Thursday, September 10, 2020

பார்வையற்றவர் பார்வையற்றவருக்கு

இன்றைய (11 செப்டம்பர் 2020) நற்செய்தி (லூக் 6:39-42)

பார்வையற்றவர் பார்வையற்றவருக்கு

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'பார்வையற்ற ஒருவருக்கு பார்வையற்ற இன்னொருவர் வழிகாட்டுதல்' உருவகத்தை வழங்குகிறார் இயேசு. நாமே நம்முடைய கண்களைக் கட்டிக்கொண்டு நடக்க முயன்றால், அல்லது வாகனம் ஒட்ட முயன்றால் என்ன நடக்கும்? நாம் புறப்பட்ட இடத்திலேயே நின்றுகொண்டிருப்போம் அல்லது எதன் மேலாவது மோதிக்கொண்டிருப்போம்.

ஆக, ஒருவர் தன்னையே தகுதியாக்கிக் கொள்ளாமல் இன்னொருவரை தகுதிப்படுத்த முடியாது. 

இந்த உருவகத்தின் பின்புலத்தில் இன்றைய முதல் வாசகத்தை (காண். 1 கொரி 9:16-19, 22-27) நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

பவுலின் அர்ப்பண உணர்வு நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. நற்செய்தி அறிவிப்பை ஒரு பொறுப்பாக ஏற்றுக்கொள்கின்றார். 'நாம் நமக்கிருக்கும் கடமையைச் செய்வதற்கு எந்தவொரு பாராட்டையும் கைம்மாற்றையும் எதிர்பார்த்தல் கூடாது' என்கிறார் அகுஸ்தினார். நற்செய்தி அறிவிப்பிலுள்ள மனநிறைவைதே தன்னுடைய கைம்மாறு என எடுத்துக்கொள்கிறார் பவுல். 

இரண்டாவதாக, 'எல்லாருக்கும் எல்லாம்' என ஆகிறார் பவுல். அதாவது, தன்னுடைய விருப்பு வெறுப்புகளை நற்செய்தியின் பொருட்டு ஒதுக்கிவைக்கிறார்.

மூன்றாவதாக, 'பந்தயத்திடலில் ஓடுதல்' என்ற உருவகத்தைப் பயன்படுத்துகின்ற பவுல், பலர் ஓடினாலும் தன்னையே தகுதியாக்கிக்கொண்ட ஒருவரே வெற்றி பெறுகிறார் என்று சொல்லி, பரிசு பெறுவதற்காகவே ஓடுமாறு கொரிந்து நகர நம்பிக்கையாளர்களை ஊக்குவிக்கின்றாhர். குறிக்கோள் இன்றி ஓடுபவர் இங்குமங்கும் ஓடுவார். குத்துச் சண்டையில் வெறும் காற்றைக் குத்துபவர் வெற்றிபெற மாட்டார். 

இலக்கு பற்றிய தெளிவு, இலக்கை நோக்கிய பயணம், மற்றும் இலக்கை அடையத் தேவையான தகுதியாக்குதல் ஆகியவை நற்செய்திப் பணிக்கு மட்டுமல்லாமல் நம் வாழ்வுக்கும் மிகவே பொருந்தும்.

மேற்காண்பவை இல்லையெனில், நாம் ஒரே இடத்தில் நின்றுகொண்டு இலக்கை அடைந்துவிடலாம் என்று பகற்கனவு காண்போம். அல்லது, ஓடாத பேருந்தில் ஏறி அமர்ந்து, இல்லாத ஓர் ஊருக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டிருப்போம். பேருந்தும் நகராது, இலக்கும் இருக்காது, பணமும் நேரமும் ஆற்றலும் விரயமாகும்.



1 comment:

  1. நமக்கு ஒரு நற்செயல் புரியக் கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தையே ‘ பரிசாகப்’ பார்க்க ஆரம்பித்து விட்டால் வெளியிலிருந்து வரும் பரிசு ஒரு பொருட்டே அல்ல. இதைத்தான் நமக்கு முன்னுதாரணமாக காட்டிச்சென்றுள்ளனர் பவுலடியார் மற்றும் புனித அகுஸ்தினார் போன்றவர்கள்.இவர்களின் வாழ்க்கையின் தெரிவு இவர்களுக்குத் தந்த தெளிவே இவர்களை உயரங்களைத் தொடவைத்தது.நான் எனக்குள்ளே கேட்கும் “எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்கிறேன்? அதற்கு என் தகுதி என்ன?” இந்தக் கேள்விகளுக்கு நான் பதில் காணப் பழகிக்கொண்டாலே போதும் “ நானும் எல்லோருக்கும் எல்லாமாக!” நல்லதொரு செய்தியை சுமந்து வந்த பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete