Sunday, September 27, 2020

இழப்புகளைக் கையாளுதல்

இன்றைய (28 செப்டம்பர் 2020) முதல் வாசகம் (யோபு 1:6-22)

இழப்புகளைக் கையாளுதல்

இன்றைய முதல் வாசகம் யோபு நூலின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. உரைநடையில் இருக்கும் இப்பகுதி, கதையின் முதன்மையான மாந்தர் யோபு அறிமுகம் செய்யப்படுகிறார்.

முதலில், யோபு ஒரு பேசுபொருளாக அறிமுகம் செய்யப்படுகின்றார். அதாவது, யோபுவைப் பற்றி, தெய்வப் புதல்வர்கள் நடுவில் ஆண்டவரும் சாத்தானும் பேசிக்கொள்கின்றனர். யோபுவைப் பற்றி கடவுள் நல்ல வார்த்தைகளில் சொன்னவுடன், சாத்தான் அதற்கு எதிர்மறையாகச் சொல்கின்றார். நாம் ஒவ்வொருவரும் யாரோ ஒருவருடைய கதையில் வில்லன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சட்டங்களைக் கடைப்பிடித்து, நற்செயல்கள் செய்து, இறைப்பற்றில் வாழ்ந்த யோபு, சாத்தானைப் பொருத்தவரையில் ஒரு வில்லன். அவ்வளவுதான்! இது சரியா? அல்லது தவறா? என்ற வாதம் இங்கே இல்லை. நம் வாழ்க்கையிலும் நாம் புகழப்படும் அல்லது பாராட்டப்படும் அதே காரணங்களுக்காக நாம் வெறுக்கப்படுவதும் உண்டு. இதுவே எதார்த்தம். இந்த எதார்த்தத்தை ஏற்றுக் கொள்தல் நலம். அதை விடுத்து, அவர்களிடம், 'நான் அப்படி அல்ல!' என்று நம்மை நிரூபித்துக் கொண்டிருப்பதால் நேரமும் ஆற்றலும் விரயம் ஆகும். இறுதியில், பன்றிகள் முன் முத்துகளை எறிந்தது போலாகிவிடும்.

இரண்டாவதாக, சாத்தானுக்கும் ஆண்டவருக்கும் நடந்த உரையாடல் இந்த நூலை வாசிக்கும் உங்களுக்கும் எனக்கும் தெரியும். ஆனால், யோபுவுக்குத் தெரியாது. தன்னைத் தண்டிக்க கடவுள்தாமே சாத்தானுக்கு அனுமதி அளித்துள்ளார் என்பது யோபுவுக்குத் தெரியாது. பாவம் யோபு! கடைசி வரையிலும் தான் எதற்காகத் துன்புற்றோம் என்பது அவருக்குத் தெரியாது. ஆக, நமக்கும் ஏதாவது துன்பம் வந்தால், அல்லது 'இது ஏன் எனக்கு நடக்கிறது?' என்ற கேள்வி எழுந்தால், ஒருவேளை நம்மைப் பற்றியும் ஏதாவது ஓர் உரையாடல் தெய்வப் புதல்வர்கள் நடுவில் நடந்திருக்கலாம் என எடுத்துக்கொள்வோம்.

மூன்றாவதாக, இழப்பைக் கையாள்தல். யோபு மூன்று வகை இழப்புகளை முதலில் எதிர்கொள்கிறார்: ஒன்று, கால்நடைகள். இரண்டு, பணியாளர்கள். மூன்று, பிள்ளைகள். இந்த மூன்றையும் இழந்ததால் அவர் அவருக்குரிய அனைத்தையும் இழந்தவர் ஆகிறார். ஆனால், இந்தச் செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், அவருடைய வார்த்தைகள் எவை? 'என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன். அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன். ஆண்டவர் அளித்தார். ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!' முதலில், பாதியில் வந்தது அனைத்தும் பாதியில் போய்விடும் என்பது யோபுவின் ஞானமாக இருக்கிறது. பிறந்த மேனியனாய் வந்தவன் பிறந்த மேனியனாய்ச் செல்ல வேண்டும் என்பது நியதி என்பதால்தான், இந்துக்களின் மரபில், இறந்த உடலை எரியூட்டுகின்ற நிகழ்வில், இறுதியில் உடுத்தியிருக்கும் உடையும் அகற்றப்படுகிறது. இதை நினைவில் கொண்டால் நாம் பற்றுகளை விட முடியும். இரண்டாவதாக, 'நான் சம்பாதித்தேன். நான் உருவாக்கினேன். நான் பெற்றெடுத்தேன். என் பெயர் போற்றப் பெறுக' என்ற மனநிலையில் யோபு இருந்திருந்தால், மிகவும் மனமுடைந்து போயிருப்பார். ஆனால், அவர் ஆண்டவரிடமிருந்து தான் அனைத்தையும் பெற்றதாக உணர்கிறார். ஆக, வாழ்வை இரண்டு நிலைகளில் வாழலாம். 'என் செயல்களால் இது வந்தது' என்பது முதல் மனநிலை. 'அவரின் அருளால் வந்தது' என்பது இரண்டாவது மனநிலை. முதல் மனநிலையில் சோர்வு அதிகம். இரண்டாவது மனநிலையில் நிம்மதி அதிகம். மூன்றாவதாக, கொண்டிருத்தலையும் இழத்தலையும் ஒரே தளத்தில் பார்க்கிறார் யோபு.

இன்று, நான் என் வாழ்வின் இழப்புகளை எப்படி எதிர்கொள்கிறேன்?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 9:46-50), 'சிறு பிள்ளையை ஏற்றுக்கொள்பவர் தன்னை ஏற்றுக்கொள்வதாக' இயேசு மொழிகிறார். சிறு பிள்ளை என்பது ஒன்றுமில்லாமையின் அடையாளம். ஒன்றுமில்லாமையை யோபு புன்முறுவலோடு ஏற்றுக்கொள்கிறார். தன் ஒன்றுமில்லாமையை உணர்பவர் எப்போதும் புன்னகைப்பார். அடுத்தவர் செயல் கண்டு, இருத்தல் கண்டு, கொண்டிருத்தல் கண்டு யோவான் போல பொறாமைப் படார் அல்லது கோபப் படார்.

1 comment:

  1. “ என் தாயின் வயிற்றினின்று பிறந்த மேனியனாய் வந்த நான்,அப்படியே தான் திரும்புவேன்.ஆண்டவர் அளித்தார்; அவர் எடுத்துக்கொண்டார்.அவர் பெயர் போற்றப்பெறுக!” நம் வாழ்வின் இழப்புக்களைச் சந்திக்கும் இருண்ட நேரங்களில் செய்ய/ சொல்ல வேண்டியது என்னவென்று யோபுவின் வழியாக நமக்குச் சொல்லப்படுகிறது.இரண்டு தலைமுடிக்கற்றைகள் விழுந்தாலே புலம்பித்தவிக்கும் நம்மால் இது சாத்தியமா? சாத்தியமாக வேண்டும்.எப்படி? “நாம் சிறுபிள்ளைகளை ஏற்றுக்கொள்வது மட்டுமின்றி ஒன்றுமில்லாமையின் அடையாளமான ஒரு சிறு பிள்ளையாகவும் மாறும்பொழுது.”
    அடுத்து தந்தை சொல்லும் செய்தி அழகானது.நமக்குத்துன்பம் வருகையில் வருத்தப்படுவதை விடுத்து தெய்வப்புதல்வர்கள் நம்மைப் பற்றி உரையாடுகிறார்கள் என எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதே அது.நம் இன்னலுக்குக் காரணம் இவராயிருக்குமா? அல்லது அவராயிருக்குமா? எனும் ஆராய்ச்சிக்கு அவசியமில்லையே! எடுக்கும் இறைவன் கூரையைப் பொத்துக்கொண்டு கொடுக்கவும் செய்வார் என்று சொல்லவரும் பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகளும்! வாழ்த்துக்களும்!

    ReplyDelete