Wednesday, September 9, 2020

இல்லாதவர் போல

இன்றைய (9 செப்டம்பர் 2020) முதல் வாசகம் (1 கொரி 7:25-31)

இல்லாதவர் போல

மணத்துறவு பற்றி கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற பவுல், 'திருமணம் செய்துகொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர்' என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து, 'பற்றின்மை' பற்றிப் பேசுகின்றார்.

பற்றுகள் விடுத்தல் என்பது இன்று மேலாண்மையியலிலும் அதிகம் பேசப்படுகின்றது.

'பற்றுகள்' என்பவை நம் உடலில் நாமே செலுத்திக்கொள்ளும் ஊசிகள் என்றுகூட நாம் சொல்லலாம். நான் பற்றிக் கொள்ளும் ஒன்று, எனக்குச் சுமையாக மாறுவது இயல்பு. ரொம்ப எளிய எடுத்துக்காட்டு, ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதைக் கைகளில் பிடித்துக்கொண்டு நேராக நீட்டி நில்லுங்கள். நிமிடங்கள் கூடக்கூட கண்ணாடி டம்ளரின் எடை கூடுவதுபோலத் தெரியும், நம் முழங்கையிலும், தோள்பட்டையிலும் வலி ஏற்படும். சில நேரங்களில் கை மரத்துவிடும். ஆக, நேரத்தைப் பொருத்து எடை கூடுகிறது. 

நேரம் கூடக்கூட நாம் பற்றுகளை அதிகம் வைத்திருக்கிறோம். இன்னும் நீண்ட ஆண்டுகளுக்குப் பயன்படும் என்ற அடிப்படையில் நாம் நிறையவற்றைச் சேர்த்து வைக்கிறோம். ஆண்டுகள் குறையக் குறைய பற்றுகள் தாமாகவே குறைய ஆரம்பிக்கின்றன.

பவுலும், 'இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது' என்கிறார். இது பவுலின் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட உலக முடிவைக் குறித்தாலும், பற்றுகளை விடுத்தல் என்பது பவுல் தரும் இனிய பாடம்.

இருப்பவர் இல்லாதவர்போல இருத்தல் வேண்டும் - இதுதான் பவுலின் அறிவுரையின் மையம்.

அதாவது, நான் எதையும் பற்றிக்கொள்ளவும், என்னை எதுவும் பற்றிக்கொள்ளவும் கூடாது.


2 comments:

  1. ‘ பற்றுகள்’ என்பவை நம் உடலில் நாமே செலுத்திக்கொள்ளும் ஊசிகள் என்பது மிகச்சரியே! ஆனால் ஊசிகளில் போதைதரும் ஊசி,வலி தரும் ஊசி,வலி போக்கும் ஊசி,சுகம் கொடுக்கும் ஊசி என்று எத்தனையோ இருக்கின்றனவே! நம் உடலுக்கும்,உள்ளத்திற்கும் சுகம் தரும் ஊசியைத் தேர்ந்தெடுத்துப் போடுவது தவறல்ல என்பதை விட,ஒரு விதத்தில் நலம் தரும் விஷயம் என்பதும் உண்மை. நம் உடல்,மன நலம் கருதி ஊசி தேவையில்லை எனும் நிலை வருகையில் ஊசியை விடுதல் விவேகமே! அதற்காக உலக முடிவு வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.அதே சமயம் இந்த ‘பற்று’ எனும் ஊசியின் பின்புறம் ஒளிந்திருக்கும் கருத்தும் யோசிக்க வைக்கிறது.
    “ இருப்பவர் இல்லாதவர் போல இருத்தல் வேண்டும்”! “இதை மனத்துறவு “ என்று கொள்ளலாமா? இன்று கோவிட்-19 கற்றுக்கொடுத்த பாடங்களில் பிரதானமானது இது. என்னப்பொறுத்த வரை நம் சமூக அமைப்பில் யாரும் எதையும்/ யாரையும்
    பற்றிக்கொள்ளாமல் வாழ இயலாது. நான் ஒருவரைப் பற்றிக்கொள்வதும்,இன்னொருவர் பற்றிக்கொள்ள என்னைக்கொடுப்பதும் தவறல்ல..... அந்த பற்றுதல் என்னை மூச்சு முட்டி மூழ்கிவிடாமல் பார்த்துக்கொள்வதற்கு நானே பொறுப்பு.

    என் புத்திக்கு இந்த philosophy எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.ஏதோ எனக்குப்பட்டதை தெரிவித்துள்ளேன்.தவறிருப்பின் தந்தை மன்னிக்கவும்.ரொம்பவே யோசிக்க வைக்கும் ஒரு பதிவு. யோசிக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  2. கொசுறு.....

    மனுக்குலம் அனைத்தும் புத்தர்களாகி விட்டால் இறைவனின் படைப்பே வீணாகிவிடும் என்ற கவலை தந்தைக்கு இல்லையா?

    ReplyDelete