Tuesday, June 3, 2014

யாருக்கு நான் அஞ்சவேண்டும்?

திருப்பாடல் 27 ஒரு புகழ்ச்சிப் பாடல். இப்பாடலின் பிண்ணனியில் ஏதோ ஒரு போர்க்களம் இருந்திருக்க வேண்டும். போர்க்களத்தின் இருளும், தோல்வி குறித்த பயமும், எங்கும் அலைந்து திரியும் ஆவிகளின் ஓலமும் தாவீதின் தூக்கத்தைக் கலைத்திருக்கலாம். அந்தக் கலக்கத்தில் இறைவன் தன்னோடு இருக்க, யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? யாருக்கு நான் நடுங்க வேண்டும்? என்று அவர் பாடுவதே இப்பாடல்.

இப்பாடலில் தனக்கென ஐந்து வாக்குறுதிகளைக் கொடுத்துக்கொள்கின்றார் தாவீது:

1. ஆண்டவரே என் ஒளி, மீட்பு, அடைக்கலம். (27:1)
போர்க்களத்தின் இரவு தரும் பயத்திற்கு மாற்றாக இறைவனை ஒளியாகக் கொள்கின்றார் தாவீது. மீட்பு என்பது இங்கே வெற்றியைத் தான் குறிக்கிறது. போர்க்களத்தில் தான் தோல்வி கண்டாலும் ஆண்டவர் என்ற வெற்றி தன்னோடு இருப்பதாகவும், அதுவே தனக்குப் போதும் என்று அவர் நினைப்பதாகவும் அடுத்த வார்த்தைக்குப் பொருள் கொள்ளலாம். அல்லது ஆண்டவர் தாமே தனக்கு வெற்றி தருவார் என்று உறுதியாக நம்புவதாகவும் சொல்லலாம். 'உயிருக்கு அடைக்கலம்' - எகிப்திய சிந்தனையில் உயிர் கழுத்தில் குடியிருப்பதாக நம்பினர். போரில் வீரர்கள் கழுத்து வெட்டுண்டபோது அவர்களின் உயிர் அவர்களின் கழுத்தில் இருந்து பிரிந்து எல்லா இடமும் சுற்றிக் கொண்டிருப்பதாக அவர்கள் நம்பினர். ஆனால் தான் இறந்தால் தன் உயிருக்கு அடைக்கலம் தருபவர் இறைவன் என நம்புகிறார் தாவீது. உயிர் கழுத்தில் இருக்கிறது என்ற சிந்தனை தமிழ் மரபிலும் இருந்திருக்கலாமோ? அதன் அடிப்படையில் தான் தாலிக்கயிற்றை பெண்கள் கழுத்தில் அணிகிறார்களோ? சிந்திக்க வேண்டிய கேள்வி!

2. ஒரு படையே வந்தாலும், ஒரு போரே எழுந்தாலும் தான் அஞ்சுவதில்லை (27:3).
'பயத்தை விட, பயத்தைக் குறித்த பயமே ஆபத்தானது!' என்பார் பவுலோ கோயலோ. அதாவது தேர்வு மார்ச் மாதம் வரும் என்று அந்த பயத்தை ஜூன் மாதமே கொண்டிருந்தால் அதுதான் பயத்தைக் குறித்த பயம். படையும், போரும் எதிரே வந்தால் உயிர் போய்விடும். அந்த உயிர்போகும் பயத்தில் கூட உறுதியாய் நிற்கிறார் தாவீது. நமக்கு வரும் பயங்கள் எல்லாம் பல நேரங்களில் மிகச் சாதாரணமானவை! பள்ளிக்கூடம், பரிட்சை, இன்டர்வியு, நட்பு, கடன், வறுமை, பசி, இயலாமை - இவைகளெல்லாம் பயங்களாக இருக்கவே தகுதியற்றவை. சின்னப் பயமே நம் கடவுள் நம்பிக்கையை சீர்குலைத்துவிடுகிறதே? நாம் என்ன அவ்வளவு வலுவில்லாதவர்களா?

3. விண்ணப்பம் செய்தேன். நாடித் தேடுவேன். அவரின் இல்லத்தில் குடியிருக்க வேண்டும். அவரின் அழகை நான் காண வேண்டும். அவரின் திருவுளத்தை நான் அறிய வேண்டும். (27: 4)
ஒரு காதலன் காதலியிடம் எதிர்பார்ப்பது இந்த ஐந்து குணங்கள் என்று கலித்தொகை நூல் குறிப்பிடுகிறது:
அ. காதலன் காதலிக்கு தூது விடுவான் (விண்ணப்பம்).
ஆ. அவளின் பதில் தூதுவிற்காகக் காத்திருப்பான் (நாடித் தேடுதல்).
இ. அவளைக் காண அவன் இல்லம் செல்வான் (குடியிருத்தல்).
ஈ. அவளின் அழகை ரசித்திருப்பான் (அழகைக் காணுதல்).
உ. 'என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?' என்று கேட்பான் (திருவுளத்தை அறிதல்).
கலித்தொகை காட்டும் காதல் செய்யும் தலைவனின் ஐந்து குணங்களையும் தாவீது தன் கையில் எடுத்து கடவுளைக் காதலியாகவும், தன்னைக் காதலானகவும் வைத்து இந்த வரியை எழுதுகின்றார் என்று எடுத்துக்கொள்வோம். இந்த வார்த்தைகள் நம் செபமாகவும் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்? விண்ணப்பம் செய்வோம். காத்திருப்போம். அவரைக் காணச் செல்வோம். அவரின் அழகை ரசிப்போம். அவரின் திருவுளத்தை அறிவோம்.

4. என் தந்தையும் தாயும் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார் (27:10).
'யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிட மாட்டார்' என்று நாம் கேட்டிருக்கும் அருட்திரு. பெர்க்மான்ஸ் அவர்களின் பாடலுக்கு ஆரம்பம் இந்த வரியே. 'தான் எங்கே ஏற்றுக்கொள்ளப்படுவோம்' என்று உறுதியாக நாம் நம்பும் உறவே நம்மை ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும் ஆண்டவர் ஏற்றுக்கொள்கின்றார் என்பதே தாவீதின் நம்பிக்கை. என் கிரேக்க மொழி புரபசர் அடிக்கடி ஒன்று சொல்வார்: 'நம்ம அம்மா, அப்பா இருக்கும் வரை தான் நாம் நம் வீட்டிற்குச் செல்ல முடியும். அவர்கள் தாம் நம் முதல் மற்றும் இறுதி உறவுகள். மற்ற உறவுகள் எல்லாம் நாம் சற்று நேரம் இளைப்பாறும் கிளைகள். பறவைகளுக்கு கிளைகள் மேல் சொந்தமில்லை. கிளைகளுக்குப் பறவைகள் மேல் உரிமையில்லை'. தாவீது தன்னை ஒரு பறவையாகவும், துறவியாகவுமே இங்கே தன்னை உருவகிக்கின்றார்.

5. நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு. மனவுறுதி கொள் (27:14).
பயத்தை வெல்ல இரண்டே வழிகள் தாம்: 1) காத்திரு. அதாவது பயம் வருவதற்கு முன் அதைப் பற்றிப் பயந்து விடாதே. காத்திரு. 2) மனவுறுதி. மனம் உருக்குலைந்து விட்டால் உடலும் தானே உருக்குலைந்து விடும்.

'யாருக்கு நான் அஞ்சவேண்டும்?'

'யாருக்க நான் நடுங்க வேண்டும்?'

1 comment:

  1. 23ம் திருப்பாடலுக்குப்பின் நம் மனதுக்கு ஒரு தெம்பையும்,'என்னோடிருக்கும் இறைவனைக்கொண்டு என்னால் எதுவும் செய்ய் இயலும்' என்ற 'கர்வத்தைத்' தரும் பகுதி.
    பெண்கள் அணியும் தாலியானது கழுத்தில் இருப்பதில்லை.அது இருக்க வேண்டிய இடம் நெஞ்சுப்பகுதி.கழுத்தோடு உறவாடுவது கயிறு அல்லது சங்கிலியே.மற்றபடி கழுத்தில் உயிர் குடியுள்ளதா!!?? கழுத்தின் உள்பகுதியில் கீழ்நோக்கிப்பயணித்துக் கொண்டிருக்கும் ' மூச்சுக்குழல்' உள்ளதால் அப்படி சொல்கிறார்களோ..இருக்கலாம்.எப்படியோ..எது எங்கிருப்பினும் நம் நம்பிக்கை இருக்க வேண்டிய இடம் ஆண்டவன் மட்டுமே...கூறியுள்ள விதம் ஒரு தெளிவைத்தருகிறது.

    ReplyDelete