Sunday, August 25, 2013

இடுக்கமான வாயில்!


இன்றைக்கு காலையில் அலார்ம் அடித்தவுடன் கண் விழித்தோமா? எத்தனை பேர் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் என புரண்டு படுத்திருப்போம்? அலார்ம் அடித்தவுடன் எழுவதற்கும் இன்றைய நற்செய்திக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? நம் மனித மனம் நன்மை-தீமை என்ற அடிப்படையில் இயங்குவதைக் காட்டிலும், இன்பம்-துன்பம் என்ற அடிப்படையிலேயே இயங்குகின்றது. அதிகாலையில் எழுவது நன்மை எனத் தெரிந்தாலும், நம் மனம் அதைத் துன்பமாகவே கருதுகிறது. கொஞ்ச நேரத் தூக்கம் தருகின்ற இன்பத்தின் அடிப்படையிலேயே செயல்பட நினைக்கின்றது. காலையில் நம்மை எழுப்பும் அலாரம் ஒரு இடுக்கமான வாயில். அன்றாடம் நாம் செய்ய வேண்டிய பணிகள், நாம் எடுத்துக்கொண்ட தீர்மானங்கள், நாம் கொடுத்த வாக்குறுதிகள், நாம் மேற்கொள்கின்ற பயணங்கள், நாம் சந்திக்க வேண்டிய மனிதர்கள், நாம் பயணிக்க வேண்டிய சாலைகள், நாம் பயந்து ஒதுங்குகின்ற தேர்வுகள் இவை அனைத்துமே நம் வாழ்வின் இடுக்கமான வாயில்கள்தாம். இன்றைய நற்செய்தி விடுக்கும் அழைப்பு: 'இடுக்கமான வாயில் வழியாக வருந்தி நுழைய முயலுங்கள்'.

இன்றைய நமது உலகை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் 'அனானிமிட்டி' (முகவரியற்ற நிலை) என்று குறிப்பிடலாம். யாரும் யார் முகத்தையும் பார்க்காமலே பேசலாம், பழகலாம், சண்டை போடலாம், ஷாப்பிங் போகலாம், ஏன் திருமணம் கூட செய்து கொள்ளலாம். நமது இணைய தளங்களும், சமூக உறவுத் தளங்களும் 'அனானிமிட்டி' என்ற ஒற்றைச் சொல்லை மையமாக்கியே உள்ளன. இந்த சமூக தொடர்புத் தளங்களைப் பொறுத்த வரையில் நாம் ஒரு 'டேட்டா'. நம்மை ஆக்கலாம். அழிக்கலாம். பிரதி எடுக்கலாம். பரிமாறலாம். இடுக்கமான வாயில் வைக்கின்ற முதல் சவால்: நம்மைச் சூழ்ந்திருக்கும் 'அனானிமிட்டி'யிடமிருந்து அகல்வது. தனியாக இருப்பதை விட கூட்டத்தோடு இருப்பது நமக்குப் பிடிக்கின்றது. அமைதியாக இருப்பதை விட எதையாவது கேட்டுக்கொண்டேயிருப்பது நமக்குப் பிடிக்கின்றது. கண்களை மூடுவதைவிட கண்களைத் திறந்து கொண்டு எதையாவது பார்;த்துக்கொண்டேயிருப்பது நமக்குப் பிடிக்கின்றது. ஏனெனில் தனிமை, அமைதி அனைத்தும் நமக்குப் பயத்தைத் தருகின்றது. நம் தனிமையிலும், அமைதியிலும்தான் நாம் தனித்துவத்தை நாம் அடையாளம் காண்கின்றோம். அகன்ற வாயிலில் நுழையும்போது நாம் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் இடுக்கமான வாயிலில் நுழையும்போது நம் உயரம், உடல் அளவு அனைத்தும் நம்மையறியாமலே நம் மனதில் எழுகின்றது. நான் இப்படி இருக்கிறேனோ? என்ற கேள்வி நமக்கு பயத்தையும், அதிர்ச்சியையும் கொடுக்கின்றது. நம்மை ஏற்றுக்கொள்வதற்கே அது தடையாக அமைந்துவிடுகின்றது. ஆனால் அங்குதான் நம் வளர்ச்சி; தொடங்குகின்றது. 

இடுக்கமான வாயிலின் முதல் நன்மை அது நமக்கு சுய அறிவைத் தருகின்றது. கூட்டத்தோடு இணைந்து வாழ்வது நம் தனித்தன்மையைக் கெடுத்து விடுகின்றது. தங்கள் தனித்தன்மையை உணர்பவர்களே வெற்றியாளர்களாக மாறுகின்றனர். இரண்டாவதாக, 'துன்பங்களின் வழியே மீட்பு'. ஊர் என்ற இடத்திலிருந்து ஆபிரகாமை இறைவன் அழைத்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்துச் சென்றது ஆபிராகாமிற்கு ஒரு இடுக்கமான வாயில். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ராயேல் மக்களை விடுவித்த இறைவன் அவர்களை பாலைவனத்தின் வழியாக 40 ஆண்டுகள் அழைத்துச் சென்றது அவர்களுக்கு ஒரு இடுக்கமான வாயில். 'நீ என்னை வணங்கினால் அனைத்தையும் உமக்குத் தருவேன்' என்று அலகையின் சோதனைகளை வென்று சிலுவையைத் தழுவியது இயேசுவுக்கு ஒரு இடுக்கமான வாயில். ஆனால் இடுக்கமான வாயில்கள்தாம் மனுக்குலத்தின் மீட்பின் வாயில்களாக அமைந்துள்ளன. ஆகையால் நம் வாழ்வில் சின்னச் சின்ன துன்பங்கள் வழியாகவே நாம் மீட்பிற்கு பிறக்க முடியும். மூன்றாவதாக, இடுக்கமான வாயிலைத் தேட முயற்சி வேண்டும். பெரிய வீடு, பெரிய தோட்டம், பெரிய டிவி, பெரிய கார், பெரிய மனிதர் என்று பெரியவைகளையே தேடும் நம் கண்கள் சிறியவைகளைக் காணத் தவறுகின்றன. இடுக்கமான வாயிலைக் காண நம் முயற்சிகள் அவசியம். ஸ்காட் பெக் என்ற உளவியலாளர் தன் 'தி ரோட் லெஸ் டிராவல்ட்' என்ற நூலில் ஏன் அதிக மனிதர்கள் சில பாதைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை? ஏன் எல்லோரும் சென்ற பாதையையே தேர்ந்தெடுக்கின்றனர்? என்ற கேள்விகளுக்கு இவ்வாறு விடை தருகின்றார்: 'எல்லோரும் செல்லும் பாதையில் ஆபத்துக்கள் குறைவு. ஆபத்து வந்தாலும் அருகில் எல்லாருக்கும்;தானே ஆபத்து என்ற கண்டுகொள்ளாத்தன்மை. எதற்காக நாம் முயற்சி எடுக்க வேண்டும்? என்ற சோம்பல் மனநிலை'. இத்தகைய மனநிலைகளை விடுத்து நம்மை முயற்சிக்குத் தூண்டுவது இடுக்கமான வாயில். 

பாபி மற்றும் சஞ்சய் எழுதி, ஷாஹித் காதர் தயாரிப்பில் வெளியான 'சென்னையில் ஒருநாள்' என்ற திரைப்படத்தின் மையக்கருத்து 'இடுக்கமான வாயில்'. எல்லோரும் போல் இறந்து போவதற்குப் பதில் இறந்தும் வாழும் உடலுறுப்பு தானம் என்ற இடுக்கமான வாயிலைத் தேர்ந்தெடுக்கும் ஒரு பெற்றோரின் படம். படத்தின் வேகம், விறுவிறுப்பு, சோகத்திற்கு மத்தியில் நான் கண்ட ஒன்று 'நம் வாயில் இடுக்கமாக இருந்தாலும், நாம் இலக்கு சரியாக இருந்தால் இந்தப் பிரபஞ்சமே நமக்கு ஒத்துழைக்கும்' என்பதுதான்.

No comments:

Post a Comment