விடை தெரியாத கேள்விகள்
இரண்டு நாள்களுக்கு முன் நான் யோபு நூலை வாசிக்கத் தொடங்கினோம். அன்றைய நாளில் யூட்யூப் காணொளி ஒன்றில் அருள்பணியாளர் ஒருவர் யோபு பற்றி ஆற்றிய மறையுரையில், 'யோபு தன் நம்பிக்கையில் நிலைத்திருந்தார் என்றும், இறுதிவரை நாம் நம்முடைய நம்பிக்கையைக் காத்துக்கொண்டால், கடவுள் அனைத்தையும் தருவார்' என்றும் கூறினார். அவரது வார்த்தைகள் எனக்கு நெருடலாய் இருக்கின்றன.
இழந்தவர்கள் தாங்கள் இழந்தது அனைத்தையும் தங்கள் நம்பிக்கையால் பெற்றுக்கொண்டார்களா?
இல்லை!
உரோமையில் நான் சந்தித்த ரோசாப்பாட்டியில் நான் யோபு என்னும் கதைமாந்தரையே பார்த்தேன். அவர் தன் வாழ்நாள் முழுவதும் இழப்புகளை மட்டுமே சந்தித்தார். அவர் இறைநம்பிக்கையிலும் நிலைத்திருந்தார். ஆனால், இறுதியில் இழப்புகளோடு இறந்தும் போனார். அவரது நம்பிக்கைக்கு ஏன் கடவுள் பதில் தரவில்லை? அல்லது அவர் இழந்தவற்றை ஏன் கடவுள் திருப்பிக் கொடுக்கவில்லை?
'இன்று நாம் இழந்தால் நாளை அனைத்தும் கிடைக்கும்' என்ற செய்தியைத் தருவதல்ல யோபு நூல். ஒருவேளை இழந்த அனைத்தும் திரும்பக் கிடைத்தால் நலம். அவ்வளவுதான்.
யோபுவும் ரோசாப்பாட்டியும் தாங்கள் அனைத்தையும் இழந்தாலும், தங்கள் வாழ்க்கையில் உறுதியாக இருந்தனர். ஏன்? கடவுள்மேல் உள்ள நம்பிக்கையால் அல்ல. மாறாக, வாழ்வின் எதார்த்தங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டதால்.
இதையே இன்றைய முதல் வாசகத்தில் யோபு தன் நண்பர்களுக்கு மறுமொழியாகக் கூறுகின்றார். 'கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளுங்கள்' என்று அவர் கூறவில்லை. மாறாக, கடவுளின் செயல்களை நாம் அறியவோ, பொருள்கொள்ளவோ முடியாது. ஏன்? நாம் நேர்மையாய் இருப்பது கூட நமக்குத் தெரியாது. எடுத்துக்காட்டாக, எனக்கு பசியாக இருக்கிறது. நான் கடவுளிடம் மன்றாடுகிறேன். கடவுள் வழியில் என் கண்களுக்கு ஒரு நூறு ரூபாய் தாளைக் காட்டுகிறார். இப்போது, 'இது கடவுள் எனக்குத் தந்த பணம்' என நான் அதை எடுத்துக்கொள்ள வேண்டுமா? அல்லது 'இதை எடுப்பது களவு, இதை நான் உரியவரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்' என்று நான் தவறவிட்டவரைத் தேட வேண்டுமா? ஆக, நேர்மையாய் இருப்பது, கடவுள்முன் நேர்மையாய் இருப்பது எளிதான காரியமன்று. இது நேர்மை, இது நேர்மையற்றது என்பன எல்லாம் மனித வரையறைகளே அன்றி வேறொன்றும் இல்லை.
வாழ்வில் பலவற்றுக்கு நமக்கு விடை தெரியாது. ஆனால், விடை தெரிந்தது போல அல்லது விடை தெரிவது போல நாம் பேசுகிறோம் அல்லது செயல்படுகிறோம். விடை தெரிந்ததாக நினைத்துக்கொண்டு மற்றவர்களைத் தீயவர்கள் என்று தீர்ப்பிடுகிறோம்.
மெய்யான ஞானம் என்பது இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வது.
ஏன் துன்பம்? எனக்கு ஏன் துன்பம்? நல்லதே செய்யும் எனக்கு ஏன் துன்பம்? கடவுளை நம்புகிற எனக்கு ஏன் துன்பம்? கடவுளின் இரக்கம் எங்கே? கடவுளின் நன்மைத்தனம் எங்கே? என்னும் கேள்விகளுக்கு விடைகள் இல்லை. விடைகள் இல்லாத கேள்விகளோடு வாழப் பழகிக்கொள்வதே விவேகம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 9:57-62), இயேசுவோடு வழிநடந்தவர்கள் அவரைப் பின்பற்ற விழைகின்றனர். தாமாக முன்வருபவர்களைத் தள்ளிவிடுகிற இயேசு, சிலரை வலிந்து அழைக்கிறார்.
ஏன்?
அப்படித்தான்! தானாக வருவதைத் தள்ளிவிடுவார். இழுத்தும் வராததை இறுகப் பற்றிக்கொள்வார்.
இது ஏன் என்று புரியாததால், அவர் கடவுள்.
அழகான எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் ஒரு பதிவு. வாழ்வில் அனைத்தையுமே இழந்தாலும் வாழ்வின் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்பவர்களே இறைவனுக்கு இறுதிவரை நம்பிக்கையாளராக இருக்கின்றனர்..... யோபுவையும்,ரோசாப்பாட்டியையும் போல, என்று சொல்லவரும் ஒரு பதிவு.விடை தெரியாத கேள்விகளை அப்படியே விழுங்கிக்கொண்டு வாழப்பழகிக்கொள்வது தான் விவேகம் என்கிறார் தந்தை. அது மட்டுமா? கூடவே இழுத்தும் வராததை இறுகப்பற்றிக்கொள்ளும் இறைவன், தானாக வருவதைத் தள்ளிவிடுவதையும் சமயத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கத்தான் செய்கிறோம்.....யாரிடம் காரணம் கேட்பது என்று தெரியாமலே.... புரியாமலே!இப்படி விடை தெரியாத பல கேள்விகளோடே இவ்வுலகை விட்டே பறந்துவிட்ட ரோசாப்பாட்டியை நினைவுக்கொண்டு வந்த தந்தைக்கு என் நன்றிகள்!!!
ReplyDelete