Monday, March 27, 2017

நீர் நலம்பெற விரும்புகிறீரா?

முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார்.
இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து,
'நலம்பெற விரும்புகிறீரா?' என்று அவரிடம் கேட்டார்.
'ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை.
நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்' என்று
உடல்நலமற்றவர் அவரிடம் கூறினார்.
(யோவான் 5:5-7)

இந்த நற்செய்திப் பகுதியை வாசித்தவுடன் உங்கள் உள்ளத்தில் வரும் முதல் உணர்வு என்ன? நோயுற்றிருந்த அந்த நபர் உங்களில் எந்த உணர்வை உருவாக்குகிறார்? அவர் மேல் உங்களுக்குக் கோபம் வருகிறதா? அல்லது இரக்கம் வருகிறதா?

மீண்டும் ஒருமுறை மேற்காணும் வசனங்களை வாசித்துப் பாருங்களேன்.

என் அருட்பணிவாழ்வின் இரண்டாம் ஆண்டில் நடைபெற்ற ஆண்டுத்தியானத்தில் தியான உரை வழங்க வந்திருந்த அருட்தந்தை இந்த நற்செய்திப் பகுதியோடுதான் தன் உரையைத் தொடங்கினார்.

அன்று இந்த நற்செய்திப் பகுதியை வாசித்த போது எனக்கு இந்த நோயுற்றிருந்த நபர் மேல் கோபம் தான் வந்தது. ஏன் கோபம்?

ஓராண்டல்ல, ஈராண்டல்ல, முப்பத்தெட்டு ஆண்டுகள் குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கின்றார். 'ஏன் குணமாகவில்லை?' என்று கேட்டதற்கு, 'யாரும் இறக்கிவிடவில்லை!' என்று மற்றவர்களைக் குறைசொல்லுகின்றார். ஒருநாளைக்கு ஒரு படி என அவர் அந்தக் குளத்தில் இறங்க முயற்சித்திருந்தாலும், பதினெட்டு நாட்களில் பதினெட்டு படிகள் இறங்கியிருப்பார் (தொல்பொருள் ஆராய்ச்சியின் தகவல்படி அந்தக் குளத்தில் 18 படிகள் உள்ளன. நம்ம சபரிமலை உங்களுக்கு நினைவிற்கு வருகிறதா? அங்கேயும் ஐயப்பன் வீற்றிருக்கும் கருவறைக்குச் செல்ல 18 படிகள்தாம். ஐயப்பனுக்கு '18ஆம் படியான்' என்ற பெயரும் உண்டு. மீனாட்சி திருக்கோவிலின் பொற்றாமரைக் குளத்திலும் 18 படிகள்தாம் என நினைக்கிறேன்(!). ஒன்றும் எட்டும் ஒன்பது, நவகிரகங்களின் இரட்டிப்பு என இதற்குக் காரணங்கள் சொல்லலாம்!). நம்ம கதாநாயகன் அப்படி இறங்குவதற்கான எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு இந்த வாழ்க்கை முறை பிடித்தும் கூட இருந்திருக்கலாம். உடல்நலம் சரியில்லை. ஒரு வேலைக்கும் போக வேண்டாம். யாராவது எதாவது கொடுத்தால் சாப்பிடுவோம். சாப்பிட்டு விட்டு தூங்குவோம். உடல்நலம் சரியானால் வேலைக்கெல்லாம் போக வேண்டியிருக்கும். இப்படி ஓய்ந்து போய் இருந்திருக்கலாம். தன் வாழ்க்கையை மற்றவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பது ஏற்புடையதா? இல்லை.

ஆனால், இன்று இந்த நற்செய்திப் பகுதியை வாசித்த போது அவர் மேல் எனக்குக் கோபம் வரவில்லை. இரக்கம் தான் வருகிறது.

இந்த முப்பத்தெட்டு ஆண்டுகள் குளிரையும், வெயிலையும், மழையையும் பொறுத்துக் கொண்டு அவர் எப்படி அந்தக் குளத்தின் படிக்கட்டுகளில் கிடந்திருப்பார். எத்தனை பேர் அவரைக் கண்டும் காணாமல் சென்றிருப்பார்கள். இன்றும் ரோமின் தெருக்களிலும், ரயில்வே நிலையங்களிலும் யாராவது படுத்திருப்பது போல தெரிந்தால் ஒதுங்கிச் செல்லவே மனம் சொல்கிறது. எத்தனைபேர் அவரை ஒரு இடையூறு என நினைத்திருப்பார்கள்! அவருடைய பெற்றோர் அல்லது உடன்பிறந்தோர் அவரை வந்து பார்க்கவே இல்லையா? அவரை யாரும் தேடவேயில்லையா? 'வானத்துப் பறவைகளுக்கு உணவளித்த இறைவன் எனக்கும் உணவளிப்பார்', 'வயல்வெளி மலர்களை உடுத்தும் இறைவன் என்னையும் உடுத்துவார்' என இறைவனின் பராமரிப்பின்மேல் முழுமையாக நம்பிக்கை கொண்டவரும் இவராகத் தான் இருந்திருக்க முடியும். அல்லது ஒருவேளை கடவுளின் தூதர் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் அந்தக் குளத்தில் இறங்கி நீரைக் கலக்காமல் இருந்திருக்கலாம். ஆக, கடவுளின் வரவிற்கான உச்சகட்ட எதிர்நோக்கில் இவர் இருந்திருக்கலாம்.

இப்படியாக ஒரே நேரத்தில் கோபமும், இரக்கமும் தூண்டுகின்றார் இந்த முகம் தெரியாத மனிதர்.

இவர் இன்று எனக்குச் சொல்வது என்ன?

நானும் முப்பத்து மூன்று ஆண்டுகளாய் (இன்னும் முப்பத்தெட்டு ஆகவில்லை!) அல்லது பதினெட்டு ஆண்டுகளாய் ஏதாவது ஒரு தவறான பழக்கத்தை வைத்துக்கொண்டு அதைத் தவிர்க்க முடியாமல் அல்லது தவிர்க்க விரும்பாமல் இருக்கலாம். இதெல்லாம் என்ன பெருசா! யார்தான் இப்படிச் செய்யல? எல்லா நேரமும் நல்லவரா இருக்க முடியுமா? யார் வந்து இதைப் பார்க்கப் போறா? என்று எனக்கு நானே சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டு என் வாழ்வில் எந்தவொரு இயக்கமும் இல்லாமல் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு, 'குளம் கலங்குமா! கலங்காதா!' என்றுகூட பார்த்துக் கொண்டிருக்கலாம். ஒருவேளை இந்தப் பழக்கங்களை விட்டுவிட நான் பயப்படலாம்.

இப்படி எந்த நிலையில் இருந்தாலும், ஒருநாள் இயேசு என்னருகில் வருவார்.

'நீர் நலம்பெற விரும்புகிறீரா?' எனக் கேட்பார்.

அப்போது என் பதில் என்னவாக இருக்கும்?

'இப்பவேவா! இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே!' என்று சொல்வேனா? அல்லது 'இந்தப் பழக்கம் இல்லாமல் நான் எப்படி இருப்பேன்?' என்று பயப்படுவேனா?

எந்தவொரு கெட்ட பழக்கத்தையும் ஒருநாள் விடத்தான் வேண்டும். அதை இன்றே விடலாமே! இந்தப் படிக்கட்டு போதும்! எழுந்து ஊருக்குள் செல்வோம்!


2 comments:

  1. தந்தையின் எழுத்துக்கள் அந்த குளத்தங்கரையையும்,அதன் படிக்கட்டுகளில் பரிதாபமே உருவாக அமர்ந்திருக்கும் அந்த உடல்நலமற்றவரையும் நம் கண்முன்னே கொண்டுவருகின்றன. யோவான் நற்செய்தியில் வரும் இந்த வரிகள் சில வருடங்களுக்குமுன் அவருக்குக் கோபத்தையும்,ஆனால் இன்று அதே வரிகள் அந்த மனிதன் மீது இரக்கத்தையும் வருவிப்பதாகக் கூறுகிறார் தந்தை.வருடங்களும்,வாழ்க்கைப் பாடங்களும் மாறும்போது நாம் வாழ்க்கையைப் பார்க்கும் விதமே மாறுகிறது என்பதற்கு தந்தை ஒரு சிறந்த உதாரணம்.இன்றையதினம் அம்மனிதனின் உடல்நலம் குன்றிய நிலையை ஒருவரின் பாவ வாழ்வுடன் ஒப்பிட்டு " ஒரு நாள் இயேசு என்னருகில் வருவார்; நீர் நலம் பெற விரும்புகிறீரா? எனக்கேட்பார்" எனக் கூறும் தந்தையின் வார்த்தைகள் நமது பதில் என்னவாக இருக்கும் என்று நம்மை யோசிக்க வைக்கின்றன.பதில் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும்; " எப்பவோ விடப்போகிற அந்த கெட்ட பழக்கத்தை இன்றே...இப்பவே விட்டுவிடலாம்" என யோசித்தால் நாமும் இயேசுவால் தொடப்பெற்றவர்தாம்.தன் கூரிய சொற்கள் மூலம் மனிதரின் மனமெனும் குளத்தில் இறங்கி அதைக் கலக்கி விட்டு நல்ல விஷயங்களுக்கு வித்திடும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. இன்று 08-05-2020
    இந்த blog ஐ பற்றியோ,
    தங்களைப் பற்றியோ, எனக்கு எதுவும் தெரியாத
    போது பதிவு செய்யப்பட்ட இந்த பகிர்வின் பிற்பகுதி, என்னுள் ஆழமாக ஊடுருவுகிறது.

    இயேசு என்னருகில் வருவார்...
    இந்த படிக்கட்டு இனி போதும்....


    Dear Rev.fr.Yesu,
    God is marvelously using you ( as the best string) in HIS lute.🙏

    ReplyDelete