Sunday, September 29, 2013

என்னை ஏமாற்றியது ஏன்?


அதிகாலையில் அந்தப் பெண் லேயா என்று கண்டு, யாக்கோபு லாபானை நோக்கி: 'நீர் எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா நான் உம்மிடம் வேலை செய்தேன்? என்னை ஏமாற்றியது ஏன்?' என்றார். அதற்கு லாபான்: 'மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது எங்கள் ஊர் வழக்கமில்லை. ஆகையால் நீ இவளோடு ஏழு நாள்களைக் கழி. இன்னும் ஏழாண்டுகள் என்னிடம் வேலை செய்தால் அவளையும் உனக்குக் கொடுப்பேன்' என்றான். (தொடக்கநூல் 29:25-26)

'நீர் எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்?' என்று லாபானைப் பார்த்துக் கேட்கின்றார் யாக்கோபு.

இதே கேள்வியைத்தான் இதற்கு முந்தைய பகுதியில் ஏசா தன் தந்தை ஈசாக்கைப் பார்த்துக் கேட்கின்றான். இருவரின் பின்புலத்திலும் இருப்பது தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்ற விரக்தியும், கோபமும், இயலாமையுமே.

தன் சகோதரனை இருமுறை ஏமாற்றுகின்ற யாக்கோபு, தன் தாய்மாமன் லாபானால் இருமுறை ஏமாற்றப்படுகின்றார். 'பிறர்க் கின்னா முற்பகற் செய்யின் தமக்கின்னா பிற்பகற் தாமே வரும்!' என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப தான் ஒருபுறம் செய்த செயல்களுக்கு மறுபுறம் கைம்மாறு பெறுகின்றார் யாக்கோபு.

தலைமகன் உரிமையை வைத்து தன் அண்ணனை ஏமாற்றினார் யாக்கோபு. தலைமகள் உரிமையை வைத்து தன் மருமகனை ஏமாற்றுகின்றார் லாபான். 

தலைமகள் இருக்கும்போது இளையமகள் திருமண உரிமையைப் பெறுதல் வழக்கமன்று என்று பாரம்பரியத்தைத் துணைக்கு இழுக்கிறார் லாபான்.

இந்த நிகழ்வில் எனக்கு இருக்கும் மிகப்பெரும் நெருடல் இதுதான். 'யாக்கோபு ராகேலை விரும்பினார்' எனவும் 'ராகேலை முன்னிட்டு வேலை செய்தார்' எனவும் 'ராகேலின் காதலால் ஆண்டுகளும் நாட்களாகத் தோன்றின' எனவும் யாக்கோபு – ராகேல் காதலைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது (காண். தொநூ 29:17,20). அப்படியிருக்க, ராகேலுக்கும் லேயாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் யாக்கோபு எப்படி உடலுறவு கொண்டார்? 'குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த' கதையாக அல்லவா இது இருக்கிறது. இவள் தன் காதலியா அல்லது வேறு பெண்ணா என்று கண்டுகொள்ள முடியாத அளவிற்கு அவரின் பார்வை மறைந்திருந்ததா? அதிகாலையில் தான் அவள் லேயா என்பதைக் கண்டுகொள்கின்றார். விதி கண்ணை மறைத்து விட்டதா? தெரியவில்லை. 'நாம் ஏமாற்றினோம் என்றால் எப்படியாவது, எவ்வளவு அலர்ட்டாக இருந்தாலும் நாமும் ஏமாற்றப்படுவோம்!' என்பதே இங்கு தெளிவாகிறது. 'வாள் எடுத்தவன் வாளால் மடிவான்' என்றால் 'ஏமாற்றுகிறவனும் ஏமாற்றப்படுவான்!'. இதுதான் பிரபஞ்சத்தின் விதி. நாம் செய்யும் நன்மை நம்மிடமிருந்து புறப்பட்டு நலமாக நம்மிடமே திரும்பி வருகிறது. நாம் செய்யும் தீமையும் அவ்வண்ணமே நம்மை நோக்கித் தீமையாகத் திரும்புகிறது.

பவுலோ கோயலோ அவரின் தந்தையின் இறப்பைப் பற்றி இப்படி எழுதுகின்றார்: என் அப்பா ஒரு நல்ல மனிதர். வறுமையில் வாடிய போதும் யாராவது உதவி என்று வந்தால் அவர்களுக்கு உடனடியாக ஏதாவது உதவி செய்வார். நான் அடிக்கடி அவரைக் கண்டித்ததுண்டு. ஏன் இப்படிச் செய்கிறார் என்று புலம்பியதுண்டு. அவர் நான் புலம்பியபோதெல்லாம் சொல்வார், 'நாம் இன்று செய்வது நாளைக்கு நமக்குத் திரும்ப வரும்' என்று. தான் இறக்குமுன் தன் இறுதியாசையாக அவர் சொன்னது: 'நான் இறந்தபின் என்னைப் புதைக்க வேண்டாம். என்னை எரித்து விடுங்கள். எரித்த பின் என் சாம்பலை நான் அடிக்கடி ரசிக்கும் பசிபிக் கடற்கரை ஓரத்தில் தூவி விடுங்கள். அப்படித் தூவும் போது எனக்குப் பிடித்த இந்தப் பாடலை கேசட் பிளேயரில் போடுங்கள்'. ஒரு நாள் அவர் இறந்து விட்டார். அவரின் இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டி அவரின் சாம்பல் அடங்கிய குடுவை, கேசட் பிளேயர், பேட்டரிகள் எடுத்துக்கொண்டு நானும் என் உறவினர்களும், நண்பர்களும் சென்றோம். அது மாலை நேரம். இருட்டிக் கொண்டிருந்தது. கடற்கரையில் யாருமில்லை. சாம்பலை எடுத்துத் தூவுவதற்காக குடுவையைத் திறந்தோம். குடுவையின் மூடியைத் திறந்ததும், உள்ளே மற்றொரு மூடி screwவால் டைட்டாக வைக்கப்பட்டிருந்தது. Screw driver இல்லாமல் எப்படித் திறப்பது என்று பலரும் முயற்சித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பக்கம் ஒரு பிச்சைக்காரர் வந்தார். அவரின் கையில் ஒரு screw driverஇருந்தது. எங்களின் முயற்சியைப் பார்த்துவிட்டு, 'இது பயன்படுமா பாருங்கள்' என்றார். 'இந்த மனிதர் ரொம்ப நல்லவராக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இது இப்போதுதான் நான் வரும் வழியில் என் காலில் தட்டியது' என்று சொல்லிவிட்டு வழி நடந்தார். அப்போதுதான் எங்கள் தந்தையின் வார்த்தைகளின் உண்மை புரிந்தது: 'நாம் இன்று செய்வது ஒருநாள் நம்மிடமே திரும்பி வரும்!'

நாம் தினமும் நம்மிடமிருந்து மற்றவருக்குக் கொடுக்கும் ஒரு பொருள் பணம். கைமாற்றாகவோ, கொடையாகவோ, நாம் வாங்கும் பொருட்களுக்காகவோ, நாம் பயன்படுத்தும் சேவைக்காகவோ என தினமும் பணம் நம்மிடமிருந்து வெளியே போகின்றது. பிச்சைக்காரர், ஆட்டோ, பேருந்து, கோயில் உண்டியல், சம்பளம் என பணத்தை நாம் மற்றவருக்கு ஏதோ ஒரு வகையில் தினமும் கொடுக்கின்றோம். அப்படிக் கொடுக்கும்போது அதை ஆசீர்வதித்துக் கொடுக்க வேண்டும் என்கின்றனர் மேலாண்மையியல் அறிஞர்கள். நாம் திட்டிக் கொண்டே கொடுக்கும்போதும், வேண்டா வெறுப்பாகக் கொடுக்கும்போதும் பிரபஞ்சத்தின் வலைப்பின்னலை நாம் சேதப்படுத்திவிடுகிறோம். நாம் கொடுக்கும்போது 'இந்தப் பணம் நலமே உன்னிடம் செல்லட்டும்!' என்றும் 'இந்தப் பணத்திற்காக நன்றி!' 'இந்தப் பொருளுக்காக, சேவைக்காக நன்றி!' என்று நாம் சொல்லும் போது அது நம்மிடம் நன்றியாக, ஆசீராகத் திரும்புவதோடு, நேர்மறையான எண்ணத்தையும் நம்மிடம் வளர்க்கின்றது.

பிரபஞ்சம் ஒரு சக்கரம். சுற்றிக்கொண்டே இருக்கும். இன்று மேலிருப்பது நாளை கீழ் வரும். இன்று கீழ் இருப்பது நாளை மேல் செல்லும். நாம் கொடுப்பது திரும்பும். நாம் எடுப்பது பறிபோகும்!

'என்னை ஏமாற்றியது ஏன்?'

1 comment:

  1. Anonymous9/29/2013

    நாம் யாருக்கு பணம் கொடுப்பினும் அதை ஆசீர்வதித்துக் கொடுக்க வேண்டும் என்பது நான் இனறு கறறுக்கொண்ட நல்ல பாடம இதைக் கோடிட்டுக் காட்டிய ஆசிரியருக்கு கோடி நன்றிகள்

    ReplyDelete