Monday, June 23, 2014

உமது பீடங்களில் குருவிக்கு வீடு!

திபா 74 முதல் 83 வரை உள்ள பாடல்கள் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்றதையும், பின் அவர்கள் பாபிலோனியாவிற்கு அடிமைப்படுத்தப்பட்டதையும், அவர்களின் ஆலயம் அழிக்கப்பட்டதையும் நினைவுகூறுகின்றன.

திபா 84ஐ இன்று சிந்திப்போம்.

திருக்கோவிலுக்காக ஏங்குதல் என்று பெயரிடப்பட்ட இத்திருப்பாடலின் எபிரேய பாடத்தில் 'பாடகர் தலைவர்க்கு, காத்து நகர்ப்பண், கோராகியரின் புகழ்ப்பா எனக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடகர் யார்? திபா 42 மற்றும் 43ஐ எழுதியவரே இதையும் எழுதியிருக்கலாம். இந்தத் திருப்பாடல் திருப்பயணத்தின் போது பாடப்படும் பாடல். கோராகியர் என்பவர்கள் திருக்கோயிலில் பயன்படுத்தப்படும் பாடல்களை எழுதி இசையமைக்கும் புலவர்கள்.

இப்பாடலின் வரிகள் சொல்வது என்ன?

அ. (1-4) அனைவரும் திருக்கோயிலுக்காக ஏங்குகின்றனர்.
ஆ. (5-7) சீயோனுக்கு வரும் திருப்பயணிகள்.
இ. (9-10) அரசருக்காக மன்றாடல்.
ஈ. (10-12) கடவுளின் மேன்மை.

இந்தப் பாடலின் மையம் ஒரு சோகம்.

அந்தச் சோகத்தை அழகாகச் சித்தரிக்கின்றார் பாடகர்.

'உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது. தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்காகச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது!'

இந்த ஒரே வரியில் தான் இறைவனின் இல்லத்திலிருந்து இருக்கும் தூரத்தை எழுதிவடுகிறார் பாடகர். சின்னஞ்சிறு பறவைகள் கூட குடியிருக்க என்னால் முடியவில்லையே என்று ஏங்குகின்றார்.

குருவிகளைப் பற்றி நினைக்கும் போது என்னையறியாமலேயே சோகம் கவ்விக் கொள்கிறது. செல்ஃபோன் வரவால் நாம் நஷ்டப்பட்டது குருவி இனம்தான். பாவம். அலைக்கற்றைகளின் தாக்கத்தால் அன்றாடம் அழிந்து கொண்டே இருக்கின்றன.

இந்தப் பாடல் கடவுளை 'படைகளின் ஆண்டவரே!' என்று புதிய பெயரிட்டும் அழைக்கின்றது.

இந்தப் பாடல் வைக்கும் பாடம் இதுதான்:

'பாக்கா' நிலம் 'நீரோடையாக' மாறும்!
'பாக்கா' என்றால் எபிரேயத்தில் வெடிப்பு என்பது பொருள். நீரின்றி வறண்டு, பாளம் பாளமாக வெடித்திருக்கும் நிலத்தைத் திருப்பயணிகள் கடந்து செல்லும் போது அங்கே நீரூற்றுக்கள் புறப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றார் பாடகர்.

நம் வாழ்வில் பாக்கா நிலங்களில் நாம் நடப்பது போல இருந்தால் கவலைப்பட வேண்டாமே. படைகளின் ஆண்டவரால் நீரூற்றுக்கள் புறப்படச் செய்ய முடியும்.

'வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாட்களிலும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானாது!'


1 comment:

  1. இன்று தங்களின் எழுத்துக்களில் ஒரு சோகம் தெரிகிறதே,தந்தையே! காரணம் அழிந்து வரும் சிட்டுக்குருவிகளா? எனக்கும் கூட இந்தச்சிட்டுக்குருவிகளின் மீது இனம் புரியா பாசம்.ஒரு இனம் சுகமாக வாழ மற்றொரு இனம் அழியத்தான் வேண்டும் என்பது இயற்கையின் நியதி போலும்.இந்த சிறிய உயிரினங்களின் எளிமையோடு நாமும் இறைவன் அடி பணிய அழைப்பு விடுக்கின்றன இன்றைய வசனங்கள்.பாக்கா நிலங்களிலும் நீரூற்றுகள் புறப்படச் செய்ய இறைவனால் இயலும்...ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றிகள்....இந்த வாரம் இனிதாக இருக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete