Sunday, September 13, 2020

திருச்சிலுவை மகிமை விழா

இன்றைய (14 செப்டம்பர் 2020) திருநாள்

திருச்சிலுவை மகிமை விழா

கிறிஸ்தவ நம்பிக்கையின் அடையாளம் என அறியப்படும் திருச்சிலுவையின் திருநாளை இன்று நாம் கொண்டாடுகிறோம். தொடக்ககாலத் திருஅவை வாழ்வில், சிலுவையைக் கிறிஸ்தவர்கள் தங்கள் அடையாளமாகக் கொண்டிருந்தது, அவர்களது சம காலத்து உரோமையர்களுக்கு பெரிய இடறலாக இருந்திருக்கும். 

கிரேக்க புராணத்தில், சேயுசு கடவுள் பூவுலகில் மனித உருவம் எடுத்து, மானிடருடன் இணைந்து இன்பங்களைத் தேடுவதை நாம் பார்க்கிறோம். ஆனால், மனிதர்களோடு இணைந்து துன்பங்களைத் தேடிய கடவுள் தன்னை இறுதியில் சிலுவைச் சாவுக்குக் கையளிக்கின்றார்.

ஆக, துன்பம் என்ற வாழ்வியல் எதார்த்தத்தை நாம் கொண்டாடக் கற்றுத் தந்துள்ளார் நம் கடவுள். நமக்குப் பாடம் எடுக்க அவர் தேர்ந்துகொண்ட வகுப்பறையும் கரும்பலகையும்தான் சிலுவை.

இன்று (ஞாயிறு) நம் நாடெங்கும் ஏறக்குறைய எட்டு இலட்சம் மாணவ, மாணவியர், மருத்துவக் கல்லூரிகளின் வாசல்களை மிதிக்க வேண்டும் என்ற இலக்கோடு நீட் தேர்வு எழுதினர். ஒரு சில நீட் மையங்களைக் கடந்து வரும்போது கண்ட காட்சி மிகவும் கொடுமையாக இருந்தது. கனவுகளோடு வந்து நிற்கும் பட்டாம் பூச்சிகளைப் பிடித்து, உன் இறக்கையைக் காட்டு, வாயைக் காட்டு என சோதனை செய்வதும், தேர்வு எழுதுவது ஏதோ குற்றம் செய்வது என்ற உணரச் செய்வதும் நடப்பது போல இருந்தது. நடுத்தர வகுப்பினருக்கு நீட் ஒரு பெரிய கொடை என கல்வியாளர்கள் சொல்கின்றனர். நீட் தற்கொலைகளை வைத்து அரசியல் நடைபெறுகிறது. 'காதல் தோல்வியில் தற்கொலைகள் நடப்பதால், காதலைத் தடை செய்ய முடியுமா?' என ஓர் அறிவுஜீவி சொல்கிறார். ஆக, பூங்கொத்துகள் கொடுத்து தேர்வறைக்குள் அனுப்பப்பட வேண்டிய நம் வீட்டு மொட்டுகள்மேல், எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் செய்யும் அரசும் அதன் அலுவலர்களும், பட்டினி வயிற்றில் அனுப்புவது துன்பம். பயத்தாலும் கலக்கத்தாலும் தவறான முடிவுகளை எடுக்கும் மாணவ, மாணவியரின் இழப்பைக் கண்டு துடிக்காமல், அதை வெறும் செய்தித்தாள் நிகழ்வாகப் பார்ப்பது துன்பம். இப்படியாக, துன்பம் அன்றாடம் நம் கன்னத்தில் நம்மை அறைந்துகொண்டே இருக்கிறது.

பணம், அதிகாரம், பொருள், ஆள்பலம் என வாழ்பவர்கள்முன், ஒன்றுமே இல்லாமல் நிர்வாணமாக நிற்பது, 'இவை எதுவும் இல்லாமல் என்னால் இருக்க முடியும்!' என்று காட்டுகிறது. தங்களின் அடையாளங்களில் தங்களை ஒன்றிணைத்துக்கொண்ட மானிடர்கள் முன், சிலுவையில் அனைத்தையும் களைந்தவராய்த் தொங்கிய இயேசு, அவரது எதிரிகளுக்கு பெரிய சவாலாகத் தொங்குகிறார்.

இன்றைய நாள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) துன்பம் என்னும் வாழ்வியல் எதார்த்தம். இன்பம் மட்டுமே நம் தேடலாகவும் தேடு பொருளாகவும் காட்டப்படும் இன்றைய உலகில், துன்பம் என்பது தவிர்க்கப்பட ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், துன்பம் என்பது இன்பத்தைப் போன்ற இனிய உணர்வு என உணர்த்துகிறது திருச்சிலுவை.

(ஆ) முரண் என்னும் வாழ்வியல் எதார்த்தம். சிலுவையின் இரண்டு பகுதிகள் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசையில் அமைந்துள்ளன. வாழ்வு நம்மை இப்படி ஒரு பக்கமும் அப்படி ஒரு பக்கமும் என இழுத்துக்கொண்டே செல்கிறது. இந்த முரணை ஏற்றுக்கொள்பவர்கள் எந்த நிலையிலும் அமைதியாய் இருக்க முடியும்.

(இ) வெற்றி என்னும் வாழ்வியல் எதார்த்தம். சிலுவை என்பது வெற்றுக்கல்லறையின் தொடக்கம். வெற்றுக்கல்லறை என்பது சிலுவையின் நீட்சி. சிலுவையிலிருந்து தப்பித்து அடையும் வெற்றி வெற்றியாகாது.

இன்று, திருச்சிலுவையைக் கண்முன் வைத்து, அதில் நான் அறையப்பட்டால் என் உணர்வு எப்படி இருக்கும்? எனக் கேட்பது நலம்.


1 comment:

  1. “திருச்சிலுவை மரமிது! இதிலே தான் தொங்கியது.உலகத்தின் இரட்சணியம்.”.... புனித வெள்ளியன்று குருவானவர் இவ்வரிகளைப் பாடுவதைக் கேட்பவர்கள் சிலிர்த்துப்போவது நிஜம்.துன்பத்தின் அடையாளமாகவும், வாழ்வின் முரணைச் சித்தரிப்பதாகவும் காட்டப்படினும், இச்சிலுவை,துன்பமும் இன்பம் போன்றே இனிய உணர்வு என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்பது நமக்கு ஒரு பலம் தரும் விஷயம். இச்சிலுவை நமக்குச்சொல்லும் யதார்த்தத்தோடு இன்றைய மருத்துவத்தேர்வுக்கு அலையும் மாணவ,மாணவிகளின் அவலத்தைத் தந்நை கோடுகாட்டியிருப்பதும்,குமுறுவதும் நம் மனத்தையும் பிசைவது உண்மை.”நமக்குப் பாடம் எடுக்க இயேசு தெரிந்துகொண்ட வகுப்பறையும்,கரும்பலகையும் தான் சிலுவை.”
    இச்சிலுவை எனக்கும் ஒரு அடையாளம் என்பது எனக்குப் பெருமை தருகிறது நான் ஒரு கிறிஸ்தவள் என உலகுக்கு என்னைப் பறைசாற்றுவதன் வழியாக!
    மனத்தைப் பிசையும் ஒரு பதிவு...கூடவே பெருமையும் பீறிட்டெழுகிறது என்பதில் சந்தேகமில்லை. தன் குமுறலை அனைவரின் குமுறலாகவும் மாற்றியுள்ள தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete