இன்றைய (21 செப்டம்பர் 2020) திருநாள்
புனித மத்தேயு
இன்று, நற்செய்தியாளரும் திருத்தூதருமான புனித மத்தேயுவின் திருநாளை நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.
ஒத்தமைவு நற்செய்திகளில், பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான், மற்றும் மத்தேயு என்னும் ஐந்து திருத்தூதர்களின் அழைப்பு கதையாடல்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஐந்து பேரில், முதல் நான்கு பேரை இயேசு அழைக்கும்போது, 'என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' (காண். மாற் 1:17) என்ற ஒரு வாக்குறுதி கொடுத்து அழைப்பதாக உள்ளது. ஆனால், மத்தேயு நற்செய்தியாளர் அழைக்கப்படும் நிகழ்வில், 'என்னைப் பின்பற்றி வா!' என இயேசு சொல்ல, மத்தேயுவும் உடனடியாக அவரைப் பின்பற்றுகிறார்
'நீ தயாராக இருக்கும்போது உன் விடிவெள்ளி வானில் தோன்றும்' என்பது செல்டிக் பழமொழி. மத்தேயு தயாராக இருந்தபோது இயேசு என்னும் விடிவெள்ளி அங்கே தோன்றுகிறார். 'ஏன்? எங்கே? எப்படி? எவ்வளவு நாள்கள்?' என எந்தக் கேள்விகளுமின்றி புறப்பட்டுச் செல்கிறார் மத்தேயு.
மத்தேயு உடனடியாகப் புறப்பட்டுப் போகக் காரணம் என்ன? அவர் செய்த தொழில் அவருக்கே பிடிக்கவில்லையா? அல்லது இயேசுவைப் பின்பற்றும் ஆர்வம் ஏற்கெனவே இருந்ததா?
காரணம் தெரியவில்லை. ஆனால், மத்தேயு உடனடியாக எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் செல்கின்றார்.
முதல் கேள்வி:
இன்று, இறைவன் தரும் அழைப்பிற்கான நம் பதிலிறுப்பு உடனடியாக இருக்கிறதா? பதிலிறுப்பு செய்ய நான் தயார் நிலையில் இருக்கிறேனா? மத்தேயு நற்செய்தியாளர் பெற்ற துணிச்சல் எனக்கு வருமா?
தொடர்ந்து, மத்தேயு தன் வீட்டில் இயேசுவுக்கு விருந்து வைக்கின்றார். விருந்தின் நோக்கம் இரண்டாக இருக்கலாம்: ஒன்று, தான் இதுவரை சேர்த்த சொத்து அனைத்தையும் இழப்பதற்கான ஒரு முயற்சி. எலிசா அழைக்கப்பட்டவுடன் ஏறக்குறைய இப்படித்தான் செய்கின்றார். தான் உழுதுகொண்டிருந்த ஏரை எரித்து, மாடுகளைச் சமைத்து விருந்து வைக்கிறார். தான் சேர்த்த பணம் இனி தனக்குத் தேவையில்லை என உணர்கின்ற மத்தேயு, இயேசுவுக்கும் தன் நண்பர்களுக்கும் விருந்தாகப் படைக்கின்றார். இரண்டு, 'இதுதான் நான் ஆண்டவரே! இவர்கள்தாம் என் நண்பர்கள்! இதுதான் என் எளிய பின்புலம்! இதுதான் என் நோயுற்ற நிலை! இதுதான் என் நொறுங்குநிலை!' என இயேசுவிடம் தன்னையே திறந்து காட்ட, விருந்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார் மத்தேயு. இயேசுவின் சமகாலத்தில் வரிதண்டுதல் மிகவும் இழிவான தொழிலாகக் கருதப்பட்டது. ஏனெனில், இதைச் செய்வோர் யூதர்களாக இருந்தாலும் உரோமைக்குப் பணி செய்வதால், சொந்தங்களின் இரத்தத்தையே குடிக்கும் அட்டைப் பூச்சிகளாக அவர்கள் கருதப்பட்டனர். மேலும், வரிவசூல் பெரும்பாலும் உரோமை நாணயங்களால் நடைபெற்றது. புறவினத்தார் சார்ந்த பொருள்களை (நாணயங்களை); தொடுவதால் வரிதண்டுபவர்கள் தாழ்வாகப் பார்க்கப்பட்டனர். மேலும், வரிவசூல் செய்வதற்காக இவர்கள் அநீதியான தண்டனைகளை மக்களுக்கு வழங்கவும், வரிவசூலில் வித்தியாசம் காட்டவும், எளியவரை வதைக்கவும் செய்தனர்.
இரண்டாவது கேள்வி:
'இதுதான் நான்!' என என் ஆண்டவரிடம் நான் மனம் திறக்கத் தயாரா?
இந்தத் திருநாளில் புனித மத்தேயு நமக்கு வழங்கும் வாழ்வியல் பாடங்கள் இரண்டு:
ஒன்று, மேலானது வரும் போது கீழானதைத் தள்ளி விடும் துணிச்சல், மனவுறுதி, மற்றும் விடாமுயற்சி.
இரண்டு, தன் பழைய வாழ்க்கையின் குற்றவுணர்வு தன் புதிய வாழ்க்கையில் தன் செருப்பில் சிக்கிய கல்லாக இருக்க அவர் அனுமதிக்கவில்லை. மற்றவர்கள் தன்னைப் பற்றி வைத்த விமர்சனங்களை அவர் பொருட்படுத்தவில்லை.
புனித மத்தேயுவின் நற்செய்தி, இயேசுவின் பிறப்பு முதல் உயிர்ப்பு வரை (இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை இங்கே, காண். மத் 28:19) உள்ள நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது. 'எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்' என்ற கடவுள் நம்மோடு செய்தியோடு நற்செய்தி நிறைவு பெறுகிறது. மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் சில உவமைகள் (எ.கா. பத்துக் கன்னியர், திராட்சைத் தோட்டப் பணியாளர்) மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில் விளங்கிள பிரச்சினைகளை நாம் புரிந்துகொள்ள உதவுவதோடு, அவர் அவற்றைக் கையாண்ட விதத்தையும் எடுத்தியம்புகிறது. மத்தேயு நற்செய்தியில் வரும் மலைப்பொழிவு என்றென்றும் நிலைக்கும் ஓர் இனிய அறநெறி.
'உரோம் நகர் நம்மோடு' என வரிதண்டிய மத்தேயு, 'கடவுள் நம்மோடு' என இயேசுவை அறிமுகம் செய்கின்றார். இது முதலில் அவரது வாழ்வியல் அனுபவமாக இருந்திருக்க வேண்டும்.
இன்றைய நாளில், மத்தேயு நற்செய்தியின் ஏதாவது ஒரு பகுதியை அல்லது நற்செய்தி முழுவதையும் வாசிக்கலாம்.
புனித மத்தேயு, வங்கியாளர்கள், காசாளர்கள், மற்றும் தணிக்கையாளர்களின் பாதுகாவலர்.
இன்றைய விழாநாயகர் புனித மத்தேயு நமக்குத்தரும் செய்தி..... “மேலானது வரும்போது கீழானதைத் தள்ளிவிடும் துணிச்சல்,மனவுறுதி மற்றும் விடாமுயற்சி.”வாழ்க்கையின் பல நேரங்களில் கையிலிருப்பதைக் கோட்டை விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படும் நமக்கு இது ஒரு நல்ல விஷயமே!மத்தேயு நற்செய்தியில் மட்டுமே வருகிறது “ மலைப்பொழிவு” என்பதும், இவர் வங்கியாளர்கள், காசாளர்கள்,மற்றும் தணிக்கையாளர்களின் பாதுகாவலர் என்பதும் பலருக்குப் புதிய விஷயமாக இருக்கும்.கண்டிப்பாக இன்று என்னால் முடிந்த அளவு மத்தேயுவின் நற்செய்தியை வாசித்து என்னுள் பதிக்க முயல்வேன்.வாசகர்களுக்கு நல்ல பல விஷயங்களுக்குத் தூண்டுதலாக இருக்கும் தந்தையை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக! தந்தைக்குத் திருவிழா வாழ்த்துக்கள்!!!
ReplyDelete