Tuesday, June 24, 2014

இவர் இங்கேதான் பிறந்தார்

திபா 87 எருசலேம் நகரின் பெருமை பற்றிக் குறிப்பிடுகின்றது. சீயோன் என்ற மலைமேல் கட்டப்பட்ட நகரமே எருசலேம். 'மலைமேல் உள்ள ஊர் மறைவாயிருக்க முடியாது' என்று இயேசு குறிப்பிடும் போது இந்த நகரமே அவர் எண்ணத்தில் இருந்தது. எல்லார் கண்ணிலும் பட்ட ஊர் இது. வாழ்ந்தால் எருசலேமில் வாழ வேண்டும் என்று அனைவரும் எண்ணத் தொடங்கினர். இந்த ஊரின் சிறப்பு என்னவென்றால் கடவுள் தாம் வசிப்பதற்காகத் தேர்ந்தெடுத்த ஊர் இது.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வாசனை உண்டு. மதுரை என்றால் மல்லிகை. திருநெல்வேலி என்றால் அல்வா. திண்டுக்கல் என்றால் பிரியாணி. இப்படி ஒவ்வொரு ஊருக்கும் சிறப்பு உண்டு.

நம் அனைவருக்குமே சொந்த ஊர் உண்டு. அந்த சொந்த மண்ணின் வாசனை நம் ஒவ்வொருவர் மேலும் இருக்கிறது.

இதையே ஒருவரின் 'givenness' என்கிறது மெய்யியல். நம் ஊர், நம் குடும்பம், நம் பெற்றோர், நம் உறவினர்கள், நம் தாய்மொழி - இவையெல்லாம் நாம் தேர்ந்தெடுத்தவை அல்ல. நம்மேல் சுமத்தப்பட்டவை. நேர்மறையாகச் சொன்னால், அவைகள் தாம் நம் வேர்கள்.

பல நேரங்களில் நம்மால் நம் givennessஐ ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. 'நான் இன்னும் நல்லா இருந்திருக்கலாமே?' 'நான் வேற ஊரில் பிறந்திருக்கலாமே?' 'நான் வேற மொழி பேசியிருக்கலாமே?' என்றெல்லாம் ஒரு சில நேரங்களில் நம்மையே நாம் நொந்து கொள்கிறோம்.

நம் வேர்கள் கசப்பாக இருந்தாலும் அவைகளை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். வேர்களை ஏற்றுக்கொள்ளாமல் வெறும் விழுதுகளை மட்டும் பரப்பி விட நினைத்தால் நாம் அந்தரத்தில் தான் நிற்க வேண்டி வரும்.

என்னதான் படையெடுப்புகள் நடந்தாலும், என்னதான் எதிரிகள் அழித்தாலும் எருசலேம் நகர மக்கள் தங்கள் நகரைக் குறித்து என்றும் பெருமைப்பட்டனர்.

நாம்?

'இவர் இங்கேதான் பிறந்தார்' என ஆண்டவர் எழுதுவார்.


1 comment:

  1. 'வேர்கள்' என்ற வார்த்தையைக்கேட்டவுடன் 'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா?' என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.சீயோன் என்ற மலைமேல் கட்டப்பட்ட எருசலேம்....நான் அங்கு சென்றதில்லை.இனி செல்ல முடியுமா என்றும் தோன்றவில்லை.அங்கு சென்று வந்தவர்கள் யாரையேனும் கும்பிடலாம் என்று தோன்றுகிறது.தங்களைக் கும்பிடலாமா?

    ReplyDelete