Tuesday, June 10, 2014

உறுதிதரும் ஆவி வேண்டுமே!

நேற்றைய தினம் திபா 51ன் பின்புலத்தைப் பார்த்தோம். இன்று திபா 51ஐ அதன் வார்த்தை அமைப்புகளை வைத்து சிந்திப்போம்.

இதில் மொத்தம் 19 வசனங்கள். ஆனால் தாவீது எழுதியதாகச் சொல்லப்படுவது முதல் 17 வசனங்கள் மட்டுமே. 18 மற்றும் 19ஆம் வசனங்கள் எருசலேம் ஆலயம் இரண்டாம் முறை கட்டி முடிக்கப்பட்டவுன் சேர்க்கப்பட்டவை. 17ஆம் வசனத்தில் பலிகள் தேவையில்லை எனச் சொல்லும் பாடல் 18 மற்றும் 19ல் எருசலேமில் பலிகள் செலுத்தப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டை வைத்தே இவை பின்னால் சேர்க்கப்பட்டவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூய அகுஸ்தினார் ஜென்மப் பாவம் பற்றிய இறையியலை எழுதக் காரணமாய் இருந்தது இந்தத் திருப்பாடலில் வரும் ஒரு வரிதான்: 'இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன். பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்' (51:5).

இந்தப் பாடலின் மூன்று சாவிகள் இவை:

அ. கடவுளின் பேரன்பு (51:1)
ஆ. தூயதோர் உள்ளம், உறுதிதரும் ஆவி (51:10)
இ. நொறுங்கிய உள்ளமே சிறந்த பலி (51:17)

இந்த மூன்றிலும் மையமாக இருப்பது: 'தூய்மை' மற்றும் 'உறுதி'

இந்த இரண்டும் இருந்தால் நாம் பாவம் செய்ய வாய்ப்பேயில்லை. அப்படியே பாவம் செய்துவிட்டாலும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நொறுங்கிய உள்ளத்தோடு நாம் கடவுளை நெருங்கினால் போதும். கடவுளின் பேரன்பு நம் பாவங்கள் அனைத்தையும் விட அதிகம் சக்தி வாய்ந்தது.

நாம் ஆலயத்தில் இருக்கும் போது நம் மனநிலையைக் கவனித்திருக்கிறீர்களா? அமைதியாக இருப்போம். நிறைய நல்லவை செய்ய வேண்டுமென்று முடிவெடுப்போம். தவறுகளையெல்லாம் திருத்திக் கொள்ள வேண்டும். கோபம் அறவே கூடாது என்றெல்லாம் முடிவெடுப்போம். கோவிலுக்கு வெளியே வந்து செருப்பை அணிந்து விட்டு வீடு நோக்கித் திரும்பும் போது நாம் கோவிலுக்குள் நமக்கு நாமே செய்து கொண்ட வாக்குறுதிகள் சீக்கிரம் கரைந்துவிடுவது போலவே இருக்கும். இது ஏன் தெரியுமா?

நம்மோடு கூடவே இருக்கும் 'குட்டிப் பிசாசு' கோவிலுக்குள் நாம் நுழைய செருப்பைக் கழற்றி வைக்கும் போது அங்கே அதுவும் உட்கார்ந்து கொள்ளுமாம். நாம் கோவிலுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்தவுடன் அதுவும் நம்மோடு சேர்ந்து கொள்ளும். இந்தக் குட்டிப் பிசாசை நம்மோடு சேர்த்துக்கொள்ளத் தடையாக இருப்பது நம்மோடு இருக்கும் 'உறுதியற்ற மனநிலை!'. தாவீதின் தவறுக்குக் காரணமும் உறுதியற்ற மனநிலையே.

உறுதிதரும் மனம் வேண்டும் என்போம்! இன்றும்! என்றும்!

1 comment:

  1. நாம் கோவிலினுள் நுழைகையில் செருப்புடன் சேர்த்து 'குட்டிப்பிசாசையும்' கழற்றி வைப்பது உண்மையெனில் நாம் கோவிலினுள் இருக்கும் போது 'புனிதர்கள்' என்றல்லவா அர்த்தம்? யோசிக்க வேண்டிய விஷயமல்லவா? இதற்கு நம் மனசாட்சியின் பதில் 'ஆம்' எனில் நம்மிடம் தூய்மையும்,உறுதியும் இருப்பதும் கூட உண்மைதான்.சரிதானா தந்தையே!?...

    ReplyDelete