தன் சகோதரியின் மகன் யாக்கோபு வந்த செய்தி கேட்டவுடன் லாபான் அவருக்கு எதிர்கொண்டோடி, அவரை அரவணைத்து முத்தமிட்டுத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அங்கு யாக்கோபு தமக்கு நேர்ந்தவற்றையெல்லாம் எடுத்துரைத்தார். லாபான் அவரிடம், 'நீ என் எலும்பும் சதையுமல்லவா?' என்றான். அவனுடன் ஒரு மாத காலம் தங்கியிருந்தார். (தொடக்கநூல் 29:13-14)
'என் எலும்பும் சதையும்!'
ஏதேன் தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார். அப்பொழுது மனிதன், 'இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையும் சதையும் ஆனவள்' என்றான். (தொநூ 2:22-23)
லாபானின் வார்த்தைகள் ஆதாமின் வார்த்தைகளை ஒத்திருக்கின்றன. ஆங்கிலத்தில் ஒருவர் மற்றவரின் நெருக்கத்தைக் காட்டும் சொல்லாடல் 'flesh and blood'. ஆனால் எபிரேயமும், நம் தமிழும் 'எலும்பும் சதையும்' என்றே குறிப்பிடுகின்றது. நாம் ஒருவர் மற்றவருக்குள்ள நெருக்கத்தை அவர்கள் 'எலும்பும் சதையும் போல' அல்லது 'நகமும் சதையும் போல' (நாம் வெட்டிவிடக்கூடிய எலும்புதானே நகம்) என்கின்றோம்.
எலும்பும் - சதையும்.
மற்றொரு வகையில் பார்த்தால் ஒரு மனிதரின் உடலை 'எலும்பும், சதையும்' என நாம் பிரித்துப் பார்க்கின்றோம். வலியது எலும்பு. மெலியது சதை. வளைந்து கொடுக்காதது எலும்பு. வளைந்து விழுவது சதை. எலும்பு இல்லாத சதை வெறும் ஆடை போன்றது. துவைத்துக் கயிற்றில் தொங்க விட்டுவிடலாம். சதை இல்லாத எலும்பு வெறும் ஸ்டான்ட் போன்றது.
மனிதர்களின் மனதைப் பற்றி 'அர்த்தமுள்ள இந்துமதத்தில்' குறிப்பிடும் கண்ணதாசன், ஆணின் மனத்தை வலுவான கல் என்றும், பெண்ணின் மனத்தை நெகிழ்ந்து போகும் களிமண் என்றும் வர்ணிக்கின்றார். திருமண பந்தத்தில் இணையும் இருவரும் இப்படி இருந்தால்தான் இல்லறம் என்ற வீட்டைக் கட்டியெழுப்ப முடியும். கணவனும் கல்லாய் இருந்து, மனைவியும் கல்லாய் இருந்தால் வீடு சரிந்து விடும். கணவனும் களிமண்ணாய் இருந்து, மனைவியும் களிமண்ணாய் இருந்தால் வீடு கரைந்து விடும்.
ஒவ்வொரு மனிதரிடமும் 'ஆண்மை' (கடினம்) உண்டு, 'பெண்மை' (நெகிழ்வு) உண்டு. ஆண்மை என்ற எலும்பு, பெண்மை என்ற சதையைத் தேடுகின்றது. பெண்மை என்ற சதை ஆண்மை என்ற எலும்பைத் தேடுகின்றது. மனிதரின் படைப்பைப் பற்றிப் பேசுகின்ற கிரேக்கப் புராணம், 'ஆணும் பெண்ணுமாக மனிதரைப் படைக்கின்ற கடவுள் இருவரின் ஆற்றல், வீரம், அன்பைப் பார்த்துப் பொறாமைப்பட்டு சரிபாதியாக வெட்டிவிடுகின்றார். அன்று முதல் ஒரு பாதி மற்றொரு பாதியைத் தேடிக் கொண்டே இருக்கின்றது' என்று சொல்கின்றது. இந்தத் தேடல் நிறைவேறும் தருணம்தான் திருமணம். அப்படின்னா திருமணம் முடிக்காதவங்க? என்று கேட்காதீங்க.
'புள்ளியும் கோடும் - கணிதம் வழியாக ஒரு காதல்' என்ற ஒரு குறும்படம் பார்த்தேன் (பார்க்கத் தூண்டியது எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்). கணிதத்தை மிக எளிய காதல் கதையாக எடுத்துள்ளார்கள். அடித்துப் போட்டாலும் கணக்கு வராத நம் மாணவர்கள் இதைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். ஒரு புள்ளியைக் காதலிக்கும் நேர்கோட்டின் கதை என்ற கற்பனையே இக்குறும்படம். தத்துவம், தேடல், விஞ்ஞானம், கவிதை, மாற்றம், உளவியல் சிக்கல், கடவுள் என்ற எந்தக் கோணத்திலும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.
புள்ளி ஒன்றின் வசீகரத்தில் மயங்கி அதைக் காதலிக்கத் தொடங்குகிறது ஒரு நேர்கோடு. புள்ளிக்கோ கோட்டினைப் பிடிக்கவேயில்லை. கோடு என்பது மந்தமான, செயலற்ற, பிடிவாதமான ஒன்று என நினைக்கிறது புள்ளி. கோடாக இருப்பதில் தனித்துவமில்லை என்று அதைக் கண்டுகொள்ள மறுக்கிறது புள்ளி. புள்ளியைக் கவர்வதற்காக பல்வேறு வடிவங்களில் தன்னை வளைக்கின்றது கோடு. முன்பின் ஆடுகின்றது. தன்னையே வளைக்கின்றது. எப்படியாவது புள்ளியை கரெக்ட் பண்ண நினைக்கிறது கோடு. இந்த விளையாட்டில் புள்ளி என்பது அசைவில்லாத, தன்னை மையப்படுத்திக் கொள்கின்ற உளவியல் கூறு என்றும், கோடு என்பது நமது மாறக்கூடிய தன்மை என்றும் நமக்குப் புரிகிறது. மாறாத கடினத்தன்மை புள்ளி. மாறுகின்ற நெகிழ்வுத்தன்மை கோடு. இந்தக் காதல் நாடகத்தின் முடிவில் புள்ளி கோட்டினை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அத்துடன் கோட்டின் வளர்ச்சி நின்றுவிடுகிறது.
கணிதத்தைப் பற்றி நாம் புரிந்துகொண்டாலும் வாழ்வின் தத்துவங்களையும், உறவின் சித்தாந்தங்களையும் அழகாகக் காட்டுகின்றது இக்குறும்படம்.
கோடு என்றால் நாம் எப்போதும் 'அடிஸ்கேலால்' நேராக வரையும் கோட்டையே நினைக்கின்றோம். வளைவாய் இருப்பதும் கோடுதான். மனிதர்களில் 'நேராக' இருப்பவர்கள் மட்டும் மனிதர்கள் அல்ல. 'வளைவு, சுளிவு'களோடு இருப்பவர்களும் மனிதர்கள்தான். நம்மில் ஒரு பகுதி மாறாத புள்ளிபோல இருக்கும். மற்ற பகுதி மாறிக்கொண்டேயிருக்கும் கோடுபோல இருக்கும். புள்ளிதான் எலும்பு. கோடுதான் சதை. இரண்டும் இணைந்தால்தான் வாழ்க்கை சாத்தியம்.
நம்மில் இருக்கும் இரண்டையும் ஏற்றுக்கொள்வோம். இரண்டும் சேர்ந்தவர்கள்தாம் நாம்.
இதே நெருக்கத்தை நம் உறவுகளில் தேடுவோம். 'நீயா – நானா' என்ற போட்டி உறவு அல்ல. 'நீயும் நானும்' என்ற கைகுலுக்கலே உறவு. நம் நெருக்கமான உறவுகள் பூர்வ ஜென்ம உறவுகள். சாப்பிட்டுவிட்டுக் கைகழுவும் நேரத்தில் கைவிட்டுவிட நினைக்க வேண்டாம்!
'நீ என் எலும்பும் சதையுமல்லவா?'
Follow the link to view the video:
The words in the rectangle -நெஞ்சைப் பிசைந்து விடடது.'எலும்பும் சதையும்'----கண்ணதாசனின் உதவியுடன் கூடிய. விளக்க ம் அருமை.ஆனால் இதற்கெல்லாம. அபபாற்பட்ட 'ஏன்,எப்படி' என்று உணரமுடியாத சில 'பூர்வ. ஜென்ம பந்தங்களின்' 'புனிதத்தையும்' மதிப்போம் இததனைதகவல்களை தேடிதரும் எழுத்தாளரின் அறிவு தாகத்திறகு பெரிய்ய salute!
ReplyDelete