள், கல்லறை மேடுகள், கிணற்றடி, வரப்பு, கயிற்றுக் கட்டில், வீட்டின் முன்மாடம் அனைத்தையும் நாம் பார்க்கும் போது ஏதோ மறுபிறப்பு எடுத்ததுபோலவே உணர்வார்கள். 'அதோ அங்கதான் நாங்க விளையாடுவோம்!' என்று தங்கள் பிள்ளைகளுக்கு அந்த இடங்களைச் சுட்டிக் காட்டுவார்கள். பிறந்த வீடோ அல்லது ஊரோ நமக்கு புதுத் தெம்பைத் தருகின்றது. 

யாக்கோபு இருமுறை ஏமாற்றினான். இப்போது அதற்குப் பரிகாரமாக இருமுறை ஓடவேண்டும்: 1) தன் வீட்டை விட்டு. 2) தன் ஊரை விட்டு. யாக்கோபு இதை எப்படி சமாளிக்கப் போகிறான்? இங்கேதான் நம் ஸீனுக்குள் கடவுள் வருகின்றார். எல்லாம் இறைத்திட்டம்!

'எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்குமோ, அது நன்றாகவே நடக்கும்'

என்று பகவத் கீதை மொழிவதுதான் இறைத்திட்டம்.

தலைமகனுரிமையை ஏசா இழக்க வேண்டும், அதை யாக்கோபு பெற வேண்டுமென்று திட்டம் இருந்தது. அதுபோலவே நடந்தது.

ஆசியையும் யாக்கோபுதான் பெற வேண்டுமென்று இருந்தது. அதுபோலவே நடந்தது.

ஏசா கோபப்படவேண்டும் என்று இருந்தது. அதுபோலவே நடந்தது.

இப்போது யாக்கோபு தப்பி ஓட வேண்டும் என்று இருந்தது. அதுபோலவே நடக்கிறது.

இது ஏன்? என்று கேட்டால் நமக்கு விடைகள் கிடைக்காது. அல்லது நாம் எதிர்பார்க்கும் விடைகள் கிடைப்பதில்லை. 'தென்னாப்பிரிக்காவில் இரயிலில் இருந்து காந்தி தள்ளிவிடப்பட வேண்டும்' என இருந்தால் அப்படியேதான் நடக்கும் அதை யாராலும் மாற்ற முடியாது. 'தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருந்த அன்னை தெரசா அருகிலிருந்த சேரியில் நடந்த ஒரு கோர இறப்பைப் பார்க்க வேண்டும்' என இருந்தால் அப்படியேதான் நடக்கும். ஏன்? என்ற கேள்வி இங்கே பொருந்துவதில்லை. வாழ்க்கையின் அதிசயங்களுக்கு முன்னால் 'ஏன்' என்ற கேள்வி எடுபடுவதில்லை. 

எல்லார் கண்களும் இப்போது யாக்கோபின் மேலேயே இருக்கின்றன. 'நான் ஏன் என் இரு புதல்வர்களையும் இழந்து போக வேண்டும்?' எனப் புலம்புகின்றார் ரெபேக்கா. ஏசா யாக்கோபைக் கொலை செய்து விட்டால் மீதம் ஏசாவாவது இருப்பானே. அப்படி இருக்க 'என் இரு புதல்வர்களையும்' நான் இழந்து போக வேண்டுமா? என ரெபேக்கா புலம்புவது ஏன்? ஏனென்றால் யார் மற்றவரின் இரத்தத்தைச் சிந்துகிறார்களோ அவர்களின் இரத்தமும் சிந்தப்பட வேண்டும் என்பது இறைவனின் கட்டளை (தொநூ 9:6). 'அதிகாரம்', 'முடிவு' – ஆபிரகாமின் வாழ்க்கை. 'எதுன்னாலும் ஓகே', 'பணிவு' - ஈசாக்கின் வாழ்க்கை. 'ஓட்டம்', 'போராட்டம்' – யாக்கோபின் வாழ்க்கை. 

யாக்கோபின் ஓட்டம் இங்கே தொடங்குகிறது. 'ஓடினேன், ஓடினேன், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்' என்று பராசக்தியின் குணசேகரனாய் வாழ்க்கை ஓட்டத்தைத் தொடங்குகிறார் யாக்கோபு. இன்றைய கேள்வி நமக்கு வைக்கும் பாடம் இதுதான்: வாழ வேண்டுமென்றால் ஓட வேண்டும். 'திருடினால்தான், பைத்தியக்காரனாய் இருந்தால்தான், கடவுளின் பெயரால் ஏமாற்றினால்தான்' வாழ முடியும் என்ற குணசேகரனின் குற்றச்சாட்டிற்கு விமலா அழகாகப் பதில்சொல்வார்: 'வாழ்க்கையில் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அதை மட்டும் பார்த்துவிட்டு இப்படி வாழ்ந்தால்தான் வாழ முடியும் என்று சொல்வதற்குப் பதில், நீ ஏன் வித்தியாசமாக வாழக் கூடாது?!' சில நேரங்களில் நாம் வீட்டை விட்டு, ஊரை விட்டு ஓடித்தான் ஆக வேண்டும். அப்படிப் புறப்படும் நம் பயணம் முதலில் புழுதித் தூசியாய் இருந்தாலும், பின் வசந்த மாளிகையாய் மாறும். 

இரண்டாவதாக, இன்றும் தங்கள் வீட்டை விட்டு, தாய் தந்தையை விட்டு, தங்கள் சகோதரர்களை விட்டுப் பிரிந்து, கட்டிட வேலைக்காகவும், கார்பெட் விற்பதற்காகவும் நம் வடமாநிலங்களிலிருந்து வந்து போகிறார்கள். அவர்களின் கண்களுக்குப் பின்னால் தங்கள் மண்ணிற்கான தேடல் இருந்துகொண்டேதான் இருக்கும். அவர்கள் நம் அருகில் வந்தால் அவர்களிடம், 'ஆமா! நீங்க எந்த ஊரு? அங்க எந்த மொழி பேசுவீங்க?' என்று கேளுங்களேன். அவர்கள் உங்களை ஒரு புதிய உலகத்திற்கே கூட்டிச் செல்வார்கள்.

'நான் ஏன் இழந்து போக வேண்டும்?'

No comments:

Post a Comment