Sunday, September 11, 2022

எதுவும் சொல்லாமலேயே

இன்றைய (12 செப்டம்பர் 2022) நற்செய்தி (லூக் 7:1-10)

எதுவும் சொல்லாமலேயே

நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைதல் நிகழ்வை மத்தேயு, லூக்கா, மற்றும் யோவான் நற்செய்தியாளர்கள் பதிவு செய்கின்றனர். தூரத்திலேயே குணமாக்கும் நிகழ்வு என்று இந்த வல்ல செயல் அழைக்கப்படுகின்றது. இன்று நாம் லூக்காவின் பதிவை வாசிக்கின்றோம். மற்ற பதிவுகளுக்கும் லூக்காவின் பதிவுக்கும் இடையே சில முக்கியமான வேறுபாடுகள் காணப்படுகின்றன: (அ) மற்ற நற்செய்திகளில் நூற்றுவர் தலைவர் இயேசுவிடம் செல்கின்றார். லூக்காவில் தலைவரால் அனுப்பப்பட்ட ஒரு குழுவினர் இயேசுவைச் சந்திக்கின்றனர். (ஆ) மற்ற நற்செய்திகளில் இயேசு தான் தொடங்கிய இடத்திலிருந்தே நலம் தருகின்றார். லூக்காவில் இயேசு பாதி வழி நடக்கின்றார். (இ) மற்ற நற்செய்திகளில் இயேசு, 'நீர் போகலாம். பணியாளர் அல்லது மகன் நலம் பெற்றார்' என்று மொழிகின்றார். லூக்காவில் இயேசு அப்படி எதுவும் பேசவில்லை.

இந்நிகழ்வில் வரும் தொழுகைக்கூடத் தலைவர் நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றார்:

(அ) பணியாளர்மீது மதிப்பு

மிலிட்டரி போன்ற பணிகளில் கிரேட் அல்லது தலைமையைப் பொறுத்தே மனிதர்கள் உறவுகொள்வார்கள். பெரும்பாலும் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களிடம் உரையாடவோ உறவாடவோ செய்வதில்லை. ஆனால், இந்த நூற்றுவர்தலைவர் தனக்குக் கீழ் உள்ள பணியாளர்மீது மதிப்பும் அக்கறையும் கொண்டவராக இருக்கின்றார். இவர் ஒருவேளை தலைவரின் தனிச் செயலராக அல்லது காப்பாளராக அல்லது உதவியாளராக இருந்திருக்கலாம். அல்லது இயல்பாகவே தலைவர் தன் பணியாளர்கள்மேல் அக்கறை உள்ளவராக இருத்தல் வேண்டும்.

(ஆ) பணிப் பகிர்வு

நூற்றுவர் தலைவர் இரு குழுக்களை இயேசுவிடம் அனுப்புகின்றார். முதலில், யூதர்களின் மூப்பர்கள். அவர்கள் நூற்றுவர் தலைவரின் நற்குணத்தை இயேசுவிடம் எடுத்துச் சொல்லி அவருக்காகப் பரிந்து பேசுகின்றனர். இரண்டாவதாக, நண்பர்கள். அவர்கள் வழியாகவே இயேசுவின்மேல் உள்ள நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார் நூற்றுவர் தலைவர். தான் இயேசுவை ஏற்கத் தகுதியற்றவர் என்பதை இதன் வழியாக அறிக்கையிட்டுத் தாழ்ச்சியை வெளிப்படுத்துவதுடன் தன் பணியைத் தகுதியான நபர்களிடம் பகிர்ந்து கொடுக்கவும் துணிகின்றார் தலைவர்.

(இ) நம்பிக்கை

பணியில் இருக்கும் தன் சொற்களுக்கே ஆற்றல் இருக்கிறது என்றால், ஆண்டவராகிய இயேசுவின் சொற்களுக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கும் என்பதை உணர்ந்தவராக இருக்கின்றார் அவர். இயேசு அவரின் நம்பிக்கையைப் பாராட்டுவதோடு, தன்னால் சொற்கள் இல்லாமலும் செயலாற்ற முடியும் என்று அறிகுறியை நிகழ்த்துகின்றார்.

மொத்தத்தில் இந்த நிகழ்வு இயேசுவின் சொற்களுக்கு இருந்த ஆற்றலையும், அதை அவருடைய சமகாலத்தவர்கள் கண்டுணர்ந்ததையும் நமக்கு எடுத்துரைக்கின்றது.

இன்று இறைவார்த்தையை நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம். எத்தனை முறை அவற்றை இயேசுவின் வார்த்தைகளாகவே எடுத்துள்ளோம்? அவற்றின் ஆற்றலையும், அவற்றால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் எத்தனை முறை நாம் உணர்ந்துள்ளோம்? இறைவார்த்தை வாசிப்பு வெறும் சடங்காகவோ, அல்லது கற்றல்நிகழ்வாகவோ மட்டும் இருந்தால் நம்மை இறைவார்த்தை தொடாது.


No comments:

Post a Comment