Sunday, August 30, 2015

ஆண்டவரோடு இருப்போம்!

இறப்பை நமக்கு பிடிப்பதில்லை.

அல்லது பிறப்பை பிடிக்கும் அளவுக்கு நமக்கு இறப்பைப் பிடிப்பதில்லை.

இறப்பில் ஒரு திரை விழுகிறது. திரைக்கு அந்தப் பக்கம் என்ன என்பது நமக்குத் தெரிவதில்லை. திரைக்கு அந்தப் பக்கம் சென்ற எவரும் இதுவரை நம்மிடம் வந்து 'இப்படித்தான் இருக்கும்!' என்று எதையும் சொல்லியதில்லை. ஏன்? வாழும்போதே அடுத்த நிமிடத்திற்கும் நமக்கும் இடையேகூட ஒரு திரை இருக்கின்றதே.

இறப்பு நம் குடும்பத்தில், சமுதாயத்தில் ஒரு நிரப்பமுடியாத வெற்றிடத்தை உருவாக்கிவிடுகின்றது.

நாம் கண்ட கனவுகளை, கட்டிய கோட்டைகளை பொடியாக்கிவிடுகிறது.

என்னதான் இறப்பை நமக்குப் பிடிக்கவில்லையென்றாலும், அது ஒரு அழையா விருந்தாளியாக நம் நடுவீடு வரை வந்துவிடுகிறது.

ஆனால், இறப்புதான் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கிறது.

வாழ்வை வேகமாக்கி முன்னே தள்ளுகிறது.

பிறப்பை போன்றே இறப்பும் ஒரு எதார்த்தம்.

நம் உரையாடலில் முதல் வார்த்தை இறந்தால்தானே அடுத்த வார்த்தை பிறக்க முடியும்!
நம் நடையில் முதல் அடி இறந்தால்தானே அடுத்த அடி பிறக்க முடியும்!
நம் உடலில் முதல் செல் இறந்தால்தானே அடுத்த செல் பிறக்க முடியும்!
ஆக, இறத்தலும், பிறத்தலும் இணைந்தே செல்கின்றன.

'கிறிஸ்தவர்களாகிய நமக்கு வாழ்வு முடிவதில்லை. வாழ்வு மாற்றப்படுகிறது. மண்ணக வாழ்வின் உறைவிடம் அழிந்ததும், விண்ணகத்தில் நிலையான வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது!' என்று திருப்பலியில் நாம் தொடக்கவுரையில் செபித்தாலும், மனத்தின் ஓரத்தில் முடிவில்லா வாழ்வு குறித்த கேள்விக்கு நாம் விடை தெரியாமலேயே நிற்கின்றோம்.

தொடக்கத் திருச்சபையினர் கொண்டிருந்த பல கேள்விகளுள் முதன்மையாக இருந்ததும் இறந்தோர் உயிர்ப்பே. இந்தக் கேள்விக்குத்தான் நாளைய முதல் வாசகத்தில் (காண். 1 தெச 4:13-17) விடையளிக்க முயற்சி செய்கின்றார். தெசலோனிக்கருக்கு எழும் கேள்விகள் இரண்டு:

1. இறப்பிற்குப் பின் வாழ்வு இருக்கிறதா?
2. இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வு நமக்கு இயேசுவால் அல்லது அவரது உயிர்ப்பால் வந்தது என்றால், இயேசுவுக்குமுன் இறந்தவர்கள் நிலை என்ன? அவர்களும் உயிர்ப்பார்களா?

இவற்றில் இரண்டாவது கேள்வி மிக நுணுக்கமானது. 'ஆம், உயிர்ப்பார்கள்' என்று பதில் சொன்னால், 'அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்' என்று கேட்பார்கள். 'இல்லை, உயிர்க்க மாட்டார்கள்' என்று பதில் சொன்னால், 'இயேசுவின் உயிர்ப்புக்கு ஆற்றல் இல்லையா?' என்று கேட்பார்கள். வழுக்குகின்ற மணலில் இப்போது பவுல் நின்றுகொண்டிருக்கின்றார்.

பவுலின் பதில் ரொம்ப சிம்பிள்:

நாம் ஆண்டவரோடு இணைந்திருக்கிறோம். ஆண்டவர் உயிரோடு இருக்கிறார். ஆக, நாம் இருந்தாலும், இறந்தாலும் ஆண்டவரோடு இருப்போம். அதாவது, உயிரோடு இருப்போம்.

இந்தப் பதில் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் மட்டும் இருந்தார்கள் என்றால் சரி என்று ஒத்துக்கொள்ளலாம். ஆனால், எண்ணற்ற மதங்கள், எண்ணற்ற கடவுளர்கள் இருக்கிறார்கள். ஒருவர் இறந்தவுடன் அவரை யார் கிறிஸ்தவர், இசுலாமியர், இந்து, மதம் சாராதவர் என அடையாளம் கண்டு, அந்தந்த இடத்திற்கு 'சார்ட் அவுட்' செய்வார்? கிறிஸ்தவ மதத்திலேயே எத்தனை பிரிவுகள்? சிலருக்கு மூவொரு இறைவன், சிலருக்கு இயேசு, சிலருக்கு யெகோவா, சிலருக்கு தூய ஆவி என வேறு வேறு இன்-சார்ஜ் இருக்க, அவர்கள் எப்படி முடிவெடுப்பார்கள்?

'இறப்பிற்குப் பின் வாழ்வு என்று எதுவும் இல்லை!' என்று சொல்லவும் முடியவில்லை. 'இருக்கிறது!' என்று நம்பவும் முடியவில்லை. எளிதான வழியை பாஸ்கல் என்ற விஞ்ஞானி சொல்கிறார்: 'இருக்கிறது என்றே நம்பு! ஏனெனில் இல்லாமல் போனாலும் பிரச்சினையில்லை. ஆனால், இல்லை என்று நீ நம்பி அது இருந்துவிட்டால் அப்போது உன்னால் ஒன்றும் செய்ய முடியாது!'

பவுலுக்கு மணல் சறுக்கியதுபோல நமக்கும் இன்று மணல் சறுக்குகின்றது.

நாளைய முதல் வாசகம் இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வு பற்றி சொல்கிறது என்றால், நாளைய நற்செய்தி வாசகம் (காண். லூக்கா 4:16-30) இறப்பிற்கு முன் உள்ள இயேசுவின் வாழ்வு பற்றி சொல்கின்றது.

'எல்லாரும் வாழ்வு பெறுவர்!' என்று போதிக்கும் இயேசு இரண்டுமுறை தன் சொந்த மக்களால் கொலைமுயற்சிக்கு ஆளாக்கப்படுகின்றார்: முதலில், நாசரேத்து மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள தயங்குவதன்மூலம் அவரை மனதளவில் கொலைசெய்ய முயல்கின்றனர். இரண்டாவதாக, அவரை உடலளவில் கொல்லும் முயற்சியாக மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் செல்கின்றனர். ஆனால், இரண்டிலும் இயேசு தப்பிவிடுகின்றார்.

என்ன ஒரு முரண்பாடு?

தங்கள் வாழ்வுக்கே அர்த்தம் தெரியாத மானிடம், தங்கள் வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்க வந்த கடவுளை கொன்றுவிட நினைக்கிறது.

'இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வைப்பற்றிக் கவலைப்படுவதை விட இறப்பிற்கு முன் உள்ள வாழ்வைப்பற்றிக் கவலைப்படுவோம்!' என்று ஒற்றைவரியில் சொல்லி 'ஆமென்!' என முடிக்கவும் எனக்கு மனமில்லை.

ஏனெனில் இறப்புக்கு முன் உள்ள வாழ்வுபற்றித்தான் அனுதினம் நாம் கவலைப்படுகிறோமே!


Saturday, August 29, 2015

முயற்சி திருவினையாக்கும்

'வாழ்க்கை மிக குறுகியது. காதல் கொள்ளுங்கள்!' (Life is short. Have an affair) என்ற கவர்ந்திழுக்கும் முதற்பக்கத்துடன் இயங்கிவந்த 'ஆஷ்லி மேடிசன்' (Ashley Madison) என்ற 'காதல்' வலைதளம் கடந்த வாரம் சில தொழில்நுட்ப கில்லாடிகளால் ஊடுருவப்பட்டது. 'திருமணத்திற்கு வெளியே உறவு கொள்ள' ஒருவர் மற்றவரை நெருக்கமாக்கும் இந்த வலைதளத்தில் தங்கள் விவரங்கள் மற்றும் நிழற்படங்களைப் பதிவு செய்திருந்த பலரையும் இந்த கில்லாடிகள் இப்போது பயமுறுத்தி காசுபார்க்கத் தொடங்கியிருக்கின்றனர். 'திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி' இதில் பதிவு செய்தவர்கள் யாரிடமும் புகார் தெரிவிக்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் இந்திய நகரங்களில் இந்த இணையதளத்தில் பதிவு செய்தவர்களின் பட்டியிலில் நம்ம சென்னைக்கு மூன்றாம் இடம் வேறு.

சரி! இப்போ எதுக்கு இந்த டீடெய்ல்ஸ் எல்லாம்!

நேற்று மதியம் என் நண்பர் ஒருவருடன் வங்கிக்குச் சென்றபோது, உரையாடலில் போகிற போக்கில் அவர், 'இப்ப எல்லாம் யாரு ப்ராமிஸ் எல்லாம் கீப்-அப் பண்ணுறா? நாங்களும் இறுதி வார்த்தைப்பாடு கொடுக்கும்போது எல்லார் முன்னிலையிலும் ப்ராமிஸ் கொடுத்தோம். ஆனால், திருப்பலி, விருந்து, அன்பளிப்பு என கொண்டாடி மகிழ்ந்த அந்த நாளை மறந்தது போல கொடுத்த ப்ராமிஸையும் மறந்துவிட்டோம்!' என்றார்.

இதற்கு நான் எதுவும் பதில் சொல்லவில்லை. அப்படியே உரையாடல் வேறு தலைப்பிற்கு மாறியது.

இன்று காலை அருட்செல்வியரின் இல்லத்தில் திருப்பலியில் மறையுரை வைத்துக்கொண்டிருந்தபோது ஒரு புதிய ஐடியா வந்தது.

இன்று திருமுழுக்கு யோவானின் மறைசாட்சியத்தைக் கொண்டாடினோம். இன்றைய நற்செய்திப் பகுதியில் மாற்கு நற்செய்தியாளர் யோவானின் மறைசாட்சியத்தைப் பற்றிப் பதிவு செய்ததை நாம் வாசித்தோம். திருப்பலி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதும் என்னுள் அந்த வசனம் ஓடிக்கொண்டே இருந்தது.

அது என்ன வசனம்?

'இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் (வாக்கு கொடுத்ததால்) அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான்.' (மாற்கு 6:26-27)

துரியோதனன் என்றவுடன் நமக்கு அவன் தீயவன் என எப்படித் தோன்றுகிறதோ, அப்படித்தான் ஏரோது என்றவுடன் நான் அவனை தீயவன் என நினைக்கின்றோம். ஆனால் தீயவர்களிடத்திலும் சில நல்ல குணங்கள் இருக்கின்றன. ஏரோதிடம் நான் மூன்று நற்குணங்களைக் காண்கின்றேன்:

1. அவன் ஏரோதியாவைக் கட்டாயப்படுத்தி தன்னுடன் வைத்திருக்கவில்லை. 'ஏரோது அவனது சகோதரனின் மனைவியை வைத்திருப்பது தவறு' என யோவான் சுட்டிக்காட்டுகின்றார். ஒரு அரசனுக்கு யாருடைய மனைவியையும் வைத்துக்கொள்ள உரிமை இருந்ததை நாம் அறிவோம். அவன் கட்டாயப்படுத்தி ஒருத்தியை மனைவியாக்கினால் அது தவறு. ஆனால், இங்கே ஏரோதியா கட்டாயத்தின் பேரில் ஏரோதிடம் இணையவில்லை (தாவீது செய்ததுபோல!). அவளுக்கும் ஏரோதுவை பிடித்திருக்கிறது.

2. 'ஏரோது யோவானின் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்' (6:21) எனப் பதிவு செய்கிறார் மாற்கு. அதாவது, அவன் ஒரு சந்தர்ப்பக் கைதி. 'நல்லது செய்யக் கூடாது என்பதல்ல. நான் நல்லது செய்யத்தான் நினைக்கிறேன். ஆனால் அதை செய்யத்தான் முடியவில்லை' என்ற பவுலின் போராட்டத்தைத்தான், ஏரோதும் போராடுகிறான். இதுதான் நம் போராட்டமும்கூட. 'இது தவறு! இதை செய்யக்கூடாது!' எனத் தோன்றினாலும், நம்முள் இருக்கும் ஏவாளின் கைவிரல்கள், அந்தத் தவற்றைத் தழுவிக்கொள்ளவே ஆசைப்படுகின்றன.

3. சொன்ன வாக்கைக் காப்பாற்றுவது! அவன் வாக்கு தவறுவானா? இல்லையா? என்ற கேள்வியை வாசகர் உள்ளத்தில் விதைப்பதற்கு மாற்கு அவனின் வாக்குறுதியை இரண்டுமுறை பதிவு செய்கின்றார்: அ. 'உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்!' ஆ. 'நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்!'

ஏரோதின் இந்த மூன்றாவது குணத்தை மட்டும் கொஞ்சம் நெருக்கமாகப் பார்ப்போம்.

யார் வாக்கு கொடுக்கிறார்? ஏரோது.

யாருக்கு? ஏரோதியாவின் மகளுக்கு ('சலோமி' என்பது வரலாறு). இவள் ஏரோதின் சகோதரன் பிலிப்பு வழியாகப் பிறந்தவள். ஆக, ஏரோதுக்கும் இவளுக்கும் நேரடியான இரத்த உறவு கிடையாது.

யார் முன்னிலையில்? விருந்தினர்கள் முன்னிலையில் (அரசவையினர், ஆயிரத்தலைவர், முதன்மைக் குடிமக்கள் - ஆக, எல்லாரும் மனிதர்கள்!)

இந்த விருந்தினர்கள் முன்னிலையில் தான் வாக்குக்கொடுத்துவிட்டோமே என்பதற்காக - அதாவது, அவர்கள் முன் தன் தலை குனிந்துவிடக்கூடாது என்பதற்காக கொடுத்த வாக்கைக் காப்பாற்றுகிறான்.

நாம் நம் படுக்கையருகில் வைக்கும் அலார்ம்கூட நாம் நமக்கு கொடுக்கும் வாக்குறுதியே. இப்படித் தொடங்கி அன்றாடம் நாம் நமக்கும், நாம் பிறருக்கும் கொடுக்கும் வாக்குறுதிகள் ஆயிரமாயிரம். மற்றொரு பக்கம், அரசியலில் ப்ராமிஸ், மதங்களில் ப்ராமிஸ், விளையாட்டில் ப்ராமிஸ் என எல்லா இடத்திலும் 'ப்ராமிஸ்' நிறைந்து கிடக்கிறது. நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டில்கூட 'I promise to pay the bearer the sum of rupees' என அச்சிடப்பட்டு அதன்கீழ் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பமும் இருக்கிறது.

'ஆஷ்லி மேடிசன்' வழியாக ஒருவர் மற்றவர் தங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு தவறு இழைத்தது, அல்லது பிரமாணிக்கத்தை உடைத்தது, 'நல்லதா', 'கெட்டதா' என்ற கலந்தாய்வு இப்போது வேண்டாம். அல்லது அருள்நிலை வாழ்வில் தங்களை இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் எந்த அளவிற்கு தங்கள் வாக்குறுதிகளில் நிலைத்திருக்கிறார்கள் என்ற ஆய்வும் வேண்டாம்.

நமக்கு ஏரோது வைக்கும் சின்ன கேள்வி இதுதான்:

'கொஞ்ச நேரம் தன்னுடன் இருந்த சில வருடங்களில் அழிந்து போகும் மனிதர்களுக்குத் தன் குடிபோதையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற சமரசத்திற்கே இடமில்லாமல் நான் முயற்சி செய்தேன் என்றால், என்றும் உங்களுடன் இருக்கும் உங்கள் கடவுளுக்கு அல்லது கடவுள் முன் நீங்கள் தரும் வாக்குறுதியைக் காப்பாற்ற நீங்கள் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்?'

'முயற்சி திருவினையாக்கும்!'


Friday, August 28, 2015

ஆரோக்கிய அன்னை

'36 வயதினிலே' திரைப்படத்தில் தோழி கதாநாயகியிடம் சொல்வாள்: 'நாம் இவ்வளவு நாட்கள் கேள்விகளுக்கு வெறும் பதிலாக இருப்பதால்தான் நாம் இந்த நிலையில் இருக்கின்றோம். நாமே கேள்வி ஆகிவிட்டால் பின் யாரும் நம்மை அடிமைப்படுத்த முடியாது!'

மரியாள் இன்று கேள்வியாகவும் இருக்கின்றார். பதிலாகவும் இருக்கின்றார்!

மரியாள் என்றும் வியப்புக்குரியவர்! எந்தப் பெயர் கொண்டு அவரை அழைத்தாலும் அவரின் அழகும், இளமையும், இனிமையும் குன்றுவதில்லை. (இந்து மரபில் அதிக பெயர்களால் வணங்கப்படுபவர் விநாயகர்!)

நாளை 'கீழைநாட்டின் லூர்து' என்று சொல்லப்படும் 'வேளாங்கண்ணியில்' (ஏன் 'லூர்தை' 'மேலைநாட்டு வேளாங்கண்னி!' என்று சொல்லக்கூடாது?) திருவிழா கொடியேற்றம்.

'கொடியேற்றம்' - இது நாம் இன்னும் முழுமையாக கிறிஸ்தவர்கள் இல்லை என்பதற்கான வரலாற்றுச் சான்று. நம் இந்திய மரபிலிருந்து நாம் தழுவிக்கொண்டதுதான் கொடிமரமும், கொடியேற்றமும். நவநாள்கள் பக்தியாக சிறப்பிக்கப்படுவது நம் நாட்டில் மட்டும்தான் என நினைக்கிறேன். செபமாலை-திருப்பலி-சிறப்பு மறையுரை என நம் ஊர் கோலகலாமாக இருக்கும்.

வேளாங்கண்ணியில் நடந்ததாகச் சொல்லப்படும் மூன்று அற்புதங்களையும் (முடமான சிறுவன் நடந்தது, கடல்மீது தவித்த கப்பல் காப்பாற்றப்பட்டது, பொங்கிய பால்குடம்) வத்திக்கான் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை.

வேளாங்கண்ணி மாதாவை ஆரோக்கிய அன்னை என நாம் அழைக்கின்றோம். 'கால் ஊனமுற்ற சிறுவனுக்கு நலம் தந்ததுதான்' இதன் பின்புலத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

நலம் தரும் அன்னை இவர்.

இவரைத் தாயாகக் கொண்டாட மதங்கள், மொழிகள், இனங்களைக் கடந்து மக்கள் இந்நாட்களில் வேளாங்கண்ணியில்கூடுவர்.

இதற்கான தயாரிப்பில் நாகப்பட்டினம் ஆட்சியர் திரு. பழனிச்சாமி வேளாங்கண்ணியில் முகாம் இட்டிருக்கிறார். தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. போக்குவரத்து, மருத்துவம், பாதுகாப்பு என எல்லா ஏற்பாடுகளும் அங்கே செய்யப்படும். இந்துக்கள், இசுலாமியர், கிறித்தவர்கள், மத நம்பிக்கை இல்லாதவர் என எல்லாரும் ஒருவரோடொருவர் ஒன்றித்து இருப்பதே அற்புதம் இல்லையா?

என்னைப் பொறுத்தவரையில் இதுதான் 'மரியாளின் வெளிப்பாடு!'

எனக்கு வேளாங்கண்ணி மாதா பக்தியைக் கற்றுக்கொடுத்தவர் என் அம்மா. சிறு வயதில் தெருவில் ஒருநாள் கண்டெடுத்த மூடியில்லாத மாதா தீர்த்தப்பாட்டிலில் நான் பார்த்த வேளாங்கண்ணி மாதாவை என் 12ஆம் வகுப்பு வரை என்னுடன் வைத்திருந்தேன். என் திருநிலைப்படுத்துதலுக்குப் பின் என் நண்பர்களோடு நான் அங்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு நாளும் வேளாங்கண்ணி வளர்ந்து கொண்டே இருக்கிறது. மாதாவின் பிரசன்னத்திற்கு இது ஒன்றே சான்று.

'ஆரோக்கியம்!' - இது மட்டும் நம் வாழ்வில் குறைவுபட்டால் எல்லாம் குறைந்துவிடுகிறது. வாழ்க்கை முடங்கிவிடுகிறது.

இந்த ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி வானில் பறக்கவிடப்படும்நேரம் நிறையப் பேர் கண்களில் கண்ணீர் வழியும். இந்தக் கண்ணீரில் வங்காள விரிகுடாவே கொஞ்சம் ஸ்தம்பித்துப்போகும்.

ஆக, மேலிருந்து வரும் பக்தி, கீழிருந்து வரும் பக்தி என நாம் கிறிஸ்தவ பக்தி முயற்சிகளைப் பிரித்தால், வேளாங்கண்ணியின் பக்தி முயற்சி கீழிருந்து வருவது. மக்களின் வியர்வை, கண்ணீரிலிருந்து வருவது. இதை யாரும் எந்த புத்தகத்திலும் கோட்பாடாக வரைந்துவிட முடியாது.

நம் ஒவ்வொருவரின் கண்களில் கண்ணீர் இருக்கும் வரை,

இயேசுவின் அன்னையும், நம் அன்னையுமான மரியாள் தோன்றிக்கொண்டேதான் இருப்பார்.

கானாவூர் திருமணத்தில் வெற்று ஜாடிகளை திராட்சை ரசத்தால் நிரப்ப

தன் மகனை வேண்டிய அன்னை,

காலியான நம் ஜாடிகளையும் நிரப்ப அருள்கூர்வாராக!

ஆரோக்கிய அன்னையின் திருநாள் வாழ்த்துக்களும், செபங்களும்!


Thursday, August 27, 2015

அணைந்து போன திரி

என் பெயர் வெரோணிக்கா!

நீங்கள் நாளைய நற்செய்தியில் (காண். மத்தேயு 25:1-13) வாசிக்கும்

பத்துக்கன்னியர் உவமையில் வரும் ஒரு கன்னி நான்!

நேற்று காலை என்னுடன் தையல் படிக்கும் சாரா என்னைத் தேடி ஓடி வந்தாள்!

'ஏய்! வெரோ! எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா?'

'என்ன?'

'நாளைக்கு ஒரு திருமண நிகழ்வு. மணமகன் தோழியராய் பத்து பேர் வேண்டுமாம். ஒன்பது பேர் ஏற்பாடு செய்தாயிற்று. இன்னும் ஒரு ஆள் வேணும்! நீயும் வாடி...ப்ளீஸ்...!'

'நீ வந்தா நானும் வர்றேன்!'

'ஆமாம்! நானுந்தான்!'

மாலையில் திருமணம் என்பதால், 'கையில் விளக்கு எடுத்துக்கொண்டு போ!' என்று சொன்னாள் என் அம்மா.

விளக்கை அவசர அவசரமாக துடைத்தேன்.
திறந்து பார்த்தேன். எண்ணெய் ஆழத்தில் சொட்டு சொட்டாய்த் தெரிந்தது.

கல்லைப் போட்டு அதை மேலே கொண்டு வர நான் என்ன காக்காவா?

என் வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரி அணையாமல் மெல்ல சாய்த்து

அதில் உள்ள கொஞ்ச எண்ணெயை என் விளக்கில் ஊற்றிக்கொண்டேன்.

சாராவுடன் சேர்ந்து திருமண மண்டபத்திற்குச் சென்றேன்.

'என்னடி சாரா? விளக்குடன் சேர்த்து ஏதோ கையில் டப்பா?' என்றேன்.

'எக்ஸ்ட்ரா எண்ணெய் கொஞ்சம் எடுத்துக்கொண்டேன்! எதுக்கும் பயன்படும்ல!'

'இருக்கப்பட்டவள் நீ எடுத்துக்கொண்டாய்! இல்லாதவள் நான் என்ன செய்ய?' என் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்.

காத்திருந்தோம். காத்திருந்தோம். மணமகன் வந்தபாடில்லை.

என் கண்களில் தூக்கக் கலக்கம். எப்பொழுது தூங்கிப் போனேன் என்று தெரியவில்லை.

'மணமகன் வருகிறார்!' 'மணமகன் வருகிறார்!' என்ற சத்தம் கேட்டு எல்லாரும் எழுந்தோம்.

விளக்குகளைப் பார்த்தால் விளக்குகள் இப்போவா, பிறகா என்று கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.

'இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றினால்தான் நன்றாக எரியும். ஆனால் இந்த எண்ணெய்க்கே நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்!'

சாராவைப்போலவே டப்பாவில் எண்ணெய் கொண்டுவந்த இருக்கப்பெற்றவர்கள் தங்கள் விளக்குகளுக்கு உயிர் கொடுத்தார்கள்!

'சாரா! எனக்கும் கொஞ்சம் எண்ணெய் கொடு!' என்றேன்.

'ஐயயோ! அப்போ எனக்கு இல்லாம போச்சுனா! நீ போய் கடையில் வாங்கிக்கோ!'

'கடையில் வாங்கிக்கவா? காசிருந்தால்தானடி கடைக்குப் போவேன்!'

என்னைப்போலவே கையில் எண்ணெய் இல்லாத - ஆனால் கையில் காசு இருந்த - மற்ற நான்கு பேர் கடைக்கு வேகமாக ஓடினர்.

மணமகன் வந்துவிட்டார்! இதோ என் கண்முன் அவர்!

விளக்குகள் ஏந்திக்கொண்டிருந்த ஐந்து பேரைக் கண்டுகொள்ளாமல் வேகமாக என்னிடம் வந்தார்.

'ஐயோ! என்னை வசைபாடப் போகிறார்!' என நினைத்துக்கொண்டு சாராவின் முதுகிற்குப் பின் ஒதுங்கினேன்.

என் தோளைத் தொட்டார்.

'என் அருகில் வா!' என்றார்.
'நீயே என் மணவாட்டி!' என்றாள்.

என் கையை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்.

'இது கனவா? இல்லை! கிள்ளினால் வலிக்கிறதே!'

திருமண மண்டபத்திற்கு தோழியாய்ச் சென்றவளுக்கு மணவாட்டி பாக்கியம் கிடைத்தது.

நிற்க...

இயேசுவின் பத்துக் கன்னியர் உவமையில் முன்மதியில்லாத ஐந்து கன்னியர் வெளியே அனுப்பப்பட்டதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஏன்?

தவறு அவர்கள்மேல் அல்லர்! பின் யார்மேல்?

முன்மதியோடு எண்ணெய் கொண்டுவந்த ஐந்துபேர் மேலும்!

மணமகன் மேலும்!

எதற்காக?

முன்மதியோடு எண்ணெய் கொண்டுவந்தவர்கள் இன்றைய முதல் உலக நாடுகள் போல. முன்மதி என்ற பெயரில் அடுத்தவர்களுக்கு உரியதையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வர். இந்த மாதம் 13ஆம் தேதி பூமியின் 'இலக்க கடந்த நாள்' என்று கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது, இந்த வருடம் முழுவதும் நாம் செலவழிக்க வேண்டியதை நான்கு மாதங்களுக்கு முன்னே சுரண்டி முடித்துவிட்டோம்.

'பின் தேவைப்படும்!' என்று நான் சேகரித்து வைப்பதும் எதுவும் முன்மதி அல்ல. சுயநலமே!

இந்த சுயநலம்தான் அந்த ஐந்துபேர் தங்கள் எண்ணெயைப் பகிர்ந்து கொள்ள தடுக்கிறது.

இரண்டாவதாக, மணமகனின் காலதாமதம். வழக்கமாக திருமண இல்லங்களில் மணமகள் வருகைதான் தாமதமாக இருக்கும். ஆனால், இங்கு நேரந்தவறுகிறார் மணமகன். இந்த மணமகனால் பாவம் ஐந்து பேர் பாதிக்கப்படுகின்றனர்.

நாளை நாம் கொண்டாடும் அகுஸ்தினார் இந்த வெளியனுப்பப்பட்ட ஐந்து பேரில்தான் ஒருவர் என நினைக்கிறேன்.

ஏனெனில், 'பின்பு பயன்படும்!' என அகுஸ்தினார் தனக்கென எந்த புண்ணியங்களையும் சேர்த்து வைக்கவில்லை.

மேலும் கடவுளை, 'தாமதமாக நான் உன்னை அன்பு செய்தேன்!' என்கிறார். ஆக, இவரின் வாழ்விற்குள் மணமகனின் வருகையும் தாமதமாகவே இருந்தது.

மணமகன் வந்தபோது அணைந்து போன திரியோடும், காய்ந்து போன விளக்கோடும்தான் நின்றுகொண்டிருந்தார் அகுஸ்தினார்.

அவரைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார் இந்த மணமகன்.

இன்று நம் வாழ்விலும் திரிகள் அணைந்தால், விளக்கு காய்ந்து போனால், நான் ஒரு புண்ணியமும் செய்யவில்லையே என வருத்தம் மேவினால் தளர்ந்து போக வேண்டாம். ஏனெனில் நாம் இருப்பதுபோல் நம்மை ஏற்றுக்கொள்வார் அந்த மணமகன்!

'உன்னை மிகத் தாமதமாக அன்பு செய்தேன்.
என் அன்பே!
என்றும் பழமையான, என்றும் புதுமையான அழகே!
உன்னை மிகத் தாமதமாக நான் அன்பு செய்தேன்.
நீ என்னுள்ளே இருந்தாய்.
ஆனால் நான் வெளியே இருந்தேன்.
அங்கே நான் உன்னைத் தேடி அலைந்தேன்.
என் அன்பில்லா நிலையில் நீ படைத்தவற்றை நான் அன்பு செய்து கிடந்தேன்.
நீ என்னோடு இருந்தாய்.
ஆனால் நான் உன்னோடு இல்லை.
நீ படைத்தவைகள் படைத்த உன்னிடமிருந்து என்னைத் தூர நிற்க வைத்தன.
ஆனால் அவைகள் என்றும் உன்னுடையவைதாமே!
நீ அழைத்தாய்! கத்தினாய்! உன் குரல் என் செவிட்டுக் காதுகளைக் கிழித்தது.
நீ மிளிர்ந்தாய்! மின்னினாய்! உன் வெளிச்சம் என் குருட்டுக் கண்களுக்கு ஒளி தந்தது!
நீ உன் நறுமணத்தை என்மேல் ஊதினாய்!
உன்னை சுவாசித்த நான் உனக்காக ஏங்கித் தவிக்கிறேன்.
உன்னை சுவைத்த நான் உனக்காக நான் பசித்திருக்கிறேன்.
உன்மேல் தாகமாயிருக்கிறேன்.
நீ என்னைத் தொட்டாய்.
நான் உன் அமைதியால் பற்றி எரிந்தேன்!'

(அகுஸ்தினார், 'உள்ளக்கிடக்கைகள்', பிரிவு 10. எண். 27)


கண்ணீரால் கடவுளை வென்றவர்!

'விழிப்பாய் இருங்கள்!' - எப்படி? திருடன் கன்னமிட்டுத் திருடாதவண்ணம்!

'ஆயத்தமாய் இருங்கள்!' - எப்படி? தலைவன் வரும்போது பணிசெய்து கொண்டிருக்கும் பணியாள் போல!

இப்படி இரண்டு வார்த்தைகளால் நாளைய நற்செய்தியில் (காண். மத்தேயு 24:42-51) அறிவுரை சொல்வதற்குப் பதிலாக, 'ஒரு அம்மாவைப் போல இருங்கள்!' என்று இயேசு எளிதாகச் சொல்லியிருக்கலாம்!

ஆம்! தன் பிள்ளைக்காக விழிப்பாய், ஆயத்தமாய் இருப்பவள் ஒரு தாய்மட்டுமே!

நம் வாழ்க்கை என்பது பிள்ளை என்றால் நாம் அனைவரும் அன்னையர்தானே!

'Manichaeism' என்ற தவறான மெய்யியல் போதனை என்னும் திருடன் தன் மகன் அகுஸ்தினாரை திருடிவிடாத வண்ணம் 'விழிப்பாய் இருந்தும்!', மனமாற்றம் என்ற வீட்டுத்தலைவன் தன் மகனின் கதவை எப்போது வேண்டுமானாலும் தட்டலாம் என 'ஆயத்தமாய் இருந்தும்!' மாதிரி காட்டியவர்தான் நாளை நம் கொண்டாடும் மோனிக்கம்மாவின் வாழ்க்கைப்பாடம்.

இந்த இரண்டு மதிப்பீடுகளில் மோனிக்கா நமக்கும் அம்மாவே!

மோனிக்கா என்றாலே 'கண்ணீரால் கடவுளை வென்றவர்!' என்று நாம் சொல்ல முடியும்.

'தென்னையை வைத்தா இளநீரு! பிள்ளையைப் பெத்தால் கண்ணீரு!' என்ற சொலவடை மோனிக்கம்மாளின் வாழ்வில் 'கல்யாணம் முடிச்சால் கண்ணீரு!' என்றும் கசந்து போனதுதான் மிகப்பெரிய சோகம்.

தான்தோன்றித்தனமாக வாழ்ந்த தன் கணவன் இளவயதில் இறந்துவிட, தன் மகன் அகுஸ்தினார் 17 வயதில் தப்பறைக் கொள்கை ஒன்றில் மூழ்கி அதில் திளைத்துக் கிடக்க, அவன் மனமாறி கத்தோலிக்க நம்பிக்கையை தழுவமாட்டானா என்று அவனின் 31 வயது வரை கண்ணீர் வடிக்கின்றார் மோனிக்கா.

'உன் மகன் என்றும் உன்னோடு!' 'உன் கண்ணீரின் மகன் அழிந்து போகமாட்டான்!' - இந்த இரண்டும் மோனிக்கம்மாளுக்கு ஒரு தலத்திருஅவை ஆயர் வழியாக இறைவன் சொன்ன வார்த்தைகள்.

கார்த்தேஜிலிருந்து, ரோம், ரோமிலிருந்து மிலான் என தப்பி ஓடிய அகுஸ்தினாரை அவருக்கே தெரியாமல் பின்தொடர்கின்றார் மோனிக்கா.

இறுதியில் வென்றுவிடுகின்றார்! அகுஸ்தினார் தூய அம்புரோசியாரின் திருமுன் கத்தோலிக்க நம்பிக்கையை ஏற்று திருமுழுக்கு பெறுகின்றார்.

மோனிக்கா மரணப்படுக்கையில் தன்னை நோக்கிப் பேசிய மூன்று வார்த்தைகளை தன் 'உள்ளக்கிடக்கைகளில்' (Confessions) இவ்வாறு பகிர்ந்து கொள்கின்றார் அகுஸ்தினார்:

1. 'நான் எதற்காக இன்னும் உயிர் வாழ்கிறேன் என்றும், நான் இன்னும் செய்ய வேண்டிய பணி என்ன என்றும் எனக்குத் தெரியவில்லை. நான் விரும்பியதெல்லாம் உன்னை ஒருநாள் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவனாகவும், வான்வீட்டின் மகனாகவும் பார்ப்பதுதான். ஆனால் நான் கேட்டதற்கும் மேலாக கடவுள் எனக்குக் கொடுத்துவிட்டார். ஆம்! வாழ்வின் சுகங்கள் எதுவும் வேண்டாம் என்று நீ எல்லாவற்றையும் விலக்கி உன்னையே அவரின் பணிக்கு ஒப்படைத்துவிட்டாயே! எனக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?'

2. 'நான் எங்கு புதைக்கப்பட்டால் என்ன, கடவுளின் கைக்கு எதுவும் தூரமா என்ன? அவர் என்னை எழுப்பி என்னைத் தன் கரங்களால் அணைத்துக்கொள்வார்!'

3. 'என் கண்ணீரின் மகனே!'

இன்று எந்தத் தாயும் தன் மகன் அல்லது மகள் திருமுழுக்கு பெறவில்லையே என்பதற்காக அழாவிட்டாலும், பிள்ளைகளின் எத்தனையோ செயல்பாடுகள் அவர்களின் கண்களைக் குளமாக்குகின்றன.

நாளைய முதல்வாசகத்தில் (காண். 1 தெசலோனிக்கர் 3:7-13) தூய பவுலடியார் 'அல்லும் பகலும் ஆர்வமுடன் சிந்தும் மன்றாட்டு' என்னும் கண்ணீரும் அவரின் திருச்சபை என்ற குழந்தையைக் கடவுளை நோக்கித் திருப்புகிறது.

நம் வீட்டின் தலையணைகளுக்கு மட்டும்தான் தெரியும் நம் தாயின் கண்ணீர்!

இந்தத் தாய் ஒரு உன்னதமான பிறவி!

அதிக மகிழ்ச்சி என்றாலும் அழுதுவிடுவாள்! அதிக துக்கம் என்றாலும் அழுதுவிடுவாள்!

இவளே கண்ணீரை நிறுத்தினாலன்றி இவளின் கண்ணீருக்கு யாரும் மடை கட்ட முடியாது!

கண்ணீரால் கண்கள் கலங்கினாலும் இவளின் கண்கள் 'விழிப்பாகவும்', 'ஆயத்தமாகவும்' இருக்கும் எப்போதும்!

Tuesday, August 25, 2015

போலித்தனமும், நெறிகேடும்

பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களை நோக்கிய இயேசுவின் வசைமொழிகள் நாளைய நற்செய்தியிலும் (காண். மத் 23:27-32) தொடர்கின்றன.

மத்தேயு 23 வாசிப்பதற்கு ஒரு நெருடலான பகுதி. ஏன்? 'வெளிவேடக்காரரே,' 'குருட்டு வழிகாட்டிகளே,' 'குருட்டு பரிசேயரே,' 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே' என்ற வார்த்தைகளால் இயேசு பரிசேயரையும், மறைநூல் அறிஞர்களையும் சாடுகின்றார். 'இரக்கமுள்ளோர் பேறுபெற்றோர்' என்றும் 'ஒரு கன்னத்தில் உங்களை அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டுங்கள்' என்றும், அன்பு, கருணை, மன்னிப்பு என போதித்த இயேசுவின் உதடுகள் மேற்காணும் தூற்றும் அல்லது சபிக்கும் வார்த்தைகளை எப்படி உச்சரித்தன?

மேற்காணும் இயேசுவின் சாபச் சொற்களை மத்தேயு நற்செய்தியாளர் மட்டுமே பதிவு செய்கின்றார். மேலும் இந்தச் சாபத்திற்கு ஆளாபவர்கள் பரிசேயர்களும். மறைநூல் அறிஞர்களும் மட்டுமே. சதுசேயர்கள், ஏரோதியர்கள் தப்பித்துக்கொள்கின்றனர். மத்தேயுவின் பதிவு மற்றொரு சந்தேகத்தையும் எழுப்புகிறது: இந்த எல்லா சாபங்களையும் இயேசு ஒரே நேரத்தில் சொன்னாரா? அதாவது, ஒருநாள் இதற்கென ஒதுக்கி, அவர்களைக் கூட்டி வைத்து அவர்களிடம் இப்படிச் சபித்தாரா? அப்படிச் செய்திருக்க வாய்ப்பில்லை. வேறு வேறு இடங்களில் சொன்னதை மத்தேயு மொத்தமாகக் கோர்த்து இங்கே போட்டிருக்கிறாரா? அதுவும் இல்லை. அப்படியிருந்தால் மற்ற நற்செய்தியாளர்களும் இதைப் பதிவு செய்திருக்க வேண்டுமே!

இந்தக் கேள்விக்குப் பதில் தெரிய மத்தேயு நற்செய்தியின் பின்புலம் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

உரோமையருக்கு எதிரான யூதர்களின் எதிர்ப்பிற்குப் பின் யூத மதம் தன்னையே ஒரு சுயஆய்வுக்கு உட்படுத்துகின்றது. இரண்டு பிரச்சினைகளை அது சந்திக்க நேரிடுகின்றது: ஒன்று, கடவுள் தங்களுக்கென வாக்களித்த நாட்டில் தங்கள்மேல் புறவினத்தார்கள், அதாவது, உரோமையர்கள் ஆட்சி செலுத்துகின்றனர். இவர்களின் ஒரே அடையாளமான ஆலயத்தையும் ஆக்கிரமித்துக்கொள்கின்றனர். இறைவனின் சட்டத்திற்கு மாற்றாக சீசரின் சட்டத்தைக் கடைப்பிடிக்குமாறு சொல்கின்றனர். இரண்டு, புதிதாய் உருவாகி வரும் நசரீன்கள் (கிறிஸ்தவர்கள் முதலில் இப்படித்தான் அழைக்கப்பட்டனர்).

உரோமையர்கள் இனி தங்களை ஆளக்கூடாது என நினைத்தவர்கள் புரட்சியில் ஈடுபட, அந்தச் சண்டையில் கி.பி. 70ஆம் ஆண்டு அவர்களின் அடையாளமான எருசலேம் ஆலயம் தரைமட்டமாகிவிடுகிறது. ஆலயம் தரைமட்டமானாலும் உரோமைப்படை யூதேயாவிலிருந்து பின்வாங்குகிறது. இப்போது யூதர்களுக்கு ஆலயம் கிடையாது. வேறு ஏதாவது ஒரு அடையாளத்தை அவர்கள் கையில் எடுக்க வேண்டும். அப்படி அவர்கள் எடுப்பதுதான் 'சட்டநூல்' அல்லது 'தோரா'. இந்தச் சட்டநூலை மக்களுக்கு எங்கு வைத்து அறிவிப்பது? ஆலயத்திற்கு மாற்றாக தொழுகைக்கூடங்கள் முளைக்கின்றன. அவை ஆலயம் இல்லாத குறையை நீக்குகின்றன. ஆக, உரோமையர்களின் பிரசன்னத்திற்கு முடிவு கட்டியாயிற்று. இப்போது யூத மதத்தில் இன்னும் கொஞ்சம் அழுக்காக ஒட்டிக்கொண்டிருப்பது, 'நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாய் இருக்கும்' நசரீன்கள். யூதர்களாய் இருந்து நசரீன்களாய் மாறியவர்களும் தொடர்ந்து யூத தொழுகைக்கூட வழிபாடுகளில் பங்கேற்கின்றனர். ஏனெனில் நசரீன்களுக்கென்று வழிபாடுகள் எனவும் தொடங்கப்படவில்லை. இப்படி இவர்கள் தங்களின் தொழகைக்கூட வழிபாடுகளில் கலந்துகொள்வதை விரும்பாத 'தூய்மையான' யூதர்கள், இவர்களைச் சபிப்பதையே செபங்களாகச் சொல்ல ஆரம்பிக்கின்றனர். இந்தச் சாபமொழியைக் கேட்கமுடியாமல் நசீரீன்கள் தாங்களாகவே தொழுகைக்கூடங்களை விட்டு வெளியேறுகின்றனர். அப்படி வெளியேறாதவர்கள் வற்புறுத்தி வெளியேற்றப்படுகின்றனர். இவர்களின் வெளியேற்றத்திற்கு காரணமானவர்கள் பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும். ஏனெனில் வழிபாட்டை நெறிப்படுத்தும், ஆளுகை செய்யும் அதிகாரம் இவர்களிடம்தான் இருந்தது. இப்படி வெளியேறியவர்கள் பெரும்பாலும் மத்தேயுவின் திருச்சபையில்தான் இருந்தனர். ஆக, அவர்களுக்கு ஏற்பட்ட இந்த அநீதியைக் கண்டிக்கும் விதமாக, அவர்களுக்கும் இயேசுவுக்கும் முன்பே இருந்த பகையை மனதில் வைத்து உருவாக்கும் 'சாபமொழிகளே' மத்தேயுவின் 23ஆம்; அதிகாரம். (முதல் ஏற்பாட்டில் சாபங்கள் அதிகமாக உள்ள ஒரு பகுதி இணைச்சட்டம் 28).

நாளைய நற்செய்தியில் இயேசு முதலில் பரிசேயர்களை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே என்றும், இரண்டாவதாக, இவர்கள் பழைய கல்லறைகளை அலங்காரம் செய்கின்றனர் என்றும் சாடுகின்றனர். ஆக, முதல் 'கல்லறை' உருவகம். இரண்டாம் 'கல்லறை' எதார்த்தம்.

'போலித்தனம்', 'நெறிகேடு' - இந்த இரண்டும்தான் பரிசேயர்களுக்குள் இருப்பதாகச் சொல்கின்றார்.

'எனக்கும், எனக்கும் உள்ள உறவில்' வெளிப்படுவது 'போலித்தனம்'. அதாவது, நான் நல்லவனாக இருப்பதாக என் மனதில் நினைத்துக்கொள்கிறேன். ஆனால் நான் நல்லவனாக இருப்பதில்லை. இது மற்றவர்களுக்குத் தெரியாது. எனக்கு மட்டுமே தெரியும்.

'எனக்கும், பிறருக்கும் உள்ள உறவில்' வெளிப்படுவது 'நெறிகேடு'. 'ஒழுங்கின்மை' என்கிறது கிரேக்கப்பாடம். அதாவது என் செயலால் நான் பிறழ்வை ஏற்படுத்துகிறேன்.

இந்த இரண்டும் தன்னிடம் இல்லை என்று நாளைய முதல் வாசகத்தில் (1 தெச 2:9-13) என்று பெருமைப்பட்டுக்கொள்கின்றார் பவுலடியார்.

'என்னிடம் இவை இருக்கின்றதா?' - என்று கேட்கிறேன் நான்!


Monday, August 24, 2015

சர்க்கரை அளவு

ஒரு வணிக நிறுவனம் தன் பொருட்களை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு எண்ணற்ற வழிகளைக் கடைப்பிடிக்கிறது. அவற்றில் ஒன்று 'போதனை' (Canvassing). அதாவது, தன் நிறுவனத்தின் சார்பாக நியமிக்கப்பட்ட ஒருவரை நுகர்வோரின் முன் நேரிடையாகவோ, ஊடகம் வழியாகவும் நிறுத்தி, தன் பொருளைப் பற்றி அவரைப் போதிக்கச் செய்கிறது. போதிக்கும் நபர் நுகர்வோருக்கு அறிமுகமானவராக இருக்க வேண்டும். அல்லது நுகர்வோரைக் கவர்ந்திழுப்பவராக இருக்க வேண்டும். ஆனால், இவர்களுக்கும், நுகர்வோருக்கும், தாங்கள் 'போதிக்கும்' பொருளுக்கும்கூட எந்த தொடர்பும் இல்லை. ஆக, இவர்களின் போதனை இவர்களைப் பாதிக்கவில்லையென்றாலும் இவர்கள் விளம்பரம் செய்யும் நிறுவனத்தை ஒருபடி முன்னால் எடுத்துச்செல்கின்றது. மேலும், இந்தப் போதனை அல்லது போதிக்கும் நபர், நிறுவனத்திற்கும், நுகர்வோருக்கும் இடையே ஒரு இணைப்புக் கோடாக செயல்படுகின்றார்.

நாளைய முதல் வாசகத்தில் (காண். 1 தெச 2:1-8) தூய பவுலின் போதனை பற்றியும், நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 23:23-26) பரிசேயர் மற்றும் சதுசேயரின் போதனை பற்றியும் வாசிக்கின்றோம்.

எதற்காக பரிசேயர்கள் அல்லது சதுசேயர்களோ அல்லது பவுலோ போதிக்க வேண்டும்?

மதங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் மேக்ஸ் வேபர் ஒரு கோட்பாட்டைச் சொல்கின்றார்: Routinization of charisma. இதன் அர்த்தம் என்னவென்றால், ஒரு மதத்தை நிறுவும் நிறுவனர் இருக்கும் வரை, மதம் அந்த நிறுவனரின் 'அருள்;கொடை' (charism)யால் மக்களை ஈர்க்கிறது. அவர் இறந்தவுடன் அல்லது மறைந்தவுடன் அவரின் இடத்தைப் பெறும் மற்றவரின் 'அருள்கொடையை' நோக்கி மக்கள் வருவதில்லை. ஆக, முதல் நிறுவனரின் அருள்கொடை உடனடியாக ஒரு 'தொடர் கருத்தியலாக' (routine cult or doctrine) மாற்றப்படுகிறது. இந்தக் கருத்தியல் நிறுவனரின் சீடர்களால் போதனையாகத் தரப்படுகிறது.

இப்போது இந்தச் சீடரின் மேல் இரண்டு சுமை ஏற்றப்படுகிறது. ஒன்று, இவர் தன் நிறுவனரின் உள்ளத்தைப் பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும். இரண்டு, நிறுவனர் இல்லாத குறை ஏற்படாத மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். சீடத்துவம் படிப்படியாக குருத்துவமாக அல்லது பக்தியாக மாறுவது இந்த இடத்தில்தான்.

இயேசுவுக்கு முதலில் சீடர்கள் இருந்தார்கள். ஆனால் படிப்படியாக சீடர்கள் மறைந்து இன்று வெறும் பக்தர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். சீடராக இருப்பதை விட பக்தராக இருப்பது ரொம்ப எளிதுதானே! இது இயேசுவுக்கு மட்டுமல்ல. எல்லா பெரிய மனிதர்களுக்கும் பொருந்தும். நாட்டையே தன் பின்னால் வைத்திருந்த மகாத்மா காந்தி என்று அக்டோபர் 2 மட்டும் அஞ்சலி செலுத்தப்படுகின்றார்.

இந்த நிலை உருவானதற்குக் காரணம் என்ன?

போதிப்பவர்கள் தங்கள் நிறுவனரின் அருட்கொடையை மக்களுக்கு எடுத்துச் சொல்லாமல், வெறும் மேலோட்டமான சட்ட, திட்டங்களைப் பேசுவதால்தான். இதைத்தான் இயேசு பரிசேயர்களிடம் சாடுகின்றார்: 'நீங்கள் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றை போதிக்காமல் அல்லது கடைப்பிடிக்காமல், வெறும் புதினா, சீரகம், சோம்பு பற்றி போதிக்கிறீர்கள்!' நீதி, இரக்கம், நம்பிக்கை எல்லாம் கடைப்பிடிக்க கடினமானது. ஆக, இந்த மதிப்பீடுகளோடு சமரசம் செய்து கொள்ளும் பரிசேயர்கள் மக்களை வருடிக்கொடுக்கும் இதமான ஆன்மீகத்தை முன்வைக்க விரும்புகின்றனர்.

ஆனால், ஆன்மீகம் என்பது ஒரு மருத்துவரின் கத்தி போல. அது உடலில் பட்டால் வலிக்கத்தான் செய்யும். ஆனால், உடலில் அது பட்டால்தான் உடலில் உருவாகிக் கொண்டிருக்கும் புற்றுநோய்க்கட்டியை அது வெளியே எடுக்கும். மற்றொரு பக்கம் இன்று எல்லாரும் 'வலிக்காத' ஆன்மீகத்தையே விரும்புகின்றோம். பாவம், நரகம், மோட்சம், உத்தரிக்கிற நிலை பற்றிப் பேசும் அருட்பணியாளர்கள் இன்றைய ஆன்மீக மார்க்கெட்டில் விலைபோவதில்லை. 'ஆசையே துன்பத்திற்குக் காரணம்!' என்ற புத்தரின் போதனை நமக்கு வலித்தது. ஆனால் 'அத்தனைக்கும் ஆசைப்படு!' என்ற ஜத்குருவின் போதனை நமக்கு இனிக்கிறதே! அப்படித்தான்!

நாளைய முதல் வாசகத்தில் பவுல் தெசலோனிக்க நகர திருச்சபைக்கு தான் போதித்த விதம் பற்றி எழுதுகின்றார். 'தாய் தன் குழந்தையை பேணி வளர்ப்பதுபோல!' என்ற அவரின் உருவகம் பவுல் தன் திருச்சபையின்மேல் கொண்டிருந்து பற்றை நன்றாக படம்பிடித்துக்காட்டுகிறது.

இன்று நான் என்னிடம் இரண்டு கேள்விகள் கேட்கிறேன்:

1. என் ஆன்மீகத்தின் சர்க்கரை அளவு என்ன?
2. நான் மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஆன்மீகத்தின் சர்க்கரை அளவு என்ன?

அளவான சர்க்கரை! நலமான வாழ்வு!

நத்தனியேல்

நாளை திருத்தூதரான பர்த்தலமேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம்.

திருத்தூதர் பிலிப்புவின் நண்பரான இவரை நத்தனியேல் என அழைக்கிறார் நற்செய்தியாளர் யோவான். பர்த்தலமேயு என்ற அரமேய வார்த்தைக்கு 'தலமேய் என்பவரின் மகன்' என்பது பொருள். இது இவருடைய அடைமொழி அல்லது குடும்பப்பெயராக இருந்திருக்கும். நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவான் 1:45-51) இவரை நாம் நத்தனியேல் என்றே அறியப்பெறுகிறோம். 'நத்தனியேல்' என்ற எபிரேய வார்த்தைக்கு 'கடவுள் கொடுக்கிறார்' அல்லது 'கடவுளின் கொடை' அல்லது 'கடவுள் நமக்குக் கொடை' என்று பொருள் கொள்ளலாம். 

நாளைய நற்செய்தி வாசகம் பிலிப்புவுக்கும் நத்தனியேலுக்கும், நத்தனியேலுக்கும் இயேசுவுக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடல்.

காட்சி 1: பிலிப்பு, நத்தனியேல். இடம். அத்திமரத்திற்கு அடியில். நேரம். நண்பகல்.

'நாங்கள் கண்டோம்!' என்று நாசரேத்தூர் இயேசுவைப் பற்றி தன் நண்பருக்கு பிலிப்பு அறிவிக்கின்றார். 'நாசரேத்தூர்ல இருந்து எப்புடிப்பா நல்லது வரும்?' என கிண்டல் செய்கிறார் நத்தனியேல். 'வா! பார்!' - என தன் நண்பரை இயேசுவிடம் அழைத்து வருகின்றார்.

காட்சி 2: நத்தனியேல், (பிலிப்பு), இயேசு. இடம். பாதசாரிகளின் நிழல்குடை. நேரம். மாலை.

ஏற்கனவே ஒருசிலரோடு பயணியர் நிழற்குடையின்கீழ் அமர்ந்திருக்கும் இயேசு, நத்தனியேலின் வருகையைப் பார்த்து, 'இதோ! கபடற்ற இஸ்ரயேலர் வருகிறார்!' என்கிறார். இயேசு சொல்வதைக் கேட்டுவிட்டு நத்தனியேல், 'என்னை எப்படி உமக்குத் தெரியும்?' என, இயேசுவோ, 'நீ அத்திமரத்தின்கீழ் இருக்கும்போதே நான் உன்னைக் கண்டேன்!'. 'அப்படியா! ரபி! நீரே இறைமகன்! நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்!' 'என்னப்பா! இதுக்கே இப்படி ஆச்சர்யப்படுற! இன்னும் பெரியவற்றை நீ காண்பாய்!'

இந்த உரையாடலில் 'காணுதல்', 'அத்திமரம்', 'இஸ்ரயேலர்', 'இறைமகன்', 'ரபி' என நிறைய உருவகங்கள் இருக்கின்றன. அவற்றை ஆராய்வதை விடுத்து, இந்த உரையாடலைப் படித்தவுடன் என் மனதில் தோன்றிய எண்ணங்களை மட்டும் நான் பதிவு செய்ய விழைகிறேன்.

1. நான் என் நண்பரிடம் என்ன பேசுகிறேன்? 

பிலிப்பு மற்றும் நத்தனியேல் என்ற நண்பர்களுக்கு இடையேயான உரையாடல் இயேசுவைப் பற்றி அல்லது 'மக்கள் எதிர்பார்த்த மெசியா' பற்றி இருக்கின்றது. இரண்டு விடயம் இங்கு: ஒன்று, இயேசுவைச் சந்தித்த ஒருவரால் இயேசுவைப் பற்றி மட்டும்தான் பேச முடியும். அந்த அளவுக்கு இயேசுவின் பிரசன்னம் அடுத்தவரை நிரப்பிவிடுகிறது. ஆக, இன்று நான் இயேசுவை நற்கருணையில் அல்லது இறைவார்த்தையில் அல்லது என் அயலாரில் பார்க்கிறேன் என்றால், நான் எந்த அளவுக்கு இயேசுவால் நிரப்பப்படுகிறேன். இரண்டு, நான் இயேசுவைப் பற்றி தயக்கம் இல்லாமல் என் நண்பர்களிடம் பேசுகிறேனா? அல்லது என் பேசுபொருள் என்னவாக இருக்கின்றது? 

2. நான் அகத்தைக் காண்கிறேனா, அல்லது புறத்தைக் காண்கிறேனா? 

இயேசுவோட வார்த்தையில் உள்ள நேர்முக ஆற்றலைப் (positive energy) பார்த்தீர்களா! நத்தனியேலைக் கண்டவுடன், 'இவரே கபடற்ற இஸ்ரயேலர்!' என்கிறார். இயேசுவும் கபடற்றவர்தான், இஸ்ரயேலர்தான். ஆனால், இவ்வளவு பெரிய வார்த்தைகளை தன்னைப் பற்றிச் சொல்வதற்குப் பயன்படுத்தாமல் தன்னைத் தேடிவரும் ஒருவரைப் பற்றிச் சொல்லப் பயன்படுத்துகின்றார். அது எப்படி இயேசுவால சொல்ல முடிஞ்சது? 'அத்திமரத்தின் கீழ் உன்னைக் கண்டேன்' என்று நத்தனியேலைத் தெரிந்த இயேசுவுக்கு, 'நாசரேத்தூரிலிருந்து நல்லது வரக்கூடுமா?' என்ற நத்தனியேலின் கிண்டல் அல்லது முற்சார்பு எண்ணம் (prejudice) தெரிந்திருக்கும்தானே! அப்படியிருந்தும் எப்படி மனதார பாரட்டுகின்றார். மெய்யியலில் essence மற்றும் accident என்று பொருளுக்கு இரண்டு கூறுகள் இருப்பதாகச் சொல்வார்கள். Accident மாறலாம். ஆனால் essence மாறுவதில்லை. இயேசு அப்படித்தான் நத்தனியேல் பேசிய வார்த்தைகளைப் (accident) பொருட்படுத்தவில்லை. அவரின் அகத்தின் இருக்கும் நபரை (essence) மட்டுமே பார்க்கின்றார். இன்று நான் மற்றவரிடத்தில் பார்ப்பது என்ன? Essence அல்லது accident?

3. இயேசு எனக்கு யார்? 

'யோசேப்பின் மகன் இயேசு' என்று பிலிப்பு சொன்னாலும், நத்தனியேல் இயேசுவிடம், 'நீரே இறைமகன்! நீரே இஸ்ரயேலின் அரசர்' என அறிக்கையிடுகின்றார். நாசரேத்தூர்க்காரர்தான! என்று நையாண்டி செய்தவர் எப்படி இவ்வளவு பெரிய அறிக்கை செய்கின்றார். விவிலிய ஆராய்ச்சியில் சொல்வார்கள். இனி வரும் யோவான் நற்செய்திப் பகுதி அனைத்தும் இந்த நத்தனியேலின் அறிக்கையின் விளக்கவுரைதான் என்று. இயேசு எனக்கு யார்? ஒரு பெயரா? அல்லது ஒரு கருத்தியலா? அல்லது ஒரு வரலாற்று நபரா? அல்லது என்மேல்கொண்ட அன்பிற்காக தன்னையே சிலுவையில் கையளித்து, உயிர்த்து, இன்றும் என்னுடன் உடன்வருபவரா? உள்ளத்தின் மௌனத்தில் ஒவ்வொருவரும் இதற்கு விடைகாணுதல் வேண்டும்.


Sunday, August 23, 2015

தீதும் நன்றும்

'அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர்' (யோவான் 6:66)

'இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை. புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது 666.' (திருவெளிப்பாடு 14:18)

எனக்கு 11ஆம் வகுப்பு மறைக்கல்வி எடுத்த ஆசிரியர் ஒருநாள் தென்னமெரிக்காவில் ஒரு குழந்தை பிறந்திருப்பதாகவும், அந்தக் குழந்தையின் நெற்றியில் 666 என எழுதியிருப்பதாகவும், அந்தக் குழந்தையே அந்திக்கிறிஸ்து (antichrist) எனவும், உலகம் சீக்கிரம் அழியப்பபோவதாகவும் சொன்னார். 'உலகம்தான் அழியப்போகிறதே!' என்ற சொல்லி இரண்டு வாரம் வீட்டுப் பாடம் செய்யாமல் அடி வாங்கியது வேறு விஷயம்.

அந்திக்கிறிஸ்து, அதாவது, கிறிஸ்துவுக்கு எதிராக இருப்பவரின் எண் 666 என யோவானுக்கு திருவெளிப்பாடு அருளப்படுகிறது. யோவான் 6:66ஐ; பாருங்களேன். என்ன சொல்கிறது? 'அன்றே பலர் அவரிடமிருந்து விலகினர்' அல்லது 'அவருக்கு எதிராக மாறினர்'. 1555ஆம் ஆண்டில்தான் ராபர்ட் எஸ்டியன் என்பவர் கிரேக்க புதிய ஏற்பாட்டை எண்ணிக்கை கொண்ட வசனங்களாகப் பிரிக்கிறார். இப்படி அவர் பிரிக்கும்போது 6:66 என்ற எண் எப்படி சரியாக இந்த வசனத்திற்குப் பொருந்தியது? இது தானாக நிகழ்ந்த ஒரு செயலா?

666 என்ற எண்ணை நாம் திபா 66:6 மற்றும் எசாயா 66:6லிம் பார்க்கலாம். ஆனால் அவைகளுக்கும் எதிர்கிறிஸ்துவுக்கும் தொடர்பே இல்லை. ஆனால் யோவான் 6:66க்கும் திவெ 14:18ல் வரும் '666'க்கும் தொடர்பு இருக்கிறது. எப்படி? ஒன்று, இரண்டையும் எழுதியவர் யோவான். இரண்டு, இரண்டிலுமே, புரிந்துகொள்வதைப் பற்றியும், புரிந்துகொள்வதற்கு தடையாக இருப்பது பற்றியும் இருக்கின்றது.

இந்த எண் ஆராய்ச்சி (இது என் நண்பர் திரு. இருதயராஜ் அவர்களுடன் ஒருநாள் நடந்த உரையாடலில் அவர் எனக்குச் சொன்னது!) ஒரு பக்கம் இருக்கட்டும்.

'பலர் அவரை விட்டு நீங்கினர்!'

இந்த வாக்கியத்தை மட்டும் சிந்தனைக்க எடுத்துக்கொள்வோம்!

அதாவது, இவ்வளவு காலம் இயேசுவோடு இருந்த சிலர் இன்று அவரை விட்டு விலகுகின்றனர். இப்படி விலகுகிறார்கள் என்றால், ஒன்று, இயேசுவைவிட பெரிய ஆளை அல்லது பொருளை அல்லது கருத்தியலை அவர்கள் கண்டிருக்கலாம், அல்லது, இயேசு தரும் சவால் மிகப்பெரியதாக இருப்பதால் அதிலிருந்து பின்வாங்கலாம்.

இயேசுவைவிட்டு நீங்கினர் இந்தச் சீடர்கள்!

மற்றொரு பக்கம் இயேசுவை தங்கள் வாழ்விலிருந்து நீங்கும்படி மூன்றுபேர் அவரிடம் சொல்கின்றனர்: ஒன்று, ஏரோது (மத் 2:16-22). இயேசு என்ற குழந்தை பிறந்ததே அவனின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. ஆக, இயேசு மட்டும் அல்ல, எந்த ஆண் குழந்தையும் தன் நாட்டில் இருக்கக்கூடாது என்று அனைத்து ஆண் குழந்தைகளையும் நீக்கிவிடத் துணிகின்றான். இரண்டாவது, பேதுரு. இயேசு முதன்முதலாக தன்னை அழைக்கும்போது அவர் செய்த மீன்களின் புதுமையைப் பார்த்துவிட்டு, 'ஐயோ! பாவி நான்! என்னைவிட்டு அகலும்!' (லூக் 5:8) என்கிறார். பேதுருவுக்கு இயேசுவின் இரக்கப்பெருக்கைவிட தன் பாவச்சுமைதான் கண்முன் பெரிதாக நின்றதால் அப்படிச் சொல்லிவிட்டார். மூன்றாவதாக, கெனசரேத் நகர மக்கள். பேய்பிடித்த ஒருவரின் பேயை நீக்கிய இயேசு அதை பன்றிகள் கூட்டத்தில் அனுப்ப, பன்றிகள் கூட்டமாய் கடலில் விழுந்து மடிந்துவிடுகின்றன. அந்த நேரத்தில் அங்கு வருகின்ற நகர மக்கள் இயேசுவை தங்கள் ஊரிலிருந்து அகலுமாறு வேண்டுகின்றனர் (மாற்கு 5:17).

ஆக, இயேசு தங்களைவிட்டு நீங்க வேண்டும் என்றும், இயேசுவைவிட்டு தாங்கள் நீங்க வேண்டும் என்றும் மக்கள் விரும்புகின்றனர்.

இப்படி விரும்புதல் தவறா? இல்லை! இதுதான் மனித இயல்பு. எப்படி?

'ஆண்டவரே! நாங்கள் யாரிடம் போவோம்? வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன!' (யோவான் 6:68) என்று சொன்ன பேதுரு, 'அவர் யாரென்றே எனக்குத் தெரியாது!' (லூக் 22:55-57) என்று மூன்றுமுறை இயேசுவை மறுதலிக்கவில்லையா?

ஆக, நம்மில் இருக்கும் ஒரு இயல்பு கடவுளைப் பற்றிக்கொள்ள நினைக்கிறது. மற்றொரு இயல்பு அவரைவிட்டுத் தூரப் போக நினைக்கிறது. ஒரு இயல்பில் நாம் வானதூதரைப் போல மகிழ்ச்சியாக, அமைதியாக, சாந்தமாக இருக்கிறோம். மறு இயல்பில் நாம் வருத்தமாக, சலனத்தோடு, அமைதியற்று இருக்கிறோம். ஒரு இயல்பில் 'நான்தான் இவ்வுலகின் ராஜா!' என்று பெருமிதத்தோடு இருக்கிறோம். மறு இயல்பில் 'நான் ஒன்றுமே இல்லை!' என்று அதாள பாதாளத்தில் விழுந்துவிடுகின்றோம்.

இந்தப் போராட்டத்தை பவுல், அகுஸ்தினார் என எல்லாப் பெருந்தலைகளும் அனுபவித்திருக்கின்றன.

இந்தப் போராட்டம் இருக்கும்வரைதான் நாம் மனிதர்கள்! அல்லது மனித உருவில் நாம் இருக்கும்வரை இந்தப் போராட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும்!

'தீதும் நன்றும் பிறர்தர வாரா!' என்று புறநானூறு (பாடல் 192) சொல்வதன் அர்த்தமும் இதுதான். தீமையும், நன்மையும் வெளியிலிருந்து நம்மிடம் வருவதில்லை. அவை இரண்டும் நம் அகத்தில் என்றும் இருக்கின்றன.

'வாழ்வுதருவது தூய ஆவியே! ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது!' (யோவான் 6:63) என்ற இயேசுவின் வார்த்தைகள்தாம் நம் பாதைக்கு வெளிச்சம்.

மேலானவைகளை நாம் தழுவிக்கொண்டால், தாழ்வானவைகள் தானாகவே அகன்றுவிடும்!


Friday, August 21, 2015

துணிச்சல்காரி

மோவாபு நாட்டிலிருந்து பெத்லகேம் நோக்கி நடக்கும் ரூத்து நாளைய முதல் வாசகத்தில் (காண். ரூத்து 2:1-3, 8-11, 4:13-17) மூன்று முறை நடக்கிறாள்.

ரூத்தின் இந்த மூன்று பயணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எப்படி?

அன்றைய சமூக, அரசியல் சூழலின் பின்புலத்தல் ரூத்தை நாம் நிறுத்திப் பார்த்தால் அவள் மூன்று வகை புறக்கணித்தல்களுக்கு ஆளாகியிருக்க வேண்டும்: முதலில் அவள் ஒரு பெண். இரண்டாவதாக, புறவினத்தாள். மூன்றாவதாக, விதவை.

இந்த மூன்று புறக்கணிப்புகளும் மறைகிறது இந்தப் பயணங்களில்:

1. தன் வீட்டிலிருந்து வயலுக்கு. 'என்னதான் கடவுள் படியளப்பார்' என நம்பினாலும், என்னதான் நம்ம ஊரின் பெயர் 'அப்பத்தின் வீடு' (பெத்லகேம்) என அழைக்கப்பட்டாலும், வீட்டிற்குள்ளா அப்பம் வந்து விழும், நாம்தான் தேடிச்சென்று உழைக்க வேண்டும் என்று ரொம்ப ப்ராக்டிக்கலா நினைக்கிறாள் ரூத்து. முதல் ஏற்பாட்டுப் பெண்கள் இந்த வகையில் ரொம்ப ப்ராக்டிகலானவர்கள்தாம் - முதல்பெண் ஏவாளும்கூட! 'நான் வயலுக்குப் போகிறேன்!' என்று மருமகள் கேட்டவுடன், 'ஆண்டவர் உன்னைக் கருணையுடன் நோக்குவாராக!' என அனுப்புகிறார் நகோமி. பெண்களை வெறும் 'பொருளாக' பார்க்கும் மனப்பாங்கும் அன்றும் இருந்திருக்கிறது. ஆகையால்தான், ரூத்து நூலின் ஆசிரியர் போவாசு பற்றிச் சொல்லும்போது, 'போவாசு ரூத்தை கருணையுடன் பார்த்தார்!' என்று சொல்கின்றார். இதுதான் கடவுளின் பார்வையும்கூட. போவாசின் பணியாளர்கள் வேறு மாதிரியாகப் பார்த்திருந்தாலும், போவாசின் கருணை பார்வை ரூத்தின் முதல் புறக்கணிப்பிலிருந்து விடுவிக்கிறது.

2. தன் வீட்டிலிருந்து களத்திற்கு. இந்த நிகழ்வு பற்றி முழுமையாக நாளைய முதல் வாசகத்தில் விவரிக்கப்படவில்லை. ஆனால், இந்த நிகழ்வில்தான் ரூத்து ஒரு வேற்றினத்துப் பெண் என்றாலும், எப்படி எருசலேம் மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறாள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆக, இந்த இரண்டாம் நிகழ்வில் அவள் புறவினத்தாள் என்ற புறக்கணிப்பிலிருந்து விடுதலை பெறுகிறாள்.

3. தன் வீட்டிலிருந்து போவாசின் வீட்டுக்கு. விதவையாய்ச் சென்றவள் கையில் மகளுடன் திரும்புகிறாள். அதுவும் யூதாவின் மாபெரும் அரசனாம் தாவீதின் தாத்தாவை ஈன்றெடுக்கும் பாக்கியம் பெறுகிறாள். பிறந்திருக்கும் இந்தக் குழந்தை எப்படிப்பட்டதென்று விவிலியம் எவ்வளவு அழகாகச் சொல்கிறது பாருங்கள்! 'இவன் உன்னைக் காக்கும் பொறுப்பினை உடையவன்! இவன் உனக்கு புதுவாழ்வும், முதுமையில் அன்னமும் அளிப்பவன்! ஏழு மைந்தர்களுக்குச் சமமானவன்!' - இந்தக் குழந்தை ரூத்தின் வெறுமையை மட்டுமல்ல, அவளின் மாமியார் நகோமியின் வெறுமையையும் போக்க வல்லவன். ஆக, வெறுங்குடம் பொங்கி வழிகிறது!

'கடவுளின் வழிகள் கடவுளின் வழிகளே!' அவை என்றென்றும் நம் கண்களுக்கு வியப்பே. ஆக, எந்தவகை புறக்கணிப்புக்கு நாம் ஆளானாலும், நம் நிலை மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் இந்த வேற்றினத்து விதவைப் பெண் சொல்லும் பாடம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் நாம் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வது. வீட்டிலேயே ஓய்ந்திருப்பதும், கட்டிலில் முகம் புதைத்துக்கொண்டு இருப்பதும் வாழ்வை மாற்றிவிடுமா? புதிய இடம் என்றாலும், 'வயலுக்குப் போகிறேன்!' என்ற துணிச்சலை இந்த துணிச்சல்காரியிடம் நாம் கற்றுக்கொள்ளலாம்.

ஆக, 'உங்கள் போதகர் ஒருவரே, உங்கள் தந்தை ஒருவரே, உங்கள் ஆசிரியர் ஒருவரே!' என்ற நாளைய நற்செய்தி வாசகத்தின் (காண். மத் 23:1-12) சாரத்தை உட்கிரகித்துக் கொண்ட ஒருவரே இந்தத் துணிச்சல் பெற முடியும். ஏன்! இதை உட்கிரகிக்கவே நமக்கு துணிச்சல் தேவை! துணிச்சல்காரி ரூத்திடம் இது நிறையவே இருந்தது!




Thursday, August 20, 2015

அன்பின் இயல்பு

நீதித்தலைவர்களின் காலத்தில் எலிமலேக்கு-நகோமி வீட்டில் நடந்த நிகழ்வைத்தான் நாளைய முதல் வாசகத்தில் (காண். ரூத்து 1:1, 3-6, 14-16, 22) வாசிக்கின்றோம்.

நாளைய வாசகத்தை வாசிக்கும்போது மூன்று பெயர்களின் அர்த்தங்கள் முரண்பாட்டைக் கொண்டிருக்கின்றன: பெத்லகேம், எலிமேலக்கு, நகோமி.

1. 'அப்பத்தின் வீடு' என்ற 'பெத்லகேமில்' பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. யூதா நாட்டினர் பஞ்சம் பிழைக்க மோவாபு நாட்டிற்கு நகர்கின்றனர்.

2. 'எலிமேலக்கு' என்றால் 'என் கடவுளே அரசன்' என்பது பொருள். அப்படிப் பெயர் கொண்ட ஒருவர் தன் கடவுளை விட்டு, வேற்றினத்து அரசனிடம் தஞ்சம் புகுந்து, 'அரசனே என் கடவுள்' என்று தன் பிரமாணிக்கத்தை திசை திருப்புகின்றான்.

3. 'கடவுள் என் ஆறுதல்' என்ற பொருள் கொள்ளும் 'நகோமி', தன் கணவனை இழந்து, தன் மகன்களை இழந்து தனித்துவிடப்படுகிறாள்.

ஏன் பெயர்கள் தங்கள் அர்த்தங்களை இழந்துவிட்டன?

பெயர்கள் தங்கள் அர்த்தங்களை இழந்தாலும், புறவினத்துப் பெண் ரூத்து தன் மாமியாரிடம் காட்டும் பிரமாணிக்கத்தால் அவர்களின் வாழ்வில் புது வசந்தம் உருவாகிறது.

ஆம்! ரூத்தும், நகோமியும் எருசலேமிற்குள் நுழையும் நேரம் வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருக்கிறது!

இது, நிறைவின், வளத்தின், செல்வத்தின் அடையாளம். இனி அவர்களுக்குப் பசியும், வெறுமையும், தனிமையும் இருக்கப் போவதில்லை.

இந்த நிலை மாறுவதற்கு என்ன காரணம்?

நாளைய நற்செய்தியில் (காண். மத்தேயு 22:34-40) திருச்சட்ட நூல்களின், இறைவாக்குகளின் அடிப்படை என இரண்டு கட்டளைகளை மேற்கோள்காட்டுகின்றார் இயேசு:

1. 'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து!'

2. 'உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்க அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக!'

எலிமலேக்கும் அவரது இனத்தாரும் நீதித்தலைவர்களின் காலத்தில் முதல் கட்டளையை மீறுகிறார்கள். அவர்கள் தங்களின் வாழ்வில் கடவுளை கொஞ்ச இதயத்தோடும், கொஞ்ச உள்ளத்தோடும், கொஞ்ச மனத்தோடும் அன்பு செய்கின்றனர். அவர்களின் வாழ்க்கை தலைகீழாய்த் தடம் புரள்கின்றது.

ஆனால், இந்தக் கட்டளையே அறிந்திராத ஒரு வேற்றினத்துப் பெண் ரூத்து, கட்டளையின் வரிசையை மாற்றுகிறாள். எப்படி? தன்னை அன்பு செய்வது போல தன் மாமியார் என்னும் அயலாரை அன்பு செய்கிறார். இதற்காக, மாமியாரின் கடவுளையும் 'தன் கடவுளாக', மாமியாரின் மக்களையும் 'தன் மக்களாக' அணைத்துக் கொள்கிறார்.

இதுதான் இயேசு கட்டளையைப் புரட்டிப்போட்ட விதமும்கூட. 'நான் உங்களை அன்பு செய்தது போல, நீங்களும் கடவுளை அன்பு செய்யுங்கள்' என்று சொல்லவில்லை அவர். மாறாக, 'நான் உங்களை அன்பு செய்ததுபோல, நீங்கள் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்' (யோவான் 15:12) என்கிறார். ஆக, நாம் நம் அயலாரை அன்பு செய்யத் தொடங்கினாலே, அது நம்மைக் கடவுளை நோக்கி எடுத்துக்கொண்டுவிடுகிறது. அதுதான் அன்பின் இயல்பு.


Wednesday, August 19, 2015

அப்பா, மகள், ஆடையணியாத ஒருவன்

இன்னைக்கு சாயங்காலம் ஒரு வேண்டுதலோடு கோயிலுக்குப் போகும் என் அம்மா, 'ஆண்டவரே, நான் வேண்டுவது மட்டும் கிடைச்சுடுச்சுனா, நான் வீட்டிற்கு திரும்பும்போது என் வீட்டிலிருந்து எது முதலில் வெளியே வருகிறதோ, அதை நான் உனக்கு பலியாகக் கொடுக்கிறேன்!' என கடவுளுக்கு வாக்குறுதி கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம். என் வீட்டில் கோழி, ஆடு, மாடு என நிறைய இருக்கிறது. அவர் கோவிலிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் அவர் வேண்டியது கிடைத்துவிடுகிறது. நன்றிப்பெருக்கோடு, ஆனந்தக் கண்ணீரும் கண்களுமாய் அவர் திரும்பிக்கொண்டிருக்க, வீட்டிலிருந்து ஃப்ரஷ்ஷா குளித்து, பவுடர் அடித்து நான் வெளியே வருகிறேன். ''ஐயோ! தம்பி! நான் என் வீட்டிலிருந்து முதலில் வருபவதை கடவுளுக்கு பலியாக கொடுக்கிறேன்' என வேண்டிக்கொண்டேனே! உன்னையா நான் முதலில் வீட்டிற்கு வெளியே பார்க்க வேண்டும்! ஐயோ! உன்னைப் பலி கொடுக்க வேண்டுமே' என அழுகிறார். 'ஏம்மா! நீ என்ன லூசா? பலி கொடுக்கணும்! சாமி கேட்டுச்சுணு சொல்ற!' எனச் சொல்லிவிட்டு நான் வெளியே கிளம்பிப் போய்விடுவேன்.

நான் இருந்த இடத்தில் நீங்கள் இருந்தால் நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள்?

இப்படி ஒரு நிகழ்வுதான் நடக்கிறது நாளைய முதல் வாசகத்தில் (காண். நீத 11:29-39)

அம்மோனியர்களின் கைகளிலிருந்து இறைவன் தன் மக்களை விடுவித்துவிட்டார் என்று வீடு திரும்பிய தன் தந்தை இப்தாவை வரவேற்க கிண்ணரங்களுடன் பவனி வருகிறார் அவருடைய ஒரே கன்னி மகள். ஆனால், தன் தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றப் பணிகின்றார்: 'நீங்கள் ஆண்டவருக்கு வாக்கு கொடுத்திருந்தீர்கள் என்றால் அதன்படியே எனக்குச் செய்யுங்கள்! ஆனால் என் கன்னிமை குறித்து நான் அழுது புலம்ப எனக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் கொடுங்கள்!'

அ. பெண்களின் நிலை. ஒரு சமுதாயத்தில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்களோ, அதை வைத்தே அந்த சமூகத்தின் தரத்தை நாம் அளவிட முடியும். பெண்களுக்கு பாதுகாப்பு, மரியாதை என்று இருந்து, வன்முறை, தவறான பயன்பாடு இல்லாமல் இருந்தால் அந்த சமூகம் உயர்ந்த சமூகம். இப்படிப்பட்ட சமூகம்தான் சிலப்பதிகாரத்தின் காலத்தில் இருந்தது. ஆனால், இன்று நம் தமிழ் சமூகம் எப்படி இருக்கிறது என்பதை நாம்தான் சுயஆய்வு செய்து பார்க்க வேண்டும். நீதித்தலைவர்கள் நூலில் பெண்களின் நிலை 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய்', முழுநிலவிலிருந்து தேய்பிறையாய் இருக்கிறது. பெண் நீதித்தலைவர் தெபோரா நீதிப்பொறுப்பு ஏற்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ஆனால் நாம் நூலைக் கடந்து செல்லச் செல்ல பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. 'தன் வாய்க்கு வந்ததை வாக்காகச் சொல்லிவிட்டு அதற்காக தன் மகளை பலி கொடுக்கும்' இப்தா, 'பார்க்கிற பெண்ணையெல்லாம் அடையத் துடிக்கும்' சிம்சோன், 'விடிய விடிய வன்புணர்ச்சி செய்து கொல்லப்படும'; லேவியரின் மறுமனைவி என பெண்களின் முகம் சிதைந்து கொண்டே வருகிறது.

ஆ. அளவுகோல். இப்தா செய்தது சரியா? தவறா? என்று நாமும் 'நீயா-நானா' புரோகிராம் வைத்தால் நம் பதில் ஒவ்வொன்றாக இருக்கும். ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வை நாம் இன்றைய அளவுகோல் கொண்டு அளந்து, அவர்களை நல்லவர்கள் என்றும் கெட்டவர்கள் என்றும் தீர்ப்பிடுவது சால்பன்று. ஆண்டவருக்குக் கொடுக்கப்பட்ட வாக்கு அல்லது வாக்குறுதியை மேன்மையானதாகக் கருதினர் முதல் ஏற்பாட்டு மக்கள். ஆகையால், தாங்கள் அளிக்கும் வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்றிவிடுவார்கள். ஆக, ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை இருக்கிறது என்பதை நமக்குச் சொல்கிறது இப்தா நிகழ்வு. பாவம் இவர்! ஆண்டவரின் வாக்குறுதிக்காக தன் மகளையே இவள் விலையாகக் கொடுக்க வேண்டியதாயிற்று!

இ. 'கன்னிமை குறித்து துக்கம்!' - எபிரேய விவிலியத்தில் ஒரு புதிய கூறு உண்டு. அது என்னவென்றால், எப்போதெல்லாம் பெண்களைப் பற்றி அல்லது உடல்கூறு பற்றிச் சொல்கிறதோ அப்போதெல்லாம் அது இரண்டு வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்தும். உதாரணத்திற்கு, 'அவன் ஒரு ஊமை. அவனுக்கு பேச வராது' - இந்த வாக்கியத்தைப் பாருங்களேன். 'அவன் ஒரு ஊமை' என்றாலே 'அவனுக்கு பேச வராது' என்றுதான் அர்த்தம். ஆனால், விவிலியம் அதை இரண்டாம் முறையாக வேறு வார்த்தைகளில் திரும்பச் சொல்கிறது. (இந்தக் கூற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்பது எனது அடுத்த படிப்பின் நோக்கம்). 'அவள் அவருடைய ஒரே மகள்' என்று பதிவு செய்யும் விவிலியம், தொடர்ந்து, 'அவருக்கு வேறு மகனோ மகளோ இல்லை' என்கிறது (நீத 12:34). 'அவள் கன்னி' என்று சொல்லிவிட்டு 'அவள் ஆணுறவு கொள்ளவே இல்லை' என்கிறது (12:39). கன்னிமையோடு இறப்பது என்பது யூதர்களின் சமய மரபில் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. மேலும் கன்னிமையை அவர்கள் பெரிய மதிப்பீடாகவும் பார்க்கவில்லை. 'நாசீர்' என்று கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டவர்கள்கூட கன்னிமையோடு இருக்க வேண்டும் என்பது விதிமுறை அல்ல. இந்தப் பெண் கன்னிமை குறித்த துக்கத்தை எப்படி தன் தோழியரோடு கொண்டாடியிருப்பாள்? அதற்கு ஏன் இரண்டு மாதங்கள் தேவைப்பட்டன? 'இந்த இரண்டு மாதங்களில் அவள் ஏதாவது ஆணைக் கூடி உறவு கொண்டு கொஞ்சம் திருப்தி அடைந்திருக்கலாமோ!' என்று ஒரு குட்டி ஆசையும் எனக்கு இருந்தது! ஆனால், கன்னியாகவே இறக்கிறாள்! தன் இயல்பை அப்படியே கடவுளுக்கு கொடுக்க விழைந்தாரோ அவர்?

ஈ. ஆனால், இவரின் கன்னிமைக்கான துக்கம் என் மனதில் இன்னொரு உருவகத்தை எழுப்பியது. என்ன உருவகம் என்றால், அருட்பணி வாழ்விற்கு முன் திருத்தொண்டர் பணிக்கான வாக்குறுதியை நாங்கள் கொடுப்போம். அதில் முதல் வாக்குறுதி மணத்துறவு அல்லது கன்னிமை. இந்த வாக்குறுதி கொடுக்கும் முன் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் எங்கள் நண்பர்களோடு தியானம் செய்வோம். ஆக, இப்தா என்பவர் என் மறைமாவட்ட ஆயர். தோழிகள் என்பவர்கள் என் நண்பர்கள். கன்னிமை என்பது மணத்துறவு. கன்னிமைக்கான துக்கம் என்பது இரண்டு மாத தியானம். கன்னிமையாக பலியாவது என்பது திருத்தொண்டர் பணிக்காக தன்னையே கையளிப்பது. மகள் என்பது நானும் என்னைப் போன்ற அருள்நிலை ஏற்பவரும். இன்று நாம் செய்யும் வழிபாட்டுக் கூறுகள் நாம் முதல் ஏற்பாட்டில் கடன் வாங்கியவைதாம். ஆக, நம் குருமடம் அல்லது குருத்துவப் பயற்சியும் முதல் ஏற்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது.

உ. இப்தா தன் மகளையே பலியாக்கி தன் வாக்கை காப்பாற்றுகிறார் என்றால், நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 22:1-14), 'விருந்துக்கு வருகிறேன்!' என்று வாக்குக் கொடுத்தவர்கள் அந்த வாக்கைக் காப்பாற்ற மறுக்கின்றனர். விருந்துக்கு வந்திருந்தவர்களில் ஒருவர் 'திருமண ஆடை' அணியாமல் வந்திருக்கிறார். இப்தாவின் மகளுக்கு அவளின் கன்னிமைதான் திருமண ஆடையோ? ஆகையால்தான், அதை அப்படியே அணிந்து கொண்டு பலியாவதில் அவர் பிரியமாக இருந்தாரோ? 'சாகத்தானே போகிறோம், எப்படியும் இருந்து அனுபவித்து விட்டு சாவோம்!' என்றல்லாமல், 'நாமதான விருந்துக்குப் போறோம். திருமண உடை முக்கியமா! எதைப் போட்டுட்டுப் போனா என்ன?' என்றல்லாமல் இருக்க நிறைய அர்ப்பண உணர்வும், துணிச்சலும் தேவைதான்போல!

Tuesday, August 18, 2015

மரமும், கொடியும், புதரும்

'கதைகள் நமக்குப் பிடிக்கின்றன!' - இப்படிச் சொல்வதைவிட 'கதைகள் நம்மைப் பிடித்துக்கொள்கின்றன!' என்றுதான் சொல்ல வேண்டும். கதைகள் எந்த அளவுக்கு அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றனவோ, அந்த அளவுக்கு அர்த்தத்தை தங்களுக்குள் மறைத்தும் கொள்கின்றன. ஆகையால்தான், கதைகளை நமக்குப் பிடிக்கிறது. நாம் ஒவ்வொருவருமே ஒரு கதையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கும் ஒரு தொடக்கம், ஒரு பிரச்சினை, ஒரு முடிவு அல்லது உச்சம் என இருக்கிறது.

காந்தியின் சத்தியாகிரகம் ஒரு கதை. ஹிட்லரின் நாசிசம் ஒரு கதை. உலகமயமாக்கல் ஒரு கதை. ஏன் விண்ணரசு என்பதும் ஒரு கதை.

நாளைய முதல் வாசகத்தில் (காண். நீத 9:6-15) 'மரங்களின் கதையும்,' நாளைய நற்செய்தியில் (மத் 20:1-16) 'திராட்சைத் தோட்ட பணியாளர்கள்' கதையும் நமக்குச் சொல்லப்பட்டுள்ளது.

கிதியோன் இறந்துவிட்டார். அவருக்கு எழுபது மகன்கள். ஏனெனில் அவருக்கு நிறைய மனைவியர் . அப்படித்தான் விவிலியம் சொல்கிறது (நீத 8:30). கிதியோனின் வைப்பாட்டிக்கு பிறந்த அபிமெலக்கு என்பவன் தானாகவே அரசாள முன்வருகின்றான். முன்வந்தவன் சும்மா இருந்தானா? முதல் வேலையாக தனக்கு எதிரிகள் உருவாகிவிடக்கூடாது என்று தன் சொந்த அண்ணன், தம்பியர் 69 பேரை கொன்றுவிடுகின்றான். ஆனால், கடைசி மகன் யோத்தாம் ஒளிந்து கொண்டதால் தப்பிவிடுகின்றான் (9:5) - ஒருவன் தப்பினால்தானே கதை! - இப்படித் தப்பி ஓடிய யோத்தாம் மலைமேல் நின்றுகொன்று, தனக்குக் கீழ் வசிக்கும் செக்கேம் நகர மக்களைப் பார்த்துச் சொல்கிறான் ஒரு கதை - அதுதான், மரங்களின் கதை.

தங்களுக்கு அரசன் வேண்டும் என நினைக்கும் மரங்கள், 'எங்களை அரசாளுங்கள்!' என முதலில் ஒலிவ மரத்திடமும், பின் அத்தி மரத்திடமும், பின் திராட்சைக் கொடியிடமும் செல்கின்றன. ஆனால், இந்த மூன்றும் மறுத்துவிட, அவைகள் முட்புதரிடம் செல்கின்றனர். முட்பதர் உடனே, 'ஆம்!' என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், 'என்னிடம் நீங்கள் வரவில்லையென்றால் நான் உங்களை பொசுக்கி விடுவேன்!' என சாபமும் விடுகிறது.

இந்த மரங்கள் மேலிருந்து கீழ்நோக்கி செல்கின்றன. மரங்களில் மிக அதிக மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டது ஒலிவ மரம்தான். மதிப்பே இல்லாமல் இருப்பது முட்புதர்.

இந்தக் கதை நமக்குச் சொல்வது என்ன?

அ. 'மேன்மையானதை விட்டு தாழ்வானதற்கு வரமாட்டேன்!'

இது ஒரு நல்ல வாழ்வியல் பாடம். அதாவது, ஒரு நிலையில் புறப்படும் மனித வாழ்க்கை மேல்நோக்கித்தான் செல்ல வேண்டுமே தவிர கீழ்நோக்கி செல்லக் கூடாது. ஆனால், வாழ்க்கை எல்லா நேரங்களிலும் நம்மை அப்படி இருக்க விடுவதில்லை. குழந்தையாய் இருந்தபோது சிரித்துக் கொண்டே இருந்த நாம் வளர்ந்தவுடன் சிரிப்பை விட்டுவிடுதில்லையா? சின்ன வயதில் நாம் உலகம் என நினைத்த பொம்மை காரை பக்கத்து வீட்டு நண்பன் உடைக்க அதை உடனே மன்னித்த நாம், இன்று தெரியாமல் பேருந்தில் நம் கால்மேல் மற்றவர் கால் பட்டால் கோபப்படுவதோடல்லாமல், 'என்னை அவன் மதிக்கவில்லை! என்னை யாருமே மதிப்பதில்லை!' என துவண்டு போவதில்லையா? தன் பணி தெய்வங்களின் தலையில் திருப்பொழிவு எண்ணெயாக இருப்பது என்கிறது ஒலிவ மரம். தன் பணி மாந்தரின் வாழ்வில் சுவை தருவது என்கிறது அத்தி மரம். தன் பணி மாந்தர்களுக்கும், தெய்வங்களுக்கும் புத்துணர்ச்சி தருவது என்கிறது திராட்சைக் கொடி. ஆக, 'என் மேன்மையான வேலையை நான் செய்வதை விடுத்து' உங்களுக்கு நடுவில் உட்கார்ந்து உங்கள் பஞ்சாயத்தைக் கேட்க விரும்பவில்லை என ஒதுங்கிக் கொள்கின்றன. ஆக, எனக்குக் கொடுக்கப்பட்ட, அல்லது நான் தேர்ந்து கொண்ட, என் இயல்பை முழுவதும் வெளிப்படுத்துகின்ற பணியை நான் நிறைவாகச் செய்ய வேண்டும். அதில் விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டும்.

ஆ. 'அசைந்தாட வருவேனா!'

'அரசாள வாருங்கள்!' என மரங்கள் அழைக்கின்றன. ஆனால் 'அசைந்தாட வருவேனா?' என மறுக்கின்றன மூன்றும். மிக அழகான தமிழ் மொழிபெயர்ப்பு இது. அரசன் செய்யும் பணியை கேலி செய்வது போல இருக்கிறது இந்த வார்த்தை. அரசர்கள் அல்லது ஆட்சியாளர்கள் செய்வது 'அசைந்தாடுதல்' மட்டும்தானே! நம்ம ஜெயாவும், மோடியும் கோட்டைக்கும், வீட்டுக்கும் அசைகிறார்கள். தன் விரலை அசைக்கிறார்கள். வேலை நடந்தேறுகிறது. அவர்கள் ஒன்றுமே செய்வதில்லை. சும்மா உட்கார்ந்து கையை அசைப்பதற்கு இவ்வளவு பகுமானம்? மரங்கள் அசைந்தாட மறுத்ததால் முட்புதர் அரசனாகி விடுகிறது. நான் மேலே சொன்ன கருத்திலிருந்து இப்போது முரண்படப்போகிறேன். 'முட்புதர் அரசனாகிவிட்டது!' என்று ஒலிவ, அத்தி மரங்களும், திராட்சைக் கொடியும் இனி குறைசொல்லக் கூடாது. ஏனெனில், அவைகள் தலைமைத்துவத்தை ஏற்க மறுத்ததால்தான் முட்புதர் அரசனாகிவிட்டது. இன்று 'ஜெயா சரியில்லை!' 'மோடி சரியில்லை!' என நான் குறைசொல்ல எனக்கு உரிமையில்லை. ஏன்? 'நான் தகுதியானவன்' என நினைத்தால், நான் முன்வந்திருக்க வேண்டும். நான் முன்வராமல் எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு இப்போது அவன் அல்லது அவள் என்னை நெருக்குகிறாள் என்று சொல்வது முறையாகுமா? ஆகாது! எனக்குத் தகுதி இருப்பதாக நான் நினைத்தால் அதை நான் வெளிப்படுத்த வேண்டும். என்னிடம் ஒளி இருந்தால் அதை நான் மேலே ஏற்றி வைக்க வேண்டும். அவ்வளவுதான்! அதை விடுத்து, இந்த சிம்னி விளக்கின் வெளிச்சம் சரியில்லை என்று சொல்லக்கூடாது.

இ. இன்று என்னை ஏதாவது முள் அரசாள்கிறதா?

நம்மளோடு ஆறடி உடம்பில ஒரு இடத்தில் முள் குத்துகிறது என வைத்துக்கொள்வோம். உடலின் பரப்போடு ஒப்பிடும்போது முள்ளின் அளவு மிக மிக சிறியது. ஆனால், காலில் குத்திய சின்ன நெருஞ்சிகூட நம்மை அப்படியே உட்காரவைத்துவிடுகிறது. வாழ்வில் நமக்கு எல்லாம் நன்றாக இருந்தாலும் ஏதாவது ஒரு முள் நம்மைக் குத்திக்கொண்டே இருக்கலாம் - என்னிடம் இருக்கும் தவறான பழக்கம் அல்லது நான் அதிகமாக வாங்கிச் சேர்க்கும் பொருட்கள், கடன், கூடாநட்பு என எதுவும் முள்ளாக இருக்கலாம். 'சின்ன முள்தானே! அப்புறும் பார்த்துக்கொள்ளலாம்!' என விட்டுவிடக்கூடாது. ஏனெனில், சின்ன முட்களுக்கு கேதுரு மரங்களையே பொசுக்கிவிடும் ஆற்றல் இருக்கின்றன.

முதல் வாசகத்தில் நான்கு வகை மரங்கள் (!) - ஒலிவம், அத்தி, திராட்சை - முள். நற்செய்தி வாசகத்தில் இரண்டு வகை மனிதர்கள் - முதலில் வந்தவர்கள், இறுதியில் வந்தவர்கள். முதலில் வந்தவர்கள் தங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு தெனாரியம் பெறுகின்றனர். இறுதியில் வந்தவர்கள் தங்களின் ஒப்பந்ததாரரின் கருணை அடிப்படையில் ஒரு தெனாரியம் பெறுகின்றனர். ஒப்பந்தம் முணுமுணுக்கிறது. கருணை மௌனமாக நகர்கிறது.

'முட்புதர்போல இருப்பவன் அரசனாக இருக்கிறான்!' என்றோ, 'ஒருமணிநேரம் உழைத்தவன் ஒரு தெனாரியம் பெறுகிறான்!' என்றோ முணுமுணுத்து என் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, என் வேலை அருட்பொழிவு எண்ணெயாகவோ, இனிமையாகவோ, புத்துணர்ச்சி தரும் பானமாகவோ, கொடுத்த வேலையை நிறைவாகச் செய்தவராகவோ இருப்பதே என்று நினைப்பதே சால்பு!


Monday, August 17, 2015

எல்லாம் இறைமையம்

கிதியோனின் அழைப்பையும், அனுப்பப்படுதலையும் நாளை நாம் முதல் வாசகத்தில் (காண். நீத 6:11-24) வாசிக்கின்றோம். நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 19:23-30) சீடத்துவத்தின் விலை என்ன என்று சொல்கின்றார்.

முதல் வாசகத்தில் தொடங்குவோம். இஸ்ரயேலர் மிதியானியர்கள் கையில் அல்லலுறுகின்றனர். அவர்களை மிதியானியர்களிடமிருந்து மீட்க கடவுள் கிதியோனை அனுப்புகின்றார். வானதூதர் கிதியோனுக்குத் தோன்றுகின்றார் இப்போது. ஐந்து விஷயங்கள் இந்த முதல் வாசகத்தில் என் கவனத்தை ஈர்க்கின்றன:

அ. 'கிதியோன் மிதியானிரிடமிருந்து கோதுமையை மறைப்பதற்காக திராட்சை ஆலையில் கதிர்களை அடித்துக்கொண்டிருந்தார்!' (6:11)

இந்த வசனத்தை நன்றாக வாசியுங்களேன். கோதுமையை எங்கே அடிக்க வேண்டும்? திறந்த வெளி களத்தில். ஆனால் கிதியோன் எங்கே அடிக்கின்றார்? திராட்சை ஆலையில். 'திராட்சைக் குழியில்' என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு. ஆக, திராட்சை விளைச்சல் இல்லாமல் திராட்சைக் குழிகள் வெறிச்சோடிக்கிடக்கின்றன. ஆக, நாட்டில் பஞ்சம் இல்லையென்றாலும், மது போன்ற ஆடம்பரங்கள் இல்லாத நிலை. மேலும், திராட்சைக் குழியில் அடிக்கும் அளவிற்குத்தான் கோதுமை விளைச்சலும் இருக்கிறது. ஆக, நிலமும் நல்ல பலன் தரவில்லை.

பாலும் தேனும் பொழியும் நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட மக்களுக்கு திராட்சை ரசமும், கோதுமையும்கூட இல்லை. அதாவது கடவுள் அவர்களோடு இல்லையென்றால், அவர்களுக்கு எதுவும் இல்லை. அல்லது கடவுள் எப்போதெல்லாம் அவர்களோடு இருக்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் நலமாயிருக்கிறார்கள்.

இன்று நாமும் கிதியோனைப் போல நெருக்கடியான குழிக்குள் நின்றுகொண்டு கையில் இருக்கும் கொஞ்சம் கோதுமையை அடித்துக் கொண்டிருந்தால், கொஞ்சம் யோசிக்க வேண்டும் - சம்திங் ராங், 'கடவுள் என்னோடு இல்லை!'. இதை அப்படியே தலைகீழாய்ப்போட்டால், 'கடவுள் என்னோடு இருக்கிறார்!' என்று நான் சொல்கிறேன் என்றால், அதை என் அறிவு வளர்ச்சியிலும், ஆற்றல் வளர்ச்சியிலும், செல்வத்தின் வளர்ச்சியிலும் காட்ட வேண்டும். ஆக, ஒன்றும் இல்லாமையும், வறுமையும் கடவுள் நம்மிடம் விரும்பும் குணம் அன்று. நாம் நிறைவாக இருத்தல் அவரின் பிரசன்னத்தின் அடையாளம். இப்படிச் சொல்லித்தான் கால்வின் தன் சபையை பொருளாதார ரீதியில் வளர்த்தெடுத்தார் என சமூகவியல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

ஆ. 'ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்!' 'ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் ஏன் இவையெல்லாம் எமக்கு நேரிடுகின்றன!' (6:11-12)

மேலே சொன்னதன் தொடர்ச்சி இது. ஆண்டவரின் தூதரின் வாழ்த்தைக் கேட்டவுடன், துணிச்சலாக கிதியோன், 'என்ன பெரிய ஆண்டவர் இருக்கார்னு சொல்றீங்க! ஆண்டவர் எங்களோட இருந்தா நாங்க ஏன் இப்படி இருக்கிறோம்?' கண்டிப்பாக ஆடிப்போயிருப்பார் தூதர். கிதியோனின் இந்த வார்த்தைகளில் கொஞ்சம் வலியும், கொஞ்சம் நம்பிக்கையும் ஒளிந்திருக்கிறது. வலி ஏனெனில், கடவுள் அவர்களைக் கைவிட்டுவிட்டார். நம்பிக்கை ஏனெனில், கடவுள் இருந்தால் இப்படி ஒரு நிலை தங்களுக்கு வந்திருக்காது. ஆக, கடவுள் கண்டிப்பாக குறுக்கிட்டு ஏதாவது செய்வார்.

இ. 'நீ திரும்பிவரும்வரை நான் இங்கேயே இருப்பேன்!' (6:18)

கடவுளின் தூதருக்கே கட்டளை கொடுக்கின்றார் கிதியோன். கடவுளுக்கு பலி செலுத்த விழைகின்றார் கிதியோன். 'காத்திருக்கிறேன்!' என்கிறார் தூதர். கிதியோன் வீட்டில் போய் என்ன செய்கிறார்? 'ஆட்டுக்குட்டியையும், இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவால் புளியாத அப்பத்தையும் தயார் செய்தார்.' இது அரைமணி நேரத்தில் அல்லது ஒருமணி நேரத்தில் நடக்கும் நிகழ்வா? இல்லை! இப்போதுதான் கோதுமை மணியே அடிக்கின்றார். பின் எப்படி மாவு வந்தது? ஆக, கடவுள் பொறுமையின் கடவுளாக இருக்கிறார். இந்தப் பொறுமை நிச்சயம் கிதியோனுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கும். கடவுள் நம்மோடு வந்துவிட்டால் அவர் பொறுமையாக நம்மோடு இருக்கிறார். அவர் பரபரப்பான இறைவன் அல்ல. அவரின் நேரம் முடிவில்லாதது.

ஈ. 'ஆண்டவரின் தூதர் அவர் பார்வையிலிருந்து மறைந்தார். அப்போது அவர் ஆண்டவரின் தூதர் என அறிந்து கொண்டார்!' (6:21-22)

நாம ஒருத்தர் இவர்தான் அப்படின்னா அறிந்து கொள்ள என்ன செய்வோம்? அவர் இருக்கிறாரா? என்று பார்ப்போம். ஆனால், ஒருவர் மறைந்தவுடன் இவர்தான் அவர் என்று எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? இது எபிரேய இலக்கியத்தில் இருக்கும் விந்தையான பண்பு. கடவுள் தங்கள் பார்வையில் இருந்து மறைந்தவுடன், அவரைக் கடவள் என மக்கள் கண்டுகொள்கின்றனர். இந்த பண்பை லூக்கா எம்மாவு நிகழ்விலும் பயன்படுத்துகின்றார் (24:31): 'இயேசு மறைந்தவுடன்தான் அவர் இயேசு என்று அறிந்து கொள்கின்றனர்!' ஆக, மறைந்திருப்பவர்தான் கடவுள். புலப்படாமல் இருப்பதே இறைமை. ஆக, நம் வாழ்வில் கடவுள் மறைந்திருப்பது போல இருந்தால் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று அர்த்தம்.

உ. 'நலம் நல்கும் ஆண்டவர்!' ('யாவே ஷலோம்!') (6:24)

ஆண்டவர் புதிய பெயர் பெறுகின்றார் இப்போது. கிதியோன் இந்த ஆண்டவருக்காக கட்டும் பீடம் ஆண்டவரின் பிரசன்னத்தையும், அவரின் உடனிருப்பையும் நினைவுபடுத்துகிறது. ஆண்டவர் மீட்பும், அமைதியும் தருகின்றார். ஆக, நாம் இறந்துவிடுவோம் என பயப்படத் தேவையில்லை. இன்று நாம் நம் ஊர்களில், பங்குகளில் வைத்திருக்கும் ஆலயங்கள் அல்லது பீடங்கள் நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்: ஆண்டவரின் பிரசன்னம்! இந்தப் பண்பைப் பின்பற்றி சிலர் தங்கள் வீடுகளிலும் ஆண்டவருக்கு என சின்ன பீடம் அல்லது மாடம் வைத்திருக்கின்றனர். இது நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் புத்துணர்ச்சி.

ஆக, எனக்குரியது என எதுவும் இல்லாமல், எல்லாம் இறைமையம் ஆனால் எனக்கும், என் மக்களுக்கும் நலம் என்பது முதல் வாசகத்தின் ஒற்றைவரிச் செய்தி. இதைத்தான் இயேசுவும் சீடத்துவத்திற்கு ஒருவர் தரும் விலையாக முன்வைக்கின்றார். 'என் அடையாளமாய் இருக்கும் வீடு, என் சொந்தமாய் இருக்கும் உடன்பிறப்புகள், என் மூலமாய் இருக்கும் என் பெற்றோர், என் நம்பிக்கையாய் இருக்கும் என் பிள்ளைகள், என் ஊன்றுகோலாய் இருக்கும் நிலபுலம் என்ற இந்த ஐந்தை ஒருவர் விட்டுவிட்டு, இந்த ஐந்தும் என் கடவுளே என இறைவனைப் பற்றிக்கொண்டால் அதுவே விண்ணரசு! இதுதான் நற்செய்தி வாசகத்தின் ஒற்றைவரிச் செய்தி.



போரும், (அதற்கு) பின்னும்

வியட்நாம் போரின்போது அமெரிக்க கப்பல்படையிலும், தரைப்படையிலும் பணியாற்றி ஒரு போர்வீரன் தன் கண்முன் நிகழ்ந்ததை மனத்திரையில் ஓடவிட்டு, 'இனியும் இப்படி ஒரு போர் மனுக்குலத்திற்குத் தேவையா?' என்று கேள்வி கேட்கும் ஒரு புத்தகம்தான் நான் அண்மையில் கண்ட 'போரும், அதற்குப் பின்னும்' (WAR AND AFTER, Vantage Press, New York, 1972, 100 pp.). நூலின் ஆசிரியர் டெரன்ஸ் எஃப். ஹில் (Terrence F. Hill).

போரின் வலியைப் பற்றியதுதான் இந்த நூல் என்றாலும் தார்ன்டன் (Thornton), டைனர் (Tyner), சார்லி (Charley), ஜெட் (Jed), ஆன் (Anne) என்ற ஐந்து கதாபாத்திரங்கள் வழியாக காதல், நட்பு, பாசம், கண்ணீர், இழப்பு, இயற்கை, உலகமயமாக்கல் என அனைத்தையும் போகிற போக்கில் தொட்டுவிட்டுப் போகிறது.

இந்த நூலில் என்னைக் கவர்ந்த சில வரிகளை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்:

1. போர் வாழ்விற்கும், கடவுளுக்கும், காதலுக்கும், மனித இனத்திற்கும் எதிரானது. ஒரு விலங்கு போல இருப்பது அவனுக்குப் பிடித்ததே கிடையாது. ஆனால், இங்கு அவன் ஒரு விலங்கு போல இருக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளான். (8)
[This war was anti-Life, anti-God, anti-love, anti-being a human being. Being an animal never appealed to him, but here he was, forced into that role.]

2. நான் இந்த உலகத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதி என்று அடிக்கடி நினைக்கிறேன். ஆனால், நினைத்துப் பார்த்தால் அது எத்தனை பெரிய தவறு? நான் பேசும் மொழி, நான் நம்பும் கடவுள், நான் அணியும் உடை இதில் எதுவும் ஒட்டுமொத்த உலகிற்குச் சொந்தமில்லை. அந்த உலகின் மிகச் சிறிய புள்ளிக்கே சொந்தம். அப்படியிருக்க நான் ஒட்டுமொத்த உலகின் பிரதிநிதியாக என்னை எப்படி நினைத்துக்கொள்ள முடியும்? இந்தச் சின்னப் புள்ளி என் நடையுடை பாவணைகளையும், நம்பிக்கைகளையும், புரிதல்களையும் கட்டிப்போடுகிறது என்றால் நான் வெறும் குரங்கே - மனிதனல்ல - அடுத்தவர் செய்வது போல நானும் அப்படியே பிரதிபலிக்கத்தானே பார்க்கிறேன்! (12-13)
[Oh, sometimes I think I'm just from the world and sometimes - when I notice what language I speak and what god I believe in, and especially when I notice the uniform I'm wearing - I remember that I'm from just one portion of this planet, and you know - that's a bloody shame. "He who allows his portion of the world to choose his mannerisms and beliefs and conceptions of life has no need of any other human faculty than the ape - like one of imitation."]

3. நீ கடவுளையே பார்த்திருந்தாலும், சாத்தானும் உனக்குத் தேவைதான். சாத்தான் இருந்தால்தான், கடவுள் எவ்வளவு மேன்மையானவர் என்பதை நீ உணர முடியும். (30)
[If you've found God, you still need the devil, if for no other reason than to remind you that you've found God.]

4. நீ செய்வது அனைத்தையும் அடுத்தவர்கள் பாராட்ட வேண்டும் என எதற்காக நீ விரும்புகிறாய்? எல்லாவற்றிற்கும் தலைவனாய் இருக்கும் அரசன் தனக்குக் கீழ் இருக்கும் ஒரு சபையின் கருத்துக்களை கேட்பதற்கல்லவா சமம் அது! (33)
[When I look at the people you seek approval from, I think how strange it is that a potential Caesar would seek the approval of a Senate.]

5. ஒரு அப்பா தனக்குக் கீழிருக்கும் அனைவரையும் சுரண்டி அளப்பரிய சொத்து சேர்த்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அந்த மகனும் தன்னைப் போல இருப்பான் என அவர் நினைத்தார். தன்னைப் போல அவன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். ஆனால், மகனுக்கு அப்பா செய்த எதுவும் பிடிக்கவில்லை. அனைத்தையும் தலைகீழாக்குகிறான். வங்கிக்கணக்கைவிட மனித உறவுகளும், மனிதர்களும் முக்கியம் எனச் சொல்லத் தொடங்குகிறான். எல்லாரையும் தன் குடும்பத்தின் உறுப்பினர்களாகப் பார்த்தான். இந்த உலகில் எல்லாரும் எல்லாம் பெறும் வரை ஆண்டு இறுதி வருமானம் என்பது பொய் என்றான். தன் வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்வான் என நினைத்த அந்த மகன் அப்பாவுக்கு நேர் எதிரானான். இப்படித்தான் பரிணாம வளர்ச்சி நடைபெறுகிறது. (42-43)
[About a father who earned his income by exploiting less evolved people, in business for his own profit, and who educated his son so that he could carry on the same thing - but the son became so educated and evolved that he saw people as more than assets or liabilities on a balance sheet; he saw them as members of his own tribe, his own spirit, and his own species - and he recognized that there was no such thing as year-end profit unless every human being on the planet had year-end profit, and the means to be at least physically satisfied in life. So the son, instead of carrying on, would become the father's archcompetitor - not just to his business, but to his whole way of life. But - how else would man evolve?]

6. போர் என்பது மனிதன் தன்னையே தன் கூட்டிற்குள் அடைத்து கதவைத் தாழிட்டுக்கொள்ளும் முயற்சி. (47)
[Life was not an open-ended issue, because war in the jungle was a microcosm of man's world. It was another example of man closing the door on himself.]

7. நாம் எல்லாரும் இறந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தின் கலப்படங்கள். 'நான்தான் இது!' என்று இந்த நேரத்தில் அல்லது நிகழ்காலத்தில் நாம் எதைச் சொல்ல முடியும்? (55)
[No one really 'is' at all. They are all mixed up in past, present, and future participles of themselves.]

8. அவன் ஆனிடம் இதுவரை 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று சொன்னது கிடையாது. 'நான் நம்மைக் காதலிக்கிறேன்!' என்றே சொல்லியிருக்கிறான். ஆனால் இன்று அவளைச் சந்தித்தால், 'நான் உன்னை காதலிக்கிறேன்!' என்றே சொல்வான். (57)
[He had never said to Anne, 'I love you'. He had said, 'I love us'. But now, if he saw her he would say, 'I love you.']

9. அவன் ஒரு மூளைச்சலவை செய்யப்பட்ட வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தான். அவனின் மூளையில் எப்பவும் ஓர் டேப்-ரிக்கார்டர் ஓடிக்கொண்டிருந்தது. 'இதைச் செய்! அதைச் செய்யாதே!' என அது கட்டளை கொடுத்துக்கொண்டே இருந்தது. இவன் தன் சொந்த வாழ்க்கையை எப்போதுதான் வாழப்போகிறானோ? (58)
[He was living an incardinated life and always had been. There was a tape recorder inside of him that just played on and on.]

10. பாரம்பரியம்தான் வாழ்க்கையின் பேய். நாம் பிறந்தது முதல், இறக்கும் வரை நம்மைத் துரத்திக்கொண்டே வருகிறது இது. (61)
[Tradition is the ghost of life. It haunts us when we want to be, and smothers us when we come die.]

11. அழகு என்பது சிந்தனைக்கு அப்பாற்பட்டது. இதை நாமாகவே ஆக்கவும் முடியும். இது மூளையில் இருப்பதில்லை. மூளைக்கும், வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பில் உதயமாகிறது. (62)
[Beauty is imponderable, but it does exist and it can be created. But it doesn't exist in the mind - it exists in the mind's relationship to life.]

12. சமநிலையை அடைந்தவர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். நாம் சில நேரங்களில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஏனெனில் நாம் நம்மைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிவதில்லை. (62-63)
[If one knew the secret to equilibrium, one could be happy in any situation...That is why we cannot be happy in this situation then, because we do not have enough control over ourselves.]

13. புவிஈர்ப்பு விசை - இது நமக்கு நாமே உருவாக்கிக்கொள்வது. நாம் எதற்கு அனுமதி கொடுக்கிறோமோ அதுதான் நம்மைப் பிடித்துத் தன்னிடம் இழுத்துக் கொள்கிறது. (74)
[Gravity - he thought - we create our own gravity.]

14. தன் சொந்த மண்ணைச் சார்ந்த ஒருவனுக்கு அந்த உணவகத்தில் தண்ணீர்கூடக் கொடுக்கவில்லை. ஆனால், அந்நியர்களாகிய எங்களுக்காக எதுவும் தருவதற்குத் தயாராக இருந்தார்கள். ஏன்? பணம். எங்களிடமிருந்த பணத்திற்காக. பணம்தான் எல்லாமா? அந்த மனிதனுக்கென்று தன்மதிப்பு இல்லையா? (79)
[They didn't even want to serve him - his own people, in his own country!...The ...women scorn their own men - not because we are better, but because we have money.]

15. எல்லா உறவுகளும் 'நிறைவு', 'குறைவு' என்ற இரண்டு வார்த்தைகளால்தான் தீர்மானிக்கப்படுகின்றன. ஒன்று மற்றொன்றை ஈடு செய்தால்தான் உறவு நீடிக்கும். இரண்டு பேரிடம் நிறைவு மட்டும் இருந்தால் ஆணவம் வந்துவிடும். குறைவு மட்டும் இருந்தால் வெறுமை வந்துவிடும். (81)
[All relationships are expressed and defined by a sufficiency or deficiency.]

16. நீ ஒன்றைச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்து விட்டால், குதித்து உள்ளே நுழை. முப்பது வயது ஆகியும், 'உனக்கு எந்த வகை காஃபி பிடிக்கும்?' என்று கேட்டால் தலையைச் சொறியும் இளைஞன் போல இராதே! (86)
[If you're going to do something, get into it. You look like one of those guys who doesn't find out what kind of coffee he likes until he's thirty years old.]

17. நிலவுக்குச் சென்று வருவதுதான் இந்த உலகில் மிக முக்கியமா? இங்கே என் அருகில் இருப்பவன் பட்டினியாலும், வறுமையாலும் வாட நான் எப்படி நிலாவுக்குப் போனதை நினைத்து பெருமைப்பட முடியும்? இப்படி பெருமைப்படுவதுதான் வாழ்க்கை என்றால் எனக்கு காரோ, வாஷிங் மெஷினோ வேண்டாம். மனிதர்கள் இந்த உடைந்து போகும் பொருட்களைவிட மேலானவர்கள் இல்லையா? (92)
[Is going to the moon worth it even if what I've described happens to only one human being? I don't want a car or a washing machine if people have to live like that in order to have these things. People matter more to me than a goddamned car or a rug or whatever it is that we're all fighting each other for.]

இந்தப் புத்தகத்தின் 96 பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அமெரிக்க புதினங்களுக்கே உரித்தான 'இடுப்புக்குக் கீழ்' சொல்லாடல்கள் அங்கங்கே இருந்தாலும், நீட்சே, டாஸ்டாய்வ்ஸ்கி, ஃப்ராய்ட் என பலரின் சிந்தனை ஓட்டங்களையும் புத்தகத்தில் காண முடிகிறது.

எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) அவர்களின் 'ஆயுதங்களே! போங்கள்!' (A Farewell to Arms) என்னும் புதினத்தில் அவர் காணும் 'போரில்லா உலகம்' என்னும் கனவே டெரன்ஸ் ஹில் (Terrence Hill) அவர்களின் கனவும்கூட.

இது ஒவ்வொருவருமே நம் கனவும்கூட!


Sunday, August 16, 2015

பாதி வழி, மீதி வழி

அன்று மாலை நேரம். தெருவில் ஒரே கூட்டம். ஆம், இந்த நாசரேத்தூர் இயேசு வந்தாலே இப்படித்தான் அவரைச் சுற்றிலும் எப்பவும் கூட்டம் கூடியே இருக்கும். பேய் பிடித்தவர்கள், காதுகேளாதவர்கள், கண்தெரியாதவர்கள் என ஏதோ திறந்தவெளி மருத்துவமனை போலத்தான் அவரின் பிரசன்னம் இருக்கும்.

அந்தப் பக்கம் பல்லக்கில் சென்றுகொண்டிருந்தான் ஒரு இளைஞன். அவனுக்கு ஏறக்குறைய 30 வயது இருக்கும். இன்னும் திருமணம் ஆகவில்லை. அவனது பல்லக்கு, அதைத் தூக்க நான்கு அடிமைகள், அவனின் பளபளக்கும் ஆடை இவற்றைப் பார்த்தாலே சொல்லிவிடுலாம் அவன் ஒரு பெரிய பணக்காரன் என்று. வெளியே கூட்டத்தின் சலசலப்பு கேட்டு, பல்லக்கின் திரை விலக்கிப் பார்க்கிறான். இயேசுவின் முகம் சட்டென இவரை நோக்கி அதே நொடியில் திரும்புகிறது. நட்சத்திரக் கூட்டத்தின் நடுவில் நிலவு மட்டும் பளிச்சென்று தெரிவது போல இயேசுவும் இவனுக்குத் தனியாக தெரிந்தார். 'பல்லக்கை நிறுத்துங்கள்!' என்று கையசைக்கிறான். பல்லக்கு நிற்கிறது. பல்லக்கை மெதுவாக இறக்கி அவனை இறங்குவதற்காக முழந்தாளிடுகிறார்கள் தூக்கி வந்த அடிமைகள். ஏதோ ஒன்று இயேசுவை நோக்கி இவனை இழுக்க, தன்னை மறந்து இயேசு நோக்கி செல்கிறான்.

இவனின் பட்டாடைகளையும், பரிவாரங்களையும், நறுமணத்தைலத்தையும் நுகர்ந்தவர்கள் தாங்களாகவே நகர்ந்து வழிவிடுகின்றனர். 'இயேசுவைப் பார்ப்பது இவ்வளவு சுலபமா?' என நினைத்துக்கொண்டே அவரை நெருங்கியவன் இயேசுவின் அருகில் சென்றுவிடுகிறான்.

'நல்லா இருக்கியா?' என்கிறார் இயேசு. இவனுக்கு தலையும், புரியவில்லை. காலும் புரியவில்லை. 'உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?' என்று இயேசு அவனைக் கேட்கின்றார். 'இந்தக் கேள்வியை நான்தானே இதுவரை மற்றவர்களிடம் கேட்டிருக்கிறேன்! எனக்கு இவர் என்ன செய்ய முடியும்? என்னிடம்தான் எல்லாம் இருக்கிறதே!' என்று நினைத்துக் கொண்டிருந்தவன், சட்டென, 'நிலைவாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டுவிடுகிறான்.

'கட்டளைகளைக் கடைப்பிடி!' என்று பதிலளிக்கிறார்.

'கட்டளைகளா? எவற்றை?' தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசுகிறான். 'இவற்றையெல்லாம் நான் சிறுவயதிலிருந்தே கடைப்பிடிக்கிறேனே!' பதிலும் சொல்கிறான்.

'இன்னும் உனக்கு ஒன்றும் குறைவுபடுகிறது!' இது இயேசுவின் வார்த்தை.

இவனுக்குள் சின்ன கோபம்: 'என்னது என்னிடம் குறையா? சொல்லிலா? பொருளிலா? என்ற தொனியில், 'என்ன குறை?' என எதிர்கேள்வி கேட்கிறான். 'நீ போய் உனக்குள்ளதையெல்லாம் விற்று, ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, பின் வந்து என்னைப் பின்தொடர்!'

கொஞ்ச நேரம் நிலைகுலைந்து போய்விடுகிறான். 'இதுதான் என்னிடம் உள்ள குறையா?' 'எதை விற்பது? யாருக்கு விற்பது? என்னிடம் உள்ளதை வாங்குவதற்கு இந்த ஊரில் எவனிடம் பணம் இருக்கிறது? நான் ஏன் விற்க வேண்டும்?' யோசித்துக் கொண்டிருந்தவன் நின்று கொண்டே இருக்க, இயேசு நகர்ந்து விடுகிறார்.

எப்போது பல்லக்கு ஏறினோம், எப்போது வீட்டிற்கு வந்தோம் என்ற நினைவே இல்லை அவனுக்கு. பசியில்லை. நேரே படுக்கைக்குப் போகிறான். தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுக்கிறான். வெளியே வந்து ஜன்னலின் பூப்போட்ட திரையை விலக்கி விட்டுப் பார்க்கிறான். ஒரு பெரிய மனப்போராட்டம் அவனுக்குள். 'இன்று நான் ஏன் அவரைப் பார்த்தேன்?'

'நிலைவாழ்வு (eternal life) பற்றித்தானே நான் கேட்டேன். அவர் நிறைவாயிருப்பதைப் (being perfect) பற்றிச் சொன்னாரே! நிலைவாழ்வு வேறு, நிறைவு வேறா?' அவன் மனம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறது.

நாளைய நற்செய்தியின் (காண். மத் 19:16-22) கதாபாத்திரம் இந்த இளைஞன்தான்.

பாதி வழி வந்தவனுக்கு, மீதி வழி செல்ல துணிச்சல் இல்லை.

நாளைய முதல் வாசகத்தில் (காண். நீத 2:11-19) இஸ்ரயேல் மக்களுக்கும் இதே சோதனைதான். பாதிவழி கடவுளோடு வந்தவர்கள் மீதிவழி அவரோடு போக மறுத்து வேற்றுத் தெய்வங்களை நாடுகின்றனர்.

இரண்டு இறைவாக்குப் பகுதிகளிலும் இருக்கும் ஒரு வார்த்தை 'விற்பது!'

'இஸ்ரயேலின்மேல் ஆண்டவரின் கோபக்கனல் கனன்றது. எனவே அவர், கொள்ளையடிப்போரிடம் அவர்களை விற்றுவிட்டார் (he sold to them!) (ஆனால், மொழிபெயர்ப்பு 'ஒப்படைக்க' என தவறாக செய்யப்பட்டுள்ளது). அவர்களும் அவர்களைக் கொள்ளையடித்தனர்' (நீத 2:14).

'நீர் போய் உம் உடைமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு...' (மத் 19:21)

ஒரு சின்ன கேள்வி இயேசுவுக்கு: 'எதற்காக உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்? உடைமைகளை அப்படியே ஏழைகளுக்குக் கொடுத்துவிடலாமே! ஏன் ஆண்டவரே இப்படி ஒரு வேலையை இரண்டு வேலையா ஆக்குறீங்க?' 

ஆனால், இயேசுவின் வார்த்தையில் ஒரு அர்த்தம் இருக்கிறது.

'விற்பது' என்றால் என்ன?

விற்பவர்தான் உரிமையாளர். மற்றவர் வாங்குபவர். இரண்டு பேருக்கும் இடையில் விற்கப்படும் பொருளும், பதிலுக்குக் கொடுக்கப்படும் பணமும் இருக்கிறது. இதில் விற்பவர் விற்கும்போது அந்தப் பொருளின் மேல் உள்ள உரிமையை இழக்கிறார். அதே நேரத்தில் உரிமை இருக்கும் ஒருவரால்தான் ஒரு பொருளை விற்க முடியும். ஆக, இந்த வலிதான் மிகக் கொடுமையானது. 'என் கண்முன் என் உரிமையை விட்டுக்கொடுப்பது!' இந்த வலியை அந்த இளைஞன் உணர வேண்டும் என நினைக்கிறார்போல இயேசு.

முதல் வாசகத்தில் இந்த வலியை இறைவன் அனுபவித்தார். ஒவ்வொரு முறையும் மிதியானியர்கள் படையெடுத்தார்கள், அம்மோனியர்கள் படையெடுத்தார்கள், எகிப்தியர்கள் படையெடுத்தார்கள் என வாசிக்கிறோமே. இந்த நேரங்களில் எல்லாம் இறைவனுக்கு எவ்வளவு வலி இருந்திருக்கும்? தன் உரிமைப்பொருளான மக்களை தன் கண்முன்னே மற்றவர்கள் எடுத்துக்கொள்ளுமாறு விட்டுவிடுகிறார். எதற்காக? அவர்களைத் திருத்துவதற்காக. ஆனால், இப்படி விட்டுவிட்ட மக்களை நீதித்தலைவர்களை அனுப்பி உடனே மீட்டுக்கொள்கின்றார்.

உடைமைகளை நேரடியாக ஏழைகளுக்குக் கொடுப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. என்னிடம் இருக்கும் பல்லக்கும், பட்டாடைகளும் ஏழைகளுக்குத் தேவையில்லாததாக இருக்கலாம். ஆக, நான் அடுத்தவருக்கு கொடுக்கும்போது அல்லது தியாகம் செய்யும்போது, என்னிடம் பயன்படாத ஒன்றையோ, அல்லது அடுத்தவருக்குப் பயன்படாத ஒன்றையோ கொடுக்கும்போது அதில் நிறைவு இருப்பதில்லை. ஆனால் பணம் எல்லாரும் பயன்படுத்தக்கூடியது. ஆகையால் விற்றால் அதை எல்லாருக்கும் கொடுக்கலாம். (இயேசுவின் காலத்தில் பணப்புழக்கம் இருந்தது. 'பொருளுக்குப் பொருள் கொடுக்கும் பழக்கம்' - barter system - அப்போது இல்லை).

இந்த இளைஞன் என் சிந்தனைக்கு மூன்று கேள்விகளை முன்வைக்கிறான்:

1. பாதி வழியா, நீண்ட வழியா? இயேசுவைப் பின்தொடர்வது கஷ்டமா? இல்லை. ஆனால், என்ன கஷ்டம் என்றால் எப்போதும் பின்தொடர்வதுதான். நல்லவனாக இருப்பது பெரிய விஷயம் அல்ல. என்றைக்கும் நல்லவனாய் இருப்பதுதான் பெரிய விஷயம். இயேசுவைப் பின்பற்றுவதிலும் சரி, அல்லது என்னுடைய கெட்ட பழக்கங்களில் எதையாவது விடுவது என்பதிலும் சரி, விடாமுயற்சி மிக முக்கியமானது. இந்த இளைஞனால் பாதிவழிதான் போக முடிந்தது. இஸ்ரயேல் மக்களுக்கும் விடாமுயற்சி குறைவாகவே இருந்தது முதல் ஏற்பாட்டில். இன்று என் பின்பற்றுதல் எப்படி இருக்கிறது?

2. நிலைவாழ்வா? நிறைவா? நிறைவாழ்வு என்பது இறப்புக்குப் பின் நிகழ்வது. இதைத்தான் அந்த இளைஞனும் கேட்டிருக்கிறார். ஆனால், அடுத்த உலகில் நடக்கும் அல்லது நடக்காத நிலைவாழ்வு குறித்து கவலைப்படுவதை விட, இந்த உலகில் நீ நிறைவாக இருக்கிறாயா? என அக்கறைகொள் என்கிறார் இயேசு. இதைத்தான் நம் கிறிஸ்தவ மதத்தைப் பற்றிச் சொல்லும்போது, காரல் மார்க்ஸ், "Christianity promises a pie in the sky when you die" என்று நையாண்டி செய்கின்றார். ஆக, இறப்புக்குப் பின் நடக்கும் வாழ்வைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, இறப்புக்கு முன் உள்ள வாழ்வை நான் நிறைவாக வாழ்கிறேனா?

3. ஒன்றின்மேல் உரிமை கொண்ட ஒருவனால்தான் அதை விட்டுக்கொடுக்க முடியும். என் உடலின் மேல் உரிமை கொண்டிருந்தால்தான், இனி அது எனக்குத் தேவையில்லை என்று சொல்லி கற்பு வாழ்வை தெரிந்து கொள்ள முடியும். என் முடிவெடுக்கும் திறனில் நான் உரிமை கொண்டிருந்தால்தான், கீழ்ப்படிதல் என்ற வாக்குறுதிக்காக அதை விட்டுக்கொடுக்க முடியும். ஆக, உரிமையும் இருக்க வேண்டும். உரிமையை விட்டுக்கொடுக்கும் துணிச்சலும் வேண்டும். இதுதான் புதிய சீடத்துவம். அருட்பணி நிலையில், என் மக்களின்மேல் உரிமையும் இருக்க வேண்டும். அப்போதுதான் நான் அவர்களுக்குப் பணிசெய்ய முடியும். அதே நேரத்தில் உரிமையை விட்டுக்கொடுக்கும் துணிச்சலும் வேண்டும். அப்போதுதான் என் மகிழ்ச்சி என்னிடம் இருக்கும். அல்லது பறிபோய்விடும். இன்று நான் எதன் மேலெல்லாம் உரிமை கொண்டிருக்கிறேன்?

பாதிவழி வந்த இளைஞனாய், பாதிவழி வந்த இஸ்ரயேலராய் இல்லாமல் 
மீதிவழியும் நடக்க அருள்தா இறைவா!


நேர மேலாண்மை

'... ஆகவே காலத்தை முற்றிலும் பயன்படுத்துங்கள்' (எபேசியர் 1:16)

'ஞானத்தோடு வாழுங்கள்!' என்று எபேசு நகரத் திருச்சபைக்கு எழுதுகின்ற தூய பவுலடியார் உடனடியாக 'நேரத்தை முற்றிலும் பயன்படுத்துங்கள்!' என்று நேர மேலாண்மை பற்றிப் பேசுகின்றார்.

'நேர மேலாண்மையே வாழ்க்கை மேலாண்மை' என்பார்கள்.

மேலும், 'வாழ்க்கையை அன்பு செய்யும் எவரும் நேரத்தை விரயம் செய்வதில்லை. ஏனெனில் வாழ்க்கை என்ற ஓவியம் வரையப்படுவது நேரம் என்ற பலகையில்தான்' என்று சொல்வார் என் பேராசிரியர் ஒருவர்.

ஒருமுறை நம்மைக் கடக்கும் நேரம் கடந்ததாகவே இருக்கிறது.

'இன்று நாம் ஆன்லைனில் சேமித்த நேரத்தை ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம்!'

'திடீரென்று கிடைக்கும் ஃப்ரீ டைம் கண்டிப்பாக வீணடிக்கவே படுகிறது!'

'Procrastination: Don't postpone anything to tomorrow that can be done day after tomorrow!"

இதெல்லாம் இந்த வாரத்தில் நான் அங்கே இங்கே படித்த வாசகங்கள்.

நான் இரண்டாம் ஆண்டு இறையியல் படித்துக் கொண்டிருந்தபோது அருட்திரு. ஐசக் என்ற பேராசிரியர் நேர மேலாண்மை குறித்து வகுப்பெடுத்தார். அன்றிலிருந்து ஏதோ என்னால் முடிந்தவரை அவரின் அறிவுரைகளை நான் கடைப்பிடித்து வருகிறேன்.

1. Goal. நேரம் சரியாகச் செலவிடப்பட வேண்டுமென்றால் என் இலக்கு என்ன என்பதை நான் தெளிவாக வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, சினிமா பார்ப்பது நேரம் விரயமா? ஒரு விஞ்ஞானிக்கு அது நேர விரயம். ஆனால், திரைப்பட விமர்சகருக்கு அதுதான் அவரின் இலக்கு. ஆக, நம் இலக்கைப் பொறுத்தே நேரம் விரயம் செய்யப்படுகிறதா அல்லது பயன்படுத்தப்படுகிறதா என்பதை நாம் கணிக்க முடியும்.

2. Stephen Covey's Urgent-Important Quadrant. ஸ்டீஃபன் கோவே சொல்லும் அறிவுரை: நாம் செய்யும் வேலைகளை 'முக்கியம்', 'அவசரம்' என்ற வார்த்தைகளை வைத்து, (1) அவசரம் - முக்கியம், (2) முக்கியம் - அவசரமில்லை, (3) அவசரம் - முக்கியமில்லை, (4) அவசரமில்லை - முக்கியமில்லை என நான்கு கட்டங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். இந்த நான்கு கட்டங்களில் இரண்டாம் கட்டத்தில் உள்ள வேலைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த இரண்டாம் கட்டம்தான் நம் இலக்கு நோக்கி நம்மை முன்னேற்றுகின்றது.

3. Eating the elephant. சிலர் நேரமில்லை எனப் புலம்புவார்கள். இவர்களுக்கு 'யானை டெக்னிக்;' இருக்கிறது. அது என்ன யானை டெக்னிக்? யானையை முழுதாக சாப்பிட முடியுமா? ஒரு கோழியை முதலில் முழுதாக சாப்பிட முடியுமா? ஒரு கிலோ கோழியை ஐம்பது கிராம் வீதம் 20 நாட்களில் சாப்பிட்டுவிட முடியும். அதுபோல ஆயிரம் கிலோ யானையை ஐம்பது கிராம் வீதம் பிரித்தால் ஐந்தரை ஆண்டுகளில் சாப்பிட்டுவிட முடியும். ஆக, யானையை சாப்பிடவே முடியாது என்று சொல்ல முடியாது. ஒரு பெரிய புத்தகம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம்;. அதைப் படிக்க நேரமில்லை என்று நாம் சொன்னால் நேரமே கிடைக்கப்போவதில்லை. ஆனால், ஒரு நாளுக்கு ஐம்பது பக்கங்கள் என வைத்தால், 20 நாட்களில் நாம் 1000 பக்கங்கள் வாசித்துவிட முடியும்.

4. Eating the frog. அடுத்த டெக்னிக் 'தவளையை சாப்பிடுவது!' என்னங்க தவளையை எப்படி சாப்பிடுவது? ஒரு தட்டுல பிரியானி வைச்சு, அதுல ஒரு தவளையையும் வச்சி கண்டிப்பாக இரண்டையும் சாப்பிடனும்னு சொன்னா, நாம் எதை முதலில் சாப்பிடுவோம்? நமக்குப் பிடித்த அல்லது சாப்பிடுவதற்கு எளிதான பிரியானியைத்தான். ஆனால், நாம் பிரியானி சாப்பிடும்போது இந்தத் தவளை நம்மை பயமுறுத்திக் கொண்டே இருக்கும். ஆக, கண்ணை மூடிக்கொண்டு முதலில் தவளையை சாப்பிட்டுவிட்டால், பின் பிரியானியை ரசிக்க நேரம் கிடைக்கும். நான் பள்ளிக்கல்வி பயின்றபோது உயிரியல் பாடம் பிடிக்கும் என்பதால் அதையே படித்துக்கொண்டிருப்பேன். ஆனால், தவளை போல இயற்பியலும், கணிதமும் பயமுறுத்திக்கொண்டே இருக்கும். கண்டிப்பாக செய்ய வேண்டிய வேலை கொஞ்சம் கடினமாக இருந்தாலும், அதைச் செய்துவிட்டால் சின்னச் சின்ன வேலைகள் இலகுவாக இருக்கும்.

5. Surplus time. உபரி நேரம். அதாவது, நாம் பயணம் செய்யும்போது, வரிசையில் காத்திருக்கும் போது, நோய்வாய்ப்பட்டிருக்கும்போது கிடைக்கும் நேரம் இது. பேங்குக்கு போறோம். டி.டி. எடுக்கணும். பெரிய வரிசை இருக்கிறது. எவ்வளவு நேரம்தான் டி.டி. சலானை திருப்பி, திருப்பி படிப்பது? அல்லது எவ்வளவு நேரம்தான் அழைப்பே வராத செல்ஃபோனைப் பார்த்துக்கொண்டிருப்பது? கையில் ஒரு புத்தகம் இருந்தால் உடனே படிக்கத் தொடங்கலாம். படிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. அந்த நேரத்தில் எதையாவது சிந்தித்து முடிவெடுக்கலாம். வருகின்ற நாட்களில் செய்ய வேண்டியவை குறித்து யோசிக்கலாம்.

6. Pooling. சேர்த்துக்கொள்ளுதல். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்த கடைப்பிடிக்கப்படும் ஒரு நல்ல செயல் 'காரில் சேர்த்துக்கொள்ளுதல்' (car pooling). உதாரணத்திற்கு, நானும், என் பக்கத்துவீட்டுக்காரரும் மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு திருமணத்திற்கு போக வேண்டும் என வைத்துக்கொள்வோம். இருவரிடமும் கார் இருக்கிறது. இருவரும் தனித்தனியே செல்ல வசதி படைத்தவர்கள்தாம். ஆனால், ஒருவர் தியாகம் செய்து மற்றவரை தன்னுடன் அழைத்துச் செல்வது. இப்படிச் செய்வதால் ஒரு காருக்குரிய எரிபொருள் முழுவதும் மிச்சமாகிறது. மற்றவரின் வேலையும் முடிந்து விடுகிறது. இதை நம்ம ஊருல செய்ய நம்மளோட 'கௌரவம்' குறுக்கிடலாம்! இதையே நாம் நேர மேலாண்மைக்குப் பயன்படுத்தலாம். அதாவது, வேலைகளை சேர்த்துக்கொள்வது. இப்ப கோயிலுக்குப் போகணும்னு வச்சிக்குவோம். போற வழியில் காய்கறி கடை இருக்குனா, கையில ஒரு பையும் கொண்டு போகணும். செபம் முடிந்து வரும் வழியில் காய்கறி வாங்கிட்டு வந்திடலாம். அதெப்படி கோயிலுக்கு பை எடுத்துட்டு போறதுன்னு யோசிக்கக் கூடாது. கூச்சப்படக்கூடாது. 'அடுத்தவங்க என்ன நினைப்பாங்கனு' நாம அவங்களைப் பற்றி நினைச்சிட்டு இருக்கக் கூடாது. நம்ம நேரம்தான் நமக்கு முக்கியம்! நாமதான் நமக்கு முக்கியம்! (நல்லா இருக்குல இந்த 'philosophy'!)

7. Delegation. பணிப்பகிர்வு. எல்லா வேலையையும் நான்தான் செய்வேன் அப்படின்னு நினைக்கிறதும் தவறு. எந்த வேலையெல்லாம் அடுத்தவர்களிடம் கொடுக்க முடியுமோ, அதை அவர்கள் செய்ய விட்டுவிட வேண்டும். உதாரணத்திற்கு, ஐஸ்வர்யா ராய் டான்ஸ் ப்ரோகிராம் நடக்குது என வைத்துக்கொள்வோம். அவங்களோட வேலை நல்லா டான்ஸ் ஆடணும் அவ்வளவுதான்.  ஒருவேளை ஐஸ்வர்யா ராய், 'டிக்கெட் அடிக்கிறதுல இருந்து, அதை விற்பது, இடம் முன்பதிவு செய்வது, தகவல் சொல்லிக்கொண்டிருப்பது' என எல்லா வேலையையும் செய்யத் தொடங்கினால், அவருக்கு டான்ஸ் பழக நேரம் இருக்காது. அப்புறம் மேடையிலும் நல்ல நிகழ்ச்சியைத் தர முடியாது. எது நான் முதன்மையானதாகச் செய்ய வேண்டியதோ அதைச் செய்துவிட்டு, மற்றதை மற்றவர் பொறுப்பில் விட்டுவிட வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு தரும் எளிய விதி:

'ஆம் என்றால் ஆம் என்றும், இல்லை என்றால் இல்லை என்றும் சொல்லுங்கள்!'

அவ்வளவுதான்!

இதை நாம் சரியாகச் செய்தாலே நம் நேரத்தில் 50 சதவிகிதம் மிச்சமாகும்.

மற்றொன்று, பகவத்கீதையின் தினாச்சார்யா (Dhinacharya) சொல்வது:

'ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு வேலை. அந்த நேரத்தில் அந்த வேலை மட்டுமே!'
(A time for everything and everything in its time)

'ஆகவே, காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்!'



Friday, August 14, 2015

சுதந்திரமும், விண்ணேற்பும்

(இது மறையுரைச் சிந்தனை அல்ல!)

நாளை நம் இந்தியாவின் சுதந்திர தினப் பெருவிழா.

நாளை நம் அன்னை மரியாளின் விண்ணேற்புப் பெருவிழா.

'இரண்டிலுமே எனக்கு நம்பிக்கை இல்லை!'

- இப்படி ஒற்றை வரியில் சிந்தனையை முடித்துவிட முடியுமா என்ன?

'விடுதலை நாள்' என்று தூய தமிழில் சொல்லும்போது ஏதோ சிறைக்கைதி விடுதலை ஆனதை நாளிதழில் வாசிப்பது போல இருக்கிறது. ஆகவே, சுதந்திர தினம் என்றே வைத்துக்கொள்வோம்.

'சுதந்திரமாகப் பிறக்கும் மனிதன், தன் வாழ்நாளெல்லாம் அடிமையாக இருக்கிறான்' ('சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறான்' என்பது நேரடி மொழிபெயர்ப்பு) என்கிறார் ரூசோ.

'நான் ஒரு இந்தியன்!' என்று சொல்கிறோமே. இதன் பொருள் என்ன? ஒட்டுமொத்த இந்தியாவை நான் பிரதிபலிக்கிறேன். இந்த இந்தியா என்ற பெரிய நிலப்பரப்பின், ஒரு குட்டி நிலப்பரப்பில் ஒரு தந்தைக்கும், தாய்க்கும் மகனாகப் பிறந்த, அவர்களின் மொழியை என் தாய்மொழியாக, அவர்களின் சாதியை என் சாதியாக, அவர்களின் மதத்தை என் மதமாக, அவர்களின் உணவுப் பழக்கத்தை என் உணவுப் பழக்கமாக, அவர்களின் சொந்தங்களை என் சொந்தங்களாக ஏற்றுக்கொண்டு '0' ஆண்டிலிருந்து, '60' அல்லது '70' அல்லது '80' ஆண்டுகள் வாழும் உயிர்கொண்ட ஒரு உடல்தான் இந்த இந்தியன்.

ஆக, ஒரு குழந்தை பிறந்தவுடன், அது சுதந்திரமாகப் பிறந்தாலும், அது விரும்பாத மொழி, இனம், சாதி, உணவுப் பழக்கம், சொந்தம் எல்லாம் அதைப் பிணைத்து விடுகிறது. அதிலிருந்து அது விடுபட முடியாது. தன்மேல் சுமத்தப்பட்ட இவைகள் அனைத்தையும் கொஞ்சம், கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள அது பழகிவிடுகிறது. இப்படிப் பழகிக்கொள்ள வேண்டும் என்ற சமூகமும் சொல்கிறது.

இன்று நாம் சுதந்திரம் வாங்கிவிட்டோம்! அப்படித்தானே!

1945ஆம் ஆண்டு கோமாவில் விழுந்த ஒருவர் இன்று திடீரென எழுந்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். அவரை நம் நகருக்குள் கூட்டிச் சென்றால் சுதந்திரத்தைப் பற்றி என்ன சொல்வார்?

நான் உண்ணும் உணவு மேக்டொனால்ட்ஸ்!

நான் குடிக்கும் பானம் கோ-கோ கோலா!

நான் அணியும் ஆடை பார்க் அவென்யு!

நான் குடிக்கும் மது ஜானி வாக்கர்!

நான் பிடிக்கும் புகை மர்ல்பரோ!

என் சட்டைப் பைக்குள் ஆன்ட்ராய்ட் அல்லது ஐஓஎஸ்!

என் கண்முன் சாம்சங்!

என் காதுகளில் சோனி!

என் காலுக்குக் கீழ் இன்ப்ளு!

என் வீட்டுக்கு வெளியே ஜாக்வார்!

என் பக்கத்து வீட்டில் என்னோடு இருந்தவர் எங்கே!

'நன்றாகப் படித்ததால் மேற்படிப்பு முடித்துவிட்டு

வேலை பார்க்க அமெரிக்கா போய்விட்டார்!'

வெள்ளைக்காரர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றுவிட்டாலும், வெள்ளை மோகம் இன்னும் விட்டபாடில்லை (எனக்கும்தான்!).

இப்படியெல்லாம் இருப்பதற்கு 'உலகமயமாக்கல்' என்ற ஒரு பெயர்.

'வெளக்கமாத்துக்குப் பேரு பட்டுக்குஞ்சமாம்!'னு ஊருல சொல்வாங்கல, அது மாதிரி!

நாம் சுதந்திரம் பெற்றதே நமக்கு ஆகஸ்ட் 15 அன்றுதான் நினைவிற்கு வருகிறது. அடுத்தநாள் மறுபடியும் விடிய, அப்படியே வாழ்க்கை தொடர்கிறது.

சரி! என்னதான் செய்ய?

ஒன்னும் செய்ய வேண்டாம்!

எதுக்குங்க டென்ஷனாகி நம்ம ப்ரஷர் கூட்டிக்கணும்! நாளைக்கு ஒருநாள்தான் லீவு. லேட்டா எந்திரிச்சி, காஃபி குடிச்சுகிட்டே ஜார்ஜ் கோட்டையில் ஜெயா ஏற்றும் கொடியையும், குண்டு துளைக்காத கண்ணாடிக்குப் பின் டில்லியில் மோடி ஆற்றும் உரையையும் பாதிப் பாதி பார்த்துவிட்டு, விஜய் டிவியில், 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக 'காக்கா முட்டையாம்''. அதையும் பார்த்துவிட்டு, அப்படியே மதிய கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு, அடுத்த வாரம் என்ன வேலை செய்யணும் என்று யோசிப்போம். நாடு சுதந்திரம் வாங்கினாலும், நம்ம வயித்துக்கு நாமதான உழைக்கணும்!

வாழ்க சுதந்திரம்!

இந்த சுதந்திரத்திற்கான பொருளைத் தருபவர் அன்னை மரியாள்.

அதாவது ஒரு குட்டி ஊரில் பிறந்தாலும், அவருக்கென்று இனம், மொழி, சொந்தம் இருந்தாலும், இன்று எல்லாவற்றையும் கடந்து விண்ணேறி நிற்கிறார்.

இதுதான் சுதந்திரம்!

ஒரு குறிப்பிட்ட குட்டி வட்டத்துக்குள் பிறந்தாலும், அந்த வட்டத்தை விட்டு வெளியேறுவதுதான் சுதந்திரம்!

அவங்க சொன்னது ஒரே ஒரு 'ஆம்!' என்ற வார்த்தைதான். எல்லாமே மாறிடுச்சு.

இன்று நாமலும் ஏதாவது ஒன்றுக்கு 'ஆம்!' என்று சொல்லி அதில் உறுதியாயிருந்தால் போதும் சுதந்திரக் காற்றை நாமும் சுவாசிக்கலாம்.

இனிய சுதந்திர தின மற்றும் அன்னையின் விண்ணேற்புதின வாழ்த்துக்களும், செபங்களும்!

நம்பிக்கை உள்ள ஒருவருக்கு மட்டுமே சுதந்திரமும், விண்ணேற்பும் பொருள்தர முடியும்!

எனக்கு இருக்கு நம்பிக்கை!