Sunday, September 6, 2020

புளிப்பு மாவு

இன்றைய (7 செப்டம்பர் 2020) முதல் வாசகம் (1 கொரி 5:1-8)

புளிப்பு மாவு

கொரிந்து நகரத் திருஅவையில் விளங்கிய சில பிரச்சினைகளைப் பற்றி அறிவுறுத்தவும், எச்சரிக்கை விடவும் செய்கின்ற பவுல், இன்றைய முதல் வாசகத்தில் பரத்தைமை பற்றிப் பேசுகிறார். அப்படிப்பட்ட செயல் செய்பவரை சபையிலிருந்து வெளியேற்றுமாறு சொல்கின்ற பவுல், புளிப்பு மாவு என்னும் உருவகத்தைப் பயன்படுத்துகிறார்.

நற்செய்தி நூல்களில், புளிப்பு மாவு உருவகம் விண்ணரசின் மறைபொருளைக் குறிப்பதாக உள்ளது. ஆனால், பவுல், அதே உருவகத்தைச் சற்றே வித்தியாசமாகக் கையாளுகின்றார்.

இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்று வெளியே வரும் அந்நாளில், புளியாத அப்பம் உண்கின்றனர். புளியாத அப்பம் இரண்டு பொருள்களைத் தருகின்றது: ஒன்று, அவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறுவதால் அப்பத்திற்கான மாவைப் புளிக்க வைக்க அவர்களுக்கு நேரம் இல்லை. இரண்டு, புளிப்பு என்னும் அடிமைத்தனம் அவர்களுடைய நாவில் இருக்கக்கூடாது.

மேற்காணும் இரண்டாவது பொருளில்தான் பவுல், புளிப்பு மாவு உருவகத்தைக் கையாளுகின்றார். 

'புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்துவிடுங்கள்!'

அதாவது, நாம் ஒன்றிலிருந்து விடுதலை பெற்ற மேலான இன்னொன்றுக்குக் கடந்து செல்லும்போது, பழையதை முழுவதுமாகத் தூக்கி எறிதல் அவசியம். கொஞ்சம் தானே! அது இருந்துவிட்டுப் போகட்டும்! என்று நாம் ஒரு துளி புளிப்பு மாவை வைத்திருந்தாலும், அது மற்ற மாவையும் புளிப்பாக்கிவிடும். பின், அனைத்தும் குப்பைக்குச் செல்லும் நிலை உருவாகும். ஏனெனில், புளிப்பு மாவின் இயக்கத்தை நாம் கட்டுப்படுத்த முடியாது. புளித்த ஒன்றை புளியாததாக மாற்ற முடியாது.

நம்மையே கேட்போம்:

இன்று என் வாழ்வில், புளிப்பு மாவு போன்று எதை நான் தூக்கிக்கொண்டே வருகிறேன்? அந்தப் புளிப்பு மாவு எனது மற்ற நல்ல மாவைப் புளிப்பாக்குவதை நான் உணர்கிறேனா? புளிப்பு மாவைத் தூக்கி எறியும் மனப்பக்குவம் என்னில் வராதது ஏன்?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 6:6-11), இயேசுவின் சமகாலத்தவர்கள், தங்களுடைய பாரம்பரியம் மற்றும் ஓய்வுநாள் சட்டங்கள் என்னும் புளிப்பு மாவைத் தங்களோடு தூக்கிக்கொண்டே சென்றனர். ஆகையால், அவர்களது உள்ளமும் புளித்துப் போய்விட்டது. சக மனிதர் நலம் பெறுவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இயேசுவும் தங்களைப் போல புளிப்புமாவாக இருக்க வேண்டும் என்று நினைத்து அவர்மேல் கோபம் கொள்கின்றனர். 

'உமது கையை நீட்டும்' என்கிறார் இயேசு.

நான் என் கையை நீட்டி, என் புளிப்பு மாவை அப்புறப்படுத்தத் தயரா?

புனித அகுஸ்தினார் தனது ஒப்புகைகள் நூலில், 'என் ஆண்டவரே! என் தலைவரே! எது இல்லாமல் நான் இருக்க முடியாது என்று நினைத்து அதைப் பற்றிக்கொண்டேனோ, இப்போது அதையே நான் விரும்பித் தள்ளி வைக்கிறேன்!' என்கிறார்.

விரும்பித் தள்ளி வைக்க நிறைய துணிச்சலும் மனவுறுதியும் விடாமுயற்சியும் தேவை.


1 comment:

  1. புளிப்பு மாவு..,. நாம் அடிக்கடி கேட்டுப் பழகிப்போன வார்த்தையே!. மாவு புளித்தால் மட்டுமே அதை உணவாக மாற்ற முடியும்
    எனும் நேர்மறை உணர்வில் கேள்விப்பட்டுள்ள நாம் இன்று அதை எதிர்மறை வாரத்தையாகப் பார்க்கச் செய்கிறார் தந்தை.தனது மனதுக்கும், உடலுக்கும் இன்றியமையாதவை என்று நினைத்த
    வைகளைப் புனித அகுஸ்தினாரால் தள்ளி வைக்க முடிந்தது எனில் என்னாலும், உங்களாலும் கூட அது முடிய வேண்டும்.அதற்கு வேண்டிய துணிச்சலுக்காக்இறைவன் அருள் நாடுவோம். மனது வைத்தால மாரக்கமுண்டு எனத் தட்டிக்கொடுக்கும் தந்தைக்கு நன்றிகள்!!!




    த்த
    த்து

    தைத்

    ReplyDelete