Friday, June 27, 2014

காலையில் பேரன்பு! மாலையில் வாக்குப் பிறழாமை!

திபா 92ஐ ஓய்வு நாள் பாடல் என அழைக்கிறது எபிரேயப் பாடம்.

ஓய்வு நாள் என்றால் என்ன?

ஓய்வு எடுக்கிற நாள் ஓய்வு நாள் என்கிறீர்களா?

எபிரேய மரபில் ஓய்வு நாளுக்கு இரண்டு காரணங்கள் கொடுக்கப்பட்டன:

அ. ஆண்டவராகிய கடவுள் உலகை ஆறு நாட்களில் படைத்து விட்டு ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் என்று தொடக்கநூலின் அடிப்படையில் முன் வைக்கும் காரணம் முதற்காரணம். கடவுள் தன் வேலையிலிருந்து ஓய்ந்தார் எனில் மனிதர்களாகிய நாமும், கடவுளின் உடன்-படைப்பாளிகளாகிய நாமும், நம் வேலையிலிருந்து ஓய்வு எடுக்க வேண்டும்.

ஆ. விடுதலைப் பயண நூல் மற்றொரு காரணத்தை முன்வைக்கின்றது. அதாவது இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது யாவே இறைவன் அவர்களுக்காகப் பாரவோன் மன்னனிடம் சண்டையிட்டு விடுதலை பெற்றுத் தருகின்றார். அவர்களைப் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குக் கடந்து செல்கின்றார். ஆகையால் வாரத்தில் ஒரு நாள் தங்கள் வீடுகளில் இருக்கும் அடிமைகளுக்கும் ஓய்வு கொடுத்து தாங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததை நினைவுகூற அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

'சாபத்' என்றால் நிறுத்தம் என்பது பொருள். தான் ஆறு நாட்கள் செய்யும் வேலையிலிருந்து நிறுத்தம் செய்வதே ஓய்வு நாள். யூதர்களுக்கு ஓய்வு நாள் என்பது சனிக்கிழமை.

இயேசுவின் காலத்தில் ஓய்வு நாள் குறித்த சட்டங்கள் நிறைய இருந்தன. இயேசு அந்தச் சட்டங்களைக் கடுமையாகச் சாடுகின்றார்.

இரண்டாம் ஏற்பாட்டு மக்களாகிய கிறித்தவர்களுக்கு ஓய்வு நாள் என்பது ஞாயிற்றுக் கிழமை. ஆண்டவரின் உயிர்ப்பு ஞாயிறன்று நிகழ்ந்ததால் அன்றைய தினத்தை நாம் ஓய்வு நாளாகக் கொண்டாடுகிறோம்.

முதன் முதலில் கிறித்தவ மதம் உரோமை நகருக்குப் பரவத் தொடங்கிய போது கிறித்தவர்கள் ஞாயிறை ஓய்வு நாளாகப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். ஆனால் தாங்கள் ஏற்கனவே கொண்டிருந்த சனிக்கிழமை ஓய்வுநாளையும் விட்டுவிட அவர்களுக்கு மனமில்லை. ஆகையால் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளை ஓய்வு நாளாகக் கொள்ளத் தொடங்கினர். அதுவே காலப்போக்கில் மேற்கத்திய நாகரீகத்தில் ஐந்து நாள் உழைப்பு, இரண்டு நாள் ஓய்வு என மாறிப்போனது.

இன்று ஓய்வு நாள் கடவுளுக்கான நாள் என்பது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. அன்றைக்கு ஒருநாள் தான் விட்டுப்போன உறவுகளைச் சந்திக்கவும், வார முழுவதும் வந்த தொலை பேசி அழைப்புக்களை ரிக்கார்டரில் கேட்கவும், வாக்கிங் போகவும், வீடு கழுவவும், துணி துவைக்கவும் என்று ஓய்வு நாளின் நோக்கம் மாறிவிட்டது.

ஓய்வு நாளில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை திபா 92 அழகாகச் சொல்லுகிறது:

'காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று!' (92:2)

வாரம் முழுவதும் நாம் அனுபவித்த இறைவனின் பேரன்பைக் காலையிலும், வருகின்ற வாரம் முழுவதும் அவரின் உடனிருப்பு என்னும் நம்பிக்கையை நமக்குத் தரும் அவரின் வாக்குப் பிறழாமையை மாலையிலும் நாம் சிந்தித்தால், எடுத்துரைத்தால் ஒவ்வொரு நாளும் ஓய்வு நாளே!


1 comment:

  1. மேற்கத்திய நாடுகளுக்கும்,நம் மேல்தட்டு மக்களுக்கும் எப்படியோ தெரியவில்லை..ஆனால் நம்ம ஊர் சாமான்யர்களுக்கு 'ஓய்வு நாள்' என்பது ஒரு விநோத சொல்லாக மாறிவருகிறது.பள்ளிகளில் நம் ஆசிரியர்களும்,மாணவச் செல்வங்களும் ஆறு நாட்கள் படும் அவதியைப் பார்த்தால் ' இப்படி ஒரு படிப்பு தேவையா?' என் நினைக்கத் தோன்றும். ஏழாம் நாள் மட்டும் விதி விலக்கா என்ன? அடுத்த ஆறு நாட்களுக்கான தயாரித்தல்,சொந்த வேலைகள்என்று எத்துணையோ..இப்படிப்பட்ட ஓட்டப்பந்தயத்திற்கு மத்தியில் நமக்கு "காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று" என்று சிந்திக்கும் அளவுக்கு நேரம் கிடைத்தால் கூட நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே!(இந்த வரிகளுக்கு தாங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் யாரையும் சிந்திக்க வைக்க வல்லது.)

    ReplyDelete