Friday, September 9, 2022

உள்ளத்தின் நிறைவையே

இன்றைய (10 செப்டம்பர் 2022) நற்செய்தி (லூக் 6:43-49)

உள்ளத்தின் நிறைவையே

சமவெளிப் பகுதியின் நிறைவுப் பகுதியான இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும், (ஆ) 'ஆண்டவரே!' என்று அழைக்கும் சொல் அல்ல, மாறாக, செயலே ஏற்புடையது, மற்றும் (இ) இருவகை அடித்தளங்கள்.

'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல்' என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். இதிலிருந்து இயேசுவின் சொல்லாட்சி சற்றே மாறுபடுகிறது: 'உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.' அதாவது, ஒருவரின் உள்ளத்து இயல்பு அவருடைய வாய்ச்சொற்களில் வெளிப்படுகின்றது. உள்ளத்து இயல்பு அளவில் நாம் முரண்படாமல் இருத்தல் அவசியம்.

'உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்' என்று இயேசு தன் சமகாலத்துப் பழமொழி ஒன்றைக் கையாளுகின்றார். இந்தப் பழமொழி சில கிரேக்க மெய்யியல் சிந்தனைகளிலும் காணப்படுகின்றது. இந்தப் பழமொழி நமக்குக் கூறும் பாடங்கள் எவை?

(அ) நாம் உள்ளுக்குள் எப்படி இருக்கிறோம் என்பதை நம் வாய்ச்சொற்கள் வெளிப்படுத்துவதால், நாம் நம் சொற்களைப் பற்றிக் கவனமாக இருத்தல் வேண்டும்.

(ஆ) நம் வாயிலிருந்து வரும் சொற்கள் தீயனவாக இருப்பின், அவை நம் உள்ளத்தின் தீய இயல்பைக் காட்டுகின்றன. நாம் என்னதான் மாற்றிப் பேச விரும்பினாலும் நம் இயல்பு வெளிப்பட்டுவிடும். ஆக, வெளிப்புற மாற்றத்தை விட உள்புற மாற்றத்தின்மேல் கவனம் செலுத்துதல் நலம்.

இன்றைய முதல் வாசகத்தில், கொரிந்து நகரத் திருஅவையில் நற்கருணைக் கொண்டாட்ட நிகழ்வுகளில் காணப்பட்ட பிறழ்வுகளைக் கடிந்துகொள்கின்ற பவுல், ஒரே நேரத்தில் ஆண்டவருடைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது என எச்சரிக்கின்றார்.

தேர்ந்து தெளிதலும் தெளிந்தபின் தெரிந்ததைப் பற்றிக்கொள்தலும் நலம்.


No comments:

Post a Comment