Monday, September 28, 2020

அதிதூதர்களின் அவசியம்

இன்றைய (29 செப்டம்பர் 2020) திருநாள்

அதிதூதர்களின் அவசியம்

'கடவுளுக்கு நிகர் யார்?' எனப் பெயர் கொண்டு

எல்லா வகை தீமைகளையும் எதிர்த்துப் போராடும் மிக்கேலே (காண். திவெ 12:7)!

'கடவுளின் ஆற்றல்' எனப் பெயர் கொண்டு

கடவுளின் நற்செய்தியை திருமுழுக்கு யோவானின் மற்றும் இயேசுவின் பிறப்புச் செய்தியாக

அறிவித்த கபிரியேலே (காண். லூக் 1:19-26)!

'கடவுளின் நலம்' அல்லது 'கடவுள் நலம் தருகிறார்' எனப் பெயர் கொண்டு

மண்ணுலக மாந்தர்களோடு வழிநடந்து அவர்களுக்கு நலம் தரும் இரபேலே (காண். தோபி 3:17, 5:4)!
முன் எப்போதும் விட நீங்கள் இப்போது எங்களுக்குத் தேவை.

அரசியல் மற்றும் பொருளாதார தளங்களில், எங்கள் தலைவர்கள் தங்களையே கடவுளுக்கு நிகர் என ஆக்கிக்கொண்டு எடுக்கும் முடிவுகளால் தீமை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. தன்னலம், ஊழல், பேராசை, அடிப்படை வாதம், குறுகிய எண்ணங்கள், பிளவு மனப்பான்மை போன்ற தீமைகளை அழித்தருள வாரும் புனித மிக்கேலே!

தொலைக்காட்சி, செய்தித்தாள், இணையதளம், சமூக வலைத்தளம் என எல்லா ஊடகங்களிலும் வழங்கப்படும் செய்திகள், அரசியல் கட்சிகளால் 'வாங்கப்பட்ட செய்திகளாக' இருக்க, நாங்கள் அவை தரும் குப்பைகளால் நாளும் நாறடிக்கப்படுகிறோம். அவை எங்களுக்குச் சோர்வு தருகின்றன. சோர்வுற்ற எங்கள் மனங்களுக்கு நற்செய்தி தாரும் புனித கபிரியேலே!

கொரோனா பெருந்தொற்று, பெருந்தொற்று ஏற்படுத்தும் பயம், பயத்தால் வரும் தனிமை, தனிமையால் வரும் கோபம், கோபத்தால் வரும் விரக்தி என எங்கள் உள்ளமும் உடலும் ஆன்மாவும் நலிவுற்ற நிலையில், இன்றா, நாளையா, நாளை மறுநாளா என்று நாள்களை நகர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கும் எங்களோடு வழி நடந்து எங்களுக்கு நலம் தாரும் புனித இரபேலே!

3 comments:

  1. ஆமேன்.
    உருக்கமான செபம்.
    உணர்ந்து,உள்ளத்தின் ஆழத்திலிருந்து, செபிக்க உதவியமைக்கு, நன்றிகள்🙏

    ReplyDelete
  2. ‘ கடவுளின் ஆற்றல் ‘ எனப்பெயர்கொண்டு மரியாளுக்கு தந்த நற்செய்தி மட்டும் போதாது; “எமக்கும் நற்செய்தி கொண்டு வாரும்” எனக் கபிரியேலையும், ‘ கடவுளின் நலம்’ என நீர் மட்டும் பெயர்கொண்டிருந்தால் போதாது; எமக்கும் நலம் தர வேண்டுமெனக் இரபேலையும்,எங்களுடன் கைகோர்த்து நடப்பதோடல்லாமல் எங்களை மூழ்கடிக்கும் துயரச் செய்திகளின் சோர்விலிருந்து காப்பாற்றும்படி மிக்கேலையும் துணைக்கழைக்கிறார் தந்தை. வருவார்களா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தந்தைக்கும்,அனைவருக்கும் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல், அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் அருமையான அர்த்தமுள்ள செபம். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete