Saturday, May 31, 2014

எனக்கென்ன குறைவு?

'ஆண்டவர் கற்றுக்கொடுத்த செபத்திற்குப்' பின் அனைத்து கிறித்தவர்களுக்கும் மனப்பாடமாக தெரிந்திருக்கும் ஒரு விவிலியப் பகுதி: 'திருப்பாடல் 23' (ஆண்டவர் என் ஆயன்!)

இயேசுவே தன்னை நல்லாயனாக உருவகம் செய்கின்றார். இயேசுவை நல்லாயானக சித்தரிக்கும் ஓவியங்களிலும் இந்தத் திருப்பாடலே பின்புலமாக இருக்கின்றது.

தாவீது ஒரு ஆடு மேய்ப்பவர். ஆடு மேய்ப்பவராக இருந்தவர் அரசராக மாறுகிறார். ஆடு மேய்க்கும் பணியில் இருந்த போது தான் ஆடுகளுக்குச் செய்ததையெல்லாம் ஆண்டவர் மேல் எடுத்து வைத்துப் பாடும் பாடலே இது.

முதலில் ஆண்டவரைத் தன் ஆயர் என அறிக்கையிடுகின்றார். இந்த ஆயன் செய்யும் பணிகள் நான்கு:

அ. பசும்புல் வெளிமீது இளைப்பாறச் செய்வார்.
ஆ. அமைதியான நீர்நிலைகளுக்கு அழைத்துச் செல்வார்.
இ. எனக்குப் புத்துயிர் அளிப்பார்.
ஈ. என்னை நீதிவழி நடத்திடுவார்.

'அவர்' 'அவர்' எனச் சொல்லிக்கொண்டு வரும் தாவீது திடீரென 'நீர்', 'நீர்' என முன்னிலையில் பேசத் தொடங்குகிறார். அப்படி அவர் சொல்பவை ஆறு:

அ. நீர் என்னோடு இருக்கின்றீர்.
ஆ. நீர் உம் கோல்கொண்டு தேற்றுகின்றீர்.
இ. நீர் விருந்து ஏற்பாடு செய்கின்றீர்.
ஈ. நீர் நறுமணத்தைலம் பூசுகின்றீர்.
உ. நீர் என் பாத்திரத்தை நிரம்பி வழியச் செய்கின்றீர்.
ஊ. நீர் உம் பேரன்பால் என்னைச் சுற்றியிருக்கின்றீர்.

'அவர்' நிலைக்கும், 'நீர்' என்ற முன்னிலைக்கும் உள்ள மாற்றம் நமக்குச் சொல்வது என்ன?

நம் வாழ்வில் எல்லாமே ஆச்சரியங்கள். அடுத்த நிமிடம் காத்திருக்கும் ஆச்சர்யம் நமக்குத் தெரிவதில்லை. நம் வாழ்வின் உறவுகளாக உள் நுழைந்த அனைவருமே ஒளிந்திருந்த ஆச்சர்யங்கள்தாம்.

ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போகிறோம். மெனு கார்டில் உணவு அயிட்டங்கள் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளன. கொஞ்ச நேரத்தில் நாம் ஆர்டர் செய்த உணவு நம் மேசைக்கு வருகின்றது.

மெனுகார்டில் உள்ள உணவுப் பட்டியில் ஒருபோதும் நம் பசியைப் போக்குவதில்லை. நம் முன் வந்து நிற்கும் உணவே பசி போக்குகிறது.

கடவுள் அனுபவம் என்பதும் உறவுகளின் அன்பு என்பதும் அப்படித்தான். அவர்களைப் பற்றி புத்தகங்கள் படிப்பதாலும், மறையுரைகள் கேட்பதாலும், வழிபாடுகளில் பங்கேற்பதாலும் நமக்கு அனுபவம் கிடைப்பதில்லை. நேருக்கு நேர் அவரைச் சந்திக்கும் போது அங்கே இனிமையையும், அன்பையும் உணர்கிறோம்.

'அவர்' 'அவன்' 'அவள்' என்ற படர்க்கை நிலை மாறி 'நீர்' 'நீங்கள்' 'நீ' என முன்னிலை வர வேண்டுமானால் அங்கே தேவை தனிப்பட்ட அனுபவம்.

அந்த அனுபவம் என்ற ஒன்றை நாம் பெற இன்று விழைந்தால்...

நாமும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்போம்.

2 comments:

  1. எத்துணை முறை கேட்பினும் படிப்பினும ஒவ்வொரு முறையும் நமக்கு ஒரு உத்வேகம் தரும் பகுதி.அதிலும்."இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடப்பினும் நீர் என்னோடிருப்பதால் எதற்கும் அஞ்சேன்"..காயப்பட்ட மனதுக்கு மயிலிறகால் வருடும் பகுதி.மனதர்கள் பற்றிய விஷயங்கள் அல்ல,ஆனால் நம் முன்னே இரத்தமும் சதையுமாக நிற்கும் மனிதர்களே நாம் சுவைக்க வேண்டிய அனுபவங்கள்......அருமை.

    ReplyDelete
  2. எத்துணை முறை படிப்பிலும் கேட்பினும் மனதுக்கு ஒரு தெம்பும் உத்வேகமும் கொடுக்கும் பகுதி.அதிலும் " இருள் சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேரிடினும் நீர் என்னோடிருப்பதால் நான் எதற்கும் அஞ்சேன்"....மயிலிறகால் மனத்தை வருடிவிடும் வரிகள்.மனிதர்களைப் பற்றிய விஷயங்களைத் தொடாமல் நமக்கு முன்னால் இரத்தமும் சதையுமாக இருக்கும் மனிதர்களைத் தொடுவதே அனுபவம்'.....அருமையான வரிகள்..நெஞ்சைத்தொட்ட வரிகள்.பாராட்டுக்கள்

    ReplyDelete