காயின் தன் சகோதரன் ஆபேலிடம், 'நாம் வயல்வெளிக்குப் போவோம்', என்றான். அவர்கள் வெளியில் இருந்த பொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான். ஆண்டவர் காயினிடம், 'உன் சகோதரன் ஆபேல் எங்கே?' என்று கேட்டார். அதற்கு அவன், 'எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?' என்றான். அதற்கு ஆண்டவர், 'நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக்கொண்டிருக்கிறது...' என்றார். (தொடக்கநூல் 4:8-10)
இரண்டு கேள்விகள் இன்று: 'உன் சகோதரன் எங்கே?' மற்றும் 'நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?'
'உன் சகோதரன் எங்கே?' – காயினைப் பார்த்துக் கேட்கின்றார் கடவுள். இது எப்படி இருக்கு தெரியுமா? பூனையைப் பார்த்து, 'இங்க இருந்த பால் எங்கே?' என்று கேட்பது போல் இருக்கிறது. அமெரிக்காவைப் பார்த்து, 'ஒசாமா பின் லாடன் எங்கே?' என்றும் 'சதாம் உசேன் எங்கே?' என்றும் இராஜபக்சேவைப் பார்த்து, 'பிரபாகரன் எங்கே?' என்றும் கேட்பதுபோல இருக்கிறது. காயின்தான் கொன்னுட்டான்ல. அப்புறம் ஏன் அவன்கிட்டே போய்க் கேட்கிறீங்க?
காயினிடம் கேட்கப்பட்ட கேள்வி பதிலுக்காகக் கேட்கப்பட்டது அன்று. மாறாக, அவனுக்குத் தன் சகோதரன்மேல் உள்ள பொறுப்புணர்வை மறுஆய்வு செய்வதற்காகக் கேட்கப்பட்டது. 'ஆபேல் எங்கே?' என்று கேட்டிருந்தால், காயினின் பதில் சரியாக இருந்திருக்கும். ஆனால், 'உன் சகோதரன் எங்கே?' எனக் கேட்கின்றார் கடவுள். நாம் எல்லோருமே உறவினர்கள்தாம். உறவு என்றால் இருவகை என நினைப்போம்: இரத்த வகை, திருமண வகை. இரத்த வகை உறவு என்பது பெற்றோர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சித்தப்பா, பெரியப்பா, அண்ணன், தம்பி. திருமண வகை உறவு என்பது கணவன், மனைவி, மாமனார், மாமியார், மருமகன், மருமகள். விவிலியம் காட்டும் உறவு இன்னும் ஒருபடி செல்கின்றது: உடன்படிக்கை உறவு. இரத்தத்தினாலும், திருமணத்தினாலும் மட்டுமல்லாமல் ஒருவர் மற்றவரின் மேல் உள்ள ஈர்ப்பினால் உருவாக நட்பாய் மலரும் உறவே உடன்படிக்கை உறவு. உடன்படிக்கை உறவு சுட்டிக்காட்டும் ஒரு பண்பு: பொறுப்புணர்வு. நான் உனக்குப் பொறுப்பு. நீ எனக்குப் பொறுப்பு. எனக்கு உன்னைப் பிடித்திருக்கி;ன்றது. உனக்கு என்னைப் பிடித்திருக்கின்றது. 'எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்தாலும்' 'பார்த்தவுடன் பத்திக் கொள்ளும்' பூரண ஜென்ம அன்பு உறவும் உடன்படிக்கை உறவே. உடன்படிக்கை உறவில் உள்ள பொறுப்புணர்வைவிட இரத்த உறவிலும், திருமண உறவிலும் அதிகமான பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்பது யூத சமயத்தின் சிந்தனை. யூத சிந்தனை குடும்ப உறவை மையப்படுத்தியது. நான், என் குடும்பம், என் குலம், என் இனம் என விரிவதுதான் யூத உறவு. காயின் தன் முதல் வட்டத்திலேயே தவறிவிடுகிறான்.
இன்றைக்கு நம்மைத் தேடி வந்த இரத்த உறவிலும், நாம் தேடிக் கொண்ட திருமண உறவிலும், நம்மைத் தேடியும், நாம் தேடியும் வந்த உடன்படிக்கை உறவிலும் நாம் பொறுப்புணர்வு என்ன?
நாம் எல்லோருமே ஒருவர் மற்றவரைச் சார்ந்துதான் இருக்கிறோம். நாம் கையிலெடுக்கும் ஒரு சோற்றுப்பருக்கையின் பின்னால் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? நெல்லை விதைத்த விவசாயி, நட்ட கூலிக்காரர், வயலுக்கு நீர் பாய்ச்சிய வேலைக்காரர், அதற்கு உரம் தயாரித்தவர், பூச்சி மருந்து தயாரித்தவர், அதை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்த்தவர், அறுவடை செய்தவர். நெல்லை வைக்கோலிலிருந்து பிரி;த்தவர், ரைஸ் மில்லில் அரைத்தவர், அரைத்ததை சாக்கில் இட்டவர், சாக்கை நெய்தவர், சாக்கைத் தைத்தவர், வாகனத்தில் ஏற்றியவர் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் வேலை செய்வது வெறும் பணத்திற்காகவா? நம்மையறியாமலேயே ஒருவர் மற்றவர்மேல் ஏதோ பொறுப்புணர்வு இருக்கத்தானே செய்கிறது? அப்படியிருக்க, நாம் யார்மேலும் வன்முறையாய் நடந்து கொள்ள இடமேயில்லை.
வாளெடுப்பது மட்டும் வன்முறையென்று. சொல்லெடுப்பதும் வன்முறைதான். சிந்தையில் உருவாகும் வன்முறை, சொல்லாக, செயலாக மாறுகிறது. 'வன்முறை, செக்ஸ்' இவை இரண்டும்தான் மனிதரில் ஓங்கியிருக்கும் உணர்வுகள் என்கிறார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். ஆனால் இந்த இரண்டையும் வடிகால் செய்வதில்தான் மனிதர்கள் விலங்குகளை விட உயர்ந்து நிற்கின்றனர். வடிகால் செய்வதற்கான அடிப்படை 'நாம் ஒருவர் மற்றவருக்குப் பொறுப்பானவர்கள்'.
இரண்டாம் கேள்வி: காயினின் எதிர்கேள்வி. 'நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?' எபிரேய மொழியில் சொல்லப்பட்டதை அப்படியே மொழி பெயர்த்தால் இப்படி இருக்கும்: 'என் கண்களை எப்போதும் என் சகோதரன்மேலா வைத்திருக்க வேண்டும்?' ஆங்கிலத்தில் அழகான பாடல் ஒன்று உண்டு: 'ஹிஸ் ஐ இஸ் ஆன் த ஸ்பேரோ!' (அவரின் கண்கள் எப்போதும் சிட்டுக்குருவிகள் மேல்!) ஒருவர் கண்விழித்திருக்கிறார் என்றால் அவர் ஒன்றின் மேல் பொறுப்பாய் இருக்கிறார் என அர்த்தம். காயின் தன் சகோதரன்மேலிருந்து தன் கண்களைத் திருப்பி விட்டான். அவனது பார்வை தன்னை நோக்கித் திரும்பிவிட்டது. நாம் அடுத்தவரை நோக்கி நம் கண்ககைளத் திருப்பினால் பிறர்நலம் வருகிறது. நம்மை நோக்கியே திருப்பினால் சுயநலம் வருகிறது. நம் மதுரை மீனாட்சியின் பெயரைப் பாருங்க. மீன் போன்ற கண்களை உடையவள் செய்யும் ஆட்சியே மீனாட்சி. கண்களை மூடாத உயிரினம் மீன். கண்களை மூடி விட்டால் மீன் இறந்துவிட்டது என்று அர்த்தம். கண்களை மூடாத மீனைப் போன்று மதுரையின் மேல் கருத்தாய் இருப்பவள்தான் மீனாட்சி. கொடுத்து வச்சவங்க மதுரக்காரங்க!
இந்த இரண்டு கேள்விகளும் நமக்கு முன்வைப்பவை: பொறுப்புணர்வு. டெரிடா என்ற மெய்யியல் அறிஞர் இதை 'எதிக்ஸ் ஆஃப் ரெஸ்பான்சிபிலிட்டி' என்பார். நாம் ஒருவர் மற்றவர்மேல் பொறுப்பாய் இருப்பதே அறநெறி. அப்படியிருக்க நல்லவரோ, கெட்டவரோ அனைவரின்மேலும் நமக்குப் பொறுப்பு உண்டு. 'நான் தான் நல்லவன். நீ கெட்டவன். ஆகையால் நீ உயிரோடிருக்கக் கூடாது!' என்று சொல்லி மற்றவர் உயிரை எடுப்பதற்கு எந்த ஒரு தனி நபருக்கோ, நிறுவனத்திற்கோ, இயக்கத்திற்கோ, அரசிற்கோ உரிமையில்லை. அப்படி செய்கின்ற நபரோ, நிறுவனமோ, இயக்கமோ, அரசோ தன்னையே கடவுளாக்கிக் கொள்கின்றது என்றுதான் அர்த்தம். அப்படிச் செய்யும் அனைவரும் நிலத்தில் விழுந்த இரத்தம் எழுப்பும் குரலுக்குப் பதில்சொல்லித்தான் ஆகவேண்டும்.
நம்மால் மற்றவர் வடிக்கும் செந்நீர் மட்;டுமல்ல, கண்ணீரும் கூட இறைவனின் முன் குரலெழுப்பி முறையிடத்தான் செய்யும்.
ஸ்வீடன் நாட்டைச் சுற்றிப்பார்க்கச் சென்ற ஒருவரை அங்கு வாழும் அவரின் நண்பர் ஓட்டலுக்கு அழைத்துச் செல்கின்றார். ஓட்டலைவிட்டுச் சற்றுத் தள்ளியே காரை நிறுத்திகின்றார் நண்பர். இருவரும் ஓட்டலுக்குள் ஒரு கருத்தரங்கிற்காகச் செல்கின்றனர். சுற்றுலா சென்றவர் கேட்கின்றார்: 'இங்க தான் இவ்ளோ பார்க்கிங் இடம் இருக்கே. ஏன் தூரமாக காரை நிறுத்தினீர்கள்?' நண்பர் சொல்கிறார்: 'நாம் சீக்கிரம் வந்துட்டோம். நேரம் இருக்கிறது. மெதுவாக நடந்து போகலாம். ஆனா, கடைசியா யாராவது அவசரமா வந்தா அவர் ஓட்டலுக்குப் பக்கத்துல நிறுத்திக் கொள்ளலாம்ல. அல்லது பாவம் அவர் பதற்றப்படுவார்ல!'
யாரோ ஒருவர் பதற்றப்படுவார் என நினைத்து சின்னச் சின்ன அசௌகரியங்களை நாம் பொறுத்துக்கொள்ளும் போதும், தனக்கென்று வைத்திருந்த கடைசிப் பருக்கையையும் தன் குழந்தைக்கு வைத்துவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு தூங்கப் போகும் தாயாய் இருக்கும்போதும், தன் மூச்சிரைக்க சைக்கிள் மிதித்து தன் குழந்தை நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக வியர்வை சிந்தும் தங்க மீன்கள் தந்தையாய் இருக்கும்போதும், 'என் நாடு, என் மக்கள்' நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் 'இன்றுகளை' அழித்து, நம் நாட்டின் 'நாளைக்காக' காவல்காக்கும் எல்கைவீரராய் இருக்கும்போதும், நாம் நம் சகோதர, சகோதரிகளுக்குக் காவலாளிகளே?!
ஒரு ஜென் துறவி தன் சீடர்களிடம் கேட்டாராம்: 'விடிந்து விட்டது என நான் எப்போது சொல்கிறோம்?' முதற் சீடர் சொன்னாராம்: 'தூரத்தில் தெரியும் விலங்கைப் பார்த்து அது கழுதையா, குதிரையா எனக் கண்டுபிடிக்க முடிந்தால் விடிந்து விட்டது என அர்த்தம்.' மற்றொருவர் சொன்னாராம்: 'சுருளாய்க் கிடக்கும் ஒன்றைப் பார்த்து அது பாம்பா அல்லது கயிறா என நம்மால் அறிய முடிந்தால் விடிந்து விட்டது'. சற்று மொளனம் காத்த துறவி சொன்னாரம்: 'நம் அருகில் இருக்கும் ஒருவரைப் பார்த்து இவர் என் சகோதரன் என்று எப்போது சொல்ல முடிகிறதோ அப்போதுதான் விடிந்து விட்டது!'
ஒரு ஜென் துறவி தன் சீடர்களிடம் கேட்டாராம்: 'விடிந்து விட்டது என நான் எப்போது சொல்கிறோம்?' முதற் சீடர் சொன்னாராம்: 'தூரத்தில் தெரியும் விலங்கைப் பார்த்து அது கழுதையா, குதிரையா எனக் கண்டுபிடிக்க முடிந்தால் விடிந்து விட்டது என அர்த்தம்.' மற்றொருவர் சொன்னாராம்: 'சுருளாய்க் கிடக்கும் ஒன்றைப் பார்த்து அது பாம்பா அல்லது கயிறா என நம்மால் அறிய முடிந்தால் விடிந்து விட்டது'. சற்று மொளனம் காத்த துறவி சொன்னாரம்: 'நம் அருகில் இருக்கும் ஒருவரைப் பார்த்து இவர் என் சகோதரன் என்று எப்போது சொல்ல முடிகிறதோ அப்போதுதான் விடிந்து விட்டது!'
In this bible month .. i am explaining the first five books of the bible to the people in the mass.. plz do write about Exodus also..or send some resources in this regard.. if it s in tamil.. well and good..
ReplyDeleteur reflections r very useful for personal life..
congrat..
keep it up..
Thanks for the compliments. Please give me your email id so that I may send what you had asked. Good day.
Delete