Thursday, June 5, 2014

நாட்டிலேயே குடியிரு!'

திருப்பாடல் 37ல் கேள்வி எதுவும் இல்லையென்றாலும் இந்தத் திருப்பாடல் நமக்கு ஒரு புதிய அறநெறியைத் தருவதால் இதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

நான் தேனி பங்குத்தளத்தில் உதவிப் பங்குத்தந்தையாகப் பணியாற்றியபோது என் தனிப்பட்ட செபத்திற்கு நான் அதிகமாக எடுத்துக்கொண்ட பகுதி 37:3-6.

வெளிநாட்டிற்குப் போய்ப் படிக்க வேண்டும் என்று நான் செபித்த போது என் கண்ணில் பட்ட பாடல் இதுதான். 'நாட்டிலேயே குடியிரு!' என்ற இந்த இரண்டு வார்த்தைகளை நான் ஒருவேளை சீரியஸாக எடுத்திருந்தால் நான் இன்னும் நன்றாக இருந்திருப்பேனோ? என இன்று எண்ணத் தோன்றுகிறது.

வெளிநாட்டு மோகம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, மோகம் கோபமாக மாறிக்கொண்டே வருகிறது.

கடந்த வாரம் நண்பர் ஒருவருடன் வத்திக்கான் நகர அருங்காட்சியகத்தையும், பேதுரு பசிலிக்காவையும் பார்வையிட்டேன். கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த கடவுள் நம்பிக்கையும் சோப்பு நுரையாக விரைவில் காய்ந்து வருகிறது.

இந்தப் பின்புலத்தில் இந்தப் பாடலை நான் பார்க்க விழைகின்றேன்.

இந்தத் திருப்பாடலில் ஒன்பது மதிப்பீடுகளை இதன் பாடகர் எழுதுகின்றார்:

அ. ஆண்டவரை நம்பு.
ஆ. நலமானதைச் செய்.
இ. நாட்டில் குடியிருப்பாய்.

அ. நம்பத் தக்கவராய் வாழ்.
ஆ. ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்.
இ. உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.

அ. உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு.
ஆ. அவரையே நம்பியிரு.
இ. அவர் உன் சார்பில் செயலாற்றுவார்.

இந்த மூன்று குழுக்களிலும், மூன்று மூன்றாக மொத்தம் 9 வரிகள். இவற்றில் 'அ', 'ஆ' 'இதைச் செய்' என்று சொல்வதாகவும், 'இ' என்பது 'இதைச் செய்வதால் உண்டாகும் பலன்' என்று சொல்வதாகவும் மிகவும் நேர்த்தியாக வார்த்தை அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று குழுக்களுக்கும் பொதுவான ஒரு வார்த்தை 'நம்புதல்'. இதற்கு இரண்டு பரிமாணங்கள் உள்ளன:

அ. ஆண்டவரை நம்ப வேண்டும்.
ஆ. நம்பத் தக்கவராய் வாழ வேண்டும்.

'நம்பிக்கை' என்பது கடவுளின் கொடை என்று சொல்வார்கள். இது எல்லாருக்கும் கிடைப்பதல்லை. ஆனால் நம்பத் தக்கவராய் வாழ்வது நாம் அனைவருமே செய்யக் கூடியது. என் நண்பர்கள் என்னைப் பார்த்து அடிக்கடி சொல்கின்ற ஒரு வார்த்தை இதுதான்: உன்னையெல்லாம் நம்பி ஒன்றும் செய்ய முடியாது. நீ மனதை மாற்றிக் கொண்டே இருப்பாய்.

ஆகவே, நம்பகத்தன்மை என்றால் 'நிலைப்புத்தன்மை'. இந்த நம்பகத்தன்மையை 'நாணயம்' என்று நாம் குறிப்பிடுகிறோம். நாணயம் என்ற சொல்லை பொருளியல் வார்த்தையாகப் பார்த்தால் அதன் அர்த்தமும் 'மாறாத இயல்பு' தான். எடுத்த வாக்குறுதியில் உறுதியாக இருப்பதே நம்பகத்தன்மை.

எனக்குள் இருக்கும் போராட்டம் இதுதான்:
ஒருபக்கம், உறுதியாக இருக்க வேண்டும் என்று விவிலியம் சொல்கிறது.
மற்றொhரு பக்கம், மாறிக்கொண்டே இருக்கும் உயிரினமே வாழ முடியும் என்று டார்வின் கொள்கை சொல்கிறது.
இதில் எதை எடுப்பது? எதை விடுப்பது?

இந்தத் திருப்பாடலை ஒட்டியே நம் கலித்தொகையும் ஒரு பாடலைக் கொண்டிருக்கிறது (பாடல் 133):

'ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை
'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
'செறிவு' எனப்படுவது கூறியது மறாஅமை
'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை
'முறை' எனப்படுவது கண்ணோடது உயிர் வெளவல்
'பொறை' எனப்படுவது போற்றாரை பொறுத்தல்

(இந்தப் பாடலிலும் ஒன்பது வரிகள்!)

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை திரு சி.கே. சுவாமிநாதன் அவர்கள் இப்படி அமைத்துள்ளார்:

Goodness is helping one in distress;
Support is not deserting one who is dependent;
Culture is to act in unison with the ways of the world;
Love is not surrendering ties with one’s kin;
Wisdom is to ignore the advice of the ignorant;
Honesty is not to go back on one’s words;
Integrity is to ignore others’ faults;
Justice is awarding punishment without partiality;
Patience is to suffer the ill-disposed.

'நலமானதைச் செய் ...  நாட்டிலேயே குடியிரு!'


1 comment:

  1. 37ம் திருப்பாடல்..அனைத்துமே அருமையான மதிப்பீடுகள்."நம்பகத்தன்மை"..பெரிய வார்த்தை.மக்களை மாக்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவது அவன் வாய்வழி வரும் வார்த்தையின் ஸ்திரத்தன்மையைப்பொறுத்துத்தான்." அர்ஜுன்னுக்கு வில்; அனுமனுக்கு சொல்" என்பார்கள்.ஆமாம் தந்தையே! இறைவன் வாக்கு "நாட்டிலேயே குடியேறு" என்றுதானே அருளப்பட்டது.." காட்டிலே" என்று அல்லவே..உள்நாடு,வெளிநாடு என்றெல்லாம் பிரித்துப்பார்ப்பது மனித மனம்.இருப்பதை விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படும்.நீங்கள் செய்யும் நற்செயல்களை எந்த நாட்டிலிருந்தும் செய்யலாம்.கொஞ்சம் relaxedஆ இருங்க Father!

    ReplyDelete