திபா 66 ஆண்டவரின் பெயருக்கு பாடகர் தலைவர் நன்றிப் புகழ்ப்பா பாடுவதாக அமைந்துள்ளது.
'உம் பெயர் வாழ்த்தப் பெறுக!' என்று எப்போதெல்லாம் திபா சொல்கிறதோ அப்போதெல்லாம் நாம் நினைத்துக் கொள்ள வேண்டியது எருசலேம் ஆலயத்தைத் தான். எருசலேம் ஆலயத்தில் யாவே இறைவனின் ஆண்டவர் என்னும் பெயர் குடிகொள்வதாக இஸ்ரயேல் மக்கள் நம்பினர்.
'ஆண்டவர் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவிற்கு நெருக்கமானவர்' என்பது அவர்களின் நம்பிக்கையின் உச்சம்.
பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் என்பது மட்டும் பெயரல்ல. பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நபர்கள் பல்வேறு பெயர்களில் கடவுளை அழைத்தனர். அந்தப் பெயர்கள் யாவை என்றும் அவை சொல்லும் அர்த்தம் என்ன என்றும் இன்று பார்ப்போம்.
அ. எல்-சதாய் (எல்லாம் வல்ல இறைவன்)
இந்தப் பெயர் முதல் ஏற்பாட்டில் 7 முறை வருகின்றது. முதலில் இது பயன்படுத்தப்பட்டது ஆபிரகாமால் தான் (தொநூ 17:1). 'எல்' என்றால் 'கடவுள்'. 'சதாய்' என்றால் 'மலை'. பழங்காலத்தில் மலை என்பது வல்லமை என்று கருதப்பட்டது. மலைக்குக் கீழ் ஓர் ஊர் இருப்பதாகவும் மலையின் வல்லமையால் அது மறைந்து போனது. ஆகையால் மலை நினைத்தால் யாரையும் அழிக்க முடியும் என்பது அவர்களின் கருத்து. 'சதாய்' என்பதற்கு 'பெண்ணின் மார்பகம்' என்றும் பொருள். அக்கடிய நாட்டுப் பெண் தெய்வத்தின் பெயர் சதாத். அந்தப் பெயரை ஆபிரகாம் ஆண் கடவுளுக்குப் பயன்படுத்தினார் என்பதும் சிலரின் கருத்து.
ஆ. எல்-எல்யோன் (உன்னத கடவுள்)
'எல்யோன்' என்றால் 'உயர்ந்த' அல்லது 'உன்னதமான' என்பது பொருள். முதல் ஏற்பாட்டில் 28 முறையும், இதில் திருப்பாடல்களில் 19 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது (காண். தொநூ 14:18).
இ. அதோனாய் (ஆண்டவர், தலைவர்)
'அதோன்' என்றால் 'தலைவர்' என்றும் 'ஆய்' என்றால் 'என்னுடைய' என்றும் பொருள் கொள்ளலாம். முதல் ஏற்பாட்டில் 434 முறை உள்ளது (காண். தொநூ 15:2) விவிலியத்தில் எங்கெல்லாம் 'யாவே' என்று எழுதப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் இன்றும் நாம் 'அதோனாய்' என்றே வாசிக்கின்றோம். 'யாவே' என்ற பெயரை உச்சரித்தால் இறைவனின் மரியாதையைக் குறைப்பதாய் எண்ணி அந்த இடத்தில் அதோனாய் என உச்சரிப்பது இயல்பு. அக்காலத்தில் நம் வீடுகளில் மனைவியர் கணவரின் பெயரைச் சொல்ல மாட்டார்கள். அது மரியாதைக் குறைவு என எண்ணி 'என்னங்க!' என்றும் 'அவரு' என்றும் 'அவங்க அப்பா' என்றும் பிள்ளைகளின் உறவை மையப்படுத்திச் சொல்லும் வழக்கம் உண்டு. இன்று 'டேய்...' என்று சொல்லும் அளவிற்கு நெருக்கம் அதிகமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஈ. யாவே (ஆண்டவர், யெகோவா)
முதல் ஏற்பாட்டில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ள பெயர் (6519 முறை). காண். தொநூ 2:4. இந்தப் பெயரைத் தான் தன் பெயராக கடவுள் மோசேக்கு வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 'அனைத்தையும் ஆள்பவரே' ஆண்டவர்.
உ. யெகோவா நிஸ்ஸி (ஆண்டவர் என் கொடி)
அமலேக்கியரோடு போரிட்டு வெற்றி பெற்ற மோசே பலி பீடம் ஒன்றைக் கட்டி ஆண்டவரின் பிரசன்னத்தைப் 'போர்க்கொடிக்கு' ஒப்பிட்டு வழங்கும் பெயர் இது (காண். விப 17:15). ஒரே முறைதான் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஊ. யெகோவா ரோயே (ஆண்டவர் என் ஆயர்)
நமக்குப் பரிச்சயமான திபா 23ம், 80ம், தொநூ 48:15 மற்றும் 49:24 இறைவனை 'ஆயர்' என அழைக்கின்றன. இஸ்ரயேல் மக்கள் நாடோடி இனத்தவராக இருந்தபோது உருவான பெயர் இது.
எ. யெகோவா ராஃபா (ஆண்டவர் என் சுகம்! அல்லது குணமளிக்கும் ஆண்டவர்)
'ரஃபோ' என்றால் 'குணப்படுத்துதல்' என்பது பொருள். இந்தச் சொல்லிலிருந்துதான் 'ரஃபேல்' என்னும் அதிதூதரின் பெயரும் வருகின்றது. ஏனெனில் அவர் தொபியாவின் நோயைக் குணமாக்குகிறார். அடிப்பவரும் அவரே, கட்டுப்போடுபவரும் அவரே என்று இறைவனை எல்லாமாகப் பார்க்கின்றன இறைவாக்குகள் (காண். எரே 30:17).
ஏ. யெகோவா ஷாம்மா (ஆண்டவர் அங்கே!)
'ஷாம்' என்றால் 'அங்கே' என்பது பொருள். எருசலேமைச் சுட்டிக்காட்டி மற்றவர்களுக்குச் சொல்லும் பெயர் இது (காண். எசே 48:15).
ஐ. எலோகிம் (கடவுள்)
கடவுளுக்கு வழங்கப்பட்ட முதல் பெயர் இது (தொநூ 1:1).
ஒ. யாவே யீரே (ஆண்டவர் பார்த்துக்கொள்வார்)
'பலிக்கான ஆடு எங்கே?' என்று ஈசாக்கு ஆபிரகாமைப் பார்த்துக் கேட்கும் போது, ஆபிரகாம் சொல்லும் வார்த்தைகளே இது - 'மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்!' (தொநூ 22). எனக்கு மிகவும் பிடித்த பெயரும் இதுவே.
இவை தவிர 'யெகோவா செதேக்கேனு' (ஆண்டவர் என் நீதி!), 'யெகோவா மெக்கோதிஸ்கேம்' (ஆண்டவர் என் தூய்மை), 'எல் ஓலாம்' (என்றும் இருப்பவர்), கண்ணா (பொறாமை அல்லது நெருப்பு), யெகோவா சலோம் (ஆண்டவர் என் அமைதி) மற்றும் யெகோவா சபவோத் (படைகளின் ஆண்டவர்) என்னும் பெயர்களும் உண்டு.
ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜூலியட் நாடகத்தில் ரோமியோ, ஜூலியட்டைப் பார்த்துக் கேட்பார்:
'பெயரில் என்ன இருக்கிறது?
ரோஜாவை வேறு பெயர் கொண்டு அழைத்தால்
அதன் மணம் குறைந்து விடுமா என்ன?'
பெயரில் என்ன இருக்கிறது...?
பெயரில் நிறையவே இருக்கிறது!
'யாவே' இறைவனின் இத்தனை பெயர்களையும் ஆதாரத்துடன் வெளிக்கொணர்ந்த தங்களின் உழைப்புக்கு நன்றியும்,பாராட்டும்.இந்தப் பெயர்ப்பட்டியலை நம் இளம் தலைமுறையினர் பார்த்தால் ஒருவேளை தங்கள் குழந்தைகளுக்கு இதிலிருந்து பெயர் சூட்டலாம்.வாயில் நுழைய வராத பல பெயர்களுக்கு மத்தியில் 'கண்ணா' என்ற பெயரும் உள்ளதே,அதுவும் கூட இறைவனைக் குறிக்கும் பெயர்தானா? இன்றையப் பகுதியானது பலருக்குத் தங்களின் பெயரின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள, தெரிந்துகொள்ளத் தூண்டுகோளாய் இருக்கட்டும்...
ReplyDeleteகண்ணா - not kanna, but 'qanna'. No 'q' equivalent in Tamil but 'க'.
Delete