Tuesday, September 22, 2020

ஓர் அங்கி போதும்!

இன்றைய (23 செப்டம்பர் 2020) நற்செய்தி (லூக் 9:1-6)

ஓர் அங்கி போதும்!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, பேய்களை அடக்கும் பிணிகளைப் போக்கும் வல்லமை மற்றும் அதிகாரத்தைத் தம் சீடர்களுக்கு வழங்குகின்றார். 

தொடர்ந்து, அவர்கள் தங்கள் பணிக்கு எதை எடுத்துச் செல்லக் கூடாது, எதை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும், எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பதையும் கற்பிக்கின்றார்.

பேய்களை அடக்குதல் மற்றும் பிணிகளைப் போக்குதல் என்னும் வார்த்தைகளை உருவகப் பொருளில் கையாண்டால், 'பேராசை' என்னும் பேயை அடக்க வேண்டும் என்றும், 'பேராவல்' என்னும் பிணியைப் போக்க வேண்டும் என்று இயேசு சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம்.

ஏனெனில், 'கைத்தடி, பை, உணவு, பணம்' ஆகியவற்றில், அதாவது உணவு மற்றும் உடைசார் தேவைகளில் ஒருவர் பெற்றிருக்க வேண்டிய கட்டுப்பாட்டை, பேராசையை அடக்குதல் என நாம் புரிந்துகொள்ளலாம். 'ஒரு வீட்டில் தங்காமல் ஒவ்வொரு வீடாக நகர்தல்' என்பது பேராவலின் அடையாளம் அல்லது தேடலின் நிறைவற்ற நிலையின் அடையாளம் என எடுத்துக்கொள்ளலாம்.

ஆக, ஒருவர் தன்னிடம் உள்ள பேராசை மற்றும் பேராவல் என்னும் தீமைகளை அடக்கவும், விரட்டவும் கற்றுக்கொண்டால் அங்கே இறையாட்சி அறிவிக்கப்படுகிறது.

இதே கருத்துதான் இன்றைய முதல் வாசகத்திலும் சொல்லப்படுகிறது.

கடவுளின் இல்லத்திற்குள் வருகின்ற அடியார் ஒருவர், 'வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன். மறுக்காதீர்! வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச் செய்யும். எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம். எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்' என வேண்டுகிறார்.

ஆக, இறைவனிடம் வேண்டும் இந்த இனியவருக்கு, தன்னிடமுள்ள பேராசை மற்றும் பேராவல் போக வேண்டும் என்று ஆண்டவரிடம் வரம் கேட்கிறார்.

இவை நம்மிடமிருந்து போக நாம் என்ன செய்ய வேண்டும்?

'தன்நிறைவு' பெறுதல் வேண்டும்.

'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்பார்கள். 

'போதும் என்பவர்க்கு இதுவே போதும். போதாது என்பவர்க்கு எதுவுமே போதாது.'

இன்று நம்மிடமுள்ள பொருள்களை நாம் இழக்க முன்வரலாம். பல ஆண்டுகளாக நாம் அணியாமல் வைத்திருக்கிற உடைகளையும், பயன்படுத்தாத பொருள்களையும் தேவையில் இருப்பவர்களோடு பகிரலாம். பல நாள்கள் பயன்படுத்தாத அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற சந்தாக்களை நிறுத்தலாம். பல மாதங்களாகப் பயன்படுத்தாத கிரெடிட் கார்ட்களை வங்கியில் ஒப்படைக்கலாம். 

ஏனெனில், நாமும் இயேசுவின் சீடர்களே. நமக்கும் அவர் அதிகாரம் வழங்கியுள்ளார்.

1 comment:

  1. “ போதும் என்பவர்க்கு இதுவே போதும்; போதாது என்பவர்க்கு எதுவுமே போதாது.” சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.உணவு மற்றும் உடைசார் தேவைகளில் ஒருவர் பெற்றிருக்க வேண்டிய கட்டுப்பாட்டை விவிலிய வரிகளின் துணைகொண்டு அழகாக விவரிக்கிறார் தந்தை. பேராசை எனும் பேயை விரட்டப் பல வழிகளையும் முன்மொழிகிறார்.இந்தக் கொரோனா உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் படுக்கையில் படுத்திருக்கும் போதெல்லாம் என் கண்ணெதிரே தெரியும் என் சேலைகளின் அணிவரிசையை நினைத்து நொந்து போயிருக்கிறேன். யாருக்காக? எதற்காக இந்த ஆடை,அணிகலன்கள்? அடுத்த நிமிடம் உன்னது இல்லை என்று பயம் காட்டிக்கொண்டிருக்கும் கோரோனாவிலிருந்து எவை நம்மைத் தப்ப வைக்க முடியும்? இன்று இது; நாளை வேறொன்று.தேவைக்குப்போக மீதியைத் தேவையிலிருப்போருடன் பகிர்தல் எத்தனை சுகம் என்று அறிந்து கொள்ள நம்மை அழைக்கிறது இன்றைய வாசகம்.” எனக்கு செல்வம் வேண்டாம்; வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளுமென்று என்னாலும் சொல்ல முடிந்தால் எத்துணை நலம்! “தன்நிறைவு”........இதை சுவைத்துப்பார்ப்பதே “இறையாட்சி” எனும் கருத்தை ஓங்கிச்சொல்லும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete