ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதை இஸ்ரயேல் மக்கள் மீண்டும் செய்யத் தொடங்கினர். பாகால்களுக்கும். அஸ்தரோத்துகளுக்கும், சிரியாவின் தெய்வங்களுக்கும், சீதோனின் தெய்வங்களுக்கும், மோவாப்பின் தெய்வங்களுக்கும், அம்மோனிய மக்களின் தெய்வங்களுக்கும், பெலிஸ்தியரின் தெய்வங்களுக்கும் ஊழியம் செய்தனர். ஆண்டவரைக் கைவிட்டனர். அவருக்கு ஊழியம் புரியவில்லை. (நீதித் தலைவர்கள் 10:6)
நீதித் தலைவர்கள் காலத்தில் இஸ்ரயேல் மக்களின் பாடும் மிகவும் பரிதாபமாகவே இருக்கிறது. 12 முறை இந்த நூலில் 'ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதை இஸ்ரயேல் மக்கள் செய்தனர்' என்று வாசிக்கின்றோம். 'இறைவன் ஒருவரே' என்ற நிலை மாறி மற்ற தெய்வங்களைத் தழுவிக் கொள்கின்றனர். அதிகமாக அவர்கள் வழிபட்டது 'பாகால்' மற்றும் அவரது துணைவியார் 'அஸ்தரோத்து'. பாகால் என்பது இஸ்ரயேலை ஒட்டிய நாடுகளில் வழிபடப்பட்டு வந்த வளமையின் கடவுள் (fertility god). மழை, பனி, விளைச்சல் போன்றவற்றின் கடவுளாக இருந்தவர் இவர். இவர் பூமியோடு உறவு கொள்ளும்போது மழை பெய்யும் எனவும், மழை பெய்ய வேண்டுமென்றால் கோவில்களில் உள்ள பெண்களோடு உறவு கொள்ள வேண்டும் எனவும், அந்த உறவினால் மகிழ்கின்ற பாகால் மழை பொழிவார் என்பதும் அவர்கள் நம்பிக்கை. சிவனின் சக்தி பார்வதி போல, பாகாலின் சக்தி அசரோத்து. வழிபாட்டுத் தலங்களில் எல்லாம் இந்த இரண்டும் சேர்ந்துமே இருக்கும்.
யாவே இறைவனை வழிபட்டு வந்த இஸ்ரயேல் மக்கள் மற்றவர்களின் தெய்வங்களையும் வழிபடத் தொடங்குகின்றனர். 'ஒரே இறைவன்' என்ற சிந்தனை இஸ்ரயேல் மக்களுக்கு பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின்னே வந்தது.
எதற்காக மற்ற தெய்வங்களை வழிபடக் கூடாது? வழிபாடு என்பது பிரமாணிக்கம். வழிபாடு மற்ற தெய்வங்கள் பக்கம் திரும்பும்போது பிரமாணிக்கமும் பிளவுபடுகிறது. பிளவுபடுகின்ற பிரமாணிக்கம் இறைவனுக்கு ஏற்புடையதன்று.
'இதுவா! அதுவா!' என்பதுதான் இறைவன் விரும்புவது. 'இதுவும், அதுவும்' என்பது இறைவனுக்கு ஏற்புடையதன்று.
ஆண்டவரைக் கைவிட்டனர்!
Blogன் இறுதி வரி விளம்புவது எத்துணை பெரிய உண்மை.ஆற்றில் ஒருகால்,சேற்றில் ஒருகால் என்றில்லாமல 'இதுவா அதுவா என்று ஆய்ந்து தெளிந்து நாம் பற்றிக்கொண்ட இறைவனுக்குப் பிரமாணிக்கம் தவறுவது பெற்ற தாயை மறுதலிப்பதற்கு சமமாகும்.அதிகாலைப் பொழுது...அழகான செய்தி.
ReplyDelete