பின்னர் ரெபேக்காவை நோக்கி, 'நீ யாருடைய மகள்? சொல்! உன் தந்தையின் வீட்டில் நாங்கள் இரவு தங்குவதற்கு இடம் இருக்குமா?' என்று வினவினார் ... அந்த மனிதர் ஆண்டவரை வணங்கித் தொழுதார் ... அவன் (லாபான்) அவரை (வேலைக்காரரை) நோக்கி, 'ஆண்டவரின் ஆசி பெற்றவரே வருக! இங்குத் தாங்கள் வெளியே நிற்பது ஏன்? உமக்காக வீட்டையும், ஒட்டகங்களுக்காக இடத்தையும் துப்புரவு செய்து வைத்திருக்கிறேன்' என்று சொன்னான். (தொடக்கநூல் 24:23,26,31)
பல்வேறு நேரங்களில் நம் புலம்பல் எப்படி இருக்கிறது தெரியுமா?
எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?
நான் நினைக்கிறது எதுவுமே நடக்கிறதில்லையே, ஏன்?
எல்லாம் என் விதி. எனக்கு இப்படித்தான் இருக்கும்!
நான் துரதிர்ஷ்டசாலி!
நான் நல்லதே நினைக்கிறேன், ஆனால் எனக்குக் கெட்டதே நடக்கிறது!
இந்தப் புலம்பல்களிலிருந்து நாம் தப்பிக்க இன்றைய இறைமொழிப் பகுதி வழி சொல்கின்றது. ஈசாக்கிற்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கி விட்டது. ஆபிரகாமால் அனுப்பப்பட்ட தலைமை வேலைக்காரர் தன் பணியாளர்கள், ஒட்டகங்கள் மற்றும் பரிசுப்பொருட்களுடன் நாகோர் நகர் நோக்கிச் செல்கின்றார். பெண்ணைப் பார்த்தாயிற்று. அதாவது கண்களால் பார்த்தாயிற்று. இனி அவரது அப்பாவிடமும், உறவினர்களிடமும் பேச வேண்டும்.
ரெபேக்காவிடம் 'எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தருவாயா?' எனக் கேட்கின்ற வேலைக்காரர், 'நீ யாருடைய மகள்?' என்று கேட்டு அடுத்த கட்டத்திற்குள் நுழைகின்றார். இங்க பார்த்தோமென்றால், 'எல்லாமே வேலைக்காரருக்குச் சாதகமாகவே அமைகின்றது!'. சரியான நகருக்குச் செல்கின்றார். சரியான பெண்ணைச் சந்திக்கின்றார். சரியான கேள்வியைக் கேட்கின்றார். சரியான முறையில் அணுகுகின்றார். எல்லாம் சரியாகவே நடக்கின்றது. சரியாக நடப்பதோடு மட்டுமல்லாமல் எல்லாமே வேகமாகவும் நடக்கின்றது. இது எப்படி? வேலைக்காரருக்கு இவ்வளவு விடயங்கள் எப்படி தெரிந்திருக்கும்? ஆபிரகாம் வேறு எந்த சூத்திரத்தையும் சொல்லிக் கொடுக்கவில்லை. 'இப்படிக் கேள், அப்படிக் கேள்!' என்று சொல்லவுமில்லை. பின் எப்படி எல்லாம் சரியாக நடக்கிறது?
வேலைக்காரருக்கு நடந்ததற்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் நாம் நினைத்தது நடக்க வேண்டுமென்றால் இந்த நிகழ்வு மூன்று வழிமுறைகளைக் கற்றுத் தருகின்றது:
1. பிரபஞ்சத்தின் ஒத்துழைப்பு. பவுலே கொயலோ என்ற நாவலாசிரியர் தன் புகழ்பெற்ற 'தி ஆல்கெமிஸ்ட்' (தமிழ் மொழிபெயர்ப்பு: ரசவாதி) புதினத்தில் சந்தியாகு என்ற ஆடு மேய்க்கும் சிறுவன், தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் மந்திரத்தைக் கற்றவுடன், அவனது வெற்றிக்குக் காரணம் பிரபஞ்சத்தின் ஒத்துழைப்பு தான் என்பார். 'நீ உன் கனவில் உறுதியாய் இருந்து, அந்தக் கனவை மட்டுமே நோக்கி நடந்தாய் என்றால் இந்தப் பிரபஞ்சமே உனக்கு ஒத்துழைக்கும்'. இதையே தூய பவுலடியார் கொஞ்சம் ஆன்மீகம் கலந்து, 'மேலும், கடவுளிடம் அன்புகூர்வோர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைத்தனத்திற்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்' (உரோமையர் 8:28) என எழுதுகின்றார். ஜோசப் மர்ஃபி என்னும் உளவியலாளர் 'ஆழ்மனத்தின் அற்புத சக்தி' (The Power of Subconscious Mind) என்ற நூலில் இந்தக் கோட்பாட்டை அழகாக வர்ணிக்கின்றார். நாம் ஒவ்வொருவரும் இந்தப் பிரபஞ்சத்தோடு இணைந்திருக்கின்றோம். நம்மில் பிரசன்னமாகியிருக்கும் குட்டிப் பிரபஞ்சமே நம் ஆழ்மனம். இந்த ஆழ்மனமே நம்மை ஒருவர் மற்றவரோடு இணைக்கிறது. நாம் நல்லது செய்ய வேண்டும் என நினைத்தாலோ, அல்லது மற்றவர்கள் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தாலோ இந்த ஆழ்மனத்திடம் நாம் உறுதியாகச் சொன்னாலே போதும். அது இந்தப் பிரபஞ்சத்தின் நல்லவற்றையோடு நம்மை இணைத்து அனைத்தையும் நமக்கு நல்லதாகவே மாற்றுகிறது. ஆனால், கவனம். இந்த ஆழ்மனம் ஒரு குழந்தை மாதிரி. நாம் சொல்வதை அப்படியே நம்பி விடும். ஒருபோதும் அதனிடம் நம்மைப் பற்றிக் குறைபடச் சொல்லிவிடக்கூடாது. பின் அதையே நம்பிவிடும். நாம் சொல்வதில் உறுதியாக இருந்தால் நம் ஆழ்மனம் நாம் விரும்புவதைப் பெற்றுத்தரும். இதே கருத்தைக் கூறும் மற்றொரு நூல் நெப்போலியன் ஹில் அவர்களின் 'Think and Grow Rich'. நாம் அனைவரும் செல்வந்தர்களாகவும், வெற்றியாளர்களாகவும் மாற வேண்டும் என ஆசைப்படுகிறோம். ஆனால் அது வெறும் ஆசையாக மட்டுமே நின்றுவிடுகிறது. அது நம் சிந்தனையாக மாற வேண்டும். சிந்திப்பதில் கஞ்சத்தனம் இருக்கக் கூடாது. 'நான் ஒரு கார் வாங்குவேன்!' என நினைக்கக் கூடாது. 'நூறு கார்கள்' என யோசிக்க வேண்டும். 'நான் ஒரு வீடு கட்டுவேன்' என நினைப்பதற்குப் பதில், 'நான் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டுவேன்' என யோசிக்க வேண்டும். நம் சிந்தனையிலிருந்து புறப்படும் எண்ணம் இந்தப் பிரபஞ்சத்தில் அதே எண்ணத்திற்குக் தேவையான செயல்திறனை பெற்று நம்மிடம் கொண்டுவந்து கொடுக்கிறது. எண்ணமும், செயலும் இணைந்தவுடன் நாம் விரும்புவது நடந்து விடுகிறது. 'தனக்கு வருகின்ற மருமகள் இப்படித்தான் இருக்க வேண்டும்' என தன் ஆழ்மனதிடம் சொல்கிறார் ஆபிரகாம். அந்த ஆழ்மனம் வேலைக்காரரின் ஆழ்மனதோடு தொடர்பு கொள்கிறது. வேலைக்காரரின் ஆழ்மனம் ரெபேக்காவுடன் தொடர்பு கொள்கிறது. ரெபேக்காவின் ஆழ்மனம் அவரது அப்பாவோடு தொடர்பு கொள்கிறது. நினைத்த காரியம் நிறைவேறுகிறது. இதுவே ஆழ்மனதின் அற்புத ஆற்றல். 'இடம் கிடைக்குமா' என்று யோசித்துக் கொண்டிருந்த வேலைக்காரருக்கு 'ஆண்டவரின் ஆசி பெற்றவரே வருக! இங்குத் தாங்கள் வெளியே நிற்பது ஏன்?' என்ற விருந்தோம்பலின் மொழி பதிலாக வருகின்றது.
2. Anchoring. நங்கூரமிடுதல். நன்றாகத் தகவல் பரிமாற்றம் செய்வதற்கும், தனி மனித ஆளுமை வளர்ச்சிக்கும், தனி மனிதரின் காயங்களை ஆற்றுப்படுத்தவும், ரிச்சர்ட் பேண்ட்லர் மற்றும் ஜான் க்ரைண்டர் என்ற மொழியியல் அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வழி 'நியூரோ லிங்விஸ்டிக் புரோகிராமிங்' (Neuro Linguistic Programming). நாம் பயன்படுத்தும் மொழியும் வார்த்தைகளும் நாம் யார் என்பதைக் காட்டுகிறது. நம் செயல்பாட்டை மாற்ற வேண்டுமென்றால் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளையும் மாற்ற வேண்டும். இந்த 'புரோகிராமிங்கில்' பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடல் 'நங்கூரமிடல்' (ஆங்கரிங்). இந்த கான்சப்ட் ரொம்ப சிம்பிள். இது என்னவென்று அறியாமலே இதை நாம் தினமும் செய்கின்றோம். 'இந்தச் சட்டை போட்டுட்டு போனா நான் நினைக்கிறதெல்லாம் நடக்கும்' என்றும், 'இந்தப் பேனாவால தேர்வு எழுதினா நான் பாஸ் ஆவேன்' என்றும், 'இந்தக் கலர் சுடிதார் அல்லது சேலை கட்டிப் போனால் இன்னைக்கு நாள் முழுதும் நல்லா இருக்கும்' என்றும், 'சோகமாக இருக்கும் போது இந்தப் பாடல் கேட்டால் மனசு சரியாகிவிடும்' என்றும் நாம் நினைக்கின்றோம். இவையனைத்துமே நாம் பயன்படுத்தும் நங்கூரங்கள். உதாரணத்திற்கு, நாம் எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்கள் என வைத்துக் கொள்வோம். நாளைக்கு ஒரு இண்டர்வியூ செல்ல வேண்டும். இன்றைக்கே பயம் வந்து விடுகிறது. இந்தப் பயத்தை எப்படி சமாளிப்பது? என்.எல்.பி. ஒரு ஈஸியான வழியைச் சொல்கிறது. 'நீங்க சந்தோஷமாக இருந்த நிகழ்வையோ, உடன் இருந்த நபரையோ, வெற்றி பெற்ற நிகழ்வையோ, எல்லோரும் பாராட்டிய நிகழ்வையோ நினைத்துக் கொள்ளுங்கள். அந்த நினைவை நினைத்துக் கொண்டே ஏதாவது ஒரு நங்கூரத்தை உருவாக்குங்கள்: எ.கா. வலது கையின் பெருவிரல் நுணியையும், ஆள்காட்டி விரலின் நுணியையும் தொட்டுக்கொள்ளுங்கள். அவ்வாறு தொட்டுக்கொண்டே அந்த சந்தோஷமான நிகழ்வை உங்கள் மனத்திரையில் அடிக்கடி ஓட விடுங்கள். இப்போது நங்கூரம் உருவாயிற்று. இப்போ நீங்க எப்பொழுதெல்லாம் வலது கை பெருவிரல் நுணியையும், ஆள்காட்டி விரல் நுணியையும் ஒன்றாகத் தொட்டுக்கொள்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் உங்கள் மனம் அதே பழைய சந்தோஷமான நிகழ்வில் போய் நங்கூரமிட்டுக்கொள்ளும். இண்டர்வியூவில் சென்று அமர்ந்தவுடன் இதே நிலையில் நாம் நங்கூரமிடும்போது நம் பயமும் மறைந்து விடும்.
நம் நிகழ்வில் இன்று வேலைக்காரர் பயன்படுத்தும் நங்கூரம் 'ஆண்டவர்' என்ற வார்த்தை. வேலைக்காரர் இந்த நிகழ்வில் 92 வார்த்தைகள் பேசுகிறார் (எபிரேய மொழியில்). அதில் 23 முறை 'ஆண்டவர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார் (நான்கில் ஒரு பகுதி!). எப்போதெல்லாம் அவர் 'ஆண்டவர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறாரோ அது அவருக்கு வெற்றி தரும் நிகழ்வை அவருக்குத் தருகின்றது. அவரது பயம், கலக்கம் போய்விடுகிறது. நாம் ஒரு சில நேரங்களில் 'முடியாது!' 'நடக்காது!' 'இயலாது' என்ற தகாத வார்த்தைகளில்கூட நம் மனத்தை நங்கூரமிட்டு வைத்திருக்கலாம். அந்த நங்கூரங்களையெல்லாம் கவனமாகக் களைந்து விடுதல் அவசியம். 'நல்லதே நினை, நல்லதே நடக்கும்' என பகவத்கீதை சொல்வதும் நங்கூரத்தைப்பற்றித்தான்.
3. Delegation. இந்த வார்த்தை ஒரு டிப்ளோமடிக் வார்த்தை மட்டுமல்ல. நம் வாழ்வில் பல நேரங்களில் நாமும் இதைச் செய்கின்றோம். கரண்ட் பில் கட்ட நம் நண்பரை அனுப்பும்போது, ரீசார்ஜ் செய்ய நம் டிரைவரை அனுப்பும்போது, நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது நாமும் டெலகேஷன் செய்கிறோம். இந்த டெலகேஷனில் முக்கியமானது சரியான நபர் வழியாக அதைச் செய்வது. ஒரு சிலர் நாம் கொடுத்தனுப்பும் வேலையைச் சரியாக செய்து முடிப்பார்கள். மற்றும் சிலர் அந்த வேலையை இரண்டாக்கி விடுவர். இதைத்தான் கிராமத்தில், 'குட்டிநாயை வைத்து வேட்டையாடுவது' எனக் கிண்டல் செய்வார்கள். ஆபிரகாம் சரியான ஆளை 'டெலகேட்' செய்தது அவருக்கு வெற்றி. நாமும் நம் வீட்டு வேலைக்கும், அலுவலக வேலைக்கும் இனி 'டெலகேட்' செய்யும்போது நம் மனதைக் கண்ணாடியாய்ப் பிரதிபலிக்கும் ஒருவரையே தெரிவு செய்ய வேண்டும். அதுவே வெற்றிக்குச் சரியான வழி.
To make the long story short, '... ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். அந்த எதிர்நோக்கு ஒரு போதும் ஏமாற்றம் தராது'. (உரோ 5:3-4)
'ஆண்டவரின் ஆசி பெற்றவரே வருக! இங்குத் தாங்கள் வெளியே நிற்பது ஏன்?'
No comments:
Post a Comment