'தொலையில் வாழும் மௌன மாடப்புறா!' என்ற மெட்டில் திபா 56ஐ ஆசிரியர் பாடச்சொல்லுகின்றார்.
'தொலையில் வாழும் மௌன மாடப்புறா' என்ற பாடலை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்து இன்று எபிரேய இலக்கியங்களையெல்லாம் தூசி தட்டிப் பார்த்தேன். அந்தப் பாடல் முழுவதுமாகக் கிடைக்கவில்லையென்றாலும் அந்தப் பாடல் எழுதப்பட்ட பின்புலம் கிடைத்தது. அதைப்பற்றி ஒரு வரி சொல்லி விட்டு திபா 62க்குச் செல்வோம்.
தன் நாடு விட்டு வெளிநாட்டிற்குப் பணியின் நிமித்தம் சென்ற ஒரு இளைஞன் தான் சென்ற இடத்தில் அவர்கள் பேசும் மொழி தெரியாததால் 'என்ன செய்வதென்று தெரியாமால்' தான் வசித்த இல்லத்தின் மொட்டை மாடியில் நின்று கொண்டு தன் நாடு இருக்கும் திசை நோக்கித் திரும்பிப் பார்த்துக் கண்ணீர் வடிக்கின்றான். ஒருமுறை வேறு நாடு போய்விட்டால் போனதுதான். திரும்ப வாய்ப்பேயில்லை அந்தக் காலத்தில். இந்தச் சூழலில் வந்த இடத்தில் வாழவும் முடியாமல், திரும்பவும் செல்ல முடியாமல் மாடப்புறா போல சிறகுகளை அடித்துக்கொண்டு ஒரு பாடகன் பாடும் பாடலே 'தொலையில் வாழும் மௌன மாடப்புறா'.
எங்கள் கிராமத்தில் எங்கள் பக்கத்து வீட்டு மாடியில் ஒரு புறா கூடு கட்டியிருந்தது. தினமும் மதியம் 12 முதல் 1 மணிக்கு அந்தக் கூட்டில் ஏதோ அது முணங்கிக் கொண்டே இருக்கும். நீங்களும் புறாவின் முணங்கல் சத்தத்ததைக் கேட்டிருப்பீர்கள். அவைகளுக்கு அது முணங்கல் என்றாலும் நமக்கு அவைகளின் தனிமையின் மொளனமொழி தானே!
நிற்க!
திருப்பாடல் 62 தான் இன்றைய நம் சிந்தனையின் மையம். 'நான் அசைவுறேன்' என்ற வார்த்தைகள் பதில்மொழி போல இரண்டு இடங்களில் (62:2, 6) வருகின்றது. முதல் 6 வசனங்கள் தான் இந்தப் பாடலின் உண்மையான வரிகள் போல இருக்கின்றன. மற்றவவை மற்ற திருப்பாடலை எழுதும் போது அதை உள் செருகியிருக்கலாம். ஏனெனில் 7 முதல் 12 வரை உள்ள வசனங்கள் பேசும் செய்திக்கும் பாடலின் தலைப்பிற்கும் தொடர்பில்லை.
நாம் எல்லா வசனங்களையும் சேர்த்துப் பார்ப்போம்:
அ. என் கற்பாறை அவரே.
ஆ. என் மீட்பு அவரே.
இ. என் கோட்டை அவரே.
ஆகவே, நான் அசைவுறேன்.
கடவுளைக் கற்பாறைக்கும், கோட்டைக்கும் ஒப்பிடும் தாவீது மனிதர்களை நீர்க்குமிழிக்கு ஒப்பிடுகின்றார்.
என்ன ஒரு பெரிய வித்தியாசம் பாருங்கள்!
அசையாமல், கலங்காமல், நிலை மாறாமல் இருப்பது கற்பாறை.
உறுதியில்லாமல், காற்றில் அடித்துச் செல்லப்படும் இயல்புடையது நீர்க்குமிழி.
மேலும், மனிதர்களை வெறும் மாயை என்று அழைக்கின்றது. இந்த மாயை என்ற மொழி நம் இந்திய மரபில் மெய்யிலாளர் சங்கரா அவர்களால் அதிகம் பேசப்பட்ட ஒன்று. 'எல்லாம் மாயை!' என்பது அவரின் வாதம். அவருக்கு எதிராக எழும்பிய ஒரு விமர்சனம்: 'எல்லாம் மாயை என்றால் அப்படி நீங்கள் சொல்வதே மாயைதானே!' அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
மனிதர்கள் ஒரு மாயை! இதற்கு ஒரு எடுத்துக்காட்டு நாம் சாலையில் காணும் கானல் நீர். சாலையில் தண்ணீர் இருப்பது போல இருக்கும். ஆனால் பக்கத்தில் போனால் ஒன்றும் இருக்காது.
அந்த அளவிற்கு நிலையற்றவர்கள் நாம்.
நிலையற்ற மனித நிலையை நிலையுள்ளதாக்க முடியுமா? முடியும். இந்த உலகத்தை விட்டுச் செல்லும் போது உன் பெயர் சொல்ல ஒரு குழந்தை, ஒரு தோட்டம், ஒரு புத்தகம் - இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை விட்;டுச் செல் என்பது பிளேட்டோவின் அறிவுரை. நாம் நிலையற்றவர்கள் என்றாலும் நாம் மற்றவர்கள் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தில், நாம் பிள்ளைகளை நமக்குப் பின் விட்டுச்செல்வதில் தொடர்ந்து வாழ்கின்றோம்.
ஒன்று மட்டும் நிச்சயம்! ஒரு முறை நாம் பயணம் செய்த இந்தப் பாதையில் திரும்பவும் நாம் பயணிக்கப் போவதில்லை. போகின்ற பயணத்தை இனிமையாக ரசிப்போம் சக பயணிகளுக்கும் பயணத்தை இனிதாக்குவோம்.
'நான் அசைவுறேன்!'
"இன்று செத்தால் நாளை பால்" என்று கேள்விப்பட்டிருப்போம்.இப்படிப்பட்ட நிலையற்ற வாழ்க்கைக்குத்தான் எத்தனை போட்டி,பொறாமை,யாரை யார் விழுங்கலாம் என்ற அவல நிலை.இந்நிலை மாறி ஒருவருக்கு சாகாவரம் தருவது அவரின் வீரதீரச் செயல்கள் அல்ல; ஆனால் இந்த. மண்ணை விண்ணாகவும்,மனிதனைத் தெய்வமாகவும் மாற்ற எடுக்கும் முயற்சிகளே! படத்தில் உள்ள மாடப்புறா என்னையும் கூட வியர்க்கச் செய்கிறது.காரணம் மனத்தின் சோகத்தை சுண்டிவிடும் தன்மை மாடப்புறாவுக்கு உண்டு. ஞாயிறு வாழ்த்துக்கள்....
ReplyDeleteஅன்புடன் மூவொரு கடவுள் பெருவிழா வாழ்த்துக்கள். அழகிய அர்த்தமுள்ள பதிவுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.
ReplyDelete