Wednesday, August 28, 2013

வெங்காய விலை


இன்னைக்கு காலைல திருப்பலிக்கு உடை மாற்றிக் கொண்டிருந்தபோது அறைக்கு வெளியே ஒரு பாட்டி நின்று என்னைக் கூப்பிட்டுவிட்டது. 'யாரது இந்நேரம்?' என அவசர அவசரமாய் உடைமாற்றி வெளியே சென்று பார்த்தேன். நம்ம அரோரா பாட்டி. 'என்ன பாட்டி சுகமா?' என்றேன். 'சுகம்' என்று சும்மா சொன்னது.

அதன் கையில் ஒரு நியூஸ்பேப்பர். நீட்டியது. வாங்கினேன். '18ஆம் பக்கத்தைப் பார்' என்றது. அவசரமாகப் பார்த்தேன்.

'இந்தியாவில் வெங்காய விலை ஒரு கிலோ ரூ 80' எனப் போடப்பட்டிருந்தது. 

'எனக்குத் தெரியும்' என்றேன்.

'இல்ல...இவ்ளோ கஷ்டப்படுற நாடா உங்க நாடு' என்று சொல்லிவிட்டு கோவிலுக்குள் ஓடிவிட்டது.

எனக்குக் கோபம். கோபத்தை அடக்கிக்கொண்டு திருப்பலிக்குப் போனேன். இப்பல்லாம் இந்தியாவைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் எரிச்சல் வந்து விடுகிறது.

திருப்பலி முடிந்து நிதானமாய் அந்த நியூஸ்பேப்பரை வாசித்தேன். வெங்காய விலையை விட என் கண்ணில் கண்ணீரை வர வைத்தது அதைப்பற்றி ஒரு சில சில்லறைகள் அடித்திருக்கும் கமெண்ட்ஸ் தான்.

அந்தச் சில்லறை நியூஸ்பேப்பர்காரன் பேட்டி கண்டிருப்பது சில சில்லறைகளை.

'இந்தியா ஒரு நாடா, மாநிலமா, மொழியா, மதமா, நகரமா' என வித்தியாசம் தெரியாதவர்களும், 'இந்தியாவைப் பற்றி யாரோ சொல்லக் கேட்டவர்களும்', 'இப்படி இருக்கலாம்' என நினைத்தவர்களும், 'நம் மீனவர்களைச் சுட்ட இத்தாலியர்களைப் புரட்டிப் பார்த்த நம் இந்தியாவின் மேல் கோபம் கொண்டவர்களும்' எழுதித் தள்ளியிருக்கிறார்கள். ஒற்றை வரியில் அவர்கள் சொல்ல வருவது இதுதான்: 'இந்தியா இன்னும் கொஞ்ச நாளில் அழிந்து விடுமாம்!'

என் முதல் கேள்வி: என் தாய்நாட்டில் நடக்கும் ஒன்றைப் பற்றி புறணி பேச இவர்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது?

என் இரண்டாம் கேள்வி: உன் நாட்டில் இருக்கும் பிரச்சனைகளே டிப்பர் லாரி வச்சி அள்ளும் அளவுக்கு இருக்க அடுத்த வீட்டுப் பிரச்சனை உனக்கு எதுக்கு?

என் மூன்றாம் கேள்வி: 'அடுத்தவனை ஒப்பிட்டுப் பார்த்துத்தான் நான் உயர்ந்தவன்' என தனக்கு உணர்த்திக்கொள்ள வேண்டுமென்றால் இதிலென்ன தன்மானம் இருக்கின்றது?

என் நான்காம் கேள்வி: (என் நாட்டு அரசியல்வாதிகளைப் பார்த்து) 'எவனோ ஒருத்தன் எங்கள இப்படிக் கேள்வி கேட்குற அளவுக்கு வச்சது நாங்களா? நீங்களா?' காசு, காசுங்குறீங்களே....உங்களுக்கு எவ்வளவு தான்டா வேணும்? 

என் ஐந்தாம் கேள்வி: (என்னைப் பார்த்து) நீ இன்னும் இவன் ஊர்ல வந்து உட்கார்ந்து இவன் கையைப் பார்த்துக்கிட்டே இருந்தா...இவன் வெங்காய விலை மட்டுமல்ல...எல்லாத்தையும் எழுதுவான். நீதான இங்க வந்து எங்க ஊர்ல ஒன்னுமே இல்லைனு சொல்ற. நீதான பிராஜக்ட் போடுறேன்கிற பேர்ல 'எங்க ஊர்ல ஜாதி இருக்கு. தாழ்த்தப்பட்டவங்க இருக்காங்க. பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல. நாங்க ரோட்லதான் இருக்கோம். எங்க ஊர்ல மழையே பெய்யாது. எங்க பிள்ளைங்க படிக்க மாட்டாங்க. எல்லாருமே கூலி வேலை பார்க்குறாங்கன்னு' சொல்லி வச்சிருக்க. 'நீ இங்க வந்து படிக்கிறனா' அவன் என்ன நினைப்பான். 'உங்க ஊர்ல யுனிவர்சிட்டி இல்லயான்னுதான்' கேட்பான்.


எதையுமே சீரியஸா எடுக்கக் கூடாதுன்னு யாரோ ஃபோன்ல சொன்னதக் கேட்டு நானும் கொஞ்சம் அமைதியானேன். இன்னைக்குச் சாப்பிடவே பிடிக்கல. சாப்பாட்டு அறைக்குப் போனாலும் என் ஊரின் வெங்காய விலை என்னைக் கன்னத்தில் அறைகிறது.

'எல்லாம் சரியாயிடும்'னு எவ்ளோ நாளைக்குத்தான் அமைதியாயிருக்கிறது.

நாளை மற்றுமொரு நாளைன்னு நாள் ஓடிக்கினேதான் இருக்கு. ஆனா மாற்றம்?

இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் வடிவேல் டயலாக் தான் ஞாபகத்திற்கு வந்தது. 'அக்காமாலா', 'கப்சி' போன்ற அந்நிய பானங்களுக்கு விளம்பரம் செய்த விளையாட்டு வீரர்களையும், நடிகர்களையும் பார்த்து இப்படிக் கேட்பார்:

'விளம்பர ஓவியங்களுக்குத் துணைபோவது சரியா...தவறா...?

'சரியா...தவறா?'

'சொல்லமாட்டாயா?'

'வெள்ளைக்காரன் புத்திசாலி...

நானோ கையாலாகதவன்...

நீங்களோ காரியக்காரர்கள்...

அப்படித்தானே...

பணம் தருகிறார்கள் என்பதற்காக

தட்டில் எதை வைத்துக் கொடுத்தாலும் தின்றுவிடுவீர்களா...?

பிராணிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?'

'சுயபுத்தி வேண்டாம்?!'

இந்த டயலாக் இன்று வடிவேல் என்னைப் பார்த்துக் கேட்பதுபோலவே இருக்கிறது!

இரவு உணவு செய்ய வெங்காயம் தேடினேன். இறுதியாக ஒன்று சிக்கியது.

அதை வெட்டும்போது ஏனோ எனக்குக் கண்ணீர் வரவில்லை.

No comments:

Post a Comment