Friday, September 4, 2020

அன்பார்ந்த பிள்ளைகள்

இன்றைய (5 செப்டம்பர் 2020) முதல் வாசகம் (1 கொரி 4:6-15)

அன்பார்ந்த பிள்ளைகள்

இன்று நாம் கொல்கொத்தா நகர் புனித தெரசாவின் (அன்னை தெரசா) திருநாளையும், ஆசிரியர் தினத்தையும் கொண்டாடுகின்றோம். இன்றைய முதல் வாசகம் இவ்விரண்டு தினங்களின் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது. 

கொரிந்து நகரத் திருஅவை பவுலுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. அவர்கள் கொண்டிருந்த பெருமிதம் அல்லது இறுமாப்பு உணர்வை அடிப்படையாக வைத்து எழுகிறது ஒரு பிரச்சினை. அறிவுசார் முன்னேற்றம் கண்டிருந்த கொரிந்து நகர மக்களின், அறிவையும் ஞானத்தையும் கடிந்துகொள்கிற பவுல், தான் நற்செய்திக்காக அறிவற்ற நிலைக்குத் தன்னை உட்படுத்தியதைச் சுட்டிக்காட்டுகின்றார். 'நாங்கள் கடையர்கள், மடையர்கள், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், நாடோடிகள், குப்பைகள், மற்றும் கழிவுப் பொருள்கள்' எனத் தங்களின் நிலையை எடுத்துரைக்கின்றார். இப்படி எடுத்துரைப்பது தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக்கொள்ள அல்ல. மாறாக, அவர்களின் பெருமித உணர்வைக் குறைப்பதற்கே.

இறுதி வாக்கியங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன:

'நீங்கள் என் அன்பார்ந்த பிள்ளைகள் ... கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம். ஆனால், தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன்.'

அல்பேனிய நாட்டிலிருந்து ஆசிரியராக வந்தவர் அன்னை தெரசாவாக மாறுகிறார்.

ஒவ்வொரு ஆசிரியரும் தன் வகுப்பறையில் மாணவர்களின் தாய் மற்றும் தந்தையாக மாறுகிறார்.

ஒவ்வொரு அருள்பணியாளரும் நம்பிக்கையில் அனைவருடைய தந்தை ஆகின்றார்.

இந்த நிலையை அடையும் ஒருவர் தனது கவலை, கண்ணீர், வருத்தம் அனைத்தையும் மறந்துவிடுவார். பவுல் எந்த நிலையிலும் தன் திருஅவையை உதறித் தள்ளவில்லை. அவர்கள்மேல் உரிமை கொண்டாடி, அவர்களைத் தம் பிள்ளைகள் எனக் கருதுகின்றார்.

நம் அன்றாட வாழ்வியல் உறவு நிலைகளில் இதே மனப்பக்குவம் நமக்கும் இருந்தால் நலம்!


4 comments:

  1. ஒரு நல்ல சமுதாயத்தில் ஒரு குழந்தையின் உடல்சார்ந்த விஷயங்களுக்குத் தாயும்,தந்தையும் பொறுப்பென்றால் உளம் சார்ந்த விஷயங்களுக்குப் பொறுப்பு ஆசிரியப்பெருமக்களே! தங்களின் சொந்த கவலை,கண்ணீர,வருத்தம் இவற்றை மறந்தவர்களால் மட்டுமே இவழியைத் தேர்ந்தெடுக்க முடியும் என்கிறார் தந்தை. அல்பேனிய நாட்டு ஆசிரியர் ஒருவர் அன்னையாக மாறுவதும்,ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறையில் தாய்- தந்தையாக மாறுவதும்,ஒவ்வொரு அருள்பணியாளரும் தன் மந்தைக்கு தந்தையாக மாறுவதும் அத்தனை எளிதல்ல.” அர்ப்பண உணர்வு” உள்ளவர்களுக்கே அது சாத்தியம்.இந்த அர்ப்பண உணர்வின் மறு பிம்பங்கள் தான் புனித பவுலும்,அன்னை தெரசாவும் ஏன்....நீங்களும் நானும் கூடத்தான்.என் 35 வருட ஆசிரியப்பணியைத் திரும்பிப் பார்த்தால் எனக்கே அத்தனை பெருமிதம்...நான் செதுக்கிய மாணாக்கர்கள் இன்று சமூகத்தில் அடைந்துள்ள நிலை குறித்து.அத்தனை ஆசியரியப்பெருமக்களுக்கும் கண்டிப்பாக இதே உணர்வு தான் இருக்கும். இந்த நேரத்தில் எனக்குக் கற்பித்த ஆசான்களையும் பெருமையுடனும்,நன்றியுடனும் நினைத்துப்பார்க்கிறேன். அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும், அவர்களுக்கு தன் எழுத்தால் பெருமை சேர்த்த தந்தைக்கும் என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. மிக அருமை

    ReplyDelete