யாக்கோபு இடையர்களை நோக்கி, 'சகோதரரே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' என, அவர்கள்: 'நாங்கள் காரானிலிருந்து வருகிறோம்' என்றார்கள். மீண்டும் அவர், 'நாகோரின் பேரன் லாபானை உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்க, அவர்கள், 'அவரை எங்களுக்குத் தெரியும்' என்றார்கள். 'அவர் நலம்தானா?' என்று யாக்கோபு கேட்க, அவர்கள் 'ஆம்' அவர் நலமே. இதோ! அவர் மகள் ராகேல் தன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகிறாள்' என்றார்கள். (தொடக்கநூல் 29:4-6)
இரண்டு மாதங்களுக்கு முன்பாக இதே நாளில் தந்தி சேவையை நிறுத்தியது இந்தியா. இந்த இறுதி நாளில் பலர் வாழ்த்துத் தந்திகளை அனுப்பி இந்த நாளைக் கொண்டாட தபால் அலுவலகங்களிலும், தந்தி அலுவலகங்களிலும் குவிந்தனர். தந்தி சேவையை நிறுத்துவதற்கான காரணம் என்ன? பயனாளர்கள் அல்லது நுகர்வோர்கள் குறைந்து விட்டனர். எதற்காக? பெருகிவிட்ட மின்னஞ்சல், குறுந்தகவல், அலைபேசி தந்திக்கான தேவையை அறவே குறைத்து விட்டது. 'தந்தி' என்றால் பயம். ஒருவரின் மரணச்செய்தி அறிவிக்கவே தந்தி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. எங்க ஊரில் யாராவது ஒருவருக்கு தந்தி என்று தபால் நிலையத்திலிருந்து தந்தி வந்தால் ஊரே தபால் அலுவலகத்தைச் சுற்றிக் கூடிவிடும். தந்தியில் நலமான தந்தியும் உண்டு. வாழ்த்துத் தந்திகளும் உண்டு.
இன்றைய தலைமுறை மஞ்சள் கலர் போஸ்ட் கார்ட், மஞ்சள் கலர் என்வலப், நீலமும் அல்லாமல் பச்சையும் அல்லாமல் இடைப்பட்ட கலரில் பிரிண்ட் ஆகி வரும் இன்லெண்ட் லெட்டர், வெள்ளைக் கலர் கவரில் நீலம் பச்சை என ஓரங்கள் கொண்ட ஏர்மெயில் கவர்களைக் கண்டிருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. 'காதலித்துப் பார் தபால்காரன் கடவுளாவான்' என்று வைரமுத்து எழுதக் காரணம் இந்தத் தபால்கள் கொண்டு வந்த நெருக்கம்;தான். மணியார்டர் ஃபார்மில் என் விடுதி சாப்பாட்டுப் பணத்திற்காக மாதம் 75 ருபாய் அனுப்பி, 'தகவலுக்கான இடம்' என்ற பகுதியிலும் இன்லென்ட் லெட்டர் அளவிற்கு நுணுக்கமாக ஒரு துளி இடமும் விடாமல் தகவலை நிரப்பி அனுப்புவார் என் அம்மா. 75 காசுகள் கொடுத்து இன்லெண்ட் லெட்டர் வாங்க முடியாத அம்மா இந்த 75 ருபாய்க்கு எவ்வளவு கஷ்டப்பட்டாங்களோன்னு நினைக்கும்போது அழுகையே வந்துவிடும்.
அந்த நுணுக்கமான எழுத்துக்களிலும், 'எங்கள் வீட்டின் பூனையின் நலம், எங்கள் பக்கத்து வீட்டு பத்மா அக்கா கோழி குஞ்சு பொறித்து, அந்தக் கோழிக்குஞ்சுகளின் நலம், அதில் கறுப்பு எத்தனை, வெள்ளை எத்தனை, பழுப்பு எத்தனை, பூக்காரர் காலையில் பூ கொண்டு வந்தது, அவரது பையன் என் முன்னாள் வகுப்புத்தோழனின் நலம்' என அனைத்தையும் காணலாம். 'நான் நல்லா இருக்கிறேன்' அப்படின்னு நாம சொல்ற வார்த்தைகள் மற்றவர்களுக்கும் நலம் கொடுக்கும் என்பதை உணர்த்தியது இந்த லெட்டர்தான்.
எந்த லெட்டர் எழுதும்போதும் எங்கள் தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டது இதுதான்: 'நலம். நலமறிய ஆவல்!' இதையே, 'நலம். நாடுவதும் அதுவே!', 'நீ இங்கு நலம். நான் அங்கு நலமா?' என்றெல்லாம் இரசித்து எழுதிய நாட்களும் உண்டு. லெட்டர் வரும் என்பதற்காகக் காத்திருந்த பொழுதுகள், கண் விழித்த இரவுகள் ஏராளம். 'மூன்று நாள் அரசு விடுமுறை' என்று பள்ளிக்கூடத்தில் பெற்ற மகிழ்ச்சி, ஹாஸ்டலுக்குப் போனவுடன் தொலைந்து விடும் - ஐயோ மூன்று நாள் லெட்டர் வராதே. இதற்காகவே நான் அரசு விடுமுறைகளைச் சபித்திருக்கிறேன்.
இன்றைக்குள்ள இமெயில், எஸ்.எம்.எஸ் என்னதான் வேகமாகச் செய்தியைக் கொண்டு சேர்த்தாலும் அதில் ஏனோ நெருக்கம் இருப்பதாகவே எனக்குத் தெரிவதில்லை. 'தான் எதுவுமே டைப் செய்யாமல், தனக்கு வரும் இமெயில் மற்றும் குறுந்தகவல்களை மற்றவர்கள் எனக்கு 'ஃபார்வர்ட்' செய்யும்போது இன்னும் அதிகக் கோபம் வரும். ரெண்டு வார்த்தைகள் சொன்னாலும் சொந்தமாகச் சொல்ல வேண்டும்.
'உடனுக்குடன்' என்ற அடிப்படையில் இமெயில் ஓகே. ஆனால், 'உணர்வுக்குணர்வு' என்ற அடிப்படையில் 'மஞ்சள்கலர் போஸ்ட் கார்டுதான்'.
சரி எதுக்கு இந்த இமெயில், போஸ்ட் கார்டு? எல்லாம் இந்த ஒற்றை வார்த்தைக்காகத் தான்: 'நலமா?'
'அவர் நலம்தானா?' என்று தன் இன்றைய தாய்மாமனையும், வருங்கால மாமனாரையும் தொட்டும் தொடாமல் நலம் விசாரிக்கின்றார் யாக்கோபு.
நாம் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போதும், ஒருவர் மற்றவருக்குக் கடிதங்கள் எழுதும்போதும் நாம் விசாரிப்பது: 'நல்லா இருக்கீங்களா?'
இன்றைய உளவியல் ஆய்வாளர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் நாம் மற்றவரை 'நலம்' விசாரிக்கும்போது, 'நல்லா இருக்கீங்களா?' என்று கேள்வியாகக் கேட்பதைவிட, 'நீங்க நல்லா இருக்கீங்க!' என்ற நேர்மறையான அழுத்தத்தோடு சொல்ல வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். 'நீங்க நல்லா இருக்கீங்க!' என்ற வார்த்தைகளே ஒருவருக்கு நலத்தைக் கொண்டுவந்துவிடுகின்றன. 'என்னடா டல்லா இருக்க. உடம்பு சரியில்லையா?' என்று நாலுபேர் நம்மைப் பார்த்துக் கேட்டால், நம்மையறியாமலே நமக்கு உடம்பு சரியில்லாமல் போகிவிடுகிறது. ஆகையால், எதிர்மறையான வார்த்தைகளைப் பேசும் நபர்களை நம் அருகில் வைத்துக்கொள்ளவே கூடாது.
எபிரேய மொழியில் 'நலம்' என்பதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை 'சலோம்'. இதையே இசுலாமிய மரபில் 'சலாம்' என வாழ்த்துகின்றனர். 'சலோம்' என்பதன் முதல் பொருள் 'உடல்நலம்'. 'உடல்நலமே' முதல் நலமாகக் கருதப்பட்டது எபிரேய மரபில். உடல்நலம் குறைந்தால் நம் அனைத்து நலன்களும் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. 'When wealth is lost nothing is lost. When health is lost something is lost.' காய்ச்சல் வந்து கட்டிலில் படுத்திருக்கும்போது, என் மேசையில் இருக்கும் கம்ப்யூட்டர், ஃபோன், புத்தகங்கள் எதன்மேலும் ஆசை இருப்பதேயில்லை. நாள் முழுவதும் சிந்தனை நம்மைப்பற்றியே ஓடுகிறது. இன்றைய மருத்துவ உலகின் அவசரம் வேறு. வாயில் சின்ன ப்ளிஸ்டர் என்றாலும் 'ஹெர்பஸ்' என்றும் 'மவுத் கேன்சர்' என்றும் பயமுறுத்திவிடுகிறார்கள். ஒன்றரை ருபாய் பிகாஸில்ஸ் மாத்திரையில் சரியாகக் கூடியதை ஒன்றரை லட்சத்திற்கு இழுத்து விட்டு விடுகிறார்கள். 'டாக்டரிடமும், நாம டாவு அடிக்கிற பொண்ணிடமும் பர்சைக் காட்டவே கூடாதாம்!'
இன்றைய உலகின் முரண்பாடு என்னவென்றால் உடல்நலத்தை விற்று உழைக்கின்றோம். பின் உழைத்த பணத்தை வைத்து உடல்நலம் பெற மருத்துவமனை செல்கிறோம். 'உடம்பை வளர்த்தேன், உயிரை வளர்த்தேனே!' என்ற திருமூலரின் வார்த்தைகள் உடல்நலத்திற்கும், உயிர்நலத்திற்கும் உள்ள உறவை அழகாக விளக்குகிறது. இன்று நாம் ஒருவர் மற்றவரின் உடல்நலம் நாடுவோம். நம் உடல்நலம் பேணுவோம். அதுவே நாம் பெற வேண்டிய முதல் சலோம். பின் உள்ள அளவில் 'சலோம்'. பின் வேலை, பணம் பற்றி யோசிக்கலாம்!
இரண்டாவதாக, யாக்கோபு முன்பின் தெரியாத நபரிடம் தன் மாமனைப் பற்றி விசாரிக்கின்றார். அந்த முன்பின் தெரியாத நபர்கள், 'அவரை எங்களுக்குத் தெரியும்' என்றும், 'ஆம். அவர் நலமே' என்றும் பதில் தருகின்றனர். இதிலிருந்தே தெரிகிறது ஊரில் லாபானுக்கு நல்ல பெயர் இருந்தது என்று. நல்ல பெயர் இல்லையென்றால், தெரிந்திருந்தாலும், 'தெரியாது' என்று சொல்லிவிடுவர் ஊரார்.
'இந்த நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க!' அப்படின்னு சொல்வாங்க. அந்த நாலுபேரைப் பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாலுபேருதான் நம்ம ஊருக்காருங்க. 'இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்' என்று எழுதுகிறார் கண்ணதாசன். ஊரார் கொடுக்கும் சர்டிபிகேட் நம் influence லெவலைக் காட்டுகிறது. Harvard Business Review தன் ஆகஸ்ட் மாத இதழுக்கு 'Influence' என்று பெயரிட்டுள்ளது. இது ரொம்ப அவசியம். நாம நல்லா இருந்தா மட்டும் போதாது. அந்த நலம் நாலுபேரு மேல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். Influence வளர intelligence மட்டும் போதாதாம். மாறாக warmth ம் அவசியம். லாபான் இந்த இரண்டையும் கண்டிப்பாகக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
எந்த ஒரு தகவல் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் இந்த அறிமுகம் வளர்வது மிகக் கஷ்டம். இந்தக் காலத்தில் அறிமுகம் ரொம்ப ஈஸி. 'உங்களுக்கு அவரைத் தெரியுமா?' 'தெரியுமே. ஃபேஸ்புக்ல பாத்திருக்கேன்!' அறிமுகம் கிடைப்பது இன்று எளிது. ஆழமான உறவு பிறப்பது அரிது.
எங்க ஸெமினரிக்கு ரேஷன் வாங்குவதற்காக தாசில்தாரரிடம் பெர்மிட் வாங்கப் போயிருந்தோம். தாசில்தாரைப் பார்க்கவே முடியல. ஒருநாள் எங்க ஸெமினரி டைரக்டர், 'நீங்கக் கிளம்பிப் போங்க. பத்து மணிக்கு 'குமரேசன்' அப்படின்னு ஒருத்தர் கட்டம் போட்ட சட்டை போட்டு தாசில்தாரர் ஆபிசுக்கு முன் வருவார். அவரைப் பாருங்க' என்று சொல்லி அனுப்பி விட்டார். எங்கள் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர் ஒருவர் என்னுடன் வந்தார். தான் புதிதாய் வாங்கியிருக்கிற 'மாருதி 800'ல் போவோம் என்று தன் காருடன் வந்தார். 'லெட்டர், ஜெராக்ஸ், ஃபோட்டோ, மாணவர்கள் பெயர்ப்பட்டியல்' என அனைத்தையும் ஒரு போல்டரில் எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். காரில் சென்று இறங்கியபோது எல்லோரும் எங்களையே பார்த்தனர். ரொம்ப பெருமையா இருந்துச்சு. ஏற்கனவே உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்திருந்து எங்களுக்கு வழிவிட்டனர். 'நீ அங்கி போட்டுட்டுதான் போகணும்னு' சொன்னதால 'நான் வெள்ளை அங்கியில் தான் சென்றிருந்தேன்'. 10 மணி ஆயிற்று. குமரேசன் வந்தார். மெல்லிய உருவம். கட்டம் போட்ட சட்டை. கொஞ்சம் கறுப்பு. இல்ல. நிறையவே கறுப்பு. தன் சைக்கிளை எங்கள் காருக்கு அருகில் நிறுத்திவிட்டு வியர்க்க விறுவிறுக்க வந்தார். அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த அடையாளம் 'வெள்ளை அங்கி'. நேராக வந்தவர், 'உங்க ஸெமினரி பேர் என்ன? எத்தனை பேர் இருக்காங்க?' என்றார். நான் ஃபோல்டரைத் திறந்து லெட்டர் ஹெட்டில் நீட்டாகப் பிரிண்ட் செய்த பேப்பரைக் கொடுத்தேன். அவர் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. 'வாயால சொல்லுங்க!' என்றார். நான் சொன்னேன். தன்னிடமிருந்த ஒரு மருந்துப் பில்லின் பின்புறம் குறித்துக் கொண்டார். 'உட்காருங்க!' சொல்லிவிட்டு உள்ளே போனார். 20 நிமிடங்கள் கடந்தன. வெளியே வந்தார். அவர் கையில் ஒரு வெள்ளைத் தாள். அதில் நிறைய கையொப்பங்களும், ஸ்டாம்ப்களும் இருந்தன. 'நீங்க 3 வருடங்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை வாங்கிக்கிடலாம். வழங்குமிடம் பழங்கானத்தம்' என்று சொல்லிவிட்டு தன் சைக்கிளை எடுக்க வேகமாகச் சென்றார். எங்கள் படிப்பு, எங்கள் மாருதி 800, என் வெள்ளை அங்கி அனைத்தையும் ஓரங்கட்டி விட்டது ஒரு கட்டம் போட்ட சட்டை. குமரேசன் தாசில்தாரின்மேல் கொண்டிருந்ததற்குப் பெயர்தான் 'influence'
கடைசியில் விசாரித்ததில் டெய்லி தாசில்தாரர் வாக்கிங் போகும் இரயில்வே மைதானத்தின் வெளியில் அருகம்புல் ஜுஸ் விற்பவராம் நம்ம குமரேசன். 'Influence' வருவதற்கு அம்பாணியாய் இருக்க வேண்டும் என்பதல்ல. அருகம்புல் ஜுஸ் விற்றால்கூட போதும். நாம் எப்படி மற்றவர்களிடம் பழகுகிறோம் என்பதைப் பொறுத்தே நம்ம influence level இருக்கிறது.
'அவரை எங்களுக்குத் தெரியும்'
'அவர் நலம்தானா?'
'ஆம். அவர் நலமே!'
A
ReplyDeleteநான் இஙகு நலம். நீங்கள் அங்கு நலமா எழுத்தாளரே?
ReplyDelete