Wednesday, September 11, 2013

உன்னிடம் வந்த ஆடவர் எங்கே?


அப்பொழுது ஆண்டவர், 'நான் செய்ய விருப்பதை ஆபிரகாமிடருந்து மறைப்பேனா?' ... 'தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? ... 'ஒரு வேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?' ... பின்பு அவர்கள் (சோதோம் நகரின் மக்கள்) 'இன்று இரவு உன்னிடம் வந்த ஆடவர் எங்கே? நாங்கள் அவர்களோடு உறவு கொள்ளுமாறு அவர்களை எங்களிடம் கொண்டு வா' என்றனர் ... மேலும் அவர்கள் 'அயல்நாட்டிலிருந்து வந்த இவனா நமக்கு நியாயம் கூறுவது?' ... 'இங்கே உன்னைச் சார்ந்த வேறு யாரேனும் உளரோ?' ... 'அது சிறிய நகர் தானே?' ... பின் மூத்தவள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு 'மோவாபு' என்றும் பெயரிட்டாள். இளையவள் ஒரு மகனைப் பெற்று, அவனுக்குப் 'பென்அம்மி' என்னும் பெயரைச் சூட்டினாள். (தொடக்கநூல் 18:17,23,32. 19:5,9,12,20,37-38)

ஆபிரகாம் - ஈசாக் எபிஸோடின் இடைச்செருகலாக இருக்கின்றது இப்பகுதி. இப்பகுதியை மூன்று நிகழ்வுகளாகப் பிரிக்கலாம்:

1. தான் சோதோம் நகரத்தை அழிக்கப் போவதாக ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமிற்கு வெளிப்படத்துகின்றார். சோதோம் நகரத்திற்காக ஆபிரகாம் பரிந்து பேசுகின்றார்.

2. சோதோம் நகரத்தில் லோத்து குடியேறியிருக்கிறார். சோதோம் நகரை அழிக்கச் செல்லும் கடவுளின் தூதர்கள் லோத்தோடு தங்கியிருக்கின்றனர். ஆபிரகாமைப் போலவே லோத்தும் விருந்தோம்பல் செய்கின்றார். அந்நேரத்தில் அவ்வீட்டைச் சூழ்ந்து வரும் சோதோம் நகர ஆடவர்கள், லோத்திடம் வந்த தூதர்களோடு உடலுறவு கொள்ள விரும்பி அவரிடம் வாக்குவாதம் செய்கின்றனர். பின் தூதர்கள் தங்களின் ஆற்றலால் கதவிற்கருகில் இருந்தவர்களை பார்வையிழக்கச் செய்து லோத்தைத் தப்புவிக்கின்றனர். லோத்தும், அவர் மனைவியும், அவரின் இரண்டு மகள்களும் தப்பி 'சோவார்' (சிறியது) என்ற நகருக்கு ஓடுகின்றனர். செல்லும் வழியில் லோத்தின் மனைவி திரும்பிப் பார்க்கிறாள். உப்புத்தூணாக மாறுகிறாள். 

3. லோத்தின் மகள்கள் இருவரும் தங்கள் தந்தையின் வழியாக குழந்தை பெறத் துணிகின்றனர். சோதோமில் ஓரினச்சேர்க்கை. சோவாரில் தகாத உறவு (இன்சஸ்ட்). தன் தந்தையிடம் கொள்ளும் தகாத உறவினால் 'மோவாபு', 'பென்அம்மி' என்ற இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றனர்.

ஒவ்வொரு நிகழ்வாக நாம் சிந்திப்போம்.

1. ஆண்டவர் – ஆபிரகாம் உரையாடல். பழைய ஏற்பாட்டின் கடவுள் உரையாடலின் கடவுளாக இருக்கின்றார். ஏதேன் தோட்டத்தில் ஆதாமோடு, இன்று ஆபிரகாமோடு, எரியும் புதரில் மோசேயோடு, எருசலேம் ஆலயத்தில் எசாயாவோடு என உரையாடலின் ஆண்டவராக இருக்கின்றார் அவர். இந்த நிகழ்வை ஆபிரகாமின் செபம் என்று சொல்வார்கள் சிலர். கடவுளின் கோபத்;தைக் குறைப்பதற்காக ஆபிரகாம் அவரிடம் மன்றாடுகின்றார். ஆபிரகாமின் வாதம் இதுதான்: 'நல்லவர்களும் கெட்டவர்களோடு அழிந்து போக வேண்டுமா?' இன்று செப்டம்பர் 11. 9-11 என எல்லோர் மனதிலும் பதிந்த இந்த நிகழ்வு எழுப்பும் கேள்வியும் இதுதான்: 'உனக்கும் அவனுக்கும் பிரச்சனைன்னா அப்பாவி நான் ஏன் சாக வேண்டும்?' சோதோமுக்கும், ஆண்டவருக்கும் பிரச்சனைன்னா அப்பாவி நல்லவர்கள் ஏன் சாக வேண்டும்? சிரியாவில் போர் என்ற அடிப்படையில் சாதாரண மக்கள் கொல்லப்படுவதும், நமக்கருகில் 'களையெடுப்பு' என்ற அடிப்படையில் நம் தமிழ் இனம் அழிக்கப்பட்டுச் சிறுமைப்படுத்தப்பட்டதும் இந்தக் கேள்வியையே எழுப்புகின்றன.

'நல்லவர்கள் இருந்தால் தான் நகரை அழிக்க மாட்டேன்' எனக் கடவுளும் சொல்கின்றார். இது எதை உணர்த்துகிறது என்றால் நாம் நல்லவர்களாய் இருந்தால் அது நம்மை மட்டுமல்ல, நம் அருகிலிருப்பவர்களையும், நம் ஊரையும் அது காப்பாற்றும். நல்லவராயிருக்கும் பொறுப்பு மிகவும் முக்கியமானது. எல்லாரும் இப்படித்தானே இருக்கிறார்கள்? நான் மட்டும் ஏன் நல்லவனாயிருக்க வேண்டும்? எனக் கேட்டால் நாமும் அழிந்து விடுவோம். நம் நல்ல குணம் நம் ஊரையே காப்பாற்றும்.

புத்தர் ஒருமுறை தன் முன்னே கூடியிருந்த ஊர் மக்களைப் பார்த்துச் சொன்னாராம்: 'பக்கத்து ஊரில் பஞ்சமாக இருக்கின்றது. பச்சிளம் குழந்தைகள் பால் கூட இன்றி வாடுகிறார்கள். நம் ஊரில்தான் நிறைய பசுக்கள் இருக்கின்றனவே. பசு வைத்திருக்கும் அனைவரும் தினம் ஒரு செம்பு பால் கொண்டு வந்து கொடுங்கள். அவர்களின் பசி ஆற்றலாம்!' ஊராரும் சரி எனச் சொல்லிச் செல்கின்றனர். இரவில் ஒரு மரத்தின் அடியில் பெரிய பாத்திரம் வைக்கப்பட்டிருந்தது. எல்லாரும் வந்து ஊற்றிச் சென்றனர். காலையில் பக்கத்து ஊருக்கு பாலை எடுத்துச் செல்ல பாத்திரத்தைத் திறக்கின்றனர். பாத்திரம் முழுவதும் தண்ணீர். எல்லோருக்கும் ஆச்சர்யம். என்ன நடந்ததென்றால், 'எல்லாரும் பால் ஊத்துவாங்க. நான் ஒரு செம்பு தண்ணி ஊத்துனா தெரியவா போகுது!' என்று நினைத்த ஊரார் ஒவ்வொருவரும் ஒரு செம்பு தண்ணீரைத்தான் ஊற்றியிருக்கின்றனர்! 'நான் இதைச் செஞ்சா தெரியவா போகுது!' என்ற எண்ணமே பல தவறுகளுக்கும் காரணமாக அமைகின்றது.

2. சோதோமின் பாவம் - ஓரினச்சேர்க்கை.

சோதோமின் நிகழ்வைப் போலவே நீதித்தலைவர்கள் நூலிலும் (19:22-24) ஒரு நிகழ்வு உள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளில் எது உண்மை? இதே போன்ற நிகழ்வு பல நகரங்களில் நடந்ததா? அல்லது ஒரே நிகழ்வு இரட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதா? எது முதலில் நடந்தது? என்ற கேள்விகள் விடையில்லாமலேயே இருக்கின்றன. காயின் - ஆபேல் வன்முறைக்குப் பின் பெருவெள்ளத்தால் அழிக்கப்பட்டது மனித இனம். நோவாவும் அவரின் குடும்பத்தாரும் காப்பாற்றப்படுகின்றனர். அதன்பின் மனித வரலாறு செய்யும் பாவம் 'பாலுறவு' சம்பந்தப்பட்டதாக இருக்கின்றது. சோதோம் நகரம் இன்றைய சாக்கடலை ஒட்டிய பகுதி என்று தொல்லியல் நிபுணர்கள் விளக்கம் தருகின்றனர். இந்த இடத்தில் மேற்கொண்ட தொல்லிய ஆய்வுகளின் முடிவுகள் இந்த இடம் எரிந்து போனதற்கான அடையாளத்தையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்தப் பகுதியில் உப்பு (நாம் பயன்படுத்தும் உப்பு அல்ல!) தூண்கள் நிறையவே உள்ளன. அதில் ஒன்றுக்கு 'லோத்தின் மனைவி' என்றும் பெயரிட்டுள்ளனர். தொல்லியல் ஆராய்ச்சி சோதோம் நிகழ்வை 'உண்மையாக இருக்கலாம்' என்றே சொல்கின்றது. 'ஆண்-ஆண்', 'பெண்-பெண்' உறவு சரியா? தவறா? என்ற கேள்வி ஒரு பக்கம். சரிதான் என்ற வாதங்கள் ஒருபக்கம். தவறு என்ற தண்டனைகள் ஒரு பக்கம். பைபிள் முன்வைக்கும் மனித உறவு என்ற அடிப்படையில் பார்த்தால் சோதோம் மக்கள் செய்தது பாவமே.

3. லோத்தின் மகள்களின் பாவம் - தகாத உறவு

'மோவாபியரும்', 'அம்மோனியரும்' இஸ்ராயேல் மக்களின் எதிரிகள். இஸ்ராயேல் மக்கள் கானான் நாட்டில் குடியேறியபோது அவர்களுக்கு எதிராகப் போரிட்டது இந்த இரு இனங்கள்தாம். 'எதிரிகள் பெயரைக் கெடுக்க வேண்டும்!' என்ற அடிப்படையில் இவர்கள் தகாத உறவில் பிறந்தவர்கள் என்று சொல்லி இந்த நிகழ்வை உருவாக்கியிருக்க வேண்டும். தகாத உறவின் காரணமாக இருப்பது அளவிற்கு மீறிய திராட்சை மது (19:31). பாவம் பாவத்தையே பெற்றெடுக்கும் என்பதுபோல, ஒரு பாவம் அடுத்த பாவத்திற்கு வழிவிடுகிறது. அடுத்த பாவத்தை நியாயப்படுத்துகி;ன்றது. 'சின்ன தப்புதானே!' என்று நாம் நினைப்பது பெரிய உறவு முறிவதற்குக் காரணமாகிவிடுகின்றது.

சிறியவைகள் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

சின்னஞ்சிறியவைகளை நாம் கருத்தில் கொள்வோம். பெரிய அளவில் மாற்றங்களை நாம் காண முடியும். 

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு:

For want of a nail the shoe was lost.

For want of a shoe the horse was lost.

For want of a horse the rider was lost.

For want of a rider the message was lost.

For want of a message the battle was lost.

For want of a battle the kingdom was lost.

And all for want of a horseshoe nail.


நல்லவராயிருப்போம். நம் ஊர் காப்போம்.

சின்னவைகளையும், சின்னவர்களையும் என்றும் சிரமேற்கொள்வோம்!

நம் இறைவன் சின்னஞ்சிறியவைகளின் இறைவன்!


'தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? 

'இன்று இரவு உன்னிடம் வந்த ஆடவர் எங்கே?'

'அது சிறிய நகர் தானே?'

No comments:

Post a Comment