Saturday, June 7, 2014

நீ நம்பிக்கை இழப்பது ஏன்?

திருப்பாடல் 42ம், 43ம் ஒரு சில எபிரேய கையெழுத்துப் பிரதிகளில் ஒரே தலைப்பின் கீழ் அமைந்துள்ளது. கிரேக்க மொழிபெயர்ப்பில் தான் இவைகள் தனித்தனியாக இருக்கின்றன.

இதன் தலைப்பு 'நாடு கடத்தப்பட்டோரின் புலம்பல்'.

இஸ்ராயேல் மக்கள் வரலாற்றில் கிமு 587 ஆம் ஆண்டு ஒரு கொடுமையான ஆண்டு. அந்த ஆண்டுதான் சாலமோன் அரசர் கட்டிய எருசலேம் ஆலயம் இடிக்கப்பட்டு, மக்கள் பாபிலோனியாவிற்கு நெபுகத்னேசர் அரசரால் அடிமைகளாக நாடுகடத்தப்பட்டனர். பாபிலோனிய நாட்டில் அடிமைகளாக இருந்தவர்களில் ஒருவர் தன் வாழ்க்கை நிலையைத் திரும்பிப் பார்த்துப் பாடும் பாடலே இது.

'Gone are the days!' என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். 'அன்று நாங்கள் நன்றாக இருந்தோம்!' என்று ஒவ்வொருவரின் பிண்ணனியிலும் ஏதோ ஒரு பாடல் இருக்கும். 'அது ஒரு கனாக்காலம்! அது ஒரு நிலாக்காலம்!' என்று மகிழ்ந்திருந்த இறந்த காலத்தை நாம் இன்னும் பல நேரங்களில் அசைபோட்டுப் பார்க்கின்றோம் (nostalgia). மனிதர்கள் பெற்றுள்ள ஒரு பெரிய கொடை இது. நம்மால் மட்டும் பழையதை நினைவுபடுத்திப் பார்க்க முடியும். சில நேரங்களில் இந்தக் கொடை நமக்கு சாபமாகவும் மாறிவிடுகிறது.

'கலைமான் நீரோடையை...' என்று தொடங்கும் இப்பாடல் நமக்கு மிகவும் பரிச்சயமான பாடல். உயிர்ப்பு ஞாயிறன்று இரவு வழிபாட்டில் இது பாடப்படுகிறது. மேலும் ஒரு சில இறப்புத் திருப்பலிகளில், குறிப்பாக ஆங்கிலத் திருப்பலிகளில், 'Deep Calls to Deep' என்ற இரண்டு வசனங்களை மட்டும் பாடக் கேட்டிருப்போம் (உம் அருவிகள் இடியென முழங்கிட ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கின்றது!)

திருப்பாடல்கள் 42 மற்றும் 43 ஐ மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:

அ. 42:1-5
ஆ. 42:6-11
இ. 43:1-5

இந்த மூன்று பிரிவையும் சாத்தியமாக்குவது பாடகர் எழுப்பும் இரண்டு கேள்விகள்:

'என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?
நீ கலக்கமுறுவது ஏன்?' (42:5, 42:11, 43:5)

பாடகரின் இழப்பிற்கும் கலக்கத்திற்கும் காரணம் அவரின் பகைவர்கள் அவரை எள்ளி நகையாடுகிறார்கள். அவர்கள் குத்திக் காட்டுவது எவை?

அ. உன் கடவுள் எங்கே?
ஆ. உன் கோயில் எங்கே?
இ. உன் மக்கள் எங்கே?

நாடுகடத்தப்பட்ட மக்களுக்கு இந்த மூன்றுமே இல்லைதாம். அந்நிய நாட்டில் இருந்து கொண்டு தங்கள் கடவுளையும், தாங்கள் பவனியாகச் சென்றதையும், மக்கள் கூட்டத்தோடு ஆர்ப்பரித்ததையும் நினைவுகூறுகின்றார் பாடல்.

இந்தப் பாடலை இறப்பின் போது பாடக் காரணமும் இதுதான். இறப்பின் போது, இறப்பு நம்மைப் பார்த்து இந்த மூன்று கேள்விகளைத் தான் கேட்கிறது:

அ. உன் கடவுள் எங்கே?
ஆ. உன் கோயில் எங்கே?
இ. உன் மக்கள் எங்கே?

உடலை விட்டுப் பிரியும் ஆன்மாவும் இந்தப் பாடகரைப் போல எங்கேயோ அமர்ந்து கொண்டு தன் பழைய வாழ்வின் இனிமையான தருணங்களை அசைபோடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

எல்லாம் இழந்து விட்டாலும் பாடகர்க்கு ஒரு நம்பிக்கை:

'ஆண்டவர் பேரன்பைப் பொழிவார்! இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்!'

இரவு ஒரு பொல்லாத நேரம். இரவில் தான் நினைவுகள் நமக்கு அதிகம் வரும். பகலில் ஓடியாடிவிட்டு, வேலை முடிந்து, படிப்பு முடிந்து தனியாக அறையில் அமர்ந்தோ, படுத்தோ விளக்கை அணைத்தால் ஒரு வித்தியாசமான உணர்வு நம் கன்னத்தில் அறையும். நம்மை அறியாமலேயே மனம் பல மைல்களும், பல வருடங்களும் பின்நோக்கிச் செல்லும். 'சே! அங்கேயே இருந்திருக்கலாம்!' என மனம் பேராசை கொள்ளும்.

மற்றவர்கள் தங்கள் தனிமையில் நம்மை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்கு நாம் நடந்தால் அதுவே போதும்.

'என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?'

Here are the links to four different video clips of Psalm 42:

Deep Calls to Deep

As the Deer

கலைமான் நீரோடையை

கலைமான்கள் நீரோடை தேடும்


1 comment:

  1. மனத்தின் வெறுமையின் உச்சத்தில் உள்ள ஒருவரை முணுமணுக்க வைக்கும் பாடல்கள் தான் இன்றையப்பகுதி.என்ன தான் இறைவன் நம்அருகிலேயே இருப்பதாக நாம் உணர்ந்தாலும் சில சமயங்களில் நாம்உறவாக,உணர்வாக மதிப்பவர்கள் நம்மைப்புரிந்து கொள்ள மறுக்கும்போது விரக்தியில் நாம் எழுப்பும் கேள்விதான்"இறைவா நீ எங்கே?"அம்மாதிரியான சமயங்களில் 'ஆண்டவர் பேரன்பைப் பொழிவார்' எனப் பாடுவதற்கு ஒரு அசாத்திய மனம் வேண்டும்.அப்படியொரு மனத்தைப்பெற நம்மைத் தூண்டக்கூடிய இன்றையப் பாடல்கள் அனைத்தும் அருமை.சரியாகச் சொன்னீர்கள்.." மற்றவர்கள் தங்கள் தனிமையில் நம்மை நினைத்து மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்கு நாம் நடந்தால் அதுவே போதும்".உண்மைதான்..

    ReplyDelete