Thursday, September 3, 2020

பழையதே நல்லது


இன்றைய (4 செப்டம்பர் 2020) நற்செய்தி (லூக் 5:33-39)

பழையதே நல்லது

உரோம் விவிலியக் கழகத்தில் எங்களுக்கு கற்றுக்கொடுத்த பேராசிரியர் அருள்திரு. ழான் லூயிஸ் ஸ்கா என்பவர், ஒவ்வொரு முறையும் புதிய விவிலிய பொருள்கோளியல் முறைகளைப் பற்றிப் பேசும்போதும், இன்றைய நற்செய்திப் பகுதியை எடுத்துக்காட்டி, 'பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார். ஏனெனில், பழையதே நல்லது' என்பார்.

திராட்சை மது மற்றும் தோற்பை எடுத்துக்காட்டில், லூக்கா மட்டுமே மேற்காணும் வார்த்தைகளை எடுத்துக்காட்டோடு இணைக்கிறார். மது பழையது ஆக ஆக, அதன் சுவை கூடும் என்பது நாம் அறிந்த ஒன்று. ஆகையால்தான், பல ஆண்டுகள் பழைமை வாய்ந்த மதுவுக்கு மதிப்பு கூடுதலாக இருக்கிறது. 

இயேசுவின் போதனையை அவருடைய சம காலத்து மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாமல் இருக்கக் காரணம், அவர்கள் பழையதை நன்றாகச் சுவைத்தவர்கள். புதிய மது போன்றிருந்த இயேசுவின் போதனை அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

துணிகளிலும் பழையது என எல்லாவற்றையும் நாம் ஒதுக்கிவிடுவதில்லை. நம் திருமணத்திற்கு எடுத்த சேலை என்றாலும், குருத்துவ அருள்பொழிவு அன்று அணிந்த முதல் திருவுடை என்றாலும் நாம் பழையதை அப்படியே வைத்திருக்கிறோம். புதிய சேலைகளும், புதிய திருவுடைகளும் அவற்றின் இடத்தை ஒருபோதும் பிடிக்க முடியாது. சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் இன்னும் ஒரு படி போய், புதிய நண்பர்களுக்கு பழைய நண்பர்களுக்கு ஈடாக மாட்டார்கள் என மொழிகிறார்.

இயேசு, பழையதை மட்டுமே விரும்பிய தன் சமகாலத்தவரைக் கடிந்துரைக்கவில்லை. மாறாக, தன் சமகாலத்து வாழ்வியல் எதார்த்தத்தை அப்படியே பதிவு செய்கிறார்.

ஒரு கேள்வி:

கடவுள் அனுபவத்தில் நாம் பெற்ற முதல் அனுபவம் அல்லது பழைய அனுபவம் எது? புதிய அனுபவங்கள் எத்தனை வந்தாலும் அதன் இடத்தை அவை பெற முடியாது என்பதை நான் உணர்கின்றேனா?


1 comment:

  1. “ Old is gold.” உண்மைதான்.ஆனால் புதிய,பழைய விஷயங்களின் அனுபவங்களோடு புதிய- பழைய பொருட்களின் அனுபவங்களை ஒப்பிடுவது சரியா? எனக்குத்தெரியவில்லை.கண்டிப்பாக எத்தனை புது சேலைகளும்,புதுத்திரு உடைகளும் வரிசைகட்டி நின்றாலும் நம் திருமணத்தின்போது உடுத்தியிருந்த சேலைக்கும்,குருத்துவத்திருப்பொழிவின் போது அணிந்திருந்த திருவுடைக்கும் ஈடில்லைதான்.ஆனால் அனுபவம் என்று வருகிறபோது ஒவ்வொரு அனுபவமும் நமக்குக் கற்றுத் தருவது ஒரு புதிய உணர்வு/ புதிய பாடம்.நாம் காலங்களைக் கடந்து வருகையில் நம் முதிர்ச்சியின் காரணமாக நாம் நம் அனுபவங்களைக் கையாளும் முறை வேண்டுமானால் மாறலாம்( சிறிது எளிமையாகத்தெரியலாம்) ஆனால் ஒவ்வொன்றும் ஒரு புதிய உணர்வே/ அனுபவமே! நாளை இவையே பழைய விஷயங்களாகிப் போகலாம். ஆனால் புடவை,திருவுடை எனும் நாம் தொட்டு உணரக்கூடிய பொருட்களோடு மகிழ்ச்சி,துக்கம் போன்ற உணர்வுகளால் மட்டுமே புரிந்துகொள்ளும் (abstract) விஷயங்களை ஒப்பிடுவது சரியா? சில சமயங்களில் பழைய...பழகிய விஷயங்களும் கசப்பைக் கொண்டுவரலாம் என்பதற்கு “பழகப்பழகப் பாலும் புளிக்கும்” எனும் பழமொழியே சான்று.ஆனாலும் ‘ அந்த நாள்’ விஷயங்களுக்குக் கொஞ்சம் மவுசு அதிகம் தான் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். நாம் கிட்டத்தட்ட மறந்தேபோன துல்லிய விஷயங்களைக்கூடக் கிள்ளிவிட்டு நம்மை அசைபோடச் செய்யும் தந்தைக்கு என் நன்றிகள்!

    ReplyDelete