அன்னை கன்னி மரியாளின் பிறப்பு
இன்று அன்னை கன்னி மரியாளின் பிறப்பு பெருவிழாவை, ஆரோக்கிய அன்னையின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறோம்.
மங்கள வார்த்தை நாள் அன்று தொடங்கிய கோவித்-19 லாக் டவுன் முடிந்து இன்று அன்னையின் பிறந்த நாளில் நம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறோம்.
மரியாளின் பிறப்பு நமக்கு மூன்று பாடங்களைக் கற்றுத் தருகிறது:
(அ) சாதாரணவற்றோடு தங்கிவிடக் கூடாது
மெசியாவைக் கருத்தாங்கும் வாய்ப்பு மரியாளுக்கு ஒரு கொடையாகக் கொடுக்கப்பட்டாலும், அவர் அந்தக் கொடைக்குத் தன்னையே தகுதியாக்கிக்கொள்கின்றார். மிகவும் அசாதாரணமான ஒன்றைச் செய்வதற்காக சாதாரணவற்றோடு தங்கியிருக்கவில்லை. இன்று நாம் பல நேரங்களில் மிகச் சாதாரணவற்றோடு தங்கிவிட நினைக்கிறோம். இந்த வேலை போதும், இந்தப் படிப்பு போதும் என நம்மையே வரையறுத்துக்கொள்கிறோம். ஆனால், இப்படி நாம் ஏற்படுத்தும் வரையறைகள் பிற்காலத்தில் நமக்குள் குற்றவுணர்வையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகின்றன.
(ஆ) நான் எப்படி இருக்கிறேன் என்பது அல்ல, நான் என்னை எப்படி ஏற்றுக்கொள்கிறேன் அல்லது நம்புகிறேன் என்பதே என்னை உந்தித் தள்ளும்.
மரியாள் ஒருவேளை தன்னை நாசரேத்தின் ஓர் இளவலாக மட்டுமே எண்ணியிருந்தால், கல்வாரி வரை இயேசுவோடு பயணம் செய்திருக்க மாட்டார். வீட்டிலேயே அமர்ந்திருப்பார். ஆனால், தன்னை 'ஆண்டவரின் தாயாக' அவர் எண்ணியதால்தான் துணிவோடு இயேசுவுடன் வழிநடக்கிறார். இன்று, நான் என்னை எப்படி பார்க்கிறேன்? என் வலிமையை நான் அறிந்துள்ளேனா? இதுதான் என் வலிமை என என்னைப் பற்றி நான் புதிதாக அறிவது என்ன?
(இ) மனத்தில் இருத்திச் சிந்தித்தல்
மனிதர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்: காதில் கேட்பதை வாயில் கொட்டுபவர்கள், காதில் கேட்பதை இதயத்தில் கொட்டுபவர்கள். முதல் வகையினர் தாங்கள் கேட்பதை மட்டுமல்ல, தாங்கள் உணர்வதை, எண்ணுவதை என அனைத்தையும் அடுத்தவரிடம் கொட்டி விடுவார். ஆனால், இரண்டாம் வகையினர், தாங்கள் கேட்பது, உணர்வது, எண்ணுவது என அனைத்தையும் தங்கள் உள்ளத்தில் பதித்துக்கொள்வர். ஏனெனில், அவர்கள் தங்களை மிகவும் மேன்மையாக மதிப்பார்கள். நம் வீட்டின் பண சேமிப்பு அறையை நாம் யாருக்காவது திறந்து காட்டுகிறோமா? இல்லை! ஏன்? மதிப்பானது எதுவும் மறைந்தே இருக்கும். அல்லது மறைந்தே இருந்தால்தான் மதிப்புடன் இருக்கும்.
நம் அன்னை கன்னி மரியாளின் பிறந்த நாளில் நம் பிறப்பையும் எண்ணிப் பார்த்தல் நலம்!
அருமை! அருமை! மாதா... மாதா என்று புகழ்கிறோம்; அவரிடம் அது வேண்டும்; இது வேண்டும் என நச்சரிக்கிறோம்; ஜெபமாலை எனும் மாலை அணிந்து அழகு பார்க்கிறோம். ஆனால் என்றேனும் ஒருநாள் தந்தையின் கோணத்தில் தாயை எண்ணிப்பார்த்துள்ளோமா? ‘இல்லை’ என்று என் மனம் என்னை இடிக்கிறது.நம் கையில் கிடைத்த ஒன்றே போதுமென்ற நினைப்பை விட்டு ‘அசாதாரணங்களுக்கு’ நம்மைத் தகுதியாக்குவதும்,என்னுடைய வலுவின்மையை ஓரங்கட்டிவிட்டு ,என் வலிமையை மட்டுமே பெரிதாக எண்ணவும்,அந்த வலிமையை என்னைச்சுற்றியுள்ளவர்களுக்கு வாழ்வாக்கவும்,நான் கேட்பது,உணர்வது,எண்ணுவது எல்லாவற்றையுமே கொட்டித்தீர்க்க ஒரு நபரைத் தேடாமல் அன்னை மரியாளைப்போல் எல்லாவற்றையும் என் உள்ளத்தில் வைத்து சிந்திக்கவும் இன்றையப் பதிவு நமக்கு உணர்த்துகிறது..மீண்டும்,மீண்டும் கேட்ட,வாசித்த விஷயங்கள் தான்.ஆனால் அன்னை மரியாவை மாதிரியாக எடுத்துக்கொண்டால் “ இப்படியும் வாழலாம்” என்று என்றாவது யோசித்துள்ளோமா? அன்னையின் பிறந்த நாளில் என் மனத்தையும் புதிதாகப் பிறக்க வைத்த தந்தைக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!
ReplyDeleteAmen
ReplyDelete