'உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்' என்றான் மனிதன். 'நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?' என்று கேட்டார். அப்பொழுது அவன், 'என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள். நானும் உண்டேன்' என்றான். ஆண்டவராகிய கடவுள், 'நீ ஏன் இவ்வாறு செய்தாய்?' என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், 'பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்' என்றாள். (தொடக்கநூல் 3:10-13)
மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து ஆதாமைக் கண்டுபிடித்த இறைவன் அவர்களோடு உரையாடும் பகுதிதான் இது. 'முதல் பாவம்' என்றோ, 'முதல் பொய்' என்றோ, 'முதல் பொறுப்பற்ற நிலை' என்றோ, 'முதல் கீழ்ப்படியாமை' என்றோ இதற்கு தலைப்பிடலாம்.
'ஏன் கடவுள் ஒரு மரத்தை ஒதுக்கி வைத்தார்?' என்;ற கேள்விக்கு நம்மால் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை. 'தன் உருவிலும், சாயலிலும்' மனிதரைப் படைக்கின்ற இறைவன் எதற்காக தன் உருவையும், சாயலையும் அவர்கள் ஒத்திருக்கக் கூடாது என விழைகின்றார்? 'நீங்கள் கடவுளைப் போல ஆவீர்கள்' என்ற பாம்பின் சோதனைக்கு உட்படுகின்றார் பெண். அதற்கு உடன்படுகின்றார் ஆண்.
'நீங்கள் கடவுளைப் போல ஆவீர்கள்!' இதிலிருந்து நம் சிந்தனையைத் தொடங்கலாம். மனிதர்களுக்கு இந்த ஆசை நிறையவே இருக்கின்றது. நாம் பல நேரங்களில் நம்மைப்போல் இருப்பதற்குப் பதிலாக 'பிறரைப்போல' இருக்கவே ஆசைப்படுகிறோம். 'பிறரைப்போல' இருப்பது எளிது. எப்பவுமே 'ஜெராக்ஸ்' எடுப்பது எளிது. புதிய டாக்குமெண்டை உருவாக்குவதுதான் கடினம். நாம் புதியவர்களாக உருப்பெருவது கடினமாக இருப்பதால், ஏற்கனவே இருக்கும் ஒருவரை பின்பற்றி எளிதாக இருந்துவிட நினைக்கின்றோம்.
மனிதர்களின் எந்தக் கண்டுபிடிப்பு அவர்களைக் கடவுளுக்கு இணையாகக் கொண்டுவந்திருக்கின்றது என்று ஆராய்ந்த அறிவியல் அறிஞர்கள், அது 'மின்சாரம்தான்' என முடிவு செய்கின்றனர். மின்சாரத்தின் கண்டுபிடிப்பு மனுக்குலத்தின் ஒரு பெரிய முன்னெடுப்பு. 'ஒளி உண்டாகட்டும்!' என்று சொன்ன கடவுளைப் போலவே இன்று மனிதன் தன் விரல்நுனியில் ஒளியையும், இருளையும் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டான். நாம் நினைத்த நேரத்தில் பகலை இரவாக்கவோ, இரவைப் பகலாக்கவோ முடியும். இதிலிருந்து தொடங்கும் முன்னெடுப்பு இன்று டானோ டெக்னாலஜி, ரோபோடிக்ஸ், உயிர் தொழில்நுட்பம் என வேகமாக வளர்ந்து வருகின்றது. 'கடவுளை ஒதுக்கிவிட நினைக்கும் மனுக்குலமும் அதன் விஞ்ஞானமும் எங்கேயாவது சென்று முட்டிக்கொள்ளுமோ?' என்ற பயம் ஒரு பக்கம் இருந்து கொண்டேதான் இருக்கின்றது.
நம் கேள்விகளுக்கு வருவோம். முதல் கேள்வி: உனக்குச் சொன்னது யார்? 'ஆடையின்றி இருந்த' மனிதர்கள் அதைப்பற்றி வெட்கப்படவேயில்லை. 'நிர்வாணம்' வெட்கம் தரவில்லை. இன்றைய நாட்களில் நாம் அதிகமாக வாசிக்கும் செய்தி 'கற்பழிப்பு', 'பெண்களுக்கு எதிரான வன்முறை'. இந்தக் கற்பழிப்புக்கும், வன்முறைக்கும் காரணம் சொல்பவர்கள் முதலில் தொடங்குவது 'ஆடையில்தான்'. 'ஆண்களை ஈர்க்கும் ஆடை அணிகிறார்கள்!' என்பது அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு. 'ஆடையின்மை' அல்ல. 'ஆடைதான்' நம்மை மற்றவரிடம் ஈர்க்கின்றது. 'நிர்வாணம்' தான் பாதுகாப்பு. ஆடையணிந்து நிற்கும் ஒருவரை நின்று பார்க்கும் நாம் அவர் திடீரென ஆடைகளைக் களைந்துவிட்டால் ஓடி மறைந்து விடுகிறோம். கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக மதுரை அரசடியில் ஒரு பெண்ணைக் கைது செய்தார்கள். அவருக்கு ஏறக்குறைய 40 வயது இருக்கும். பஸ் நிறுத்தத்தில் எல்லாரையும்போல நின்றுகொண்டிருப்பார். திடீரென தன் ஆடைகளையெல்லாம் கழற்றி விடுவார். 'அங்கிருந்தவர்கள் யாரும் அவரை ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல் ஓடினர்' என்றது தினமலர் பத்திரிக்கை.
நாம் முதன்முதலில் ஆடையணிந்தபோதே நம் பாதுகாப்பை இழந்துவிட்டோம். நிர்வாணம் நம் பாதுகாப்பு. ஆடை நம் பாதுகாப்பின்மை. மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் கறுப்பர் இனத்திற்காகப் பாடுபட்டபோது ஏற்பட்ட ஒரு நிகழ்வைக் குறித்து தன் சத்திய சோதனையில் இப்படி எழுதுகின்றார்: 'எங்களையெல்லாம் அடிப்பதற்காக ஒரு இடத்தில் கட்டி வைத்தார்கள். எங்கள் ஆடைகளையெல்லாம் உரிந்தார்கள். நாங்கள் பாதுகாப்பற்று உணர்ந்தோம். அனைத்தும் உரியப்பட்டு நின்றோம். இனி எங்களிடம் உரிக்க ஒன்றுமில்லை என்று அவர்கள் தோற்றுப்போனார்கள். அந்தத் தோல்வியே எங்களின் வெற்றி!'
இன்று ஆடைக்கு நாம் எத்தனையோ அர்த்தம் கொடுக்கின்றோம். ஒருவரின் ஆடை நிர்வாணம் மறைக்கும் ஒன்றாக இருந்த நிலை மாறி இன்று ஆடம்பரமாக மாறிவிட்டது. ஒருவரின் ஆடையை வைத்து நாம் அவர் செய்யும் பணி, அவரின் கலாச்சாரம், அவரின் அந்தஸ்து என அனைத்தையும் சொல்லிவிடலாம். ஆடை ஒரு அடையாளமாகவும் மாறிவிட்டது. ஒன்று மட்டும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்: நம் ஆடைகள் நம்மை ஒருபோதும் கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை. ஆடைகளின் பாதுகாப்பு மட்டும் இருந்து நம்; உள்ளம் என்றும் பயத்தினால் பாதுகாப்பற்றுக் கிடந்தால் ஆடைகளால் என்ன பயன்?
'நன்றாக ஆடை உடுத்து. ஆனால் பகட்டாக அல்ல. ஏனென்றால் ஆடைதான் ஒருவனை வெளிப்படுத்துகின்றது' என்பார் ஷேக்ஸ்பியர். அன்றாடம் காலையில் எழும்போது நம் மேசையில் உணவும், நம் அலமாரியில் ஆடைகளும் இருந்தால் இறைவனுக்கு நன்றி கூறுவோம். அனைவரும் அனைத்தும் பெறவேண்டும் என்ற பொதுநலனில் ஆவல் கொள்வோம்.
இன்றைய பகுதியில் இறைவன் கேட்கும் இரண்டாம் கேள்வி: 'விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயா?' இதைச் சொல்லும்போது கடவுளின் உள்ளத்தில் இருந்த கேள்வி, 'சொல்பேச்சு கேட்கலயா நீ?' என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். மனிதனின் சுதந்திரமே அவனை அடிமையாக்கி விடுகிறது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. விலக்கப்பட்ட ஒன்றையே நம் மனம் தேடுகின்றது. எதற்காக கடவுள் விலக்கிவைக்கவேண்டும்? எதற்காக சுதந்திரம் கொடுக்க வேண்டும்? அவரே விலக்கி வைப்பாராம். அவரே அதைப் பார்க்காதீங்க. தொடாதீங்கன்னு சொல்வாரம். தொட்டால் தண்டிப்பாரம். இந்தக் குணநலன்கள் கடவுளை ஒரு 'சேடிஸ்ட்'டாகக் காட்டுகின்றன என்பர் மெய்யியல் அறிஞர்கள். மனுக்குலத்தைக் கட்டியிருக்கும் ஒரு சொல் 'சாய்ஸ்'. மனிதர்களால் தேர்ந்தெடுக்க முடியும். இதுவே அவர்களின் வரம். இதுவே அவர்களின் சாபம்.
ஆதாம் பசிக்காகத் தின்றானா? அல்லது ருசிக்காகத் தின்றானா? பசிக்காகத் தின்றால் ஒருவேளை இறைவன் மன்னித்திருக்கலாம். ஆனால் 'உண்பதற்குச் சுவையானதாகவும், கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும்' இருந்த காரணத்தினால்தான் உண்கிறான். நம் கண்களுக்க ஏதாவது களிப்பூட்டுவதாகத் தெரிந்தால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று அன்றாடம் சந்தைக்கு வரும் எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்கள் இன்று நம் கவனத்தை அதிகமாக ஈர்க்கின்றன. இன்று நாம் ஒரு பொருளை இரசித்து வாங்கி வைத்தால் அது நாளைக்கே 'பழையது' என்று ஆகிவிடுகிறது. ஒவ்வொரு நாளும் நம்மைப் புதிதாக்கிக்கொள்ள நம்மையறியாமல் நாமும் இந்தச் சந்தைக் கலாச்சாரத்திற்கு அடிமையாகி விடுகிறோம். பொருள்களில் தொடங்கும் இந்த மோகம் நபர்கள் மேலும் பரவுகிறது. 'இவரை விட அவர் நன்றாக இருக்கிறாரே!' என்று யாராவது கண்களுக்குக் களிப்பூட்டினால் கொஞ்சம் கவனம்!
'நீ உண்டாயா?' இந்த இரண்டு வார்த்தைகளைப் பார்த்தால் 'ஏதோ நான் வைத்திருந்ததை எடுத்து நீ உண்டாயா?' என்று கேட்பது போல இருக்கின்றது. மூன்று மாதங்களுக்கு முன் ஐநா சபை ஒரு அறிக்கை விட்டது. அமெரிக்க மற்றும் ஐரோப்பா பொருளாதாரம் வீழ்வதற்குக் காரணம் இந்தியர்களும், ஆப்பிரிக்கர்களும் அதிகமாக உணவு உண்பதாம். இந்த மானங்கெட்ட அறிக்கையை வத்திக்கான் வானொலியும் செய்தியாக வெளியிட்டதுதான் வேதனை. அப்படின்னா! இந்தியர்களும், ஆப்பிரிக்கர்களும் சாப்பிடவே கூடாதா? இதே கருத்தையொட்டித்தான் நம் நிதியமைச்சர் ப. சிதம்பரமும் ஒரு மேடையில் குறிப்பிட்டார்: 'வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களும் மின்சாரம் மற்றும் உணவை அதிகமாக நுகர்வதால் நாட்டில் மின் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது'. வாழ்வாதாரத்தில் அனைவருக்கும் (கறுப்போ, வெள்ளையோ, பணக்காரரோ. நடுத்தரமோ, ஏழையோ) அனைவருக்கும் சம உரிமைகளும், கடமைகளும் உண்டு என்பது இந்த ஹார்வர்ட் மேதைகளுக்கு விளங்குவதில்லை. இன்று முதல் உலக நாடுகள் மூன்றாம் உலக நாடுகளைப் பார்த்து இப்படித்தான் கேட்கின்றன: 'நீ சாப்பிட்டியா? நீ பெட்ரோல் போட்டியா? நீ நல்லா இருக்குறியா? எல்லாத்தையும் நீயே எடுத்துக்கிட்டா நான் என்ன செய்வேன்? சாப்பிடாத! பெட்ரோல் போடாத! நல்லா இருக்காத!'
மனிதன் பெண்ணையும், பெண் பாம்பையும் தங்கள் தவறுக்குக் காரணம் காட்டுகின்றனர். அடுத்தவரைக் காட்டிவிட்டால் நாம் நன்றாக இருக்கலாம் என்ற நம் பண்பு இதிலிருந்துதான் வந்திருக்கும். நம்ம வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சனைனா அதற்கு நாம நம்ம பெற்றோரையும், சமூகச் சூழலையும் எளிதாகக் காரணம் காட்டிவிட்டு விலகுவதில்லையா?
ஆடை...உணவு...அடுத்தவர்...
இந்த மூன்றும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டுதான் இருக்கின்றன!
No comments:
Post a Comment