Saturday, November 9, 2013

ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து!

எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: தாங்கள் உடைமையாக்கிக் கொண்ட உரிமைச் சொத்திலிருந்து லேவியர் குடும்பத்திற்காக நகர்களைக் கொடுக்கும்படி இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு; அவற்றுடன் நகர்களைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களையும் நீங்கள் லேவியருக்குக் கொடுக்க வேண்டும். இந்நகரில் அவர்கள் தங்கியிருப்பர். (எண்ணிக்கை நூல் 35:1-3)

யோசுவாவின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குள் நுழைகின்றனர். மோசே 40 வருடங்கள் அவர்களை வழிநடத்தி வந்திருந்தாலும், வாக்களிக்கப்பட்ட நாட்டைப் பார்க்கும் பாக்கியம் மட்டுமே அவருக்குக் கிடைக்கின்றது. யோசுவாதான் அவர்களை வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் இட்டுச் செல்கின்றார்.

அவர்கள் கானான் நாட்டிற்குள் நுழையுமுன் யோர்தான் ஆற்றைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஆற்றில் பெருவெள்ளம். எப்படிக் கடப்பது? கடவுள் சொல்கின்றார்: 'லேவியர்கள் உடன்படிக்கைப் பேழையைச் சுமந்து கொண்டு ஆற்றில் இறங்கட்டும். அவர்கள் இறங்கியவுடன் வெள்ளம் தணிந்து விடும். உடன்படிக்கைப் பேழைக்குக் கீழே மக்கள் கால்; நனையாமல் கடந்து போகட்டும்'. ஏறக்குறைய 10 லட்சம் இஸ்ரயேல் மக்கள் கடக்கும் வரை லேவியர்கள் ஆற்றின் நடுவில் உடன்படிக்கைப் பேழையைச் சுமந்து கொண்டு நிற்கின்றனர். 

எல்லாம் அக்கரை சேர்ந்தவுடன் நடப்பது என்னவென்றால், ஒவ்வொரு குலத்திற்கும் இடம் பிரிக்கப்படுகின்றது. மொத்தம 12 குலங்கள். அதில் 11 குலங்களுக்கு இடம் பிரித்துக் கொடுக்கப்படுகின்றது. லேவியர் குலத்திற்கு மட்டும் இடம் கொடுக்கப்படவில்லை. கால்கடுக்கத் தண்ணீரில் நின்று மக்கள் கரையேற உதவிய குலத்திற்கு இடம் இல்லையா என்று வாசகர்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போது அங்கே கடவுளின் குரல் கேட்கின்றது: 'ஆண்டவர் தாமே அவர்கள் சொத்தாக இருப்பார்!' என்ன அழகான வார்த்தைகள். லேவியர் குலம் தான் குருக்கள் குலம். அந்தக் குலத்தின் உரிமைச்சொத்து ஆண்டவர் மட்டுமே.

இதுவே குருத்துவத்தின் மகிழ்ச்சி. 'எந்நேரமும் நான் பிறர் கையை நாடியே இருக்க வேண்டுமா?' என்று பல குருக்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சில நேரங்களில் நானே இக்கேள்வியைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இதுதான் குருத்துவத்தின் மகிழ்ச்சி. 'உனக்கென்று எதுவும் இல்லை' என நினைக்காதே. 'அனைத்தையும் கொடுக்கும் ஆண்டவரே உன் சொத்து' எனச் சொல்கின்றார் கடவுள். 

கிருஷ்ணனின் படைகள் மட்டும் போதும் என்று சொல்கின்ற கொளரவர்கள் பாரதப் போரில் தோற்கின்றனர். 'கிருஷ்ணன் மட்டும் போதும்' என்று சொல்கின்ற பாண்டவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

'ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது. 
அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்!'
(திருப்பாடல் 33:12)

1 comment:

  1. Anonymous11/09/2013

    என்னை உண்மையில் மெய்சிலிர்க்க வைத்து விட்டது இன்றையப் பகுதி.4ம் பத்தியைப்படித்த எனக்கு அதன் தாக்கத்திலிருந்து விடுபட வெகு நேரம் பிடித்தது.எத்துணை பேறுபெற்றது இந்த குருகுலம.குருத்துவத்தைப் போற்றுவோம்,குருக்களை மரியாதை செய்வோம்,அவர்களுக்காக ஜெபிப்போம்.குருத்துவத்தின் பின்புலத்தை இத்துணை அழகாக எடுத்துச் சொன்ன ஆசிரியருக்கு என் நன்றியும் பாராட்டும்.இறைவன் தங்களை நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்.

    ReplyDelete