எனவே, ஆண்டவர் கூறியபடியே, அவர்தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார். மோவாபு நாட்டில் பெத்பகோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் அவர் அவரை அடக்கம் செய்தார். ஆனால் இன்றுவரை எந்த மனிதருக்கும் அவரது கல்லறை இருக்குமிடம் தெரியாது. மோசே இறக்கும்போது அவருக்கு வயது நூற்றிருபது. அவரது கண்கள் மங்கினதுமில்லை. அவரது வலிமை குறைந்ததுமில்லை. (இணைச்சட்டம் 34:5-7)
அக்டோபர் 2011ஆம் ஆண்டு புனித நாடுகளுக்குப் பயணம் சென்ற போது 10 நாட்கள் சுற்றுலாவின் இறுதி நாளில் யோர்தான் நாட்டிற்குச் சென்றோம். அங்கே தான் மோசேயின் கல்லறை இருக்கின்றது. மோசேயின் கல்லறை எனச் சொல்லி அழைத்துச் சென்று ஒரு மலையுச்சியில் எங்களை நிறுத்தினார்கள். 'இந்த உச்சியில் இருந்துதான் மோசே பாலும் தேனும் பொழியும் வாக்களிக்கப்பட்ட நாட்டைப் பார்த்தார். இங்கேதான் அடக்கம் செய்யப்பட்டார்' என்றார்கள். என்னவோ தெரியவில்லை. 10 நாட்கள் பார்த்த எல்லா இடங்களையும் விட இந்த இடமே என்னை ஏதோ செய்தது. மலையுச்சியில் நின்று கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
'மோசே கடைசியாக என்ன நினைத்திருப்பார்?'
'தான் நைல் நதியில் விடப்பட்டதையா?'
'பாரவோனின் அரண்மனையில் வளர்ந்ததையா?'
'எகிப்தியன் ஒருவனைக் கொலை செய்ததையா?'
'தன் இனத்தான் தன்னை எதிர்கேள்வி கேட்டதையா?'
'தான் மிதியானுக்கு ஓடிச்சென்றதையா?'
'தன் மனைவியைக் கிணற்றடியில் சந்தித்ததையா?'
'அவள் வழியாகப் பெற்று 'கெர்சோம்' எனப் பெயரிட்ட மகனையா?'
'எரியும் முட்புதரையா?'
'யாவே இறைவனின் பெயரையா?'
'பாரவோனின் முன்னிலையில் கைத்தடியைப் பாம்பாக மாற்றியதையா?'
'பத்துக் கொள்ளை நோய்களையா?'
'பாஸ்கா உணவையா?'
'பாரவோனின் தேர்களையா?'
'செங்கடலையா?'
'மக்களின் கோபத்தையா?'
'அவர்களின் முணுமுணுப்பையா?'
'மன்னாவையா?'
'காடைகளையா?'
'பத்துக் கட்டளைகளையா?'
'பொன்னாலான கன்றுக்குட்டியையா?'
'பாம்புகளையா?'
'சந்திப்புக் கூடாரத்தையா?'
'தான் தட்டி வரவழைத்த தண்ணீரையா?'
எதை நினைத்திருப்பார்? எந்த மனநிலையோடு இறப்பைச் சந்தித்திருப்பார்? வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைய முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்திருக்குமா?
மோசேயுடன் சேர்ந்து அவரது உலகமும் இறந்துதான் போகின்றது.
மோசேயோடு மட்டுமல்ல. நாம் ஒவ்வொருவரும் இறக்கும்போதும் நம் கனவுகள், நம் உறவுகள், நம் கருத்தியல்கள், நம் கொள்கைகள் எல்லாம் இறந்துதான் போகின்றன.
நான் அடிக்கடி நினைப்பேன்:
'நான் வாசிக்கும் கடைசிப் புத்தகம் எதுவாக இருக்கும்?'
'நான் கடைசியாகப் பார்க்கும் காட்சி என்னவாக இருக்கும்?'
'நான் ஃபோனில் பேசும் கடைசி நபர் யாராக இருக்கும்?'
'நான் கடைசியாக அனுப்பும் மின்னஞ்சல் யாருக்காக இருக்கும்?'
'அதில் என்ன எழுதியிருப்பேன்?'
'நான் கடைசியாகக் கூட இருப்பது யார் கூடாக இருக்கும்?'
'நான் இறப்பதை முதலில் யார் பார்ப்பார்?'
'என் கணிணி, என் அலமாரி என எல்லாவற்றையும் யார் திறப்பார்கள்?'
'திறப்பவர்கள் என் கனவு, என் ஏக்கம் அனைத்தையும் அதிலிருந்து புரிந்து கொள்வார்களா?'
நான் முதன்முதல் பார்த்த காட்சி எப்படி நினைவில் இல்லையோ
அதுபோலத்தான் இறுதியாகப் பார்ப்பதும் இருக்கும் போல!
பாரதியார் சொல்வது போல 'எல்லாம் காட்சிப் பிழைதானோ!'
மோசே என்ற சகாப்தம் முடிகிறது.
'ஆண்டவரே அவரை அடக்கம் செய்தார்' எனச் சொல்கிறது விவிலியம்.
'அவர் அடக்கம் செய்யப்பட்டது எங்கே என யாருக்கும் தெரியாது!'
அப்படியென்றால்,
மோசே தனியாக இறந்து கிடந்திருப்பார்.
யாருமே அவருடன் இல்லையா?
அவரைக் காணவில்லையென எப்போது தேடினார்கள்?
மோசேயின் பிறப்பைப் போலவே அவரின் இறப்பும் ஒரு அற்புதம்!
அவரோடு சேர்ந்தே அனைத்துக் கேள்விகளும் இறந்துவிட்டன.
இனி யார் இவர்களை அழைத்துப் போவார்?
இனி யார் இவர்களுக்கு உணவு தருவார்?
இனி யார் இவர்களின் தாகம் தீர்ப்பார்?
மோசே இறந்தாலும் வாழ்க்கை ஓடிக்கொண்டேதான் இருக்கும்.
நாம் இறந்தாலும் வாழ்க்கை ஓடிக்கொண்டேதான் இருக்கும்.
இறப்பு ஒரு பெரிய போதிமரம்!
பாவம் மனிதர்கள்! பிறந்த நாளிலிருந்து அவர்களின் பயணம் கல்லறை நோக்கியே இருக்கிறது!
'மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்'
(திருப்பாடல் 23:4)
கணணா,,இன்றையப் பகுதி விவிலியத்தை தாங்கள் எத்துணை ஆழமாகக் கற்றிருக்கிறீர்கள் என்பதற்கு மட்டுமல்ல, அதில் தங்களுக்குள்ள ஆளுமைக்கும் எடுத்துக்காட்டு.ஆனால்இறுதியில் மனம் இறுக்கமானது உண்மை..எதற்காக சாவைப்ற்றிய இத்துணை தீர்க்கமான கண்ணோட்டம்?? இது இறந்தவர்களுக்கான
ReplyDeleteமாதம் என்பதாலா?பிறப்பும் இறப்பும் நம்கையில் இல்லைதான்.ஆயினும் 'அவர்' நம்மோடிருப்பதால் எதற்கு அஞ்ச வேண்டும்? இருப்பினும் ஒரு ஆத்தும சோதனைக்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி.வாழ்த்துக்கள்.