Wednesday, August 21, 2013

கபிரியேல் மார்சல்


இன்று நாம் சந்திக்கப் போகும் மெய்யியலார் கபிரியேல் மார்சல் (1889 – 1973). பிரெஞ்சுக்காரர். நாடக எழுத்தாளர். 'இருத்தலின் மெய்யியல்' (ஃபிலாசஃபி ஆஃப் எக்ஸிஸ்டன்ஸ்) என்று தன் சிந்தனைக்குப் பெயரிட்டவர். இவருக்கு மற்றவர் வழங்கும் பெயர் 'கிறிஸ்தவ எக்ஸிஸ்டன்ஸியலிஸ்ட்'. இவரின் சமகாலத்தவர்கள் தங்கள் சிந்தனையிலிருந்து தங்களின் மதத்தை அழித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் தன் மதத்தால் உருவாக்கப்பட்டவன் என்று கிறிஸ்தவ சிந்தனையை மேன்மையாகக் காட்டியவர் இவர்.

இவரின் ஒப்பற்ற ஒரு நூல் 'த ஃபிலாஃசபி ஆஃப் பீயிங்'. மனிதர்களின் செயல்பாடுகளை 'இருத்தல்' (பீயிங்) மற்றும் 'கொண்டிருத்தல்' (ஹேவிங்) என்று இரண்டாகப் பிரிக்கின்றார். மனிதர்களின் செயல்பாடுகள் மட்டுமல்ல மனிதர்களே இந்த இரண்டு பிரிவுகளாகத்தான் இருக்கிறார்கள் என்பது இவரது வாதம். 'இருத்தலை' மையமாக வைத்து வாழும் மனிதர்கள் அன்புள்ளவர்களாகவும், இரக்கமுள்ளவர்களாகவும், கனிவுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். 'கொண்டிருத்தலை' மையமாக வைத்து வாழ்வோர் தங்களையும், மற்றவர்களையும் 'அவர்கள் கொண்டிருப்பதையும்', அவர்களின் சொத்துக்களையும், அவர்களின் செல்வத்தையும், அவர்களின் வீடுகளையும், அவர்களின் பொருட்களையும் வைத்து எடைபோடுகின்றனர். இத்தகையோர் எந்நேரமும் தங்களை மற்றவர்களோடு ஒப்பீடு செய்து கொண்டும், பொறாமைப்பட்டுக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும், போட்டி போட்டுக் கொண்டும் இருப்பர். இன்று நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம்? இருத்தலுக்கா? கொண்டிருத்தலுக்கா?

இவரின் இரண்டாவது சிந்தனை 'பிராப்ளம்' மற்றும் 'மிஸ்டரி'. நாம் மற்றவரோடு கொண்டிருக்கும் உறவுகளை இந்த இரண்டு வார்த்தைகளில் விளக்குகின்றார் இவர். தினசரி புத்தகம் வாசிப்பதற்கு நாம் டேபிள் விளக்கைப் பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். இந்த டேபிள் விளக்கோடு நமக்குள்ள உறவிற்குப் பெயர் 'பிராப்ளம்'. டேபிள் லேம்ப் எப்பொழுதும் நம்மை விட்டு விலகி நிற்கும் அந்நியப் பொருளே. அது திடீரென்று எரியவில்லையென்றாலோ, உடைந்து விட்டாலோ அதற்கென்றுள்ள கடையில் கொடுத்து நாம் சரி செய்துகொள்ளலாம். புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கும் போது நம் அருகில் விளையாடும் நம் குழந்தையோ, நம் அறைக்குள் வந்து செல்லும் நம் மனைவியோ இரண்டாம் வகை – 'மிஸ்டரி'. மிஸ்டரி என்பது புரிந்துகொள்ள முடியாது என்பதல்ல. மாறாக, அந்தப் பொருளோடும், அந்த நபரோடும் நாம் கரைந்து மறைந்து விடுகிறோம் என்பதுதான். இந்த உறவில் சிக்கல் என்றால் அதை நாம்தான் சரிசெய்ய வேண்டும். அதில் நாம் நம்மையறியாமல் மறைந்திருக்கின்றோம். நம்மில் உள்ள சிக்கல் என்னவென்றால் நாம் 'பிராப்ளத்தையும்', 'மிஸ்டரியையும்' குழப்பிக் கொள்கின்றோம். சக மனிதர்களோடுள்ள உறவை நாம் 'பிராப்ளம்' என்ற அடிப்படையில் பார்த்து நம்மை நாமே அந்நியப்படுத்திக்கொள்கின்றோம்.

இயேசுகிறிஸ்துவை உயர்ந்த எடுத்துக்காட்டாக முன்வைக்கின்றார். இயேசு எப்பொழுதும் 'இருத்தலை' மையமாக வைத்து வாழ்ந்தவர். 'கொண்டிரு;தலை' அறவே வெறுத்தவர். தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களை மட்டுமல்லாமல், இயற்கையையும் தன்னோடிணைந்த ஒன்றாகப் (மிஸ்டரி) பார்த்தவர்.

நாம் யார்? 

No comments:

Post a Comment