இன்றைய (22 செப்டம்பர் 2020) முதல் வாசகம் (நீமொ 21:1-6,10-13)
உழுவதும் பாவம்
இன்று தொடங்கி வருகிற பத்து நாள்களுக்கு (ஞாயிறு தவிர), முதல் வாசகம், ஞான நூல்களிலிருந்து வாசிக்கப்படுகிறது.
'மேட்டிமையான பார்வை, இறுமாப்பு கொண்ட உள்ளம் - இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள்' (நீமொ 21:4) என்ற இறைவார்த்தையை இன்றைய நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
இந்த வசனத்தில் சில பாடச்சிக்கல்கள் உள்ளன:
'பார்வையின் பெருமிதமே மனத்தின் அகந்தையாம். அக்கிரமிகளிடம் பிறக்கிறதெல்லாம் பாவம்' என்கிறது கத்தோலிக்க மொழிபெயர்ப்பு.
இந்த மொழிபெயர்ப்பைப் பொருத்தவரையில், 'மனத்தின் அகந்தையே பார்வையில் பெருமிதமாக' வெளிப்படுகிறது. ஆனால், பொதுமொழிபெயர்ப்பில், இவை இரண்டும் வௌ;வேறு என்பது போலக் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், எபிரேய விவிலியத்தில், 'மேட்டிமையான பார்வை, இறுமாப்பு கொண்ட உள்ளம், மற்றும் உழுவதும் பொல்லாரின் பாவங்கள்' என்று உள்ளது. 'உழுவது' என்னும் வார்த்தை தமிழ் வுல்காத்தா மொழிபெயர்ப்பில், 'வெளிச்சம்' என்று உள்ளது. அதாவது, மேட்டிமையான பார்வையும் இறுமாப்புநிறை உள்ளம் கொண்டவர்களின் வெளிச்சம்கூட ஆபத்தானது என்பது போல இதன் பொருள் உள்ளது.
'உழுவதும் பாவம்' என்னும் சொல்லாடலை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?
இங்கே பயன்படுத்தப்படும் இலக்கியக் கூற்றின் பெயர் 'சினையாகு பெயர்' அல்லது 'ஆகுபெயர்' (ஆங்கிலம் மற்றும் கிரேக்கத்தில் 'ஸினெக்டொகே'). இதில், ஒரு பெயர் ஒன்றன் மொத்தத்தைக் குறிக்கிறது. அதாவது, சிறிய ஒன்றைப் பயன்படுத்தி பெரிய ஒன்றைக் குறிப்பது. எடுத்துக்காட்டாக, 'நெற்றி வியர்வை வியர்த்து நீ அப்பத்தை உண்பாய்' (காண். தொநூ 3:19) என்னும் அருள்வாக்கியத்தில், 'அப்பம்' என்பது 'எல்லா உணவையும்' குறிக்கிறது.
ஆக, 'உழுவதும் பாவம்' என்பதன் வழியாக, பொல்லார் செய்கின்ற எல்லா செயல்களும் தீமையானவை என்றும், அவர்கள் நிலத்தை உழுவதில்கூட அவர்களின் மேட்டிமையான பார்வையும், இறுமாப்புநிறை உள்ளமும் வெளிப்படும் என்றும் அருள்வாக்கியம் நமக்குச் சொல்கிறது.
மேட்டிமையான பார்வை மற்றவர்களை வெறும் புழுக்களாகப் பார்க்கிறது. நாம் பெறுகின்ற பொருள், அருள், கல்வி, சமூக நிலை, வேலை போன்றவை நமக்குப் பல நேரங்களில் மேட்டிமையான பார்வையைத் தரலாம். இந்தப் பார்வையின் ஊற்று இறுமாப்பு நிறை உள்ளம். இறுமாப்பு உள்ளம் கொண்டவர்கள் தங்களை மற்றவர்கள் பார்வையிலிருந்து உயர்த்திக்கொள்வதோடு தங்கள் பார்வையிலிருந்தே தங்களை உயர்த்திக்கொள்கின்றனர். பள்ளிகளில் நாம் பயிலும்போது வழங்கப்படும் பரிசுதான் நம்மை முதன்முதலில், 'நான் மற்றவரை விடப் பெரியவன், பெரியவள்' என்ற ஓர் உணர்வைத் தரத் தொடங்குகிறது. இந்த உணர்வுக்குத் தன்னையே விற்பவர்கள் இறுதிவரை, மற்றவர்களின் பாராட்டை விரும்புகிறார்கள், அல்லது தங்களைத் தாங்களே மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்த்தே உள்ளம் மகிழ்கிறார்கள். இவர்கள் செய்யும் எந்தச் செயலிலும் இவர்களின் இந்த உணர்வு வெளிப்பட்டுவிடும்.
'நீங்கள் கடவுளைப் போல ஆவீர்கள்' (காண். தொநூ 3:5) என்று மனுக்குலத்தை சோதித்த பாம்பின் மாய வலையும் இறுமாப்பே.
இதற்கு எதிர்மாறாக, 'தாழ்ச்சி' என்ற வார்த்தையை விவிலியம் ஒரு மதிப்பீடாக முன்வைக்கிறது (காண். மத் 11:29). 'ஹ்யுமிலிட்டி' ('தாழ்ச்சி') என்னும் ஆங்கில வார்த்தையின் இலத்தீன் மூலம், 'ஹ்யூமுஸ்' ('மண்'). அதாவது, நம்மில் உள்ள 'மண்' என்னும் பொதுமையை உணர்தலும், அந்தப் பொதுமையில் ஒருவர் மற்றவரைக் கொண்டாடுவதும் சால்பு.
இறுமாப்பு,அகந்தை.....மனித மூளையில் ஆரம்பிக்கும் இந்த உணர்வுகள் மனது வரை இறங்கி வந்து ,நம் நடத்தை மூலம் ‘ நான் உன்னைவிடப் பெரியவன்/ பெரியவள்’ என எதிராளிக்கு உணர்த்துவது தான் ‘மேட்டிமை உணர்வு.’ நம் ஆதிப்பெற்றோர் நமக்குத் தந்த ஜீன்களின் வெளிப்பாடுதான் இந்த இறுமாப்பு என்கிறார் தந்தை. மண்ணிலிருந்து வந்த நாம்,திரும்பவும் மண்ணுக்கே போகவிருக்கும் நாம் நம் ‘தாழ்ச்சி’ எனும் மதிப்பீட்டால் நம்மையும்,நம்மைச்சுற்றியுள்ளோரையும் கொண்டாடுதல் சிறப்பு என உணர்வோம்.” தாழ்ச்சி”..... சொல்வது எளிது.ஆனால் சமயங்களில் நம்மை அடுத்தவர் முன் கூனிக்குறுக வைத்துவிடும்.நான் ‘மண்’ தான் எனும் உணர்வு மட்டுமே நம்மை மேல் நோக்கி நிமிர வைக்கும்.”என்னால் நினைத்தால் எதுவும் முடியும்; இதுவும் முடியும்”. தந்தை தரும் நம்பிக்கைக்கு நன்றிகள்!!!
ReplyDelete