Monday, June 2, 2014

மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?

இன்று பெத்லகேமிற்கு நாம் சென்றால் இயேசு பிறந்த இடத்தின் கோவிலுக்குள் செல்ல வேண்டுமென்றால் வெறும் 3 அடி இருக்கும் ஒரு சின்ன கதவின் வழியாகவே கடந்து செல்ல வேண்டும். இறைவன் மனித உருவில் இறங்கி வந்ததை நினைவுகூறும் விதமாக இது அமைந்துள்ளதாகவும், இயேசுவைச் சந்திக்க வரும் ஒவ்வொருவரும் தன் இயல்பைச் சுருக்கியே வர வேண்டும் என்று இது குறிப்பிடுவதாக அங்கே எழுதப்பட்டுள்ளது.
இந்தச் சுவற்றைக் கடந்து சென்றால் மிகப்பெரிய வாயில் இருக்கும். அந்த வாயிலில் தான் திருப்பாடல் 24 எழுதப்பட்டுள்ளது:

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்.
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்.
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.

உள்ளே நுழையும் அனைவரையும் 'மாட்சிமிகு மன்னர்' என்று அழைப்பதாகவே இருக்கிறது இது.

நம் வாழ்வில் எல்லாம் சகஜம் என்பதையும், தாழ்வான நிலையிலும், உயர்ந்த நிலையிலும் நம் மனப்பக்குவம் ஒன்று போலவே இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது பெத்லகேம் ஆலயம்.

திபா 24 மாவேந்தரின் திருப்பாடல் என அழைக்கப்படுகின்றது.

அரசராக இருக்கும் தாவீது தனக்கு மேல் அரசராக இருக்கும் யாவே இறைவனுக்கு ஏதாவது சிற்றாலயம் கட்டி அதை அர்ப்பணம் செய்தபோது இதைப் பாடியிருக்கலாம். அல்லது சாலமோன் அரசர் எருசலேமின் ஆலயத்தின் அர்ப்பண விழா அன்று இதைப் பாடியிருக்கலாம்.

யாவே இறைவனின் பிரசன்னத்தை தான் கட்டிய ஆலயத்திற்குள் அரசர் வரவேற்பதாக அமைகிறது இத்திருப்பாடல்.

'எண்ணம்போல் வாழ்வு' - இதுதான் இந்த திபா வரிகள் நமக்குச் சொல்லும் பாடம்.

எண்ணம் உயர்ந்தால் வாழ்வு உயரும்.

தன் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த விவசாயி ஒரு பவண்டோ பாட்டிலைப் பார்க்கின்றார். அந்தப் பாட்டிலை எடுத்துப் பார்த்தவர் அதைக் கொண்டு போய் தன் தோட்டத்தில் படர்ந்திருந்த பூசணிச் செடியின் மொட்டை அதற்குள் மெதுவாகத் திணித்து அங்கேயே வைத்து விடுகின்றார். ஒரு மாதம் கழித்து பூசணி அறுவடைக்குச் சென்ற போது அவருக்கு ஆச்சர்யம். பவண்டோ பாட்டில் பூசணி மட்டும் பாட்டில் அளவிற்கு வளர்ந்திருந்தது. மற்ற பூசணிகள் எல்லாம் பெரிது பெரிதாக வளர்ந்திருந்தன. பாட்டில் பூசணியின் வளர்ச்சியைத் தடைசெய்திருந்தது. வெளியில் இருந்த சுதந்திரம் மற்ற பூசணிகளின் வளர்ச்சியை அதிகமாக்கியிருந்தது. வானமே எல்லை என்று வளர்ந்தால் வளர்ச்சி மேலோங்கும்.

நாம் எண்ணத்தால் உயரும் போது அங்கேயும் மாட்சிமிகு மன்னர் உள் நுழைவார்!

3 comments:

  1. " எண்ணம் போல் வாழ்வு" சரியாக கூறினீர்கள் தந்தையே" இதையேதான் உலக வழக்கில் "விதை விதைத்தவன் விதை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்" என்கிறார்கள் போலும்.பெத்லகேம் தேவாலயத்திற்குள் நுழைய நம் அனைவராலும் முடியலாம்; முடியாமலும் போகலாம் ஆனால் விண்ணகத் தேவாலயத்திற்குள தாராளமாக நாம் நுழையலாம்; அதற்கேற்ப நம் வாயின் சொற்கள் அவருக்கு ஏற்றவையாக இருக்கட்டும்;நம் உள்ளத்தின் எண்ணங்கள் அவருக்கு உகந்தவையாக இருக்கட்டும்.இறைவன் துணை புரியட்டும்....

    ReplyDelete
    Replies
    1. பெத்லகேம் ஆலயத்தில் நுழைவதிலும் பயனில்லை. விண்ணக ஆலயத்தில் நுழைவதிலும் பயனில்லை.

      Delete
  2. "எண்ணம் போல வாழ்வு" ..மிகச்சரியாக்க் கூறியுள்ளீர்கள்.இதைத்தான் நம்மவர்கள் " வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்" என்கிறார்கள் போலும்.பெத்லகேம் கோவிலுக்குள் நுழையும் பேறு கிடைக்காவிடினும் நம் விண்ணகத்தின் நுழை வாயிலை அகலப் படுத்துவோம்..எப்படி? "நம் வாயின் சொற்கள் அவருக்கு ஏற்றவையாக இருக்கட்டும்;நம் உள்ளத்தின் எண்ணங்கள் அவருக்கு உகந்தவையாய் இருக்கட்டும்."...முயன்றுதான் பார்ப்போமே!

    ReplyDelete