அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி, 'நீர் இவ்வேழு பெண் ஆட்டுக்குட்டிகளைத் தனியாக நிறுத்தி வைத்திருப்பதன் காரணம் என்ன?' என்று கேட்டான். அவர், 'இந்தக் கிணற்றைத் தோண்டியது நான்தான் என்பதற்குச் சான்றாக, நீர் இந்தப் பெண் ஆட்டுக்குட்டிகள் ஏழையும் என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளும்' என்றார். அதன் காரணமாக அந்த இடம் 'பெயர்செபா' என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால், அங்குத்தான் இருவரும் ஆணையிட்டு வாக்களித்துக் கொண்டனர். (தொடக்கநூல் 21:29-31)
ஆகார் தன் குழந்தை இஸ்மாயேலோடு வழி நடந்து 'பெயர்செபா' என்ற இடத்திற்குச் செல்கின்றார். இந்தப் 'பெயர்செபா' உருவானதன் நிகழ்வே இன்றைய நம் கேள்விப்பகுதி. 'பெயர்செபா' என்றால் 'ஏழுகிணறு' அல்லது 'ஆணையிட்டு வாக்களித்த கிணறு' என்று பொருள். 'தான் முதல் பெயர்செபா வரை' என்ற சொல்லாடல் பைபிளி;ல் அடிக்கடிப் பயன்படுத்துகிறது. தான் என்பது ஒட்டுமொத்த இஸ்ராயேலின் வட எல்லையாகவும், பெயர்செபா என்பது தென் எல்லையாகவும் இருந்தது. யாக்கோபு 'வானதூதர் ஏணியில் ஏறுவதும் இறங்குவதுமாக' கனவு காண்பது இங்குதான் (தொநூ 28:10). யாக்கோபும் அவரது குடும்பத்தாரும் எகிப்தில் குடியேறச் செல்லுமுன் மீண்டும் ஒருமுறை கடவுள் அவர்களைச் சந்திக்கின்றார் (தொநூ 46:1). எலியா ஜெசபெல்லிடமிருந்து தப்பி ஓடி பாதுகாப்பாக இருந்ததும் பெயர்செபாதான் (1அர 19:3). சவுல் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இங்குதான் (1சாமு 8:1-3, 9:1-2, 17).
ஆபிரகாமும், அபிமெலேக்கும் ஒரு கிணற்றிற்காக ஏற்பட்ட சண்டையில் சமரசமாக தங்கள் உறவின் அடையாளமாக ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்தக் காலத்தில் நாம் பெட்ரோலுக்குச் சண்டையிடுவது போல, எபிரேய சமூகத்தில், பாலைநிலமே எங்கும் சூழ்ந்திருந்த நேரத்தில் சண்டை எழுவது இயல்புதான். கிணறு இருக்கும் இடம் அபிமெலேக்கிற்குரியது. கிணறு வெட்ட தன் உழைப்பையும், தன் பணியாளர்களையும் கொடுத்தது ஆபிரகாம். 'உழைப்பு' பெரிதா, 'இடம்' பெரிதா என்ற 'நானா-நீயா' வாக்குவாதம் முடிவுபெற்று இருவரும் ஒரே முடிவிற்கு வருகின்றனர்: இரண்டு பேரும் பயன்படுத்துவோம். ஒருவொருக்கொருவர் சண்டை வேண்டாம். இதுதான் ஸ்டீஃபன் கோவே பேசும் 'Win-Win Attitude' 'எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம்' என்று ஒழித்துக் கட்டி விடாமல், பெருந்தன்மையோடு 'உனக்கும் உண்டு, எனக்கும் உண்டு' என்ற முடிவிற்கு வருகின்றனர். நம் வாழ்வில் இது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல உறவுநிலை. நம் உறவுகளில் ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் நாம் உடனடியாக, 'உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்' என வெட்டிவிட நினைக்கின்றோம். காலங்காலமாக காத்திருந்து, கனவுகள் கண்டு கட்டிய உறவுக்கோட்டையை கால்மணி நேரத்தில் இடித்துவிடுகிறோம். 'உறவுக்காக பிரச்சினையை விட்டு விடலாம், பிரச்சனைக்காக உறவை விட்டுவிடக்கூடாது' என்பார்கள். உறவிற்காக கிணற்றுப் பிரச்சனையை விற்றுவிடத் துணிகின்றார் ஆபிரகாம்.
இரண்டாவதாக, வாக்குக் கொடுப்பது. 'நாக்குத் தவறினாலும், வாக்குத் தவறக்கூடாது' என்பார்கள். நாம் அடிக்கடி பயன்படுத்தும் 'ஸாரி' என்ற வார்த்தையைப் போல மிகவும் இலகுவாகப் போய்விட்ட ஒரு வார்த்தை 'ஐ பிராமிஸ்'. இன்னும் நம்ப முடியவில்லையென்றால், 'ஐ ரியலி பிராமிஸ்' என்கிறோம். அப்போ உண்மையாகவும் நாம் பிராமிஸ் பண்ணமுடியும், பொய்யாகவும் பண்ணமுடியும்!
வாக்குறுதி கொடுப்பது சரியா? தவறா? பழைய ஏற்பாட்டில் பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு, மீறப்பட்டதைக் காண்கின்ற இயேசு ஒரு கட்டத்தில், 'நீங்கள் ஆணையிடவே வேண்டாம். உங்கள் பேச்சு ஆம் என்றால் ஆம் என்றும், இல்லை என்றால் இல்லை என்று மட்டும் இருக்கட்டும்' என்கின்றார். 'ஆம்' என்பதற்கும், 'இல்லை' என்பதற்கும் இடையே பயன்படுத்தும் வார்த்தைதான் 'வாக்குறுதி'.
ஒவ்வொரு வாக்குறுதிக்கும் ஒரு சாட்சி அல்லது ஒரு அடையாளம் உண்டு. கடவுள் மேல சத்தியமா, எங்க அம்மா மேல சத்தியமா, எங்க மாமியா மேல சத்தியமா, என் குழந்தை மேல சத்தியமா என்று சொல்கின்றோம். பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லும் போது 'தண்ணீர்' சாட்சியாக இருக்கின்றது. திருமண நிகழ்வில் 'நெருப்பு' சாட்சியாக இருக்கின்றது. சண்டை நேரங்களில் 'மண்'ணைச் சாட்சியாக அழைக்கின்றோம். பெருவெள்ளம் முடிந்தவுடன் கடவுள் நோவாவிற்குக் கொடுத்த வாக்குறுதியின் சாட்சியாக 'வானவில்' இருக்கின்றது. ஆபிரகாம் தன் வாக்குறுதியின் சாட்சியாக ஏழு பெண் ஆட்டுக்குட்டிகளை முன்வைக்கின்றார்.
இன்றும் நம்மைச் சுற்றி வாக்குறுதிகள் நின்றுகொண்டுதான் இருக்கின்றன:
குருத்துவ அருள்பொழிவின் போது உள்ளங்கைகளில் பூசப்படும் திருஎண்ணெய்,
திருமணத்தில் அணியும் மாங்கல்யம், மோதிரம்,
நாம் வேலைக்குச் செல்லும் போது அணியும் யூனிஃபார்ம்,
கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்ளும் அடையாள அட்டை,
நாம் வீடு திரும்பக் காத்திருக்கும் நம் பிள்ளைகள், பெற்றோர்,
நமக்கு வரும் செல்ஃபோன் அழைப்பு, SMS
அனைத்துமே வாக்குறுதிகள் தாம்.
நாம் கொடுக்கும் வாக்குறுதியிலிருந்து தவறும்போது நாம் வாக்குறுதி கொடுத்தவரை ஏமாற்றுவதைவிட நம்மை நாமேதான் அதிகம் ஏமாற்றிக் கொள்கிறோம். ஏமாற்றங்களை விடுக்க வாக்குறுதிகளையே விட்டுவிடலாம்.
பெர்னாட்ஷா அவர்கள் ஏழுமுறை சிகரெட் பிடிப்பதை விட்டாராம். அதாவது ஏழு முறையும் வாக்குறுதிகள் கொடுத்து மீறிவிடுகின்றார்.
அடுத்தவர்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளைவிட நமக்கு நாமே கொடுக்கும் வாக்குறுதிகளில்தான் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அதைக் காப்பாற்ற முடியாதபோது நாம் நம் ஆழ்மனத்தை ஏமாற்றவதோடு மட்டுமல்லாமல் 'உன்னால் இது முடியாது' என்று அதையும் கோழையாக்கி விடுகிறோம்.
'நீர் இவ்வேழு பெண் ஆட்டுக்குட்டிகளைத் தனியாக நிறுத்தி வைத்திருப்பதன் காரணம் என்ன?'
No comments:
Post a Comment