Friday, September 6, 2013

உன் கண்முன் இருக்கின்றது அல்லவா?


ஆபிராம் லோத்தை நோக்கி, 'எனக்கும் உனக்கும் என் ஆள்களுக்கும் உன் ஆள்களுக்கும் இடையே பூசல் ஏற்பட வேண்டாம். ஏனெனில் நாம் உறவினர். நாடு முழுவதும் உன் கண்முன் இருக்கின்றது அல்லவா? என்னிடமிருந்து பிரிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நீ இடப்பக்கம் சென்றால் நான் வலப்பக்கம் செல்வேன். நீ வலப்பக்கம் சென்றால் நான் இடப்பக்கம் செல்வேன்' என்றார். (தொடக்கநூல் 13:8-9)

ஆண்டவராகிய கடவுளின் கட்டளைப்படி ஆபிராமும், அவர் மனைவி சாராயும், அவர் சகோதரன் (சொந்த சகோதரன் அல்ல, மச்சான், மாமன், பங்காளி என்ற உறவாக இருக்கலாம்!) லோத்தும் கானான் நாட்டிற்குச் செல்கின்றனர். அங்கே கொடிய பஞ்சம் ஏற்பட்டதால் தெற்கு நோக்கி பயணம் செய்து நெகேபைத் தாண்டி (நெகேபு என்றால் தெற்கு என்று அர்த்தம்) எகிப்தை அடைகின்றனர். எகிப்தில் தான் நாம் நேற்றுப் பார்த்து 'மனைவியா? சகோதரியா?' பிரச்சனை வந்தது. பாரவோனால், 'ஐயா, தயவு செய்து போய்விடுங்க!' என்று அனுப்பப்படும் ஆபிராம் தன் பரிவாரத்தோடு மறுபடியும் நெகேபுக்கும், பின் பெத்தேலுக்கும் செல்கின்றார்.

இன்று நாம் பார்க்கும் நிகழ்வு பெத்தேலுக்கும், ஆயிக்கும் இடையேயான மலைப்பகுதியில் நடக்கின்றது. லோத்தும், ஆபிராமும் கூடாரம் அடித்து வாழ்கின்றனர். மத்திய கிழக்குப் பகுதியின் தொல்பொருள் ஆராய்ச்சிப்படி கூடாரங்கள் மலைப்பகுதியில்தான் அடிக்கப்பட்டன. ஏனெனில் மழை பெய்யும் போது பெருவெள்ளம் ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படாத பகுதி மலைப்பகுதி. மேலும் மலைப்பகுதியில் மட்டும்தான் புல்வெளிகள் இருந்தன. இருவரும் அமைதியாக வாழ்ந்த காலத்தில் இரண்டு பேரின் கால்நடை மேய்ப்போருக்கும் இடையில் பிரச்சனை வருகின்றது. பிரச்சனையை முளையிலேயே கிள்ளி எறிய நினைக்கின்றார் ஆபிராம். 'உன் ஆட்களுக்கும், என் ஆட்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினை' மாறி 'உனக்கும் எனக்கும் பிரச்சனை' என்று ஆவதற்கு முன் பிரிந்து விடுவோம் என முடிவு செய்கின்றார் ஆபிராம். மேலும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினை 'இடப்பிரச்சனை' – 'அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை' (தொநூ 13:6).

இந்தப் பிரச்சினையை சரிசெய்ய நினைக்கும் ஆபிராம் தன் சகோதரன் லோத்தைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கின்றார்: 'நாடு முழுவதும் உன் கண்முன் இருக்கின்றது அல்லவா?' 'நீ எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்' என்கிறார். ஆபிராமின் பரந்த மனப்பான்மை இங்கே வெளிப்படுகின்றது. 'தானே ஒரு நாடோடி!' என்று தன்னைப் பார்க்காமல் 'நான் எப்படியாவது சமாளித்துக் கொள்வேன். உனக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்' என்கிறார்.

அவர் சொன்னதுதான் தாமதம். தன் கண்களுக்குப் பசுமையான பகுதியைத் தெரிந்து கொள்கிறார் லோத்து. அவர் தெரிந்து கொள்ளும் பகுதி ஆண்டவரின் தோட்டம் போல இருந்ததாம் (13:10). ஏற்கனவே ஏதேன் தோட்டத்தில் பிரச்சினை. கொஞ்சம் உஷாராயிருக்க வேண்டாமா லோத்து. லோத்தின் தெரிவு பிரச்சினையில் போய் முடியும் என்பதை விவிலியம் இப்படிச் சொல்கிறது – 'ஆனால், சோதோமின் மக்கள் ஆண்டவருக்கு எதிரான மிகக்கொடிய பாவிகளாக இருந்தனர்' (13:13). 

ஒவ்வொருவரின் ஊரும் ஒருவரை அடையாளம் காட்டுகிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மணம் உண்டு. இந்த மண்வாசனைக்காகத்தான் நாம் நம் சொந்த ஊரைத் தேடி ஓடுகிறோம். மண் என்றால் வேர். மண்தான் நம்மைத் தாங்குகின்றது. முதன்முதலில் நம் தாயின் வயிற்றிலிருந்து நாம் தடம் பதித்தது நம் ஊர் மண்தான். சின்னஞ்சிறு வயதில் 'மண்ணைத் திண்பதில்' சுகம் கண்டோம். 'அம்மா, உங்க மகன் மண்ணைத் திண்கிறான்' என்பதுதான் நம் அண்டைவீட்டாரின் அதிக பட்ச கம்ப்ளைண்ட். நாம் பிறந்த மண் எப்படி இருக்கிறது என்று பார்க்க நமக்கு ஆசையாகத்தான் இருக்கின்றது. நடையில் இரண்டு நடை இருக்கிறது என்பார் வைரமுத்து: ஒன்று, உள்ளுர் நடை. இரண்டு, வெளியூர் நடை. இந்த நடையை வைத்து நம் வீட்டிற்கு முன் நடந்து செல்பவர் உள்ளுரா அல்லது வெளியூரா எனச் சொல்லிவிடலாம். ஒய்யாராமாய் உள்ளுர் நடை நடந்த ஆபிராமும், லோத்தும் இன்று வெளியூர் நடை நடக்கத் தொடங்குகின்றனர்.

இருவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்: லோத்து தான் செல்ல வேண்டிய பாதையைத் தானே தேர்ந்து கொள்கிறார். ஆனால், ஆபிராம் இறைவனே பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும் என்று தன்னையே சரணாகதியாக்குகின்றார். 

யார் ஜெயிக்கிறா? ஆபிராம்தான். லோத்தின் பாதை கண்களுக்குக் கவர்ச்சியாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கின்றது. ஆனால் அது அவரை அலைச்சலுக்கும், அச்சுறுத்தலுக்கும் தான் இட்டுச் செல்கின்றது.

இன்றைய கேள்வி நமக்கு வைக்கும் பாடம் இதுதான்: வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது நம் கண்களுக்குக் களிப்பூட்டுவதைத் தேடுவதைவிட, இறைவனிடம் நம்மைக் கையளிப்பதே மேல்.

இதை மூன்று கதைகள் வழியாகப் புரிந்து கொள்வோம்:

கதை 1: மகாபாரதத்தில் கௌரவர்களின் அரண்மனையில் பாண்டவர்களும் அவர்களின் மனைவி திரௌபதியும் அழைத்து வரப்படுகின்றனர். தாங்கள் தோற்று விட்டோம் என்பதற்கு அடையாளமாக பாண்டவர்களின் மேலாடைகளை உரியச் சொல்கின்றான் துரியோதனன். அந்நேரத்தில் தன் இருக்கையிலிருந்து எழுகின்ற துச்சாதனன் திரௌபதியின் சேலையையும் உரிகின்றான். தன் கணவர்கள் தன்னைக் காப்பாற்ற இயலாத சூழலில் கிருஷ்ண பெருமானை நோக்கி குரல் எழுப்புகின்றாள். இந்த நிகழ்வு மூன்று படிகளாக நடக்கின்றது. முதலில் தன் இரு கைகளாலும் சேலையைப் பிடித்து இழுத்துக் காத்துக் கொள்ள விழைகிறாள். இரண்டவதாக, ஒரு கை தன் சேலையைப் பிடித்துக் கொண்டும், மறு கை விண்ணை நோக்கி அழைப்பதாகவும் இருக்கின்றது. இறுதியாக, தன் இரு கைகளையும் விட்டுவிட்டு 'கண்ணா!' என அழைக்க அங்கே அற்புதம் நிகழ்கின்றது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு 'நீ மட்டுமே எல்லாம்!' எனக் கையளிப்பதே நம்பிக்கை.

கதை 2: அதே மகாபாரதத்தில் இறுதிப் போரில் கிருஷ்ணன் யார் பக்கம் என்று கேட்பதற்காக துரியோதனனும், தர்மரும் வருவார்கள். அந்நேரம் கிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருப்பார். தூக்கத்தைக் களைக்க விரும்பாத அவர்கள் காத்திருக்க நினைப்பார்கள். காத்திருந்து பரிதவிக்கின்ற துரியோதனன் கண்ணனின் தலைமாட்டில் ஓடிப்போய் அமர்ந்து கொள்வான். தர்மர் கண்ணனின் காலடியால் அமர்வார். தூங்கி எழுகின்ற கண்ணனுக்கு தர்மர்தான் முதலில் பார்வையில் படுவார். 'போரில் யார் பக்கம்?' என்று கேட்டவுடன் கண்ணபிரான் சொல்வார்: 'நான் மட்டும் தனியே ஒரு பக்கம்!' 'என் ஆயுதங்கள், என் நாட்டு படை பலம் அனைத்தும் மற்றொரு பக்கம்!' தர்மர், 'நீங்கள் மட்டும் போதும்!' எனக் கண்ணனைத் தெரிந்து கொள்கின்றார். துரியோதனன் 'படை பலத்தைத் தேர்ந்து கொள்கின்றான்!'. கண்களுக்கு பாதுகாப்பாகத் தெரிந்த படை துரியோதனனுக்குத் தோல்வியையே தருகின்றது.

கதை 3: ஒரு தாயும், அவரின் 5 வயது பையனும் ஒரு பலசரக்குக் கடைக்குச் செல்கின்றனர். பொருட்களையெல்லாம் வாங்கி முடித்து கிளம்பும்போது கடைக்காரர் பையனைப் பார்த்து, 'தம்பி, நீ ரொம்ப சமத்தா இருக்க. உனக்கு எவ்ளோ சாக்லேட் வேணுமோ எடுத்துக்கொள்!' என்று சொல்கின்றார். பையன் மறுக்கின்றான். தாய்க்கு சந்தோஷம். பரவாயில்லையே, வேணாண்னு சொல்லிட்டானேன்னு நினைக்கிறாள். மறுபடியும், 'சாக்லேட் எடுத்துக்கோ!' என்கிறார் கடைக்காரர். மறுபடியும் மறுக்கிறான் பையன். கடைசியில் கடைக்காரரே பாட்டிலைத் திறந்து சாக்லேட்டுகளை எடுத்துக் கொடுக்கின்றார். பையன் வேகமாகக் கை நீட்டிப் பெற்றுக் கொள்கிறான். வெளியே வந்தவுடன் தாய் பையனின் தலையைத் தட்டிக் கேட்கின்றார்: 'ஏன்டா, அவர் எடுக்கச் சொன்னப்ப மாட்டேன்னு சொல்லிட்டு அவர் கொடுக்கும்போது வேகமா வாங்கிக்கிட்ட?' பையன் சொல்றான்: 'அம்மா! நான் கடைக்குள்ள போகும்போதே முடிவு பண்ணிட்டேன். சாக்லேட் எடுத்துக்கோன்னு அவர் சொன்னா எடுக்கக்கூடாது. ஏன்னா நான் எடுத்தா கொஞ்சம்தான் வரும். அவர் கை பெரிய கை. அவர் எடுத்தா நிறைய வரும்!'

ஆபிரகாமிற்குத் தெரிந்தது: 'அவர் கொடுத்தா நிறைய கொடுப்பாருன்னு...!'

'நாடு முழுவதும் உன் கண்முன் இருக்கின்றது அல்லவா?'

No comments:

Post a Comment