அறிவும் அன்பும்
'நம் அனைவருக்கும் அறிவு உண்டு.
இது நமக்குத் தெரிந்ததே.
இவ்வறிவு இறுமாப்படையச் செய்யும்.
ஆனால், அன்பு உறவை வளர்க்கும்.'
கொரிந்து நகரத் திருஅவை ஓர் அறிவார்ந்த மக்கள் குழுமம். கிரேக்கத் தத்துவம் செழித்து வளர்ந்த நகரங்களில் கொரிந்து நகரமும் ஒன்று. அனைத்தையும் அறிவுக்கு உட்படுத்திவிட முடியும் என்றும், அறிவுக்கு எட்டாதது எதுவும் இல்லை என்று நினைத்தனர் கொரிந்து நகர மக்கள். மேலும், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை விலங்குத்தன்மை என்று ஒதுக்கினர். 'அன்பு,' 'தியாகம்,' 'பொறுமை' போன்ற உணர்வுகள் தேவையற்றவை எனவும், நேர விரயம் எனவும் கருதினர். அறிவுக்கு உட்படுத்தப்பட்ட ஒன்றையே அவர்கள் நம்பினர். அறிவுக்கு எட்டாத கடவுள், விண்ணகம், நரகம், இறுதித் தீர்ப்பு போன்றவற்றை அவர்கள் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆக, தங்கள் அறிவால் குழுமங்களிலும் பிரச்சினைகளை உருவாக்கினர்.
இந்தப் பின்புலத்தில்தான், 'அறிவு இறுமாப்படையச் செய்யும், அன்பு உறவை வளர்க்கும்' என்கிறார் பவுல்.
இந்த வாக்கியத்தைப் புனித அகுஸ்தினாரின் வாழ்வின் பின்புலத்தில் சிந்திப்போம்.
தனது மூன்று பெரும் தவறுகளில் முதன்மையானதாகவும், இறுதிவரை விடுவதற்கு கடினமாக இருந்ததாகவும் என்று தனது அறிவுசார் தேடலை முன்வைக்கிறார் அகுஸ்தினார். அவரது அறிவுசார் தேடலே அவருடைய உலகியல் பேராவல்களுக்கு வழிவகுத்தது.
ஆனால், தன் வாழ்வின் இறுதியில், 'அன்பு' என்ற உணர்வே மேன்மையானது என்று பற்றிக்கொள்கின்றார்.
அறிவு என்னைத் தன்மையம் கொண்டவன் ஆக்கிவிடுகிறது.
ஆனால், அன்பு என்னைப் பிறர்மையம் கொண்டவன் ஆக்குகிறது.
நெருப்பில் தன் குழந்தை விழுந்துவிட்டால், அங்கே ஓடிச்சென்று தன் குழந்தையைத் தூக்குகின்ற தாய், 'நெருப்பு சுடும்' என்னும் அறிவால் ஓய்ந்திருப்பதில்லை. மாறாக, 'ஐயோ! அது என் குழந்தை!' என்று அன்பால் தள்ளப்படுகிறாள்.
பவுலடியாரின் காலத்தில் மட்டுமல்ல..இன்றும் கூட அன்பு,தியாகம்,பொறுமை போன்ற உணர்வுக்கு முக்கியத்துவத்துவம் கொடுக்கும் மனிதப்பிறவிகளைப் பைத்தியக்கார்ர்கள் என்று எள்ளி நகையாடுபவர் இருக்கவே செய்கிறார்கள்.எந்த அறிவு தங்களின் ஆணவத்தைத் தாங்கிப்பிடிக்கிறதோ,அதுவே இறைவன் தந்தது என்பதை மறந்து போகின்றனர். இவரகளைப் போன்றவர்களுக்கு சவால் விடுகிறது புனித அகுஸ்தினாரின் பிறர்மையம்.’நெருப்பு சுடும்’ என்று சொல்லும் அறிவைப் புறந்தள்ளி, குழந்தையை நெருப்பை விட்டுத் தூக்கி எடுக்கும் தாயில் பொங்கி வழியும் ‘ அன்பை’ உணர்ந்தால் இந்த அகிலம் உய்யும் என்று சொல்லாமல் சொல்லும் நம் ஜூனியர் அகுஸ்தினாருக்கு ஒரு சல்யூட்!!!
ReplyDeleteHappy to see you Yesu. Good reflections.
ReplyDelete