Monday, June 30, 2014

நான் என்னை கைம்மாறு செய்வேன்?

திபா 116 'சாவினின்று தப்பியவரின் பாடல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. எபிரேயப் பாடத்தில் இதற்குப் பெயர் கொடுக்கப்படவில்லை. யார் எழுதியது என்றும் கொடுக்கப்படவில்லை. கிரேக்க மொழிபெயர்ப்பாளர்கள் தாம் இதற்கு இந்தப் பெயர் கொடுத்திருக்கின்றனர்.

எத்தகைய சாவிலிருந்து தப்பித்திருப்பார் என்று ஊகிக்க முடியவில்லை. கடவுள் அவரை இறப்பிலிருந்து தப்பிக்கச் செய்திருக்கிறார். நெடுநாள் குணமாகாத நோய், வலி, பகைவர்களின் எதிர்ப்பு, கவலை போன்ற ஏதாவதிலிருந்து தப்பித்திருக்கலாம். அல்லது போர்க்கைதியாக எங்காவது இருந்து அதிலிருந்து விடுபட்டிருக்கலாம்.

பழைய மொழிபெயர்ப்புகள் 1-9 வசனங்களை ஒரு பாடலாகவும், 10-18 வசனங்களை அடுத்த பாடலாகவும் என இரண்டு பாடல்களாகக் கொண்டுள்ளன.

இந்தத் திருப்பாடல் தான் பெரிய வியாழன் அன்று திருப்பலியில் பதிலுரைப் பாடலாகப் பாடப்படுகின்றது. இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டு மரண தண்டனை விதி;க்கப்படும் இரவில் இயேசுவின் மனநிலையும் தான் காப்பாற்றப்படுவோமா என்று தான் இருந்திருக்க வேண்டும்.

திபா 116ன் பாடகரின் மன ஓட்டமே இந்தத் திருப்பாடல்.

'ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்
நான் அவருக்கு என்னை கைம்மாறு செய்வேன்?
மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து,
ஆண்டவரின் பெயரைத் தொழுவேன்'

'மீட்பின் கிண்ணம்' என்பது இஸ்ரயேல் மக்களின் பாஸ்கா விழாவைக் குறிக்கும் ஒரு அடையாளம்.

சாவின் பிடியிலிருந்து இஸ்ரயேல் மக்கள் விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் நிகழ்வே பாஸ்கா.

கடவுளின் இரக்கமும் அன்பும் அளப்பரியது. அவர் கொடுத்ததை நாம் அவருக்குத் திரும்பக் கொடுத்துக் கைம்மாறு செய்ய முடியாது.

அன்புக் கட்டளை கொடுக்கின்ற இயேசு கூட, 'நான் உங்களுக்கு அன்பு செய்தது போல, நீங்கள் என்னை அன்பு செய்யுங்கள்' என்று சொல்லவில்லை. மாறாக, 'ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்' என்றே சொல்கிறார். இறைவனின் அன்பிற்கு நாம் பதில் அன்பு செய்ய இயலாது.

காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்ட மனிதர்கள், காலத்திற்கும், இடத்திற்கும் உட்படாத கடவுளை எப்படி அன்பு செய்ய முடியும்? நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்: கடவுளிடமிருந்து பெறுவதை ஒருவர் மற்றவதற்குப் பகிர்ந்து கொடுப்பதே அது!


1 comment:

  1. காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்ட மனிதர்கள் நாம் அதற்குள் உட்படாத் கடவுளை எப்படி அன்பு செய்ய இயலும்? அருமையான, அனைவருமே யோசித்துப்பார்க்க வேண்டிய கேள்விதான்.அளப்பரிய இரக்கமும் அன்பும் காட்டும் அவருக்கு நாம் செய்யும் கைமாறு அவரது படைப்புக்களிடம்...நம் அயலானிடம் அன்பு காட்டுவதே! இந்த வாரம் இதை முயற்சித்துப் பார்க்கலாமே! அனைவருக்கும் இந்த வாரம் இனிதாக அமைந்திட வாழ்த்துக்கள்......

    ReplyDelete