Tuesday, September 3, 2013

உன் முகம் வாடியிருப்பது ஏன்?


ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான். அவன் முகம் வாடியது. ஆகவே, ஆண்டவர் காயினிடம், 'நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடியிருப்பது ஏன்? நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால் பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆள வேண்டும்' என்றார்.

(தொடக்கநூல் 4:5-7)

இன்றும் மூன்று கேள்விகள்: நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடியிருப்பது ஏன்? நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா?

இந்தக் கேள்விகளின் பின்புலம் இரு சகோதரர்களுக்கிடையே இருக்கும் கசப்புணர்வு. மனுக்குலத்தின் முதற்பெற்றோர் ஆதாம் - ஏவாள் பெற்ற முதற்பேறு காயினுக்கும் அவன் சகோதரன் ஆபேலுக்கும் இடையே நடக்கும் நிகழ்விற்கு ஆண்டவர் பதிலாகத் தருபவைதாம் இக்கேள்விகள். மனுக்குலத்தில் வன்முறை எப்படி வந்திருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இது எழுதப்பட்டது எனவும் குறிப்பிடுலாம்.

ஆபேல் ஆடு மேய்ப்பவன். காயின் நிலத்தைப் பண்படுத்துபவன். காயின் தான் முதலில் பிறந்தாலும் இதை எழுதுகிற ஆசிரியர் ஆபேலின் பெயரை முதலில் குறிப்பிடுகின்றார். பின்வரும் நிகழ்வில் ஆபேல்தான் முதன்மை பெறுவான் என்பதை முன்னோட்டமாக வாசகருக்கு அறிவிக்கின்றார் ஆசிரியர். விவிலியத்தில் பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி 'இளைய மகன் ஏற்புடையவராதல்' என்ற சித்தாந்தம் மேலோங்கியே நிற்கின்றது. காயின் - ஆபேல், லோத் - ஆபிரகாம், இஸ்மாயேல் - ஈசாக்கு, ஏசா – யாக்கோபு, பத்து அண்ணன்கள் - யோசேப்பு, பென்யமீன், ஏழு சகோதரர்கள் - தாவீது என அனைத்திலும் 'இளைய மகனே' தேர்ந்து கொள்ளப்படுகின்றார். புதிய ஏற்பாட்டில் இயேசு போதிக்கும் 'ஊதாரி மகன்' எடுத்துக்காட்டில் இளைய மகனே தந்தைக்கு ஏற்புடையவராகின்றார். 'நல்ல சமாரியன்' எடுத்துக்காட்டில் இறுதியாய் வந்த சமாரியனே ஏற்புடையவராகின்றார். இதே 'இளைய மகன் ஏற்புடையாதல்' கருத்தோட்டம்தான் காயின் - ஆபேல் நிகழ்விலும் பதிவாகியிருக்கின்றது.

இருவருமே கடவுளுக்குப் பலி செலுத்த வருகின்றனர். காயின் நிலத்தின் விளைச்சலிருந்தும், ஆபேல் தன் ஆட்டு மந்தையிலிருந்தும் என இருவரும் காணிக்கை கொண்டுவருகின்றனர். கடவுள் ஆபேலின் காணிக்கையை ஏற்கின்றார். காயினின் காணிக்கையை ஏற்கவில்லை. ஏன்? என்பதற்கும் இங்கே காரணம் கொடுக்கப்படவில்லை. ஆனால் சின்னஞ்சிறு வயதில் மறைக்கல்வியில் நமக்குக் கற்றுக் கொடுக்கப்படுவது என்ன? காயின் பதர்களைப் படைத்தான் எனவும் ஆபேல் கொழுத்த கன்றைப் படைத்தான் எனவும். 'நல்லதும் கெட்டதும்' நாம் முடிவு செய்வது அல்ல. அது இறைவன் முடிவு செய்வது. இறைவனின் பார்வையில் கெட்டது என்றால் அது கெட்டதுதான், நல்லது என்றால் நல்லதுதான். இறைவனின் நன்மைக்கும், தீமைக்கும் காரணம் அறிபவர். நம்மால் நன்மை, தீமை அறிய முடியாது. 'நல்லது மாதிரி இருக்கு', 'கெட்டது மாதிரி இருக்கு' என்று தான் நம்மால் கணக்கிடமுடியுமேயொழிய 'இதுதான் நல்லது அல்லது கெட்டது' என்று அறுதியிட்டுக் கூற முடியாது. அப்படியிருக்க நாம் ஏன் ஒருவர் மற்றவரை 'நல்லவர்', 'கெட்டவர்' என வரையறுக்க வேண்டும்? பாவசங்கீர்த்தன அறையில் அமர்ந்து கண்ணீரோடு வருகின்ற எந்த கனிந்த உள்ளத்திற்கும் 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' அல்லது 'மன்னிக்கப்படாது' என்று சொல்வதும் கூட இயலாத ஒன்றுதான்.

முதல் கேள்வி: 'நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்?' கோபம் என்பது நம் இயலாமையின் வெளிப்பாடு. ஆற்றலிலோ, பொருளாதாரத்திலோ, திறமையிலோ, அந்தஸ்திலோ நம்மைவிட தாழ்வாய் இருக்கும் ஒருவர்மேல் தான் நமக்குக் கோபம் வரும். ஒரு ஐ.ஜிக்கு கோபம் வந்தால் அதை டி.எஸ்.பியிடம் காட்டுவார். டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டரிடம் காட்டுவார். இன்ஸ்பெக்டர், ஏட்டிடம் காட்டுவர். ஏட்டு, சென்ட்ரியிடம் காட்டுவார், சென்ட்ரி, ரோட்டில் பழம் விற்பவரிடம் காட்டுவார், பழம் விற்பவர், தன் மனைவியிடம் காட்டுவார், மனைவி தன் குழந்தையிடம் காட்டுவார், குழந்தை, தான் விளையாடும் பொம்மையிடம் காட்டும். மேலிருந்து கீழிறங்குவதுதான் கோபம். 

சில நேரங்களில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாத போதும் கோபம் வரும். 7 மணிக்கு வீட்டிற்கு வரவேண்டும், நாம் ஜவுளி எடுக்கப் போகவேண்டும் என தன் கணவரை 7 மணிக்கு எதிர்ப்பார்க்கின்ற மனைவி தன் கணவர் 9 மணிக்கு வீடு திரும்பும்போது அவர்மேல் கோபப்படுகிறார். எதிர்பார்ப்பு – ஏமாற்றம் - கோபம் என வளர்கிறது.

காயினின் கோபமும் ஏறக்குறைய ஏமாற்றத்தின் வெளிப்பாடுதான். ஏமாற்றத்தோடு ஒட்டிக்கொண்ட ஒப்பீடு காயினிடம் கோபத்தைத் தூண்டுகிறது. தான் மட்டும் காணிக்கை செலுத்த வந்து அது ஏற்புடையாகாவிட்டால் இவ்வளவு கோபம் வந்திருக்காது. தன் சகோதரனின் காணிக்கை ஏற்புடையதாகிவிட்டது, ஆனால் என்னுடையது ஏற்புடையதாகவில்லையே என்ற ஏமாற்றமே கோபமாக உருவெடுக்கின்றது. காயினுக்கு கடவுள் மேலும் கோபம் இருந்திருக்கும். தன் தம்பி மேலும் கோபம் இருந்திருக்கும். கடவுள் தன்னைவிடப் பெரியவர். ஆகையால் தன் கோபத்தைத் தனக்குக் கீழிருக்கும் தம்பியிடம் திருப்புகின்றான். கோபத்தின் குழந்தை கோபம். வன்முறையி;ன் குழந்தை வன்முறை. போரின் குழந்தை போர்.

புத்தரிடம் அவர் சீடர் ஒருவர் கேட்கிறார்: 'சுவாமி, கோபத்திற்குத் தண்டனை என்ன?' புத்தர் சொல்கிறார்: 'ஒருவரின் கோபமே அவர் தனக்குத் தரும் தண்டனை. கோபத்திற்கென்று தனியாக தண்டனை இல்லை!' 'அடுத்தவர் செய்த தவறுக்காக நமக்குக் கொடுத்துக் கொள்ளும் தண்டனைதான் கோபம்'. நம் கோபத்தால் யாரும் திருந்திவிடுவார்கள் என நினைப்பது முட்டாள்தனம். கோபம் என்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் நெருப்பு.

இரண்டாம் கேள்வி: 'உன் முகம் வாடி இருப்பது ஏன்?' அகத்தின் அழகு முகத்தில் தெரிந்து விட்டது காயினுக்கு. முகமே உடலின் கண்ணாடி. உடலின் நலனையும், உள்ளத்து நலனையும் 'ஃபேர் அன்ட் லவ்லி' போட்டாலும் அப்படியே காட்டிக்கொடுத்து விடுகிறது முகம். நம் உடலில் எப்போதும் நிர்வாணமாய் இருக்கின்ற பகுதி முகம் மட்டும்தான். புன்சிரிப்பு நம் முகத்திற்கான முதல் அழகுசாதனப் பொருள். உள்ளத்தின் உணர்வுகளைச் செப்பனிடாமல் வெறும் முகத்திற்குப் பவுடர் போடுவது, காலில் குத்தியிருக்கும் முள்ளை எடுப்பதற்குப் பதிலாக தொடர்ந்து வலி நிவாரணி எடுப்பதைப் போன்றது.

மூன்றாம் கேள்வி: 'நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா?' உயர்வதற்கான ஒரே வழி நல்லது செய்வது. தீமை செய்யாமல் இருப்பது மட்டும் போதாது. நல்லதும் செய்ய வேண்டும். கல்லும்தான் யாருக்கும் தீமை செய்வதில்லை. மரமும்தான் யாருக்கும் தீமை செய்வதில்லை. நன்மை செய்யத் தேவையானதெல்லாம் துணிச்சல்தான். நம் எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். காலையில் எழும்போது நாமனைவருமே, 'இன்று நான் நல்லவனாக, நல்லவளாக இருப்பேன்' என்று உறுதி செய்கிறோம். ஆனால் அதைத் தொடர்ந்து செய்வதற்கான 'துணிவும், விடாமுயற்சியும்' நம்மிடம் இருப்பதில்லை. இந்த வருடம் முழுவதும் வாக்கிங் போவேன் என்றோ, தியானம் செய்வேன் என்றோ, புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்பேன் என்றோ, பிள்ளைகளோடு நேரம் செலவழிப்பேன் என்றோ ஜனவரி 1 அன்று முடிவு செய்திருப்போம். புதிதாக கான்வாஸ் வாங்கியிருப்போம், யோகா மேட் மற்றும் சிடி வாங்கியிருப்போம். எவ்வளவு நாள்கள் செயல்படுத்தினோம் என்றால் 5 அல்லது 10 நாட்கள் தான். அதன் பிறகு நமக்கு நாமே காரணம் சொல்லத்தொடங்கியிருப்போம்: 'இதல்லாம் ப்ராக்டிக்கலா?' நாம ஒழுங்கா செஞ்சுகிட்டிருந்தாலும் நம்ம நண்பர் கூட்டம் சொல்லியிருக்கும். 'டேய்....ரொம்ப பண்ணாதடா...குடிக்காம இருக்க மாட்டேன்லாம் சொல்லாத...எங்க மச்சான் ஒருத்தர் இப்படித்தான் திடீர்னு முடிவெடுத்து 10 நாளிலேயே இறந்து போயிட்டாரு' என்றெல்லாம் சொல்லிக் குடிக்காதவனைக் குடிக்க வச்ச நண்பர்களையும் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

'ஒன்றே செய். அதை நன்றே செய். நன்றும் இன்றே செய். இன்றை இன்னே செய்' என்ற நம் முன்னோரின் வாக்கைத்தான் இன்று மேலை நாடுகள் 'தி பவர் ஆஃப் நவ்' என்று கொக்கரித்துக் கொண்டிருக்கின்றன. 

இறுதியாக, நல்லது செய்யாவிட்டால் பாவம் உன் வாயிலில் படுத்திருக்கும் என எச்சரிக்கை விடுகின்றார் கடவுள். நம்ம வீட்டுக்கு வெளியில ஒரு பூனையோ, நாயோ படுத்திருந்தாலே பதறிவிடுகிறோம். பாம்பு...ஐயோ சொல்லவே வேணாம். பாவம் படுத்திருந்தால் எப்படி இருக்கும்? பயமாகவும் இருக்கிறது. 'அது பாட்டுக்க படுத்திருக்கட்டும், நான் கொஞ்சம் ஓரமாப் போறேன்!' என்று நக்கலாகவும் இருக்கிறது. 

தாகூர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு நாள் காலையில் துயில் எழுகின்ற தாகூர் தன் பணியாளைத் தேடுகின்றார். பணியாளின் பெயர் ஆனந்தா. ஆனந்தாவின் வயது 75. தாகூரைவிட வயதில் மூத்தவர். பணியாளைக் காணவில்லை. தானே எழுந்து கஷ்டப்பட்டு காஃபி போடுகின்றார். சுடுதண்ணீர் வைக்கின்றார். தண்ணீர் எடுக்கின்றார். தனக்குத் தெரிந்த வகையில் உணவு சமைக்கின்றார். 'என்ன அவனை இன்னும் காணோம்? எங்க போயிருப்பான்?' என்று எண்ணி அவரின் கோபம் அதிகமாகக் கொண்டேயிருக்கின்றது. ஏறக்குறைய இரவு பத்து மணிக்கு மழையில் நனைந்து கொண்டே வந்து கதவைத் தட்டுகிறார் ஆனந்தா. 'எங்கடா போன?' ஜன்னல் வழியே சத்தம் போடுகின்றார் தாகூர். பதிலுக்குக் காத்திராமல், 'நீ இரவு முழுவதும் வெளியிலயே கிட' எனச் சொல்லிவிட்டு கதவைத் திறக்க மறுத்து தாறுமாறாகத் திட்டுகின்றார் தாகூர். காலையில் வெளியே வந்து பார்த்தபோது அமைதியாக நிற்கின்றார் ஆனந்தா. தாகூரின் கோபம் அடங்கிவிட்டது கண்டு மெதுவாகச் சொல்கின்றார் ஆனந்தா: 'சுவாமி. நான் சொல்லாம போனது தப்புதான். என் மகள் திடீர்னு காசநோயால இறந்துட்டா. அவளுக்கு உடம்பு சரியில்லாம ரொம்ப நாளு கஷ்டப்பட்டா. தூக்கத்துல இருந்த உங்கள எழுப்ப வேணாண்னு நினைச்சிதான் நான் புறப்பட்டுப் போயிட்டேன்'. தாகூர் தன் தவறுக்கு மன்னிப்பு கோறுகின்றார். அப்போ ஆனந்தா அவருக்கு ஒரு உருவகம் சொல்கின்றார்: 'கோபம் என்பது நாம் ஒரு மரத்தில் அறையும் ஆணி போன்றது. கோபத்திற்குப் பின் நாம் தரும் மன்னிப்பு என்பது அந்த ஆணியை மரத்திலிருந்து எடுப்பது போன்றது. என்னதான் ஆணியை எடுத்தாலும் ஆணி அடித்த வடு மரத்தில் அப்படியே தான் இருக்கும்!'

நானும் கோபத்தால் பல மனங்களில் ஆணி அடித்திருக்கிறேன். பின் மன்னிப்பு கேட்டு அந்த ஆணியைத் திரும்பவும் பிடுங்கியிருக்கிறேன். ஆனால் அந்த ஆணிகளின் வடுக்கள் இன்னும் அந்தப் பிஞ்சு மனங்களில் இருக்கத்தானே செய்யும்!

'நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்?

உன் முகம் வாடியிருப்பது ஏன்? 

நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா?'

No comments:

Post a Comment